இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகாம் ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் செலவில் செயலாற்றப்படுகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இஸ்ரோவிற்கு சோம்நாத் தலைவராக உள்ளார்.
இஸ்ரோ சின்னம் | |
நிறுவியது | ஆகத்து 15, 1969 |
---|---|
தலைமையகம் | அன்தரிக்ஷ் பவன், நியு பெல் ரோட், பெங்களூரு, இந்தியா |
முதன்மை விண்வெளி நிலையம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் |
மேலாளர் | எசு. சோமநாத் (தலைவர்) |
செலவு | INR 10,783.42 கோடி |
இணையதளம் | இஸ்ரோ இணையத்தளம் |
இஸ்ரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.[1] இஸ்ரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இஸ்ரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. 1980இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ். எல். வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகிணியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV) மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத் தக்க ஜி. எஸ். எல். வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது. இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் இஸ்ரோ இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி பிறநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விண்வெளி/ செயற்கைக் கோள் தொடர்புடைய செயல்பாடுகளை ஆற்றி வருகிறது. தனது ஏவுகலங்களையும் ஏவுமிடங்களையும் தனது செயற்கைக்கோள் ஏவுதிறனுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. புவியியைவு செயற்கைக் கோள் ஏவுகலத்தை (ஜி.எஸ்.எல்.வி) மேம்படுத்தி முழுமையும் இந்தியப் பொருட்களால் கட்டமைப்பதும் மனிதரியக்கு விண்வெளித் திட்டங்கள், மேலும் பல நிலவு புத்தாய்வுகள் மற்றும் கோளிடை ஆய்வுக்கருவிகள் செயல்படுத்துவதையும் எதிர்காலத் திட்டங்களாகக் கொண்டுள்ளது. தனது பல்வேறு பணிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குவியப்படுத்திய மையங்களை நாடெங்கும் கொண்டுள்ளது. பன்னாட்டு விண்வெளிச் சமூகத்துடன் பல இருவழி மற்றும் பல்வழி உடன்பாடுகளைக் கண்டு கூட்டுறவாக செயல்படுகிறது
குறிக்கோள்
தொகுஇசுரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்) குறிக்கோளானது விண்வெளி தொழில் நூட்பங்களையும் அதன் பயன்பாடுகளையும் உருவாக்குவதன் மூலம் நாட்டுக்கு தேவையான பணிகளை நிறைவேற்றுதலாகும்.
துவக்க காலம்
தொகுஇந்தியாவின் விண்வெளி ஆய்வின் வரலாறு 1920களில் கொல்கத்தாவில் அறிவியலார் சிசிர் குமார் மித்திராவின் செயல்பாடுகளில் துவங்கியதாகக் கொள்ளலாம்; மித்திரா தரையளாவிய வானொலி அலைகள்மூலம் அயனி வெளியை ஆய்வு செய்யச் சோதனைகளை நிகழ்த்தினார்.[2] பின்னர், இந்திய அறிவியலாளர்கள் சி. வி. ராமன் , மேக்நாத் சாகா போன்றோர் விண்வெளி அறிவியலுக்குப் பயனாகும் அறிவியல் கொள்கைகளை அளித்து வந்தனர்.[2] இருப்பினும் 1945ஆம் ஆண்டிற்குப் பின்னரே இத்துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[2] இத்தகைய அமைப்புசார் ஆய்வுகளுக்கு இரு இந்திய அறிவியலாளர்கள் வழி நடத்தினர்: விக்கிரம் சாராபாய்— அகமதாபாத்தில் அமைந்துள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவியவர்—மற்றும் ஹோமி ஜெஹாங்கீர் பாபா, 1945இல் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவன இயக்குனராகத் துவக்கியவர்.[2] விண்வெளித் துறையில் துவக்கத்தில் அண்டக் கதிரியக்கம், உயர்வெளி மற்றும் காற்றுவெளி சோதனைக் கருவிகள், கோலார் சுரங்கங்களில் துகள் சோதனைகள் மற்றும் உயர் வளிமண்டலம் போன்றவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன.[3] ஆராய்ச்சி ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியிடங்களில் நிகழ்ந்த ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.[3][4]
1950இல் இந்திய அரசில் புதியதாக உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் துறைக்கு ஓமி பாபா செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னரே இத்துறையில் ஆய்வுக்கு அரசு ஆதரவு கிட்டியது.[4] அணுவாற்றல் துறை இந்தியாவெங்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்கியது.[5] 1823இல் கொலாபாவில் துவங்கப்பட்ட வானாய்வு நிலையத்தில் புவியின் காந்தப் புலம்குறித்து ஆயப்பட்டு வந்தது. வானிலையியலில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மதிப்புமிக்க தகவல்கள் திரட்டப்பட்டன. 1954ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநில வானாய்வு மையம் நிறுவப்பட்டது.[4] 1957ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஐதராபாத்தில் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ரங்க்பூர் வானாய்வு மையம் நிறுவப்பட்டது.[4] இந்த இரு மையங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவியல் கூட்டுறவுடன் இயங்கின.[4] விண்வெளித்துறை வளர்ச்சிக்குத் தொழில்நுட்ப ஆதரவாளராக விளங்கிய அந்நாள் இந்தியப் பிரதமர் சவகர்லால் நேருவின் பங்கும் இருந்தது[5] 1957இல் சோவியத் ஒன்றியம் வெற்றிகரமாக இசுப்புட்னிக் 1ஐ விண்ணில் செலுத்தியதும் மற்ற நாட்டவரும் விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்த தூண்டுதலாக அமைந்தது.[5] 1962ஆம் ஆண்டில் விக்கிரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கானக் குழு (INCOSPAR) அமைக்கப்பட்டது.[5] 1969ஆம் ஆண்டில் இக்குழுவிற்கு மாற்றாக இஃச்ரோ நிறுவப்பட்டது.
