விக்கிப்பீடியா:2012 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2012 Tamil Wikipedia Annual Review
2012 ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பிடியாவின் மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கை 43000இலிருந்து 50000 ஆக உயர்ந்துள்ளது[1]. சென்ற ஆண்டை ஒப்பிடும்போது 14% வளர்ச்சியே ஆகும். மொத்த கட்டுரைகளில் 33.53%(17078) கட்டுரைகள் மட்டுமே 5KBக்கு மேல் உள்ளன. மேலும் 5KB க்கு மேல் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இந்திய விக்கிகளில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.[2]. மொத்த கட்டுரைகளில் 70.13% (35,719) கட்டுரைகள் 5KB க்கும் குறைவாயுள்ள குறுங்கட்டுரைகளாகும்.[3] தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் மொத்த விக்கிப்பீடியாக்களில் ஒரு இடம் முன்னேறி 60 ஆவது இடத்தில் உள்ளது[4]. மொத்த தொகுப்புகளின் எண்ணிக்கை 13,44,997 ஆக உள்ளது. தமிழ் விக்கிப்பிடியாவில் பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை, 2012 ல், 34,000 த்திலிருந்து 46,294 ஆக உயர்ந்துள்ளது. இது 27% வளர்ச்சியாகும். இதில் சராசரியாக 250 பேர் செயல்படும் பயனர்கள் (active users) ஆவர்.[5]. மாதத்திற்கு 100 தொகுப்புகளுக்கு மேல் செய்யும் பயனர்கள் தோராயமாக 20 பேர் உள்ளனர்.[6][7]. 2012 இல் தமிழ் விக்கிப்பீடியா பார்க்கப்படும் அளவு 50 விழுக்காட்டுக்கும் மேலாக உயர்ந்தது. தமிழ் விக்கிப்பக்கங்கள் நாள்தோறும் 1,36,000 தடவைகள் பார்க்கப்பட்டன. மூன்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2012 ஆம் ஆண்டில் பல்வேறு தலைப்புகளில் புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய முக்கியக் கட்டுரைகள் பல உருவாக்கப்பட்டன. இந்த வாரக் கூட்டுமுயற்சி மூலம் பல குறுங்கட்டுரைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் சில திருத்தி மீளுருவாக்கம் செய்யப்பட்டன. அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இதற்கான தூண்டலை இட்டது பயனுள்ள வகையில் இருந்தது. தமிழ் சிற்றிலக்கியங்கள், தமிழ் இலக்கணம், இசை மற்றும் தமிழர் கலைகள், பொன்னியின் செல்வன் புதின மாந்தர்களின் கட்டுரைகள், மருத்துவம், உயிரியல், தொழினுட்பம் விளையாட்டு குறிப்பாக 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகிய துறைகளில் கட்டுரைகள் புதியதாக துவங்கப்பட்டன.
2012 ஆம் ஆண்டில் நுட்ப அடிப்படையிலும் தமிழ் விக்கித்திட்டங்களில் பல முன்னேற்றங்கள் நடந்தன. தொழில்நுட்ப உரையாடலுக்காக ஆலமரத்தடி (தொழினுட்பம்) உருவாக்கப்பட்டது. கட்டுரைகளை ODT வடிவங்களில் கோப்பாக பதிவிறக்க உதவும் நீட்சி Collection தமிழ் விக்கித் திட்டங்களில் நிறுவப்பட்டது. நமது கவனிப்புப்பட்டியலில் உள்ள கட்டுரைகளில் மாற்றம் ஏற்பட்டால் மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியும் செயலாக்கப்பட்டது. அடிச்சுட்டி, மேற்கோள்கள் மற்றும் அடிக்குறிப்புகளை எளிதாகப் பார்க்க உதவும் கருவி நிறுவப்பட்டது. பெங்களூரில் நடந்த விக்கி நிரலாக்குனர் கூடலில் சுந்தர், சிரீகாந்தும், சண்முகமும் கலந்து கொண்டார்கள். தமிழ் மென்பொருள் ஆர்வலர்கள் கிரேசும், விக்கினேசும், யுவியும், அருண் கணேசும் கலந்து கொண்டிருக்கிறார்கள். கிரேஸ் தமிழ் விக்சனரிக்குச் சொற்களை எளிதாகப் பதிவேற்றும் நிரல் ஒன்றை எழுதியுள்ளார். விக்கிமீடியா மென்பொருளாளர் அமீரின் பயிற்சியின் பயனாக ஸ்ரீகாந்த் சுந்தரும், விக்னேசும் தமிழில் வேற்றுமை உருபுகள் வரும் மீடியாவிக்கி செய்திகளை அவற்றின் விகுதிகளுடன் புணர்ந்து வருமாறு செய்யும் நிரலொன்றை எழுதும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.
