பாண்டியர் துறைமுகங்கள்

(பாண்டியர் நாட்டுத் துறைமுகப் பட்டினங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின்போது உச்சநிலை அடைந்தது. இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர்த் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்ததை மார்க்கோ போலோவின் காயல்பட்டினம் குதிரை வணிகக் குறிப்புகளைக் கொண்டும், இபின் பட்டுடாவின் பாண்டியர்-ஏமன் கப்பல்கள் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்காலத்தில் பாண்டியர் உலகிலேயே சிறந்த வணிகத் துறைமுகங்களைப் பெற்றிருந்தது தெரிகிறது.[1]

பாண்டியர் துறைமுகங்கள் கி.மு. 500 - கி.பி. 1400
செங்கடல் செலவு குறிப்பிடும் துறைமுகங்கள்

பண்டைய துறைமுகங்கள்

தொகு

பட்டியல்

தொகு
 
கி.மு. 785 ± 95 மதிக்கத் தக்க பண்டைய தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு
துறைமுகங்கள் சிறப்புகள்
கொற்கை இந்த கொற்கை நகர் பொ.மு. 600 வரை பாண்டியர் தலைநகராய் இருந்தது.[4] பின்னர் நெடுஞ்செழியன் காலத்திலேயே தற்போதைய மதுரைக்கு பாண்டியர் தலைநகர் மாற்றப்பட்டது.[5] அதன்பிறகும் இந்நகர் சிறப்புக்குன்றாமல் பெரிப்ளூஸ், டாலமி காலம் வரை சிறந்த துறைமுக மற்றும் வணிக நகரமாய் திகழ்ந்தது. முத்துக்குளித்தலுக்கு இந்நகர் பெருஞ்சிறப்பைப் பெற்றிருந்ததை பெரிப்ளூஸின் செங்கடல் செலவு நூல் மூலமாக அறியலாம்.[6] கொற்கையில் கிடைத்த தமிழி எழுத்து படித்த பானை ஓட்டின் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 785 ± 95 எனக் கணிக்கப்பட்டது. அப்பானை ஒட்டுடன் கிடைத்த கரித்துண்டு இது அப்போதே துறைமுகமாய் விளங்கியதை காட்டுகிறது.[7] இதிலிருந்து கொற்கை கி.மு. 1000 தொட்டே செயல்ப்படதாகக் கூறலாம்.
அழகன்குளம் இங்கு கிடைத்த ரோமானியர் காசுகள், மட்கலன்கள், பானை ஓடுகள் போன்றவை இந்த அழகன்குளத்தின் தொடர்ச்சியான வரலாறுகளை கி.மு. 4 - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையிலும் அறிய உதவுகிறது. அதன்படி இதுவும் ஒரு சங்ககாலத் துறைமுகம்.[8] இதன் பெயர் நேரடியாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை ஆயினும் தாலமி குறிப்பிடும் அர்கெய்ரு என்ற நகரம் இதுவாக இருக்கலாம்[9]. ஆனாலும் இந்த ஆர்கெய்ரு சோழரின் உறையூர் என்பது நீலகண்ட சாஸ்திரி போன்றோரின் கருத்து.[10]
மருங்கூர் இம்மருங்கூர் மருங்கூர்ப் பட்டினம் மற்றும் ஊணூர் என்று இரண்டு துறைமுகப்பட்டினங்களை அடக்கியது. தாலமி இதை சாலூர் எனக்குறிக்கிறார்.[11]
நீலகண்ட நகரம் இந்நகரம் பாண்டியர் துறைமுகமாக திகழ்ந்தது. இங்கிருந்தே செங்கடல் துறைமுகங்களுக்கு மிளகு ஏற்றுமதி அதிகளவு நடந்ததாகத் தெரிகிறது.

முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர் துறைமுகங்கள்

தொகு

சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளரக் காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம் என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின. அவை,

பட்டியல்

தொகு
பெயர் (நாடு) காலம் தற்போதைய பெயர் அல்லது வட்டம் ஆற்றுக்கழிமுகம்
தொண்டி (முத்தூர்க்கூற்றம்) பொ.பி. 875க்கு முன் - 1310 திருவாடானை வட்டம் -
காயல்பட்டினம் பொ.பி. 875க்கு முன் - 1310 திருவைகுண்டம் வட்டம் தாமிரபரணி ஆறு
மானவீரப்பட்டினம் (மானவீரவளநாடு) பொ.பி. 875க்கு முன் மருதூர், சாத்தான்குளம் வட்டம் கருமானியாறு
பாசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) பொ.பி. 875 - 1090 திருவாடானை வட்டம் பாசியாறு
உலகமாதேவிப்பட்டினம் (செவ்விருக்கை நாடு) பொ.பி. 875 - 1368 இளங்கோமங்கலம், திருவாடானை வட்டம் -
நானாதேசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) பொ.பி. 875 - 1368 வீரகேரளபுரம், திருவாடானை வட்டம் -
பவித்ரமாணிக்கப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 875 - 1368 இராமநாதபுரம் வட்டம் கப்பலாறு
மேன்தோன்றிப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 875 - 1090 இராமநாதபுரம் வட்டம் -
கேரளாந்தகபுரம் (குரங்குடிநாடு) பொ.பி. 875 - 1090 பட்டினமருதூர், விளாத்திக்குளம் வட்டம் மலட்டாறு
குலோத்துங்கச்சோழப்பட்டினம் (மிழலைக்கூற்றம்) பொ.பி. 1090 - 1271 மணமேல்குடி, ஆவுடையார்கோயில் வட்டம் வெள்ளாறு
பெரியபட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1090 - 1368 இராமநாதபுரம் வட்டம் கப்பலாறு
குலசேகரப்பட்டினம் (மானவீரவளநாடு) பொ.பி. 1090 - 1368 சாத்தான்குளம் வட்டம் கருமானியாறு
ஆவுடையார்பட்டினம் (மிழலைக்கூற்றம்) பொ.பி. 1271 - 1368 ஆவுடையார்கோயில் வட்டம் வெள்ளாறு
சுந்தரபாண்டியன்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) பொ.பி. 1271 - 1368 திருவாடானை வட்டம் பாம்பாறு
நீர்ப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) பொ.பி. 1271 - 1368 கண்ணங்குடி, திருவாடானை வட்டம் -
புதுப்பட்டினம் (செவ்விருக்கைநாடு) பொ.பி. 1271 - 1368 திருவாடானை வட்டம் -
சீவல்லபப்பட்டினம் (செவ்விருக்கைநாடு) பொ.பி. 1271 - 1368 புறக்குடி, திருவாடானை வட்டம் -
நினைத்ததை முடித்தான் பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 - 1368 கீழக்கரை, இராமநாதபுரம் வட்டம் குண்டாறு
இருவரைவென்றான் பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 - 1368 இராமநாதபுரம் வட்டம் -
வல்லபப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 - 1368 ஏறிக்கிட்டூர், இராமநாதபுரம் வட்டம் -
தத்தையார்ப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 - 1368 இராமநாதபுரம் வட்டம் -
முடிவீரன்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 - 1368 இராமநாதபுரம் வட்டம் -
கோதண்டராமன்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 - 1368 இராமநாதபுரம் வட்டம் -
ஏறிவீரப்பட்டினம் (அளற்றுநாடு) பொ.பி. 1271 - 1368 இடைவழி, முதுகுளத்தூர் வட்டம் -
வென்றுமுடிசூடிய சுந்தரபாண்டியப்பட்டினம் (பராந்தகவளநாடு) பொ.பி. 1271 - 1368 ஸ்ரீவைகுண்டம் வட்டம் -
காயல்பட்டினம் (குடநாடு) பொ.பி. 1271 - 1368 திருச்செந்தூர் வட்டம் தாமிரபரணி
சோனாடுகொண்டான்பட்டினம் (குடநாடு) பொ.பி. 1271 - 1368 திருச்செந்தூர் வட்டம் பாம்பாறு
வீரபாண்டியன்பட்டினம் (குடநாடு) பொ.பி. 1271 - 1368 திருச்செந்தூர் வட்டம் பாம்பாறு
முத்துராமலிங்கப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) - திருவாடானை வட்டம் பாசியாறு
அம்மாப்பட்டினம் - ஆவுடையார்கோயில் வட்டம் அம்புலியாறு

தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்

தொகு

முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி[12], பெரியபட்டினம்[13], பழைய காயல்[14], போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ,[15] இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும்[10], கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணைபுரிகின்றன.

வணிகப் பொருட்கள்

தொகு

இந்தத் துறைமுகங்களிலிருந்து நெல், அரிசி, உப்பு, அவிழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு, எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி, மஞ்சள், பாக்கு, மிளகு, சுக்கு, தேன், சந்தனம், அகில், பன்னீர், கற்பூரம், சாந்து, புனுகு, கஸ்தூரி, சவ்வாது, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை, பட்டு, நூல், கொடி, கணபம், இரும்பு, செம்பு, வெண்கலம், குதிரை, யானை, ஒட்டகம், சவுரி மயிர், முத்து, சிப்பி, மணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது.[16][17]

வணிக நகரங்கள்

தொகு

கடலோர வணிகத் துறைமுகங்கங்களுக்குத் துணையாக உள்ளூர் வணிக நகரங்களும் அமைந்திருந்தன. கடற்கரைத் துறைமுகப்பட்டினங்களும் உள்ளூர் வணிக நகரங்களும் பெருவழிகளால் இணைந்திருந்தன. இதற்கு உதாரணமாக மதுரையிலிருந்து தொண்டி செல்லும் பெருவழியிலேயே இடையாற்று நாட்டு பூவேந்தியபுரமும், தென்களவழிநாட்டு முடிகொண்ட பாண்டியபுரமும் இருந்ததையும், அதே போல் கீரனூர்கூற்றத்து கங்கைகொண்ட பெருந்தெருவும், காணப்பேர்கூற்றத்து கானபேர் பெருந்தெருவும் முத்தூர்கூற்றத்தையும் பல துறைமுகங்களையும் இணைத்ததையும் கொள்ளலாம்.

வணிகக் குழுக்கள்

தொகு
 
திருப்புடைமருதூர் ஓவியங்கள், புன்னைக்காயலில் அரபிய வணிகர்கள் உலாவுவது போல் காட்டப்பட்டுள்ளது

இத்துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் பல வணிகக் குழுக்கள் இருந்தன. அவை,

  • மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் - காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்தச் செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.[18]
  • நகரத்தார் - முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார் [19] என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.
  • மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள் - இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தைக் கவனிப்பவர்கள்.
  • நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார் - இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ்பெற்றவை. சாயல்குடியில் இக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏறிவீரப்பட்டினம் உள்ளதை அடுத்து இவர்களின் வணிகச்சிறப்பை அறியலாம்.[20]
  • தென்னிலங்கை வளஞ்சியர் - இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.[21]
  • சோனகரர் - இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்.[22]
  • அஞ்சுவண்ணம் - இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.[23]

வரிகளும் கொடைகளும்

தொகு

மேற்குறிப்பிட்ட வணிகக்குழுக்கள் அனைத்துமே ஏதாவது ஒரு விதத்தில் கோயில்களுக்குக் கொடையோ அல்லது பெருவழிகளின் உபயோகத்திற்காக வரியோ செலுத்தி அரசாங்கத்துக்கு உதவியதாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்றோர்கள் உலகமாதேவிப்பட்டினம் என்ற ஊரில் உள்ள திருஞான சம்பந்தன் தளம் என்ற கோவிலிற்குப் பல கொடைகளை அளித்துளனர். இக்கோயிலுக்கான பாக்கு, மிளகு போன்றவற்றிற்கு ஆட்சுமைக்கு ஒருமாப்பணமும் உறுக்களில் ஏற்றும் சிறுகலங்களின் கட்டொன்றிற்கு அரைக்கால் பணமும் வாங்கியுளனர். மேலும் இப்பட்டினத்திற்கு வரும் சிற்றுரு, தோணி போன்ற கலங்களில் வரும் பொருட்களுக்கு முறையே அரைக்கால் மற்றும் கால் பணமும் வாங்கியுளனர்.

காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும்வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன்புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர்.[24] நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.[25]

மூலம்

தொகு
  • பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள் (கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.

மேற்கோள்கள்

தொகு
  1. http://empires.findthedata.org/l/98/Later-Pandyan-Dynasty[தொடர்பிழந்த இணைப்பு]
  2. The cyclopædia of India and of Eastern and Southern Asia By Edward Balfour
  3. Pliny (77 AD) and Ptolemy (140 AD) wrote of "Madura
  4. Geological Survey of India (1883). Memoirs of the Geological Survey of India. Governor-General of India.
  5. Iyengar, Srinivasa P.T. (2001). History Of The Tamils: From the Earliest Times to 600 AD. Asian Educational Services.
  6. Majeed, A. Abdul (March–June, 1987). "A note on Korkai Excavations". Tamil Civilization (Tamil University, Thanjavur) 5 (1-2): pp. 73–77
  7. Excavations of archaeological sites in Tamilnadu 1969 -1995. தமிழக தொல்லியல் துறை. pp. பக்கங்கல் 46 - 56.
  8. அ. அப்துல் மஜீத். அழகன்குளமும் அயல்நாட்டுத் தொடர்பும். சாலையூர், சென்னை: இயக்குநர், தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை.
  9. N. Marxia Gandhi (1997). Marungur and Alagankulam: Ancient ports of Tamilnadu. Chennai 22: Paper presented in the first international conference on Marine Archaeology.{{cite book}}: CS1 maint: location (link)
  10. 10.0 10.1 கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (1976). தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாடினர் குறிப்புகள். சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். pp. 215–217, (265, 294), (265-282, 294-296).
  11. மயிலை சீனி.வேங்கடசாமி; 'பழங்காலத் தமிழர் வணிகம்' பக்கம் 95-96
  12. தொண்டியிலுள்ள தொண்டியம்மன் கோவிலில் தமிழ்நாடு அரசு செய்துள்ள அகழாய்வு
  13. பெரியபட்டினத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் செய்த அகழாய்வுகள்
  14. கால்டுவெல் அகழாய்வு செய்து வெளியிட்ட சீன மட்கலன்கள்
  15. it is at this city that all the ships touch that come from the west, as from Hormos and from Kis and from Aden, and all Arabia, laden with horses and with other things for sale. And this brings a great concourse of people from the country round about, and so there is great business done in this city of Cail.
  16. தென்னிந்தியக் கல்வெட்டுகள் 8/442, 8/428, 8/430
  17. கல்வெட்டு ஆண்டறிக்கை 55/1915-16இ, 507/1959, 598/1926-27, 370/1949-50
  18. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/454
  19. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/403
  20. கல்வெட்டு ஆண்டறிக்கை 38/1931-32
  21. கல்வெட்டு ஆண்டறிக்கை 491/1909
  22. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/455
  23. கல்வெட்டு ஆண்டறிக்கை 598/1926-27
  24. கல்வெட்டு ஆண்டறிக்கை 370/194-50
  25. தென்னிந்தியக் கல்வெட்டுகள் 13/396

உசாத்துணை

தொகு
  • ந. அதியமான், பா. ஜெயக்குமார், (நவம்பர் 2006.). தமிழகக் கடல்சார் ஆய்வுகள். தஞ்சாவூர்.: தமிழ்ப் பல்க்லைக்கழகம். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டியர்_துறைமுகங்கள்&oldid=3370757" இலிருந்து மீள்விக்கப்பட்டது