ஏவுகலத் தொகுதி
தொகுபுவிசார் அரசியல் மற்றும் பொருளியல் காரணங்களுக்காக 1960களிலும் 1970களிலும் தனது சொந்தமான ஏவுகலங்களைத் தயாரிக்க இந்தியா உந்தப்பட்டது. 1960-70 காலகட்டங்களில் முதல்நிலையாக ஆய்வு விறிசுகளை வெற்றிகரமாக இயக்கியபிறகு 1980களில் துணைக்கோள் ஏவுகலங்களை வடிவமைத்துக் கட்டமைக்கும் திட்டங்கள் உருவாகின. இவற்றிற்கான முழுமையான இயக்கத்திற்கான ஆதரவு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.[6] எஸ்.எல்.வி-3,மேம்பட்ட துணைக்கோள் ஏவுகலங்களை அடுத்து முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV) மற்றும் புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் (GSLV) தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
செயற்கைக்கோள் ஏவுகலம் (SLV)
தொகு- நிலை: நிறுத்தப்பட்டது
இதன் ஆங்கிலச் சுருக்கமான எஸ்.எல்.வி அல்லது எஸ்.எல்.வி-3 என அறியப்படும் செயற்கைக்கோள் ஏவுகலம் ஓர் நான்கு கட்ட திட எரிபொருள் இலகு ஏவுகலம். 500கிமீ தொலைவு ஏறவும் 40 கிலோ ஏற்புச்சுமை கொண்டு செல்லவும் வடிவமைக்கப்பட்டது.[7] முதல் ஏவல் 1979இலும் அடுத்த ஆண்டு இருமுறையும் இறுதி ஏவல் 1983இலும் நிகழ்ந்தன. இந்த நான்கில் இரண்டே வெற்றிகரமாக அமைந்தன.[8]
மேம்பட்ட செயற்கைக்கோள் ஏவுகலம் (ASLV)
தொகு- நிலை: நிறுத்தப்பட்டது
இந்த ஏவுகலம் ஐந்து நிலை திட எரிபொருள் விறிசு ஆகும்; இதனால் 150 கிலோ செயற்கைக்கோளைத் தாழ் புவி சுற்றுப்பாதையில் ஏவ இயலும். இதன் வடிவமைப்பு எஸ்.எல்.வியை அடியொற்றி இருந்தது.[9] முதல் ஏவல் 1987இலும், 1988,1992,1994 களில் மூன்று ஏவல்களும் நிகழ்ந்தன; இரண்டு ஏவல்களே வெற்றி பெற்றன.[8]
முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV)
தொகு- நிலை: இயக்கத்தில்
பி. எஸ்.எல்.வி என்ற ஆங்கிலச் சுருக்கத்தால் பரவலாக அறியப்படும் முனையத் துணைக்கோள் ஏவுகலம் இந்திய தொலையுணர்வு துணைக்கோள்களை சூரிய இணைவு சுற்றுப்பாதைகளில் ஏவிட வடிவமைக்கப்பட்ட மீளப்பாவிக்கமுடியாத (இழக்கத்தக்கதொரு) ஏவு அமைப்பாகும். இதற்கு முன்னர் இந்தச் செயற்கைக்கோள்கள் உருசியாவிலிருந்து விண்ணேற்றப்பட்டு வந்தன. இந்த ஏவுகலங்களால் சிறு துணைக்கோள்களை புவிநிலை மாற்று சுற்றுப்பாதைக்கு ஏவ முடியும். இந்த ஏவுகலத்தால் 30 விண்கலங்கள் (14 இந்திய விண்கலங்களும் 16 வெளிநாட்டு விண்கலங்களும்) விண்ணேற்றப் பட்டுள்ளன.[10] ஏப்ரல் 2008இல் இது ஒரே ஏவலில் 10 துணைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏற்றி அதுவரை இருந்த உருசிய சாதனையை முறியடித்தது.[11]
ஜுலை 15, 2011 அன்று பி.எஸ்.எல்.வி தனது 18வது தொடர்ந்த ஏவல்பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இதன் 19 ஏவல்களில் செப்டம்பர் 1993 முதல் பயணம் மட்டுமே தோல்வியில் முடிந்தது.[12]
புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் (GSLV)
தொகு- நிலை: இயக்கத்தில்
ஜி.எஸ்.எல்.வி ஒரு டெல்டா-II வகை செயற்கைக்கோள் ஏவு கலம். இது ஒரு மீளப்பாவிக்க இயலாத அமைப்பு (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பு). இந்தத் திட்டம் இன்சாட் வகை செயற்கைக்கோள்களைப் புவிநிலை சுற்றுப்பாதையில் செலுத்திடவும் வெளிநாட்டு விறிசுகளை நாடவேண்டிய தேவையைக் குறைக்கவும் செயல்படுத்தப்பட்டது.இதனால் 5 டன் எடையுள்ள ஏற்புச்சுமையை தாழ் புவி சுற்றுப்பாதையில் இட முடியும்.