2012 சனவரியில் குறுந்தட்டு திட்டத்திற்கான கட்டுரைகள் 200 தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் இற்றை/விரிவாக்கம், விக்கியாக்கம், உரை திருத்தம்,படிமச் சரிபார்ப்பு ஆகியன கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் வேகம் பெற்ற இம்முயற்சி சற்றே சுணக்கம் கண்டது. மேலும் விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு, விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள் போன்ற புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டது. தமிழ் விக்கியூடகங்களின் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) வளங்கள், வீச்சு எவ்வளவு என அறிந்து எதிர்கால விக்கி வளர்ச்சிக்குத் திட்டங்கள் மேற்கொள்ள தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு பின் அது கைவிடப்பட்டது. விக்கிப்பீடியா கட்டுரைகளில் சான்றுகள் சேர்த்து நம்பகத்தன்மையைக் கூட்டுவது குறித்த விக்கிப்பீடியா பேச்சு:சான்று சேர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 30, 2012 அன்று தமிழ் விக்கிப்பீடியா ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி இரண்டாவது விக்கி மாரத்தான் நடைபெற்றது. அன்று 222 தொகுப்புகளும் 26 கட்டுரைகளும் 30 புதிய பக்கங்களும் உருவாக்கப்பட்டது. பெருமளவில் பங்களிப்புகள் வராத போதும் வழக்கத்தை விடக் கூடுதலான பங்கேற்புக்கும் ஆண்டு நிறைவினை நினைவூட்டிப் பரப்புரை மேற்கொள்ளவும் இத்திட்டம் உதவியது
விக்கி ஊடகப் போட்டி 2012 ஆம் ஆண்டின் நல்ல தொடக்கமாக அமைந்தது. இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்ற இந்தப் போட்டி யில் 15091 கோப்புகள் பதிவேற்றப்பட்டன. இதில் 6500 ஒலிக்கோப்புகளை பயனர் பூராட்லிபி பதிவேற்றினர். 100 நிகழ்படக் கோப்புகள் மற்றும், 8000 புகைப்படங்களும் இவற்றில் அடங்குகின்றன. 251 புதிய பயனர்களும் 56 விக்கியர்களும் ஆக மொத்தம் 307 போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். போட்டியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட கோப்புகளில் 50 விழுக்காடுக்கும் மேலாக தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி ஆகியவற்றிலும் பிற விக்கித்திட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகளை நோக்கும்போது இவ்வாண்டு மிகக் குறைவான இடங்களிலேயே பயிற்சிப்பட்டறைகள் நடைபெற்றன. இந்த ஆண்டு 6 விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் சென்னை, மதுரை, சேலம், குப்பம் ஆகிய இடங்களில் நடைபெற்றன. இப்பட்டறைகள், நிகழ்வுகள் மூலம் பெருவாரியான கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவ்வகையில் இவ்வாண்டின் முதல் பட்டறையாக தமிழ்நாட்டிலுள்ள சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விக்கிப்பீடியா பட்டறை அமைந்தது. ஏறத்தாழ 60 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமீடியா காமன்ஸ், தமிழா கட்டற்ற மென்பொருள் இயக்கம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. பட்டறையின் பகுதியாக பாரதியார் பாடல்கள் சில மாணவிகளால் பாடப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு காமன்சில் பதிவேற்றப்பட்டன. இப்பட்டறையில் பயனர்: சோடாபாட்டில், பயனர் ஸ்ரீகாந்த் பயனர் அருண்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர். பிப்ரவரி 4, 2012 அன்று சென்னை ஜெயா பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய குருட்சேத்திரா தொழில்நுட்ப விழா ஆகிய இரண்டு இடங்களிலும் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தனர். இப்பட்டறைகளில் தமிழ் விக்கிப்பீடியா பயனர் சூர்யபிரகாஷ் மற்றும் இந்திய விக்கிமீடியா அலுவலகத்தில் பணிபுரியும் சுபாசிஷ் பனிக்ரஹி ஆகியோர் மாணவர்களிடம் விக்கிப்பீடியா பற்றியும் பிற சகோதரத் திட்டங்களைப் பற்றியும் அறிமுகம் செய்தனர்.