இத்திட்டத்திற்கு ஒரு பின்னடைவாகத் திசம்பர் 25, 2010இல் ஜிசாட்-5பி சுமந்தவண்ணம் சென்ற ஜி.எஸ்.எல்.வி கட்டுப்பாட்டு அமைப்பு தவறியதால் முன்னரே திட்டமிட்டபடி பாதுகாப்பாகத் தானே வெடித்துச் சிதறியது.[13]
புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் மார்க்-III (GSLV III)
தொகு- நிலை: இயக்கத்தில்
புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் மார்க்-III முன்நு நிலைகள் கொண்ட விண்வெளிக்கலன் ஆகும். இதன் மூலம் மிகு எடையுள்ள செயற்கைக்கோள்களைப் புவிநிலை சுற்றுப்பாதையில் செலுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜி. எஸ். எல். விக்கு அடுத்தத் தலைமுறையாக இருப்பினும் இதன் வடிவமைப்பை அதனை ஒட்டி இருக்கவில்லை. இதன் முதல் ஏவுதல் 2012ஆம் ஆண்டில் வெற்றி பேற்று, மேலும் இரு முறை இயக்கப்பட்டுள்ளது. தற்போது இது பயன்பாட்டு நிலையை அடைந்துள்ளது. இந்தியாவின் மனித விண்வெளி திட்டத்திற்கு இந்த விண்கலனையே பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.[14][15]
மறுபயன்பாட்டு ஏவுகலம்
தொகுவிண்வெளிச் செலுத்துவாகனச் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு மறுபயன்பாட்டிற்கு உதவும் செலுத்துகலன்களை (Reusable Launch Vehicl) வடிவமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்கான முதற்சோதனை 2015 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.[16][17]
புவி கூர்நோக்கு மற்றும் தொலைதொடர்பு செயற்கைக்கோள்கள்
தொகுஇந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா சோவியத் ஒன்றியத்தால் ஏப்ரல் 19 , 1975 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோகினி வகை செயற்கைக்கோள்களை இந்தியாவிலேயே தயாரித்து ஏவுதலும் நிகழ்ந்தது. தற்போது இஃச்ரோ பல்வகையான புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களை இயக்கி வருகிறது.
இன்சாட் தொடர்
தொகுஇன்சாட் என்று பரவலாக அறியப்படும் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி திட்டம் பல்நோக்கு புவிநிலை செயற்கைக்கோள்களின் தொடராகும். இது தொலைத்தொடர்பு, ஒலி/ஒளி பரப்பு, வானிலையியல் மற்றும் தேடிக் காப்பாற்று (search-and-rescue) தேவைகளுக்காகத் திட்டமிடப்பட்டது. 1983ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் ஆசியா-பசிபிக் வலயத்திலேயே மிகப்பெரும் உள்நாட்டு செய்மதி தொலைதொடர்பு அமைப்பாக விளங்குகிறது. இதனை ஓர் கூட்டு முயற்சியாக இந்திய அரசின் விண்வெளித் துறை, தொலைத்தொடர்புத் துறை, இந்திய வானிலையியல் துறைகளும் அனைத்திந்திய வானொலி, தூர்தர்சன் நிறுவனங்களும் இயக்குகின்றன; இவற்றை ஒருங்கிணைக்க நடுவண் அரசுச் செயலர்கள் நிலையில் இன்சாட் ஒருங்கிணைப்பு குழு அமைக்கபட்டுள்ளது.
இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள் தொடர்
தொகுஇந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள் (IRS) இசுரோவினால் வடிவமைக்கட்டு, கட்டப்பட்டு, ஏவப்பட்டு, இயக்கப்படும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள் தொடராகும். இவற்றால் நாட்டிற்கு தொலை உணர்வுச் சேவைகள் கிட்டுகின்றன. உலகிலேயே குடிசார் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் மிகப்பெரிய தொலையுணர்வு துணைக்கோள்த் தொகுதியாக விளங்குகிறது. துவக்கத்தில் இவை 1 (A,B,C,D) எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் அண்மைக் காலத்தில் இவற்றின் பயன்பாடுகளை ஒட்டி (ஓசியன்சாட், கார்ட்டோசாட், ரிசோர்சுசாட்) பெயரிடப்படுகின்றன.
கதிரலைக் கும்பா படிம செயற்கைக்கோள்கள்
தொகுஇசுரோ தற்போது இரண்டு ஒற்றுக் கோள்கள் என விளையாட்டாக அழைக்கப்படும் கதிரலைக் கும்பா படிம செயற்கைக்கோள்களை இயக்குகிறது. ஏப்ரல் 26, 2012 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி மூலமாக ரிசாட்-1 (RISAT-1) விண்ணேற்றப்பட்டது. இது சி-அலைக்கற்றையில் இயங்கும் சின்தெடிக் அபெர்சர் ரேடார் ஏற்புச்சுமையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் துல்லியமான மிகு இடப் பிரிதிறன் கொண்ட படிமங்களைப் பெற இயலும்.[18].இதற்கு முன்னரே 2009இல் இசுரேலிடமிருந்து $110 மில்லியன் செலவில் பெறப்பட்டு ஏவப்பட்ட ரிசாட்-2 வையும் இயக்குகிறது.[18]
மற்ற செயற்கைக்கோள்கள்
தொகுஇவற்றைத் தவிர இசுரோ சில புவிநிலை செயற்கைக்கோள்களைச் சோதனையோட்டமாக ஏவியுள்ளது. இவை ஜிசாட் தொடர் என்று அழைக்கப்படுகின்றன. வானிலைக்காக மட்டுமே பயன்படுமாறு முதல் வானிலை செயற்கைக்கோளை (கல்பனா-1) [19] முனையத் துணைக்கோள் ஏவுகலம் மூலமாகச் செப்டம்பர் 12, 2002இல் விண்ணேற்றியது.[20][21]
புவிக்கப்பால் ஆராய்தல்
தொகுபுவியின் சுற்றுப்பாதையைத் தாண்டி இந்தியாவின் முதல் தேடலாக சந்திரயான்-1 அமைந்தது. நிலா|நிலவுக்கான விண்கலமான இது நவம்பர் 8, 2008 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து சந்திரயான்-2 ஏவவும் செவ்வாய் கோளிற்கு ஆளில்லா கலங்களை இயக்கவும் புவி அண்மித்த விண்கற்கள் மற்றும் வால் வெள்ளிகளை துழாவும் ஆய்வுக்கலங்களை செலுத்தவும் திட்டமிட்டுள்ளது.
மையங்கள்
தொகுஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகம் பெங்களூரில் உள்ள அந்தரிக்ஷ் பவனில் (இந்தி: அந்தரிக்ஷ் = விண்வெளி, பவன் = மாளிகை) இயங்குகிறது.
ஆய்வு மையங்கள்
தொகுமையம் | அமைவிடம் | விவரம் |
---|---|---|
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் | அகமதாபாத் | இங்கு ஆய்வுப் படிப்புக்கள் மேற்கொள்ளப்படும் சில துறைகள்: சூரிய கோள்களின் இயற்பியல், அகச்சிவப்பு வானியல், புவி-அண்ட இயற்பியல், மின்ம இயற்பியல், வானியற்பியல், தொல்பொருளியல், மற்றும் நீரியல் [22] உதயப்பூரில் உள்ள ஆய்வகமொன்றும் இந்த மையத்தின் கீழ் இயங்குகிறது.[22] |
குறைகடத்தி ஆய்வகம் | சண்டிகர் | குறைகடத்தி தொழில்நுட்பம், நுண் இலத்திரன் இயந்திர அமைப்புக்கள், -குறைகடத்தி செயன்முறை தொடர்புடைய செயன்முறை தொழில்நுட்பங்கள் குறித்த துறைகளில் ஆராய்ச்சியும் மேம்படுத்தலும் கையாளப்படுகின்றன. |
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் | சித்தூர் | என்.ஏ.ஆர்.எல் வளிமண்டல அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியலில் அடிப்படை மற்றும் பயன்முறை ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. |
விண்வெளி பயன்முறை மையம் | அகமதாபாத் | இந்த மையத்தில் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தும் வகையிலான பல கூறுகள் ஆராயப்படுகின்றன.[22] இங்கு ஆய்வு செய்யப்படும் துறைகளில் சில: புவியளவையியல், செயற்கைக்கோள் மூலமான தொலைதொடர்பு, அளக்கையியல், தொலையுணர்தல், வானிலையியல், சுற்றுச்சூழல் மேற்பார்வை ஆகியன.[22] கூடுதலாக தில்லி செயற்கைக்கோள் புவி மையத்தையும் இந்த மையமே இயக்குகிறது.[23] |
வட கிழக்கு விண்வெளி பயன்முறை மையம் | சில்லாங் | வட கிழக்கு மாநிலங்களுக்கு வளர்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமுகமாக தொலையுணர்தல், புவியியல் தகவல் முறைமை, செயற்கைக்கோள் தொலைதொடர்பு துறைகளில் குறிப்பிடப்பட்ட சில திட்டங்களை மேற்கொள்ளுதல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல். |
சோதனை மையங்கள்
தொகுமையம் | அமைவிடம் | விவரம் |
---|---|---|
திரவ உந்துகை அமைப்பு மையம் | பெங்களூரு, வலியமலா (திருவனந்தபுரம்), மற்றும் மகேந்திரகிரி (திருநெல்வேலி மாவட்டம்) | திரவ உந்துகை அமைப்பு மையங்களில் திரவ உந்துகை கட்டுப்பாடு பொதிகைகளை சோதனைகளும் நடைமுறைப்படுத்தலும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் ஏவுகலங்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கான பொறிகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.[22] சோதனைகள் பெரும்பாலும் மகேந்தரகிரியில் நடத்தப்படுகின்றன.[22] இங்கு துல்லிய ஆற்றல்மாற்றிகள் கட்டமைக்கப்படுகின்றன.[24] |
கட்டமைப்பு மற்றும் ஏவல் மையங்கள்
தொகுமையம் | அமைவிடம் | விவரம் |
---|---|---|
இஸ்ரோ செயற்கைகோள் மையம் | பெங்களூரு | இஸ்ரோவின் முதன்மை செயற்கைக்கோள் தொழில்நுட்ப தளமான இங்கிருந்து எட்டு விண்வெளித் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இங்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டப் பொருட்களைக் கொண்டே விண்ணோடங்கள் கட்டமைக்கப்படுகின்றன.[22] இங்குதான் ஆரியபட்டா, பாசுகரா, ஆப்பிள், மற்றும் ஐஅர்எஸ்-1A கட்டப்பட்டன; இந்திய தொலையுணர் செயற்கைக்கோளும் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி கோள்களும் தற்போது வடிவமைக்கப்படுகின்றன.[24] |
மின்-ஒளியியலான அமைப்புகளுக்கான ஆய்வகம்-LEOS | பெங்களூரு | அனைத்து செயற்கைக்கோள்களும் தேவையான அணுகுமுறை உணரிகள் மேம்படுத்தபடுகின்றன. அனைத்து இஃச்ரோ செயற்கைக்கோள்களுக்கும் படப்பிடிப்புக் கருவிகளுக்குமான அதி துல்லிய ஒளியியல் இங்குள்ள ஆய்வகத்தில் தான் மேம்படுத்தப்படுகின்றன. இது பெங்களூருவின் புறநகர் பீன்யா தொழிற் பேட்டையில் அமைந்துள்ளது. |
சதீஸ் தவான் விண்வெளி மையம் | ஸ்ரீஹரிக்கோட்டா | பல துணை மையங்களைக்கொண்டு இந்தியாவின் செயற்கைக்கோள்களை ஏவுமிடமாக ஸ்ரீஹரிக்கோட்டா தீவு விளங்குகிறது.[22] இது ஆய்வு விறிசுகளை ஏவும் முதன்மைத் தளமாகவும் உள்ளது.[24] மேலும் இங்குதான் இந்தியாவின் மிகப்பெரும் திண்ம உந்துகை விண்வெளி ஊக்கித் தொகுதியும் (SPROB) நிலைமின் சோதனை மற்றும் மதிப்பீட்டு வளாகமும் (STEX) அமைந்துள்ளன.[24] |
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் | திருவனந்தபுரம் | இஸ்ரோவின் மிகப்பெரும் வளாகமாக விளங்கும் இந்த மையம் முதன்மை தொழில்நுட்ப மையமாகவும் செயற்கைக்கோள் ஏவுகலம் - 3 மேம்பட்ட துணைக்கோள் ஏவுகலம், மற்றும் முனைய துணைக்கோள் ஏவுகலம் தொடர் ஏவுகலங்களை வடிவமைத்த மையமாகவும் உள்ளது.[22] இந்த வளாகத்தில் தும்பா நிலநடுக்கோட்டு விறிசு ஏற்றுகை நிலையமும் ரோகினி ஆய்வு விறிசுத் திட்ட அலுவலகமும் உள்ளன.[22] இங்கு ஜி. எஸ். எல். வி தொடர் ஏவு கலங்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன.[22] |
தும்பா நிலநடுக்கோட்டு விறிசு ஏற்றுகை நிலையம் | திருவனந்தபுரம் | இந்த நிலையம் ஆய்வு விறிசுகளை ஏவிவிட பயன்படுத்தப்படுகிறது. |
சுவடு தொடரல் மற்றும் கட்டளை மையங்கள்
தொகுமையம் | அமைவிடம் | விவரம் |
---|---|---|
இந்திய ஆழ் விண்வெளி பிணையம் (IDSN) | பெங்களூரு | இந்தப் பிணையம் விண்கல நலத்தகவல்களையும் ஏற்புச்சுமைத் தகவல்களையும் நிகழ்நிலையில் பெற்று, அலசி, பாதுகாப்பதுடன் வேண்டுவோருக்கு வழங்குகிறது. இதனால் நிலவிற்கும் அப்பாற்பட்ட, தொலைதூரத்தில் உள்ள செயற்கைக்கோள்களையும் தொடரவும் மேற்பார்வையிடவும் முடியும். |