மதுரையில் நடைபெற்ற தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறையில் ஆகஸ்ட் 2, 2012, அன்று இந்நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா குறித்தும், பிற விக்கித் திட்டங்கள் குறித்தும் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் நிர்வாகி தேனி மு.சுப்பிரமணி உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பயனர் எஸ்ஸார், பயனர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆகஸ்டு 6, 2012 இல் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் பன்மொழி விக்கிப்பட்டறை நடைபெற்றது. பயனர் சுந்தர் இதில் கலந்து கொண்டார். இப் பட்டறையில் விக்கிப்பீடியாவைப் பற்றிய பரவலான அறிமுகத்தை ஏற்படுத்த வாய்ப்பு அமைந்தது. தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மும்மொழிப் பட்டறையாகவும் துணைவேந்தர்கள், கல்லூரி ஆசிரியர்கள், தமிழ்-தெலுங்கு மொழிபெயர்ப்பியல், தமிழ்-கன்னட இலக்கிய ஒப்பீடுகளில், கணிப்பான் மொழியியல் தேர்ச்சி பெற்ற முனைவர்கள் ஆய்வாளர்கள் ஆகியோர்களிடம் விக்கிப்பீடியாவைக் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இது அமைந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கு.பத்மநாபன் தமிழ் விக்கிப்பீடியாவை இ-சுப்பீக்கு (அதோடு மற்றொரு) மென்பொருளின் துணையுடன் பயன்படுத்துவதோடு சில குழுமங்களில் பகிர்ந்தும் வருவதாகக் கூறினார்.
இவ்வாண்டு சென்னையைப் போலவே சேலத்திலும் இரண்டு இடங்களில் விக்கிப்பீடியாப் பட்டறைகள் நடைபெற்றன. சனவரி 25, 2012 அன்று சேலத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடநூல், பாடப்பொருள் வலுவூட்டல் பயிற்சியில் ஒரு பகுதியாக “கற்பித்தலுக்காக இணையத்தைப் பயன்படுத்தல்” என்ற தலைப்பில் பயனர் பார்வதிஸ்ரீ, விக்கிப்பீடியா பற்றிய அறிமுகத்தை வழங்கினார். மேலும் சேலம் மாவட்டத்தில், தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினியில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் உரிய விழிப்புணர்வு பெற உறுதுணை செய்யும் வகையில் செப்டம்பர் 11, 2012 அன்று ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கில் பயனர் மா. தமிழ்ப்பரிதி, பயனர் பார்வதிஸ்ரீ, மற்றும் பெரியார் பல்கலைக்கழக, இதழியல், மக்கள் தொடர்பியல் துறை மாணாக்கர்கள் 18 பேரும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் 135 பேரும் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் 12 பேரும் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர்கள் 16 பேரும் பங்கேற்றனர்.
வாஷிங்டன் டி.சியில் ஜூலை மாதம் பன்னிரெண்டாம் நாள் நடைபெற்ற விக்கிமேனியா கூட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயனர் பூராட்லிபி கலந்துகொண்டு தனது விக்கியனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பில் கட்டுரை ஏதும் வாசிக்கப்படவில்லை.
இவ்வாண்டில் பயனர் புன்னீயாமீன், பயனர் தேனி எம். சுப்பிரமணி, பயனர் சோடாபாட்டில் ஆகியோர் தமிழ் விக்கிப்பீடியாவை பல்வேறு முகங்களிலும் அறிமுகம் செய்தனர். இலங்கையில் வெளிவரும் விடிவெள்ளி பத்திரிகையில் பயனர் பீ.எம். புன்னியாமீன் அவர்களின் நேர்காணலும், கம்பியூட்டர் டுடே (சனவரி 2012) இதழில் தமிழ் விக்கிப்பீடியா ஓர் அறிமுகமும், ஆய்வும் என்ற கட்டுரையும் இடம்பெற்றன. [8] [9] கணியம் எனும் மென்பொருள் இதழில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த பயனர் சோடாபாட்டிலின் கட்டுரை இடம்பெற்றது.[10]
பயனர் தேனி மு. சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்ற நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையிலான வகைப்பாட்டில் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றது.. தமிழ் கம்ப்யூட்டர் (ஆகஸ்ட் 1 - 15) இதழில் வெளியான தேனி எம். சுப்பிரமணி எழுதிய “விக்கிப்பீடியாவில் தமிழ்” என்ற கட்டுரையும் இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 16 - 31 இதழில் வெளியான “தமிழ் விக்கிப்பீடியா: பெருகி வரும் தன்னார்வம்” என்ற கட்டுரையும் வெளியானது. கட்டுரை.காம் தளத்தில் தேனி எம்.சுப்பிரமணியின் நேர்காணலும் தினமணி நாளிதழில் மாணவர்களுக்கு இலவச குறுந்தகடு திட்டம் பற்றிய தேனி மு .சுப்பிரமணியின் பேச்சு குறித்த செய்தியும் வெளியானது.