தேசிய தொலையுணர்வு மையம் | ஐதராபாத் | இந்த மையம் இயற்கை வளங்களை மேலாண்மை செய்திட தொலையுணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; வான்வெளி அளக்கவியலுக்கும் பயன்படுத்துகிறது.[22] இதன் மையங்கள் ஐதராபாத்தில் பாலாநகரிலும் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள ஷாத் நகரிலும் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் தேராதூனில் இயங்கும் இந்திய தொலையுணர்வுக் கழகம் பயிற்சி வசதிகளை அளிக்கிறது.[22] |
இஸ்ரோ தொலைப்பதிவு, சுவடுதொடரல் மற்றும் கட்டளை பிணையம் | பெங்களூரு (தலைமையகம்) மற்றும் இந்தியாவிலும் உலகெங்கும் பல தரை நிலையங்கள்.[23] | இந்த மையத்தில் மென்பொருள் மேம்பாடு, தரை நிலைய இயக்கம், சுவடுதொடரல், தொலைப்பதிவு மற்றும் கட்டளை (TTC) மேற்கொள்ளப்படுவதுடன் ஏற்பாட்டியல் ஆதரவும் அளிக்கிறது.[22] இந்த மையத்தின் உலகளாவிய நிலையங்கள் போர்ட் லூயி (மொரிசியசு), பியர்சுலேக் (உருசியா), பியாக் (இந்தோனேசியா) மற்றும் புருணையில் உள்ளன. |
தலைமைக் கட்டுப்பாட்டு மையம் | ஹாசன்; கருநாடகம் | புவிநிலை துணைக்கோள் சுற்றுப்பாதை ஏற்றம், ஏற்புசுமை சோதனை, மற்றும் சுற்றுப்பாதையில் துணைக்கோளை நிலையாக வைத்திருக்கும் பராமரிப்பு செயல்பாடுகள் ஆகியவை இந்த மையத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன.[25] இந்த மையத்திற்கு இக்கட்டுப்பாடுகளை மேற்கொள்ள ஏதுவாக தரை நிலையங்களும் துணைக்கோள் கட்டுப்பாட்டு மையமும் (SCC) கட்டமைக்கப்பட்டுள்ளன.[25] இதற்கு பேரிடர் மீட்பு நிலையமாக இரண்டாவது முற்றிலும் ஒத்த வசதி 'MCF-B' , போபாலில் கட்டப்பட்டு வருகிறது.[25] |
மனிதவள மேம்பாடு
தொகுமையம் | அமைவிடம் | விவரம் |
---|---|---|
இந்திய தொலையுணர்வுக் கழகம் (IIRS) | தேராதூன் | இந்தியத் தொலையுணர்வுக் கழகம் இந்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தனிப்பட்ட கல்விநிலையமாகும். இது தொலையுணர்வு, புவித்தகவல் இயல், புவியிடங்காட்டி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மேல்நிலை படிப்பு வழங்கும் முன்னோடி கல்வி நிலையமாக விளங்குகிறது. இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்தும் கற்பிக்கப்படுகிறது. இத்துறைகளில் பல ஆய்வுத்திட்டங்களையும் மேற்கொள்கிறது. |
இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம் (IIST) | திருவனந்தபுரம் | இந்தக் கல்வி நிலையத்தில் விண்வெளிப் பொறியியல், வான்பயண இலத்திரனியல் மற்றும் இயற்பியல் கல்வித்திட்டங்களில் பட்ட மற்றும் பட்டமேற்படிப்புக்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையத்தின் முதல் தொகுதி மாணவர்கள் சூலை 2011இல் இஃச்ரோவின் பல்வேறு மையங்களில் பணிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டனர். |
மேம்படுத்தல் மற்றும் கல்விக்கான தொடர்பியல் பிரிவு | அகமதாபாத் | இந்த மையம் பெரும்பாலும் இன்சாட் திட்டத்துடன் ஒருங்கிணைந்து கல்வி, ஆராய்ச்சி, மற்றும் பயிற்சிகளுக்குப் பணி புரிகிறது.[22] இதன் முதன்மை பணிகளாக சிற்றூர்களுக்கான கிராம்சாட் மற்றும் கல்விக்கான எடுசாட் திட்டங்களை செயற்படுத்துவதாகும்.[24] இதன் கீழேயே பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கான தொடர்பு அலைவரிசை (TDCC) இயங்குகிறது.[23] |
வணிகக்கிளை
தொகுமையம் | அமைவிடம் | விவரம் |
---|---|---|
ஆந்திரிக்சு கழகம் | பெங்களூரு | அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் சந்தைப்படுத்தும் முகமையாக இந்த நிறுவனம் இஃச்ரோவின் வன்பொருள், மென்பொருள் மற்றும் மனித வளத்தை சந்தைப்படுத்துகிறது.[25] |
உலகளாவிய ஒத்துழைப்பு
தொகுஇசுரோ தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து பல்வேறு நாடுகள் இசுரோவிற்கு பலவகைகளில் ஒத்துழைப்பை நல்கி வருகின்றன.
இசுரோ மற்றும் விண்வெளித் துறையும் பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளன. அவைகளாவன:-
தற்போதைய திட்டங்களும் சாதனைகளும்
தொகுஇந்திய விண்வெளி ஆய்வு மையமானது, விண்வெளிக்கு செல்லும் கருவிகள், விண்வெளிப் பறப்பு, போன்றவை மட்டுமில்லாமல் மேலும் சில திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது, புவன் திட்டமாகும் கூகுள் எர்த் திட்டத்திற்கு போட்டியாகவும், அதிநவீன வசதிகளுடன் இந்தியாவின் பாதுகாப்புக் காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக முப்பரிமாண படங்களையும் மிகத்துல்லியமாகப் காணலாம்.
இத்திட்டத்தின் வாயிலாக, இந்தியாவின் எந்த நிலப்பரப்பையும் தெட்டத்தெளிவாகப் பார்க்க முடியும். அதன் துல்லிய அளவு, 10 மீட்டர் முதல் 55 மீட்டர் உயரம் வரை. இதன் மூலம் சாலையில் உள்ள ஒரு வாகனத்தைக் கூட இந்த இணையதளம் மூலம் பார்க்க முடியும். ஆனால், தீவிரவாதிகள், தேச துரோகிகளுக்கு உதவிடும் வகையில் இந்த இணையதளம் அமைந்துவிடக் கூடாது என்பதற்காக, பாதுகாப்பு பகுதிகள், ராணுவ சம்பந்தப்பட்ட இடங்கள், முக்கிய இடங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் துல்லியமாகப் பார்க்க முடியாது.
இதில் உள்ள காட்சிகள் 2008-ம் ஆண்டுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் CARTOSAT-1, CARTOSAT - 2 ஆகியவை மூலம் முப்பரிமாணத்தில் படம் பிடிக்கப்பட்டவையாகும்.
2012 க்கு பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 ஏவுதலை திட்டமிட்டுள்ளதால், இசுரோ தற்போது மூன்றாவது ஏவுதளத்தை அமைக்கப்போவதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.[26]
12 சனவரி 2018 இல் இசுரோ தனது 100 ஆவது செயற்கைக்கோளை அனுப்பி சாதனை படைத்துள்ளது.[27]
காட்சியகம்
தொகு-
NASA+ISRO,1974
-
ஆரியபட்டா,19.04.1975
-
இசுரோ பணியாள்
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "About ISRO - Introduction". ISRO. Archived from the original on 2013-10-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-13.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Daniel, 486
- ↑ 3.0 3.1 Daniel, 487
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Daniel, 488
- ↑ 5.0 5.1 5.2 5.3 Daniel, 489
- ↑ Gupta, 1697
- ↑ "ISRO vehicles". Jean-Jacques Serra for TBS Satellite. பார்க்கப்பட்ட நாள் 2009-01-27.
- ↑ 8.0 8.1 "ISRO milestones". ISRO. Archived from the original on 2007-10-14. பார்க்கப்பட்ட நாள் 2009-01-27.
- ↑ "ASLV". ISRO. Archived from the original on 2007-10-17. பார்க்கப்பட்ட நாள் 2009-01-27.
- ↑ "PSLV-C11 Successfully Launches Chandrayaan-1". Archived from the original on 2008-10-25. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.
- ↑ Majumder, Sanjoy (2008-10-21). "India sets its sights on the Moon". BBC. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7681701.stm. பார்த்த நாள்: 2008-10-23.