2012ஆம்ஆண்டு செயற்பாடுகளில் தமிழ் விக்கி ஊடகப் போட்டி குறிப்பிட்ட அளவு புதிய பயனர்களை ஈர்த்தும் நீண்ட நாட்களாக செயற்படாதிருந்த பயனர்களை மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் செயல்பட வைக்கவும் நல்ல ஒரு கருவியாக அமைந்தது. இவ்வாண்டு 12,294 புதிய பயனர்கள் பங்கேற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 26.5 விழுக்காடு அதிகமாகும் தமிழ் விக்கிப்பீடியா பெரும் வளர்ச்சியை இந்த ஆண்டு பெற்று இருந்தாலும் அது சில சிக்கல்களையும் எதிர்நோக்கி இருந்தது. வாசகர்களை பங்களிப்பாளர்களாக மாற்றுவது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தொடர்ச்சியாக சிக்கலாக இருந்து வருகிறது. தமிழ் விக்கியில் 250 செயல்படும் பயனர்களே உள்ளனர். இரண்டு மடங்கு மக்கள் தொகையுடன் 50 குறைந்த செயல்படும் பயனர்களைத் தமிழ் விக்கி கொண்டிக்கிறது. ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளில் ஒரு சிலரைத் தவிர முதன்மைப் பங்களிப்பாளர்களை நாம் இன்னும் பெறாமல் இருப்பதும், அங்கு தமிழ் விக்கி பட்டறைகள் எவையும் இதுவரை நடைபெறவில்லை என்பதும் வரும் காலத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். கிரந்தம் - கிரந்தமகற்றல் போன்ற ஒரு சில திட்டங்களிலும் தமிழ் விக்கியில் பங்களிப்பாளர்கள் கட்டுரை ஆக்கம் திருத்தம் தவிர்ந்த பிற திட்டங்களில் ஈடுபடுத்தி வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் சவால்கள் நிறைந்தாக உள்ளது. அத்தோடு விக்கிமீடியா போன்ற ஒரு நிறுவனக் கட்டமைப்பு நோக்கியும் தமிழ் விக்கியூடகங்கள் எந்தவித நகர்வையும் செய்யவில்லை. அனைத்து தமிழர்களினதும் ஒரு முக்கிய தகவல் ஊடகமாகத் தமிழ் விக்கியூடகங்கள் வளர்ந்து வரும் இந்த நிலையில் ஒரு தெளிவான தொலைநோக்கு வியூகத்தை அமைத்துக் கொள்வது விக்கி சமூகத்துக்குள்ள பொறுப்பாகும்.
2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011 ஆண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நடு நிலைமை, இணக்க முடிவு, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழி நடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த அறிவுத்தொகுப்பான தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.
இந்த 2012 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையின் நோக்கம் 2012 ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகளை விவரித்து, 2013 ஆம் ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கருத்துக்களை முன்வைக்கும் படி பரிந்துரைக்கிறோம். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி, விக்கிப்பீடியா:வளர்ச்சிக்கான திட்ட முன்மொழிவு போன்ற பக்கங்களில் பாக்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிப்பீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm
- ↑ http://shijualex.wordpress.com/2013/01/27/analysis-of-the-indic-language-statistical-report-2012/
- ↑ http://shijualex.wordpress.com/2013/01/27/analysis-of-the-indic-language-statistical-report-2012/
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias
- ↑ http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm
- ↑ Indic language wikipedias – Statistical report – 2012 January – 2012 June
- ↑ [1]
- ↑ ‘Puniyameen’ Sets new record - By N.M.AmeenCeylon Today - 12 January 2012 (Page No:02)
- ↑ கணியம் எனும் கட்டற்ற மென்பொருள் இதழில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த பயனர் சோடாபாட்டிலின் கட்டுரை