- ↑ Antara News : India successfully puts 3 satellites into orbit
- ↑ "Indian space program hit by another launch mishap". SpaceFlightNow. 25 December 2010. http://www.spaceflightnow.com/news/n1012/25gslv/.
- ↑ "gsat-19-mission". Archived from the original on 2017-12-13. பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.
- ↑ "Welcome To ISRO :: Launch Vehicles :: GSLV Mark III". Isro.org. Archived from the original on 2009-08-15. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.
- ↑ "Reusable Launch Vehicles: An Indian Perspective". இசுபேசு சேஃப்டி மேகசின். பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ISRO to Carry out RLV-TD Test Flight". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 18.0 18.1 "'ISRO successfully launches 'spy satellite' RISAT-1'". ndtv. 2012-04-26 இம் மூலத்தில் இருந்து 2013-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130510142554/http://www.ndtv.com/article/india/isro-successfully-launches-spy-satellite-risat-1-202464?pfrom=home-otherstorieso.
- ↑ "eoPortal directory: Kalpana-1/MetSat-1 (Meteorological Satellite-1)". Eoportal.org. Archived from the original on 2012-09-08. பார்க்கப்பட்ட நாள் 2011-03-11.
- ↑ "Space Technology in India | Indian Space Research Organization (ISRO)". Indiaonline.in. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-03-11.
- ↑ "The Hindu Business Line : ISRO left poorer by transponder crunch, foreign leases". Thehindubusinessline.in. 2011-01-08. பார்க்கப்பட்ட நாள் 2011-03-11.
- ↑ 22.00 22.01 22.02 22.03 22.04 22.05 22.06 22.07 22.08 22.09 22.10 22.11 22.12 22.13 22.14 India in Space", Science & Technology edited by N.N. Ojha, 142.
- ↑ 23.0 23.1 23.2 "Space Research", Science and Technology in India edited by R.K. Suri and Kalapana Rajaram, 415.
- ↑ 24.0 24.1 24.2 24.3 24.4 "Space Research", Science and Technology in India edited by R.K. Suri and Kalapana Rajaram, 414.
- ↑ 25.0 25.1 25.2 25.3 "Space Research", Science and Technology in India edited by R.K. Suri and Kalapana Rajaram, 416.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
- ↑ மிது கார்த்தி (16 சனவரி 2018). "இஸ்ரோ 100 நாட் அவுட்". தி இந்து "வெற்றிக்கொடி". தி இந்து.
உசாத்துணைகள்
தொகு- Bhaskaranarayana etc. (2007), "Applications of space communication", Current Science, 93 (12): 1737-1746, Bangalore: Indian Academy of Sciences.
- Burleson, D. (2005), "India", Space Programs Outside the United States: All Exploration and Research Efforts, Country by Country, pp. 136–146, United States of America: McFarland & Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7864-1852-4.
- Daniel, R.R. (1992), "Space Science in India", Indian Journal of History of Science, 27 (4): 485-499, New Delhi: Indian National Science Academy.
- Gupta, S.C. etc. (2007), "Evolution of Indian launch vehicle technologies", Current Science, 93 (12): 1697-1714, Bangalore: Indian Academy of Sciences.
- "India in Space", Science & Technology edited by N.N. Ojha, pp. 110–143, New Delhi: Chronicle Books.
- Mistry, Dinshaw (2006), "Space Program", Encyclopedia of India (vol. 4) edited by Stanley Wolpert, pp. 93–95, Thomson Gale, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-31353-7.
- Narasimha, R. (2002), "Satish Dhawan", Current Science, 82 (2): 222-225, Bangalore: Indian Academy of Sciences.
- Sen, Nirupa (2003), "Indian success stories in use of Space tools for social development", Current Science, 84 (4): 489-490, Bangalore: Indian Academy of Sciences.
- "Space Research", Science and Technology in India edited by R.K. Suri and Kalapana Rajaram, pp. 411–448, New Delhi: Spectrum, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7930-294-6.
மேலும் அறிய
தொகு- [ISRO plans human colony on moon]; by Bibhu Ranjan Mishra in Bangalore; 18 December 2007; Rediff India Abroad (Rediff.com)
- The Economics of India's Space Programme, by U.Sankar, Oxford University Press, New Delhi, 2007, ISBN.13:978-0-19-568345-5
வெளி இணைப்புகள்
தொகு- இஃச்ரோ முகப்பு பக்கம்பரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம்
- NARL Home Page
- FAS article on ISRO. பரணிடப்பட்டது 2016-08-11 at the வந்தவழி இயந்திரம்
- Article on India's space program.
- About India's space program, launch Vehicles,Chandrayaan.
- [1]
- இந்தியா, பிரான்ஸ் Gaganyaan Mission ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன