உ. வே. சாமிநாதையர்

தமிழ்ப் பதிப்பியக்கத்தில் பெரும்பணி ஆற்றியவர்
(உ. வே. சா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாதையர் (19 பெப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942, சுருக்கமாக உ.வே.சா) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா. அவர்கள் 90-இற்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-இற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.[1]

உ.வே. சாமிநாதையர்
பிறப்பு(1855-02-19)19 பெப்ரவரி 1855
சூரியமூலை, தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம்
இறப்புஏப்ரல் 28, 1942(1942-04-28) (அகவை 87)
பணிபதிப்பாளர்
அறியப்படுவதுஅழிநிலை நூல்களைப் பதிப்பித்தமை
சமயம்இந்து சமயம்

வாழ்க்கை

சாமிநாதையர் 1855 பிப்ரவரி 19 இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் சூரியமூலையில் வேங்கட சுப்பையர், சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். தற்போதைய திருவாரூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, உத்தமதானபுரம் எனும் சிற்றூரே இவரது தந்தையின் சொந்த ஊர் என்றாலும் தாயின் ஊர் சூரியமூலை ஆகும். இவரின் தந்தை இசையுடன் அரிகதை காலாட்சேபம் செய்து வந்தவர். உ.வே.சா. தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர்த் தன் 17-ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த மகாவித்துவான் என அழைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த இவர், பின்னர்ச் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.

உ.வே.சா. எழுதிய என் சரித்திரம்

உ.வே.சா. வாழ்க்கையின் சிறப்பு

உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும் புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றிப் பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துகளையும் விற்றுப் பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.

சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா. பெரும் காரணமாவார். சங்க கால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது.

இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களைக் குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது.

சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்க முயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கிடையில் கற்றுப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887-ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிட்டாா். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு கருத்துக் கருவூலமாக இருக்கின்றது.

சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி அவ்வுலக (ஆன்மீக) வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது எனக் கூறுவாராம்.

இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஓர் ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடி அலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.

தமிழாசிரியர் எங்குக் கிடைப்பாரோ என்று தேடித்தேடி, அதன் தொடர்ச்சியாகக் குடும்பம் முழுவதும் தமிழாசிரியர் இருக்கும் இடத்திற்குக் குடி பெயர்ந்து விடும். படித்த புலவர்கள் யாரைப் பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் தம் உள்ளம் ஏங்கியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்கள். “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உ.வே.சா. பதிவுசெய்கிறார்

உத்தமதானபுரம் மக்கள் அவர்தம் வாழ்க்கை

உ.வே.சாவின் ஊரான உத்தமதானபுரத்தின் பெயர்க்காரணம் பெருமையையும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் மனப்பான்மையும் வாஞ்சையோடு பேசுகிறார்கள். எவ்வாறு அவ்வூர் மக்கள் நிறைமனத்தினராயும், சோம்பலை அறியாதவர்களாகவும், நவீன நாகரிகத்தின் வாசனை சிறிதளவும் வீசாமல், உள்ள வளத்தைப் பங்கிட்டு அமைதியாக வாழ்க்கை நடத்தினர் என்று உணர்வு பூர்வமாகக் குறிப்பிடுகின்றார்கள். இவர் குடும்பம் இசையும் தமிழும் கலந்த குடும்பம். இவ்வழியில் வந்த உ.வே.சா. இவைகளில் தேர்ந்த ஞானம் பெற்றிருந்தார் என்பதில் வியப்பில்லை. அக்காலத்தில் வேளாண் நிலத்தைப் “போக்கியத்திற்கு” விடும் பழக்கம் இருந்தது, உழவர்கள் கடன்படுவது இயற்கை மற்றும் பெண்கள் குறிப்பாக மருமகள், வீட்டில் மாமனாரிடமும், மாமியாரிடமும் சொல்லொணாத் துயரடைந்தனர் என்றும் சமுக வாழ்க்கை பற்றிய பல செய்திகள் இயல்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர்கள் மற்றும் சில புகழ் பெற்றவர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை பற்றியும் பல செய்திகளை அறிய முடிகிறது.

உ.வே.சா.வின் பிறப்பு

ஆனந்த வருடம் மாசி மாதம் 9-ஆம் தேதி திங்கட்கிழமை (19-02-1855) அன்று உ.வே.சா. பிறந்தார். இவர் சாதகமும் தன்னுடைய ‘என் சரித்திரத்தில்’ குறிப்பிட்டுள்ளார். இவர் தந்தை, குடும்பம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டுள்ளார். பல வேளாண்குடிப் பெருமக்கள் உதவி செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உ.வே.சா. நினைவு கூறுகிறார். இவர் தந்தை பல இடங்களுக்குச் சென்று இராமாயண விரியுரை நடத்திவந்தார். இது போன்று விரிவுரை செய்பவர்களுக்குப் பலர் உதவி செய்து வந்துள்ளனர் என்னும் செய்தி பல இடத்தில் வருகிறது. உ.வே.சா. தமது இளம்வயதில் தமது பாட்டனாரிடமும் ஓரிரண்டு திண்ணைப் பள்ளிகளிலும் கல்வி பயின்றுள்ளார். இளம் வயதை அரியலூரில் கழித்திருந்தாலும் பிழைப்பைத் தேடி உ.வே‌.சா. குடும்பம் ஊர்ஊராகப் பல ஊர்களுக்குச் சென்று வந்துள்ளது. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அரிச்சுவடி, எண்சுவடி முதலிய கற்றுக் கொடுத்துள்ளனர். ஏட்டில் எழுதவும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் காகிதம் பள்ளிக்கூடம் வரை வரவில்லை, சிலேட்டும் இல்லை. முதலில் மாணவர்கள் மணலில் எழுதிப் பழக வேண்டும்; பின்னர் எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும் அன்றையப் பள்ளிகள் எவ்வாறு செயல்பட்டன என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

உ.வே.சா. சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராய் இருந்தார். ஆனாலும், அவர் தந்தையவர்கள் உ.வே.சா. விளையாடுவதை விரும்பியதில்லை. எப்பொழும் படித்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பினார். தமது சிறிய தந்தையாரிடம் இயற்கையாகவே இசையில் ஆர்வமுள்ள உ.வே.சா. இசை பயின்றாா்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வது அக்காலத்தில் மிகவும் பெருமைப்படும் செயல். உ.வே.சா.விற்குச் சிறுவயதில் ஆங்கில எழுத்துகள் மட்டும் கற்கும் வாய்ப்பு கிட்டியது. சடகோபஐயங்காரே தமக்குத் தமிழில் ஆர்வம் உண்டாகும் வண்ணம் முதன்முதலில் கற்பித்தாா் என்று உ.வே.சா. தெரிவிக்கின்றார்கள். அரியலூரில் தம் குடும்பம் மிக்க வறுமையில் வாழ்ந்து வந்ததையும் பதிவு செய்கின்றார்.கல்வி, கேள்வி இல்லாதவரும் அக்காலத்தில் கல்வி அறிவுடையவர்களைக் கண்டால் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து ஆதரிப்பதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

உ.வே.சா.வின் தந்தை இவருக்கு நல்ல கல்வி கற்பித்துச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதில் தீவிர ஆர்வமும் கவலையும் கொண்டிருந்தார். பல தமிழ் நூல்களை அவருக்கு முறையாகக் கற்பித்தார். சிதம்பரம்பிள்ளை என்னும் தமது தந்தையின் நண்பரிடம் திருவிளையாடற்புராணம் நூலைக் கற்றார். அக்காலத்தில் கற்பது என்பது தற்போது முறையாகப் பள்ளியிலமர்ந்து பாடம் வாரியாக அல்லாமல் இது போன்று தமிழ் நூல்களை நன்கு கற்பதே போலும். உ.வே.சா. தமது வாழ்நாள் முழுவதும் இது போன்றே தமிழ் நூல்களை ஐயம் தீர்ந்தபடி கற்றுத் தேர்ந்தார்கள். நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும் சமகாலத்தில் இயற்றிய பிள்ளைத்தமிழ், கோவை முதலிய இலக்கியங்களையும் இது போன்றே தமிழறிஞா்களிடம் பாடம் கேட்டும் புலமையடைந்தார். சிறுவயது முதலேயே நன்னூலை நன்கு கற்றிருந்ததால் இவருக்கு இது மிகவும் உதவியாக இருந்துள்ளது. எந்தப் புலவரிடம் பாடம் கேட்கச் சென்றாலும், இவரது நன்னூல் புலமை கைகொடுத்து உதவியது.

உ.வே.சா. கவிதை எழுதும் கலையையும் பயின்று வந்தார். அவர் முதலில் செய்யுள் இயற்றிய போது பிறர் கருத்தை வைத்துச் செய்யுள் இயற்றினார். அவர், தந்தை அவருக்கு இது முறையாகாது என்றும் அவருடைய பாட்டில் அவர் அனுபவம் இருப்பதுதான் உசிதம் என்று கூறியதைப் பின்பு நன்கு உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். உ.வே.சா. தமது தந்தையாருடன் சென்று இராமயண விரிவுரையில் உதவி செய்துள்ளார். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதன் மூலம் இவர் தந்தைக்கு நல்ல வருமானமும் கிடைத்தது.

உ.வே.சாவிற்குத் திருமணம் முடித்துவிட வேண்டுமென்று அவர் தந்தையார் விரும்பினார். இளம்வயதில் மணமுடிப்பது அக்காலப்பழக்கம். பதினாறு வயதில் மணம் முடியாமலிருந்தால் அது பெருங்குறை என்று கருதியது அந்தக்காலம். காலமாற்றத்தின் பலனாக அக்காலத்தில் சிறந்தது என்று நினைத்தது தற்பொழுது நகைப்புக்குரியது ஆகிறது. அது போல் அக்காலத்தில் நகைப்புக்குரியது, தற்பொழுது சிறந்தது ஆகின்றது என்றும் குறிப்பிடுகின்றார். அப்பொழுது கூட உ.வே.சா. தமிழை நிறைவாகக் கற்றுக் கொள்ளவில்லை என்ற மனக்குறைதான் பெரிதாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். உ.வே.சாவிற்குப் பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. மணபெண் வயது எட்டு. பொருட்செலவிற்குப் பெரும்பாலும் கிராமத்தினர் உதவி செய்து திருமணத்தை நடத்தினர். திருமணத்திற்கு முன்னும் பின்னும் உ.வே.சாவின் சிந்தனை எல்லாம் “தமிழ்தான் எனக்குச் செல்வம் அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு . . .அன்றும்சரி இன்றும்சரி இந்த நிலைமை மாறவே இல்லை” என்னும் அவருடைய சொற்கள் தமிழ் கற்கவேண்டும் என்பதிலும், தமிழ் மீது அவர் கொண்ட பற்றின் வெளிப்பாடும் ஆகும். இறுதிவரை அவர் வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் ஒரே சிந்தனையைத் தவிர, அவர் வேறு எதிலும் நாட்டம் கொண்டதற்கான சாயலே கிடையாது.

தம் தந்தையின் நண்பராகிய கும்பகோணம் வக்கில் வேங்கிடராவ், உ.வே.சா. தமிழ் கற்பதனாலும் இசைப் பயிற்சியினாலும் பெரிய பயனில்லை; ஆங்கிலம் கற்றுக் கொடுங்கள், தாம் உதவி செய்வதாகவும் தமது நண்பர்கள் முலம் உதவி செய்வதாகவும் கூறியபொழுது அவர்பால் உ.வே.சா. அவர்களுக்குக் கோபமுண்டாயிற்று; தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும் பதிவு செய்கிறார்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி, திருவாடுதுறை ஆதீனம் தொடர்பு

தாம் வாழ்ந்து வந்த ஊரான ஆரியமூலையில் தமிழ் மேலும் கற்க வழியில்லாததால் சோர்வடைந்ததாகவும் அரும்பாவூர் நாட்டார் என்னும் பெருஞ்செல்வர் தமது இல்லத்தில் தங்கியிருந்தபொழுது, உ.வே.சா.வின் தமிழார்வத்தை உணர்ந்து, இவரை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அனுப்பும்படி பரிந்துரைத்தது தம்மனத்தில் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்னும் வேட்கையை ஏற்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். இடையில் சிலகாலம் விருத்தாச்சலம் ரெட்டியாரிடம் உ.வே.சா. தமிழ் கற்றார். பாடல் எழுதுவதன் நுணுக்கங்களை அங்குக் கற்றார். மேலும் புத்தகங்களைப் படிப்பது மட்டும் போதாது; படித்தவர்களிடம் பாடம் கேட்கவேண்டும் என்பதையும் அப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டார். பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் சேர்ந்து பாடம் கற்கத் தொடங்கினார். அப்பொழுது, திருவாடுதுறை ஆதினத்தின் தொடர்பும் கிடைத்தது. அத்தொடர்பு இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதிவரையிலும் இத்தொடர்பு உ.வே.சாவிற்கு மிகுந்த பலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பிற்காலத்தில் மடத்தலைவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அதனால் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றவும் இது வழிவகுத்தது. உ.வே.சா. தம் ஆசிரியர் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அளவிட முடியாத பற்றும், பாசமும் பக்தியும் கொண்டிருந்தார். தமது இறுதிக் காலம் வரை இவற்றில் இம்மியும் குறையவில்லை.

திருநாகைக்காரோணம், நைடதம், திருக்குடந்தைத்திரிபந்தாதி, பழமலைதிருபந்தாதி, திருப்புகலாதிருபந்தாதி, மறைசையந்தாதி, தில்லையக அந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழநிர்வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஸ்டபபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் ஆகிய நூல்களை அவரிடம் கற்றார். ஆசிரியரும் மிகவும் வறுமையில் இருந்தார் என்று உ.வே.சா. கூறுகிறார். “புலமையும் வறுமையும் சேர்ந்தே இருப்பது இந்நாட்டின் சாபம்” இஃது உ.வே.சாவின் கூற்று. திருவாவடுதுறை ஆதினம் திரு.சுப்பிரமணிய தேசிகரை ஆசிரியருடன் சென்று சந்தித்து, அங்கு ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லும் வாய்ப்புக் கிடைத்தைப் பெருமையுடன் கூறுகிறார். இசையுடன் பாடல்களைப் பாடி விளக்கம் அளித்த உ.வே.சா., தேசிகரிடம் நல்ல எண்ணத்தை உருவாக்கினார். ஆதினத்தில் பல புலவர்களுடன் கலந்துரையாடவும், ஆசிரியர்கள் நடத்திய பாடமும் கேட்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்களுக்குப் புத்தகங்கள் பரிசு கொடுத்து அன்பு பாராட்டினார். இது தமது ஆசிரியருக்கு மெத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று உ.வே.சா. கூறுகிறார். ஆசிரியரிடம் பாடம் கேட்டதால் தமக்கு எவ்வளவு பெருமை என்றும் மற்றும் ஆசிரியர், தேசிகர் ஆகியோர் அன்பு இவரை நெகிழவைத்தது எனவும் கூறுகிறார்.. “என்ன கஷ்டம் வந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை” என்று முடிவு செய்துள்ளார்.

ஆசிரியர் அவர்களுடன் கும்பகோணம் தியாகராச செட்டியாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர். செட்டியார் அவர்களே பிற்காலத்தில் உ.வே.சா.வைக் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகச் சேர்த்துவிட்டவர். திருவாடுதுறை ஆதினத்தின் குருபூஜையில் பங்கேற்ற போதும், மறுபடியும் ஆசிரியருடன் அங்கு வந்து தங்கியிருந்த போதும் தமிழ் கற்க ஏராளமான வாய்ப்பு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு மனநிறைவுடன் தமிழ் பயின்றார்.

தியாகராச செட்டியாரிடம் இருந்த அறிமுகம் அடிக்கடி சந்தித்த பின் நெருங்கிய பழக்கமாயிற்று. பிள்ளையவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குப் பிறரை எதிர்பார்த்திருக்க வேண்டிய வேளையில், செட்டியாருக்குக் கல்லூரியிலிருந்து நிரந்தர வருமானம் கிடைத்ததை எண்ணிப்பார்த்து, தமக்கும் இதுபோன்று வேலை கிடைத்தால் பயனுள்ளதாக இருக்குமே என்று கருதி, அவரிடம் ' எங்காவது பள்ளியில் ஆசிரியர் பணி பெற்றுத்தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஆசிரியரிடம் மாலையில் பாடமும் கேட்டுக் கொள்ளலாம்.' என்றும் தெரிவித்தார். செட்டியாரும் ஒரு வேலை பார்த்து வந்த பொழுது பிள்ளையவர்கள் ‘சாமிநாதன் மேலும் படிக்கட்டும், பின் அவரை வேலை தேடிவரும்’ என்று கூறி அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

இயற்றிய நூல்கள்

உ.வே.சா. பல செய்யுள்களையும் நூல்களையும் இயற்றியுள்ளாா். தந்தையாரின் வறுமையைக் கண்டு, ஒரு பெரியமனிதரிடம் சென்று நெல் வேண்டுமென்று இயற்றிய செய்யுள்தான் அவரின் முதல் செய்யுள். கலைமகள் துதி, திருலோகமாலை, ஆனந்தவல்லியம்மை, பஞ்சரத்தினம் முதலியன மற்ற நூல்களாகும்.

குடும்பத்தின் வறுமையும் கடன் தொல்லையும் உ.வே.சாவை மிகவும் வாட்டியது. சிறிது காலம் தம்தந்தையுடன் புராண விரிவுரை நடத்திக் கடனை அடைக்கலாம் என்ற தந்தையின் கருத்துக்கிணங்க இருவரும் விரிவுரை நடத்திப் பொருள் ஈட்டத் தொடங்கினர். இவர்களின் விரிவுரைக்குப் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இது நடந்தது 1874-ஆம் வருடம். உ.வே.சா. 19-ஆம் வயது ஆனவர். இக்காலத்தில் தம் ஆசிரியரிடம் தமிழ் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம் இவரிடம் நீங்காமலிருந்தது.

இதற்கிடையே ஆசிரியர் பிள்ளையவர்கள் இயற்கை எய்தினார். அது சமயம் உ.வே.சா. அவர்களும் உடனிருந்துள்ளார். ஆசிரியரை இழந்த உ.வே.சா. மீளாத துயரத்தில் ஆழ்ந்தார். உ.வே.சா. திருவாடுதுறையில் தங்கிப் பாடம் கேட்டுவந்தார். உ.வே.சா. மீது நல்லெண்ணம் கொண்ட ஆதினம் தேசிகா் அங்கேயே வீடுகட்டிக் கொடுப்பதாகவும் பெற்றோர்களையும் மடத்திற்கே வந்து விடும்படியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க குடும்பத்துடன் மடத்திற்கே வந்து விட்டார்கள். மடத்தில் இருக்கும் பொழுது பல பெருந்தமிழ்ப் புலவர்களைக் கண்டு கலந்துரையாடும் வாய்ப்புக் கிட்டியது. வேதநாயகம்பிள்ளை, சந்திரசேகர கவிராஜபண்டிதா், திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை, ராவ்பகதூர் திரு.பட்டாபிராம் பிள்ளை ஆகியோரும் அடங்குவர். தேசிகருடன் மற்ற மாவட்டங்களுக்குச் சென்று அங்கும் பலரை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது.

உ.வே.சா. பதிப்பித்த முதல் புத்தகம்

பாண்டி நாட்டில் செவந்திபுரத்தில் வேணுவனளிங்கத்தம்பிரான் கட்டிய மடாலயத்திற்குச் சுப்பிரமணிய தேசிக விலாசம் என்று பெயர். இவ்வழகிய மடாலயத்தைச் சிறப்பித்துப் பல தமிழ்ப்புலவா்கள் பாடலியற்றிருந்தனர். இப்படி 86 பாடல்கள் இருந்தன. உ.வே.சா. 8 பாடல்கள் இயற்றினார். வேறு சில பாடல்களும் சேர்த்து திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக்கூடத்தில் இப்பாடல் திரட்டை முதன்முதலாக ஐயரவர்கள் பதுப்பித்தார்.

கும்பகோணம் கல்லூரியில் சேர்வது

உ.வே.சா. திருவாடுதுறையில் தங்கியிருந்த பொழுது தாமும் விரும்பிய நூல்களைக் கற்றுக்கொண்டு மாணவர்களுக்கும் நூல்களைக் கற்பித்து வந்தார். செய்யுள் இயற்றுவதிலும் பயிற்சி செய்து தமது திறமையை வளர்த்துக் கொண்டார்.திருவாவடுதுறை ஆதினத்தின் ஆதரவில் தாம் நல்ல முறையில் வாழ முடியும் என்ற நம்பிக்கை உ.வே.சாவிற்கு இருந்தது. அப்பொழுது 1880-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி உ.வே.சா. வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் நிகழ்ந்தது. தியாகராச செட்டியார் அவர்கள் கும்பகோணம் கல்லூரியில் தமது வேலையைத் தாம் விட்டுவிட முடிவுசெய்து விட்டதாகவும். அந்த வேலைக்கு உ.வே.சாவைப் பரிந்துரைத்து உள்ளதாகவும் ஆதினம் சுப்பிரமணிய தேசிகரிடம் கூறினார். திகைப்படைந்த தேசிகர், உ.வே.சாவை அனுப்பும் எண்ணமில்லை என்று மறுத்து விட்டார். ஆனாலும், செட்டியாரவா்கள் ஒரு நாள் மடத்திலேயே தங்கி ஐயரவர்களின் எதிர்காலம் கருதி அவரை அனுப்பவேண்டும் என்று உருக்கமாக வேண்டினார். உ.வே.சாவிடம் கல்லூரி வேலையின் மேன்மையையும் இங்கு வருடம் முழுவதும் உழைத்தாலும் கிடைக்காத ஊதியம் அங்கு மாதந்தோறும் நிலையாக வரும்மென்றும் எடுத்துக் கூறினார். ஆனால், உ.வே.சா. பணத்தையும் பதவியையும் பொருட்படுத்தாமல் மடத்தில் எல்லா வசதிகளையும் சந்நிதானம் பார்த்துக் கொள்கிறது. ”திருவாவடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளது என்பதைச் செட்டியார் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை”. என்று பதிவு செய்கிறார். பணம், பதவிக்கு ஆசைப்படாமல் திருவாவடுதுறை மடம் காட்டிய ஆதரவிற்கு நன்றி பாராட்ட வேண்டும் என்ற உணர்வு உ.வே.சாவிடம் இயற்கையாகவே இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கல்லூரிப்பணி உ.வே.சாவின் உள்ளத்தைக் கவர்ந்திருந்தாலும் மடத்தில் மற்றவர்கள் செலுத்திய அன்பும் தேசிகரின் ஆதரவும் உ.வே.சாவின் உயிரோடு இணைந்து நின்றது. செட்டியார் கூறியதைக் கேட்ட உ.வே.சா. சந்நிதானம் இசைவு தெரிவித்தால் செல்வது என்று முடிவு செய்தார். செட்டியாரின் விடாமுயற்சி பலித்தது. உ.வே.சாவால் மடத்திற்கு அநேக நன்மை இருந்தாலும் அவாின் எதிா்காலத்தை மனதில் கொண்டு சுப்பிரமணியதேசிகர் அவரை மடத்திலிருந்து அனுப்ப இசைவு தெரிவித்தார்கள்

என்றோ ஒருநாள் மதுரை குடமுழுக்கு விழாவில், தேசிகருக்கு முன்பு வேதநாயகம் பிள்ளையின் பாடல் ஒன்றைக் கூறி விளக்கும்படி தேசிகர் ஐயரவர்களைக் கேட்டுக்கொண்டார். உ.வே.சா. நல்லமுறையில் பாடலை விளக்கிவிட்டு, இறுதி அடியான “இறுமாப்புடைய நடையும் குடையும் என்னிடம் இல்லை” என்ற இவ்வடியை உணர்ச்சிகரமாகக் கூறி முடித்தார். உ.வே.சா. தம்மிடம் வசதியில்லை; ஏழ்மை உண்டு என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறியதைப் பலகாலம் கழித்து நினைவு கூர்ந்த தேசிகர், பல பரிசுகளுடன் காலணியும் குடையும் அளித்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினார். உ.வே.சா. மீது தேசிகர் மாறாத அன்பு கொண்டிருந்தார் என்பதும் அவரது வளர்ச்சியையும் உணர்ச்சிகளையும் கவனித்தும் வந்து கொண்டிருந்தார் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.திருவாவடுதுறை ஆதினமடத்தில் உள்ள ஒவ்வொரு பொருள் மீதும் ஈடுபாடு கொண்டிருந்த உ.வே.சா. மடத்தை விட்டுச்செல்லும் பொழுது. “அவை ஜடப்பொருள்களல்லவா அவற்றின் மீது அவ்வளவு பற்றிருப்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா என்று பிறருக்குத் தோன்றும். எனக்கு உலகமெல்லாம் திருவாவடுதுறை மடத்தில் இருந்தது அங்குள்ள பொருள்களைப்பிரியும் போது உலகத்தையே பிரிவது போன்ற உண்ர்ச்சிதான் ஏற்பட்டது”. என்று பதிவு செய்கிறார் உ.வே.சா.

கும்பகோணம் கல்லூரியில் முதலில் ஆசிரியர்களுக்கு முன்பு தமது புலமையை விளக்க வேண்டியிருந்தது. பின்பு முதல்வர் முன்பும் வகுப்பும் நடத்திக் காண்பிக்க வேண்டியிருந்தது. பாடம் நடத்துவதில் நல்ல அனுபவம் இருந்ததால் உ.வே.சாவின் திறமையில் அனைவரும் மனநிறைவடைந்தனர். கல்லூரி முதல்வரும் உ.வே.சாவைக் கல்லூரியில் பணிக்கு அமர்த்தினார்.

அக்காலத்தில் இவர் கடை பிடித்த மற்றொரு முக்கியமான பழக்கம் கடிதம் எழுதும் பொழுது நன்றி தெரிவிப்பது உற்சாகப்படுத்துவது போன்று அனைத்தும் செய்யுள் வடிவில்தான் இருக்கும் என்பது. மடத்தில் தாம் வாழ்ந்த வாழ்க்கையையும், கல்லூரி வாழ்க்கையையும் ஒப்பிடும் இவர் இரண்டு இடங்களிலும் கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்கும் நிலை இருந்தாலும் மடத்தில் சம்பிரதாயம், மடத்து நிருவாகம் போன்று பல இனங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடன் இருந்ததாகவும் இதனிடையே தமிழ்க் கல்வியுமிருந்ததாகவும், ஆனால் கல்லூரியில் கல்வியைத் தவிர வேறு இனங்களுக்கு இடமில்லை என்றும் குறிப்பிடுகிறார். “கல்வி ஒன்றையே எண்ணி வாழ்ந்த எனக்கு எல்லாம் கல்வி மயமாக உள்ள காலேஜில், வரையறையான காலம், வரையறையான வேலை, வரையறையான பாடம், இவற்றின் துணையுடன் பாடம் சொல்வது விளையாட்டாகவே இருந்தது” என்று குறிப்பிடுகிறார்

உ.வே.சா. குடும்பத்தை அவர் தந்தையாரே நிருவகித்து வந்துள்ளார். எங்கும் உ.வே.சா. குடும்பப் பாரத்தையும் குடும்பத்தையும் நிருவகித்ததுமாகக் கூறவில்லை குடும்பாரமில்லாமல், தாம் முழு உழைப்பையும் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே செலவு செய்தார்.

வாழ்நாளில் திருப்பம்: சிந்தாமணி பதிப்பு

உ.வே.சா. ”அரியலூரிலிருந்து இராமசாமி முதலியாரென்பவர் கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்வில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது” என்று இச்சந்திப்பைத் தமது வாழ்நாளில் ஒரு பெரிய திருப்புமுனை என்று அறிகின்றார். திருவாவடுதுறை ஆதினம் தண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மைச் சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உ.வே.சாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம், போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார்

முதலியார் அவர்களின் ”இதனால் என்ன பிரயோசனம்” என்னும் கேள்வி உ.வே.சா.வின் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. சீவக சிந்தாமணி நூலைப்படிக்கத் தொடங்கிய போது “ அது சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன வகையில் அது சிறப்புடையது என்பவற்றை அறியேன். தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்து விட்டதாக ஒரு நினைப்பு, அதற்கு முன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற்பரப்பிற்குப் புறம் போயிருந்த சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது”. என்று பதிவு செய்கிறார். உ.வே.சா. சிந்தாமணியைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார்.

பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடிப் பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களைத் தெளிவாக்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். உ.வே.சா. சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்; கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உ.வே.சா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

உ.வே.சா. சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப் பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களைத் தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப் படித்தோரும் இந்தத் தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர்.

பழந்தமிழ் நூல்களின் உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியர் மிகச்சிறந்த உரையாசிரியர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று நாம் காணும் உரை உ.வே.சா.வால் பதிப்பிக்கப்பெற்றது. அதற்குமுன் ஐயரவர்கள் இவ்வுரையினை நன்கு புரிந்து கொண்டு விளக்குவதற்கு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டுள்ளார். “நச்சினார்க்கினியர் உரையினால் புதிய புதிய விசயங்களை உணர்ந்தேன், இரண்டு விசயங்களில் அவரிடம் சிறிது வருத்தம் உண்டாயிற்று. பல இடங்களில் மாறிக் கூட்டிப்பொருள் விளக்குகிறார். ஓரிடத்திலுள்ள பாட்டிலிருக்கும் சொல்லைப் பல பாட்டுக்கு முன்னே மற்றோரிடத்திலுள்ளதோடு இணைந்து மாட்டெறிகின்றார். அத்தகைய இடங்களில் அவர் உரையில் சிறிது வெறுப்புத் தட்டியது. ஒரு விசயத்திற்கோ சொற்பிரயோகத்திற்கோ ஒருநூற் செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டுமிடத்தில் அந்த நூற்பெயரைச் சொல்வதில்லை ‘என்றார் பிறரும்’ என்று எழுதிவிட்டுவிடுகிறார்” என்று உ.வே.சா. பதிவு செய்கிறார்.

சிந்தாமணி சமண காவியம் என்று சைவர்கள் குறை கூறிய போதும் “பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணியானால் நமக்கு என்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ் நயமுமே சுவை நிரம்பிக்கிடக்கும் காவியமாக இருக்கும் பொழுது அதைப்படித்து இன்புறுவதில் என்னதடை” என்று தெளிவாக்குகின்றார். தம் தமிழ்த் தொண்டில் அவர், மதம் குறுக்கிடுவதை அனுமதிக்கவில்லை.

அக்காலத்தில் பிரதிகளை அச்சில் பதிப்பதற்கு முன்பு ஊர்ஊராகத் தேடிக் கிடைக்கும் நகல்களையெல்லாம் பெற்று அவைகள் அனைத்தையும் நன்று படித்து ஒப்பு நோக்கி, இவைகளுக்குள் வேறுபாடு இருக்குமானால் எது சரியானது என்று தீர்மானித்துப் பதிப்பிக்க வேண்டும். சிதைந்த பகுதிகளின் முழு வடிவத்தையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லின் பொருள் முழுவதும் விளங்காமல் உ.வே.சா. எதையும் பதிப்பிப்பதில்லை. இவர் பிரதிகளைத் தேடித்தேடித் தமிழகம் முழுவது அலைந்த விவரம் ஏராளமாக இவர் சரித்திரத்தில் காணலாம். அக்காலத்தில் எவ்வித மோட்டார் வாகனப் போக்குவரத்து வசதியில்லாத போதும் கூட நூற்றுக்கணக்கான மைல்களை உ.வே.சா. பயணம் செய்துள்ளார். தங்குவதற்கு உணவு, உண்பதற்கு வசதியில்லாத போதும், ஊர் ஊராகக் கிராமம் கிராமமாகச் சென்று தெரிந்தவர்கள் வீட்டில் தங்கிக் கிடைத்ததை உண்டு தம் கருமமே கண்ணாகப் பண்டைய தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். “ பழந்தமிழ் இலக்கண இலக்கியச் சுவடிகளைத் தேடி ‘ நள்ளிருளோ, கொள்ளு பகலோ, குறிக்கும் கடுமழையோ, அள்ளு பிணியோ, அவதியோ- உள்ளம் தடுக்கும் பகைகள் எது வரினும் தள்ளி அடுக்கும் தமிழ்ச் சுவடி தேடிக்கொடுக்கும் தமிழ்த்தாத்தா என்று தரணி புகழ்” என்று ஒரு தமிழ் புலவர் இவரை வருணிக்கிறார்.

இப்பணியில் ஏராளமான பொருட்செலவு, மன உளைச்சல், உடல் அசதி அன்றிக் கடின உழைப்பை நல்கினாலும் இப்பணியை மெத்த உற்சாகத்துடன் செய்து வந்தார். கும்பகோணத்திலிருந்து சென்னைக்குச் செல்வதற்கு முன் சேலம் இராமசாமி முதலியாரவர்கள் உ.வே.சா.வைச் சந்தித்துச் “சிந்தாமணியின் பெருமையை நீங்கள் இப்பொழுது நன்றாக உணர்ந்து இருக்கின்றீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாரற்று வீணாகப் போகாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும். இன்னும் சிலபிரதிகள் சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும் அதைப் போன்ற உபகாரம் வேறு ஒன்றுமில்லை என்று கூறினார்”.

பாலர்துரை பதுப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சு நகல் ஒன்று ஐயரவர்களுக்குக் கிடைத்தது, தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த நகலை அனுப்பி வைத்தார். திரு சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலி யிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பலநகல்களையும் ஒப்பிட்டுப் பேதங்களைக் குறித்து வைத்து பின் ஆய்வுசெய்து சரியான சொற்களைத் தொிவு செய்வார். உ.வே.சா.விடம் பாடம் கேட்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர் என்று பலர் இவருக்கு உதவி செய்தனர்.

சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தை புராணப் பதிப்பும் நடைபெற்றுவந்தது, திருக்குடந்தைப் புராணம் உ.வே.சா. வெளியிட்ட இரண்டாவது நூல். சிந்தாமணியைப் போன்று பல பழையநூல்கள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதை ஐயரவர்கள் அறிந்தார். சிலப்பதிகாரம், மணிமேகலை, எட்டுத்தொகை போன்றவை அவை. எட்டுத்தொகை மூலநூல் திருவாவடுதுறை ஆதினத்திலேயே இருந்தது. பொருநராற்றுப்படை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியனவும் சுவடி வடிவில் கிடைத்தன. மற்ற சங்க நூல்களையும் நன்கு படித்தால்தான் சிந்தாமணியின் பொருள் விளங்கும் என்று அறிந்து அந்நூல்களை ஆழமாக உ.வே.சா. படித்துப் பொருள் விளங்க முயன்று வந்தார்.

சிந்தாமணிப் பிரதியை மேலும் தேடியபொழுது தஞ்சாவூரில் விருசபதாச முதலியாரிடம் உள்ளதாக அறிந்து அவாிடம் கேட்ட பொழுது அவர் “சமணர்களுக்கு மட்டும் கொடுப்பேனேயன்றி மற்றவர்களுக்குத் தர இயலாது” என்று மறுத்து விட்டார். பல நண்பர்களின் உதவியுடன் இந்நூல் நகல் அவரிடமிருந்து கிடைத்தது. இது போன்று மதத்தின் அடிப்படையிலும் பல இடையூறுகள் வந்தன. இன்னும் பல இடங்களில் அறிய பொக்கிஷங்களான இச்சுவடிகளைத் தீயில் இட்டும் ஆற்று வெள்ளத்தில் இட்டும் அழித்து விட்டதைக் கேட்டு உ.வே.சா. மிகவும் வேதனைப்பட்டுள்ளார். இவ்வாறு தேடிச் சிந்தாமணியின் 23 நகல்களை உ.வே.சா. சேர்த்துவிட்டார்.

இதற்கிடையில் மடத்தின் அலுவல் காரணமாகச் சென்னை சென்று வர வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு சென்னையில் இராமசாமி முதலியாரிடம் தங்கிக் கொண்டு பல புகழ் பெற்றவா்களிடம் அறிமுகமாகிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். சென்னையில் சந்தித்த சி.வை. தாமோதரம்பிள்ளை, சிந்தாமணியைத் தாம் பதிப்பிக்க விருப்பியதாகவும் உ.வே.சா.விடமுள்ள குறிப்புகளனைத்தையும் அவரிடம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். அரைமனதுடன் இருந்த உ.வே.சா. தாம் ஏற்கனவே வாக்குக் கொடுத்திருப்பதாகவும், முடிவு செய்துவிட்டதாகவும் எத்துணை இடர்பாடுகள் வந்தாலும் இம் முயற்சியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் தீர்மானமாகக் கூறிவிட்டார்.

சிந்தாமணியைப் பிழையில்லாமல் பதிப்பிக்க வேண்டும் என்னும் ஆவலில் உ.வே.சா. முயற்சி தொடர்ந்தது. இதனால் காலதாமதம் ஆயிற்று ஒவ்வொரு விசயத்தையும் சந்தேகமறத் தெளிந்து பின்பு வெளியிடுவது எளிதன்று என்றும் இப்படி ஆராய்ந்து கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் செலவாகிவிடும் என்று நண்பர்கள் அறிவுறுத்த உ.வே.சா.வும் நூலைப் பதிப்பிக்கலாம் எனவும் திருத்தங்கள் தேவைப்படின் அடுத்த பதிப்பில் மேற்கொள்ளலாம் என முடிவு செய்தார்.

நூலைப் பதிப்பிக்கத் தேவையான நிதி வசதியின்மையால் இவர் பல பெரியவர்களை அணுகி முன்பணம் பெற்றுக்கொண்டு பணியைத் தொடங்கினார். சீவக சிந்தாமணி பதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது புரசவாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் போன்றவர்கள் நீங்கள் வயதில் இளையவர், சீவக சிந்தாமணிப் பதிப்பு மிகவும் கடினமான செயல் உங்களால் முடியாது என்றும், சேலம் ராமசாமி முதலியார் கூட ஒரு சமயம் உங்களுக்கு இது கடினம், உங்கள் குறிப்புகளைத் தாமோதரம்பிள்ளை யவர்களிடம் கொடுத்து விடுங்கள் உங்களுக்கு நிதி திரட்டுவது சிரமம் என்று தளர்வூட்டினர். ஆனால் உ.வே.சா. “நான் ஏன் பதிப்பிக்கக் கூடாது அந்த நூலையும், உரையையும் பலமுறை படித்து ஆராய்ந்துள்ளேன். அதற்கு வேண்டிய கருவி நூல்களையும் படித்திருக்கிறேன்; நிறைவேற்றி விடலாம் என்ற துணிவு எனக்கு இருக்கிறது”. என்று தெளிவாக இருந்தார், “யார் வந்து தடுத்தாலும் என்முயற்சியை நிறுத்திக்கொள்ளாத உறுதி என்னிடம் இருந்தது”.

சீவக சிந்தாமணி நூலைப் பதிப்பிக்க எவ்வளவு தமிழ் புலமை வேண்டும் அஃது உ.வே.சா.விடமிருந்ததுதான் சிறப்பு. மேலும் சிறுவயதிலிருந்து உ.வே.சா. தீராத தமிழ் ஆர்வத்தால் மிகுந்த முயற்சி எடுத்துத் தமிழைக் கற்றுத் தேர்ந்த புலமை தான் சீவக சிந்தாமணி போன்ற பழைய நூல்களைச் சிறப்பாகப் பதிப்பிக்க உதவி செய்தது என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நாமகளிலம்பகம் 58-ஆம் செய்யுளுக்கு உரை எழுதும் பொழுது நச்சினார்க்கினியர் “ஏக்கழுத்தம் என்ற ஒரு சொல்லைக் குறிப்பிட்டுள்ளார். இச்சொல்லிற்குப் பொருள் விளங்காத உ.வே.சா. சிறுபஞ்சமூலத்திலும், நீதிநெறி விளக்கத்திலும் இதே சொல் வருவதை நினைவுகூர்ந்து அவைகளை மீண்டும் படித்து இச்சொல்லின் முழுமையான, சரியான பொருளைத் தமது பதிப்பில் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சொல்லும் வேறு எந்த இலக்கியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று தொடர்புகொண்டு பார்க்கக்கூடிய அளவு புலமை பெற்றிருந்தால்தான் இஃது இயலும். இதனை உ.வே.சா. செய்து காட்டியுள்ளார். இதுபோன்று ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல்லிற்கு தாம் கண்டுபிடித்த பொருளைப் பற்றித் தமது பதிப்பிற்கு மிகுந்த துணையாக இருந்த சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியாரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது “புதிய தேசத்தைக் கண்டு பிடித்தாற் கூட இவ்வளவு சந்தோசமிராது” என்று கூறுகிறார்.

நூலை அச்சிடும்பொழுது ஓய்வு ஒழிவில்லாமல் உ.வே.சா. உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொருநாளும் அச்சுப்பிரதிகளைத் திருத்திக் கொடுப்பது, கையெழுத்துப்பிரதியைப் படிப்பது, போன்று பல வேலைகள் இருந்தன. இப்பணியில் சோடசவதனம் சுப்பராய செட்டியாரும், ராஜ கோபாலாச்சாரியாரும் வேலுச்சாமி பிள்ளையும் கையெழுத்துப் பிரதிகளைப் படித்து உதவி செய்ததாகவும் குறிப்பிடுகிறார். அச்சடித்த நகல்களைத் தாமே தனியாக இரவில் அமர்ந்து நெடுநேரம் சரிபார்த்ததாகவும் குறிப்பிடுகிறார். தமக்கு இரவில் “தூரத்துப் பங்களாவில் ஒரு நாய் கட்டப்பட்டிருக்கும் இரண்டு கூர்க்கா சிப்பாய்கள் தூங்காமல் காவல் புரிவார்கள்” இவர்கள் மட்டுமே துணை இவர்களால் எனக்கு என்ன உதவி செய்யமுடியும் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

சென்னையில் தங்கியிருந்து அச்சுவேலையை மேற்பார்வையிட இயலவில்லை, கும்பகோணம் திரும்ப வேண்டி வந்தது எனவும் சென்னையில் சுப்பராய செட்டியாரிடம் ராஜ கோபாலாச்சாரியாரிடம் மேற்பார்வைப் பணியைச் செய்ய வேண்டிக்கொண்டு, அச்சு நகல்களைப் பெற்றுச் சரிபார்க்க கும்பகோணம் அனுப்பும்படி வேண்டிக்கொண்டு கும்பகோணம் திரும்பிவிடுகின்றார்.

திருவாவடுதுறை சென்று தேசிகரிடம் அச்சு நகல்களைக் காண்பித்த பொழுது அவர் மிக்க மகிழ்ச்சியடைந்து “சாமிநாதையர் மடத்திலேயே இருந்தால் இந்த மாதிரியான சிறந்த காரியங்களைச் செய்ய இடமுண்டா? நல்ல வித்துகள் தக்க இடத்தில் இருந்தால் நன்றாகப் பிரகாசிக்கும்”. என்று குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார். சீவக சிந்தாமணி அச்சு நகல்களைத் தாமும் சரிபார்த்துத் தருவதாகச் சிலபுலவர்கள் கேட்ட போதும் தேசிகர் அவர்கள் “கண்டோரிடம் இதைக் கொடுக்ககூடாது நீங்கள் சிரமப்பட்டுச் செய்த திருத்தங்களையெல்லாம் தாமே செய்தனவாகச் சொல்லிக்கொள்ள இடமேற்படும்” என்று கூறிவிட்டார். உ.வே.சா.வின் நலனில் தேசிகர் போன்ற பெரியவர்கள் ஆழமான அக்கறையும் வைத்திருந்தனர் என்பதற்கு இது போன்று பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இப்பணியில் கல்லூரி மாணவர்களும், மடத்தில் பயின்று வந்த மாணவர்களும் உதவி செய்ததை உ.வே.சா. நன்றியுடன் நினைவு கூறுகிறார். பல அன்பர்கள் நூல் பிரதிகள் வாங்கிக் கொள்வதாகக் கூறி முன்பணம் அளித்தது, அச்சிடவாகும் செலவினத்தை மேற்கொள்ள உதவியாக இருந்தது.

நூலை அச்சிடுவதற்குத் தனிப்பட்ட முறையில் வந்த இடையூறுகள் அல்லாமல், அச்சு நகல்களை அச்சகத்திலிருந்து திருடவும் முயற்சிகள் நடந்துள்ளன. விடுமுறைகளில் சென்னை வந்து பதிப்பு அலுவல்களைக் கவனித்து வந்தார்.

சீவக சிந்தாமணி பதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே தம்மிடமிருந்த எட்டுத்தொகை நூலை ஆராய்ந்து வந்தார். பதிப்பு நிகழ்ந்து வந்தாலும் சீவக சிந்தாமணி ஏடு தேடும் முயற்சி தொடர்ந்தது. இதற்காகத் திருநெல்வேலி சென்று பல ஊர்களில் சீவக சிந்தாமணி நூலை உ.வே.சா. தேடினார்.

சீவக சிந்தாமணி பதிப்பு பற்றிப் பல பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. சிந்தாமணி பதிப்பிற்கு வாங்கியிருந்த முன்பணம் போதவில்லை. அச்சிடுவதற்குக் காகிதம் தேவையாக இருந்தது. கடன் வாங்கி இதுபோன்ற இடர்பாடுகளை உ.வே.சா. சரி செய்து வந்தார். அக்காலத்தில் தமிழ்ப் புத்தகங்களில் முகவுரை இருந்ததில்லை. ஆனால் உ.வே.சா. சிந்தாமணி நூலிற்கு விரிவான முகவுரை எழுதிச் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து முதன்முறையாக நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு முதலியவற்றையும் சேர்த்து நூலுக்கு மிகுந்த மதிப்பைக் கூட்டினார். அதே போலக் காப்பியத்தின் கதையை எழுதிச்சேர்த்தார். நூலைப் படிப்பவர்கள் நூலைப்பற்றி நன்கு புரிந்து கொள்வதுடன் நூல் பற்றிய மற்ற தகவல்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். உரையாசிரியரைப் பற்றிக் கூறும் பொழுது அவர் உரை எழுதிய பிற நூல்கள் எவையென்றும் குறிப்பிட்டார். நூல்வெளியிட உதவியவர் பெயர்களும் முன்னுரையில் இடம் பெற்றது. இவ்வாறு நூல் பதிப்பில் வாசகர் நலன் கருதிப் பல தகவல்களைக் கொடுத்துப் பெரிய புரட்சியை முதன்முதலாக உ.வே.சா. ஏற்படுத்தினார். முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு, இம்முயற்சிக்கு வித்திட்ட சேலம் இராமசாமி முதலியாரிடம் காண்பித்தார். அவர் அடைந்த ஆனந்தம் அளவிடமுடியாது. “பெரிய காரியத்தை மேற்கொண்டு நிறைவேற்றி விட்டீர்கள்” என்று மனமாரப் பாராட்டினார். நூலைக் கண்ட சுப்ரமணியதேசிகர் முதலியோர் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.

பத்துப்பாட்டு

அடுத்துப் பத்துப்பாட்டை பதிப்பிக்கும் முயற்சியை ஐயரவர்கள் கையிலெடுத்தார்கள். சீவக சிந்தாமணி போலவே ஏட்டுச் சுவடிகளைத் தேடி ஊர்ஊராகக் சென்றாா். ஒரு பிரதி அவர் கைவசம் ஏற்கனவே இருந்தது. “பத்துப்பாட்டில் விசயம் தெரியாமல், பொருள் தெரியாமல், முடிவு தெரியாமல் மயங்கிய போதெல்லாம் இந்த வேலையை நிறுத்தி விடலாம் என்று சலிப்புத் தோன்றும். ஆனால் அடுத்த கணமே ஓர் அருமையான விசயம் புதிதாகக் கண்ணில்படும் போது, அத்தகைய விசயங்கள் சிரமமாக இருந்தாலும் அவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கலாம் என்ற எண்ணம் உண்டாகும்” என்று தமது விடாமுயற்சியை உ.வே.சா. பதிவு செய்கிறார். சில கெட்ட எண்ணம் கொண்ட மதியிலோர் உ.வே.சா.வின் முயற்சியில் குற்றம் கண்டு தமது சுய விளம்பரத்திற்காகத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இதற்கு மறுப்பு எழுதவேண்டும் என்று உ.வே.சா. விரும்பினார். சாது சேசையர் அவர்கள் இவ்வாறு நீங்கள் மறுப்பு எழுதினால் உங்கள் காலம் இதிலேயே வீணாகும் எனவும், மறுப்புக்கு மறுப்பு என்று இது வளரும் எனவும், இதைப் பொருட்படுத்த தேவையில்லை எனவும், அறிவுறுத்தியதுடன் தாம் எழுதி எடுத்துச் சென்ற மறுப்பைக் கிழித்துப் போட்டதாக உ.வே.சா. தெரிவிக்கின்றார்.

பத்துப்பாட்டு பதிப்பு வேலையும் சென்னையில் தொடங்கியது. சீவக சிந்தாமணி பதிப்பிலும் பத்துப்பாட்டுப் பதிப்பிலும் திருமானூர் கிருஷ்ணையரைச் சென்னையில் தங்கி மேற்பார்வையிட்டு உ.வே.சா.விற்கு உதவி உள்ளார். 1889-ஆம் வருடம் உ.வே.சா.வின் 34-ஆவது வயதில் பத்துப்பாட்டும் பதிப்பிக்கப்பட்டது. இதில் முகவுரையும், நூலின் மூலம் நச்சினார்க்கினியர் உரை, உரைச்சிறப்பு, பாயிரம், அரும்பதவிளக்கம் அருந்தொடர்விளக்கம், பிழைதிருத்தம் என்பனவற்றை உ.வே.சா. சேர்த்திருந்தார். இதன் தொடர்ச்சியாகத் திரு‌கச்சியப்ப முனிவர் இயற்றிய ஆநந்தருத்திரேசர் வண்டு விடுதூது, மாயூரம் ராமையர் இயற்றிய மயிலையந்தாதி முதலிய நூல்களையும் உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்டார்கள்.

இதற்கிடையில் சேலம் இராமசாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் அடங்கிய பிரதி ஒன்றைக் கொடுத்தார். ஏற்கனவே தியாகராச செட்டியார் கொடுத்த பிரதியும் உ.வே.சா.விடத்தில் இருந்தது. அடியார்க்கு நல்லார் உரை ஒரு பெரிய சமுத்திரமாக இருந்தது. மீண்டும் சுவடிகள் தேடும் யாத்திரையை உ.வே.சா. மேற்கொண்டார். ஏற்கனவே தேடாத சேலம் போன்ற இடங்களுக்குச் சென்று சுவடிகளைத் தேடத் தொடங்கினார். மேலும் திருநெல்வேலி திருவைகுண்டம், பெருங்குளம், ஆறுமுகமங்கலம், நாங்குநேரி, களக்காடு, குன்றக்குடி, மிதிலைப்பட்டி போன்ற ஊர்களுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினார். கிடைத்த சுவடிகளை வைத்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டார். அடியார்க்கு நல்லார் உரையில் பல நூல்களின் பெயர்கள் இருப்பதாகக் கண்ட உ.வே.சா. இந்நூல்களைப் பற்றிய குறிப்பை அவசியம் தம் நூலில் குறிப்பிட வேண்டும் என்று விரும்பினார்கள். நூலிலும், உரையிலும் அறியப்படும் அரசர் பெயர்களையும் வரிசைப்படுத்தி வெளியிட விரும்பினார். இவ்வாறு அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள், ஆகிய பெயர்களுக்குத் தனித்தனியாக அகராதியும் அடியார்க்கு நல்லார் உரையில் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதி உ.வே.சா. சிலப்பதிகார நூலைப் பதிப்பித்தார். சிலப்பதிகார கதைச்சுருக்கம், இளங்கோவடிகள் வரலாறும், அடியார்க்கு நல்லார் வரலாறும், மேற்கோள் நூல்களைப் பற்றிய குறிப்புகளும் எழுதப் பெற்றன. 1891-ஆம் வருடம் சூன் மாதம் கோடை விடுமுறையில் சென்னை சென்று உ.வே.சா. சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினார். சென்னையில் தங்கியிருந்த காலத்திலும் பல புலவர்கள் வீடுகளுக்குச் சென்று சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்தார். பதிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது பணமுடை ஏற்பட்டு அச்சுக்கூலிக்குப் போதுமான நிதி கைவசமில்லை, இது குறித்து உவேசா “புத்தகத்திற்கு வேண்டிய விசயங்களை விளக்கமாக அமைக்கும் முயற்சியில் மாத்திரம் என் திறமை வளர்ந்ததே யன்றிப், பிரசுரம் செய்வதற்குரிய பொருள்வசதியை அமைத்துக்கொள்ளும் விசயத்தில் என் கருத்து அதிகமாகச் செல்லவில்லை” என்று தம் முயற்சியனைத்தும் நூல் ஆராய்ச்சியிலும் நூல்பதிப்பித்தலிலும் செலவிடப்பட்டதாகவும், பொருள் ஈட்டவேண்டும் என்ற எண்ணம் சிறிதுமில்லாமலிருந்ததையும் தெரிவிக்கின்றார். கடைசி நேரத்தில் அரும்பதவுரைக்கு முகவுரை வேண்டும் என்ற தமது எண்ணத்தை, இறுதி நாளன்று இரவில் மிகுந்த சிரமத்துடன் எழுதி அச்சுக்கூடத்திற்குச் சேர்த்து, மறுநாள் முழுநூலும் அச்சிடப்பட்டதைக் கண்டு ஆனந்தப்பட்டதாக மிகவும் உணர்ச்சி பூர்வமாக உ.வே.சா. நினைவு கூறுகிறார். ஒவ்வொரு நூலை அச்சிட்டு வெளியிடும் பொழுதும் அவர் அடைந்த இன்னல்களுக்கும், நூல்வெளிவரும் பொழுது அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இருந்ததில்லை.

உ.வே.சா. அவர்கள், இந்நூல்களின் வெளியீடு குறித்துச் “சீவக சிந்தாமணியும் பத்துப்பாட்டும் தமிழ்நாட்டில் உலாவரத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டாயிற்று. அவற்றின் பின்பு சிலப்பதிகாரம் வெளிவரவே பண்டைத் தமிழ் நாட்டின் இயல்பும் தமிழில் இருந்த கலைப்பரப்பின் சிறப்பும் யாவருக்கும் புலப்படலாயின. “கண்டறியாதன கண்டோம்” என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக் கடலில் மூழ்கினர்" என்று தமிழ்நாட்டிலிருந்த வரவேற்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

புறநானூறு

அடுத்ததாகப் புறநானூறு பதிப்பிக்கும் முயற்சியை உ‌.வே.சா. கையிலெடுத்தார்கள். அப்பொழுது கும்பகோணம் கல்லூரியில் சாித்திர ஆசிரியர் வைத்திருந்த விவிலியத்தைக் காணும் வாய்ப்புக்கிடைத்தது. விவிலியத்தை ஆராய்ந்து ஒரே மாதிரியான கருத்துள்ள பகுதிகளை ஆங்காங்கே காட்டிப் பதிப்பித்திருக்கின்றார்கள். புறநானூறையும் இது போல் பதிப்பிக்க வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. “புறநானூறை ஆராய்ச்சி செய்வதற்குச் சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்கும் பன்மடங்கு இன்பமுண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று” என்று உ.வே.சா. குறிப்பிடுகிறார். புறநானூறு நூல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் பொழுது கும்பகோணம் கல்லூரியில் முதல்வர் ஜே ஹெச் ஸ்டோன் என்பவர் சேக்ஸ்பியர் நாடகமான ‘நடுவேனிற் கனவு’ (Mid summer nights dream) தமிழில் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்தார். உ.வே.சா. மொழி பெயர்ப்பைச் சரிபார்த்து இடையே தமிழ்ப் பாடல்களையும் இயற்றிச் சோ்த்தார். இம்முயற்சியின் தொடர்ச்சியாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் உதவியுடன் சேக்ஸ்பியரின் நாடகங்களையும் மகாகவி காளிதாசரின் நாடகங்களையும் தமிழில் வெளியிட வேண்டுமெனவும் விரும்பினார்கள். பல கல்லூரி ஆசிரியர்கள் உ.வே.சா.வைப் புதிதாக வசனநூல்களை எழுதும்படியும், அவைகளைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம் அதனால் நல்ல பொருள் ஈட்டலாம் என்றும் யோசனை கூறினாலும் இவர் மனம் இதில் நாட்டம் கொள்ளாமல் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலேயே மனம் ஒன்றிப் போனதாகக் குறிப்பிடுகின்றார்.

1894-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் புறநானூறு நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. உ.வே.சா. பதிப்பித்த எட்டுத்தொகை நூல்களுள் இதுவே முதலானதாகும். முகவுரையில் எட்டுத்தொகையும் அதுபற்றிய வரலாற்றையும், அகம் புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கி எழுதிச் சேர்த்துள்ளார்கள். அடுத்துப் புறப்பொருள் வெண்பாமாலை நூலை ஆராய்ச்சி செய்து பதிப்பித்தார்கள். அடுத்து மணிமேகலை நூலை ஆராய்ச்சி செய்தார்கள். மணிமேகலை நூலை நன்கு புரிந்து கொள்ள பெளத்த மத ஆராய்ச்சியும் தேவைப்பட்டது. புத்தரைப் பற்றியும் அவர்தம் வரலாறு பற்றியும் படித்தார். ஐயம் வந்த பொழுதெல்லாம் பௌத்தம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். இவ்வாறு பலத்த முயற்சிக்குப்பின் 5. சூன் 1896-ஆம் ஆண்டு மணிமேகலையையும் உ.வே.சா. அச்சுக்குக் கொடுத்தார். அந்நூலிற்கு அங்கமாக மணிமேகலையின் கதையையும் எழுதிச் சோ்த்தார். பௌத்தம் குறித்த செய்திகள் தமிழ்நாட்டிற்குப் புதிதாகையால் அவைகளை நூலில் ஆங்காங்கே எழுதிச் சோ்த்தார்.1898-ஆம் ஆண்டு சூலை மாதம் மணிமேகலை மூலமும், அரும்பதவுரை முதலியனவும், முகவுரை, புத்தசரித்திரம், பெளத்ததருமம், பெளத்தசங்கம் மணிமேகலைக் கதைச்சுருக்கம் முதலியவற்றுடன் வெளியிடப்பட்டது. 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழிநூல்களிலிருந்தும் குறிப்புரையில் மேற்கோள்கள் காட்டியிருந்தார். முதன்முதலாக உ.வே.சா. உரை எழுதிய நூல் மணிமேகலை. உரை எளிய நடையில் அமைந்ததைப் பற்றிப் பலரும் அவரைப் பாராட்டினர் என்று உ.வே.சா. குறிப்பிடுகிறார்.

மேலும் பல சாதனைகளைத் தொடர்ந்து உ.வே.சா. செய்து வந்துள்ளார்கள். “என் சரித்திரம்” என்னும் அவருடைய சுய சரிதையை அவர் இத்துடன் முடித்துக் கொண்டுள்ளார்.

எவ்வளவு தமிழ் ஆர்வம், எவ்வளவு விடாமுயற்சி, தமிழில் புலமை பெறவேண்டும், பழைய நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்த் தொண்டாற்றவேண்டும் என்னும் குறிக்கோளைத் தவிர வேறெதனையும் தம் வாழ்நாளில் உ.வே.சா. சிந்தித்ததே இல்லை. இவையே இவருக்கு மூச்சு. இளம்வயதில் அவர் கற்ற தமிழ், பெற்ற புலமையின்றி அவரால் இவ்வாறு தமிழ்நூல்களைத் திறம்பட பதிப்பித்திருக்க முடியாது. அவர் நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்ற இறைவன் திருவுளத்திற்காகவே தம் இளம் வயதில் தேடித்தேடித் தமிழ் கற்றார் போலும். தமிழ்ப் புலமையுடன் நின்றிருந்தால் தமிழுலகம் அறிய பொக்கிசங்களை இழந்திருக்கும் .

[2],[3]

ஏட்டுச்சுவடி மீட்பு

உ.வே.சா‌. கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே சேலம் இராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்து நட்பு கொண்டார். ஒருநாள் வழக்கம் போல் இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் ' சீவக சிந்தாமணியைப் பற்றித் தெரியுமா? ' என முதலியார் வினவினார். தன் ஆசிரியரிடம் சிற்றிலக்கியங்கள் பெரும்பாலானவற்றை மட்டுமே கற்றிருந்த உ.வே.சா. சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று அறிந்தார்.[4] இராமசாமி முதலியார் உ.வே.சா. வுக்கு அளித்த சமண சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதி அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா.வினுள் தூண்டியது. சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா. தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்தும் பகுத்தும் பாடவேறுபாடு கண்டும் தொகுத்தும் பிழைதிருத்தி அச்சிலேற்றும் பணியையும் தொடங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப்பணியானது அவர் தனது 84-ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90-இக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.

சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

பேச்சுத்திறன்

உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா. ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.

பட்டங்கள்

உ.வே.சா. தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி, மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு, பெப்ரவரி 18,2006-ஆம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.[5]

நினைவு இல்லம்

  • உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.[6]
  • 1942-இல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

டாக்டர் உ.வே.சா. நூலகம்

சென்னை, பெசண்ட் நகரில் உள்ள் டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தில் பல்வேறு திருக்கோயில்களின் தல புராணங்கள் மட்டுமன்றிப் பக்தி இலக்கியங்களும் ஓலைச் சுவடிகளில் உள்ளன. செல்வ வளம் மிகுந்த திருக்கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. எனினும் அவற்றைப் பற்றிய தல புராணங்களில், இலக்கியங்களில் கூட இன்னமும் அச்சுக்கு வராதவை உள்ளன. இச்செய்தி அவ்வத் திருக்கோவில் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவை இன்னும் அச்சேரவில்லை.

டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தில் ஓலைச் சுவடியில் இருந்து இதுவரை அச்சுக்கு வராத நூல்களை அச்சுக்குக் கொண்டு வரும் திருப்பணியின் மூலம் 2002-ஆம் ஆண்டு ’அர்த்த நாரீசர் குறவஞ்சி’ என்னும் திருச்செங்கோட்டுக் குறவஞ்சி நூல் வெளிவந்தது. 2003-ஆம் ஆண்டு தேசீய ஆவணக் காப்பகத்தின் (National Archives of India) 80% பொருளுதவியுடன் கற்பகவல்லி நாயகி மாலை என்னும் நூல் வெளிவந்துள்ளது.

உ.வே.சா. எழுதிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலை டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் 1986-ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது.

தன் வரலாறு

உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950-ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.

இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ்த்தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.

அச்சு பதித்த நூல்களின் பட்டியல்

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4[7]

உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள்[8]

புத்தகத்தின் பெயர் பதிப்பித்த ஆண்டு
நீலி இரட்டை மணிமாலை 1874
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878
திருக்குடந்தைப் புராணம் 1883
மத்தியார்ச்சுன மான்மியம் 1885
சீவக சிந்தாமணி 1887
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது 1888
திருமயிலைத் திரிபந்தாதி 1888
பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
தண்டபாணி விருத்தம் 1891
சிலப்பதிகாரம் 1892
திருப்பெருந்துறைப் புராணம் 1892
புறநானூறு 1894
புறப்பொருள் வெண்பா மாலை 1895
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் 1898
மணிமேகலை 1898
மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
ஐங்குறுநூறு 1903
சீகாழிக் கோவை 1903
திருவாவடுதுறைக் கோவை 1903
வீரவனப் புராணம் 1903
சூரைமாநகர்ப் புராணம் 1904
திருக்காளத்தி நாதருலா 1904
திருப்பூவண நாதருலா 1904
பதிற்றுப் பத்து 1904
திருவாரூர்த் தியாகராச லீலை 1905
திருவாரூருலா 1905
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 1906
தனியூர்ப் புராணம் 1907
தேவையுலா 1907
மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் 1908
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு 1910
திருக்காளத்திப் புராணம் 1912
திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
பரிபாடல் 1918
உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
பெருங்கதை 1924
நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
நன்னூல் மயிலை நாதருரை 1925
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
தக்கயாகப் பரணி 1930
தமிழ்விடு தூது 1930
பத்துப் பாட்டு மூலம் 1931
மதுரைச் சொக்கநாதர் உலா 1931
கடம்பர் கோயிலுலா 1932
களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை 1932
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 1932
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
பழனி பிள்ளைத் தமிழ் 1932
மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை 1932
வலிவல மும்மணிக் கோவை 1932
சங்கரலிங்க உலா 1933
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா 1933
பாசவதைப் பரணி 1933
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 1 1933
சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2 1934
விளத்தொட்டிப் புராணம் 1934
ஆற்றூர்ப் புராணம் 1935
உதயண குமார காவியம் 1935
கலைசைக் கோவை 1935
திரு இலஞ்சி முருகன் உலா 1935
பழமலைக் கோவை 1935
பழனி இரட்டைமணி மாலை 1935
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை 1936
கனம் கிருஷ்ணயைர் 1936
கோபால கிருஷ்ண பாரதியார் 1936
திருநீலகண்டனார் சரித்திரம் 1936
திருமயிலை யமக அந்தாதி 1936
திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
நான் கண்டதும் கேட்டதும் 1936
புதியதும் பழையதும் 1936
புறநானூறு மூலம் 1936
பெருங்கதை மூலம் 1936
மகாவைத்தியநாதையைர் 1936
மான் விடு தூது 1936
குறுந்தொகை 1937
சிராமலைக் கோவை 1937
தமிழ்நெறி விளக்கம் 1937
திருவாரூர்க் கோவை 1937
நல்லுரைக் கோவை பகுதி 1 1937
நல்லுரைக் கோவை பகுதி 2 1937
நினைவு மஞ்சரி - பகுதி 1 1937
அழகர் கிள்ளை விடு தூது 1938
சிவசிவ வெண்பா 1938
திருக்கழுக்குன்றத்துலா 1938
திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை 1938
திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
நல்லுரைக் கோவை பகுதி 3 1938
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு 1939
தணிகாசல புராணம் 1939
நல்லுரைக் கோவை பகுதி 4 1939
புகையிலை விடு தூது 1939
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
வில்லைப் புராணம் 1940
செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
நினைவு மஞ்சரி - பகுதி 2 1942
வித்துவான் தியாகராச செட்டியார் 1942

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் - மயிலை சீனி.வேங்கடசாமி.
  • கற்பகவல்லி நாயகி மாலை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், முதற்பதிப்பு 2003

மேற்கோள்கள்

  1. "உ.வே.சா.வின் தமிழ் வாழ்வு". பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2016.
  2. உ.வே. சாமினாத ஐயர், என் சரித்திரம் (ஒன்பதாம் பதிப்பு 2014), உ.வே.சாமினாத ஐயர் நூல் நிலையம்
  3. கி.வா. ஜகன்னாதன், என் சரித்திச் சுருக்கம் (2009), முல்லை நிலையம்
  4. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி
  5. இந்தியா அஞ்சல்தலைகள்
  6. தமிழக அரசு நிதிநிலை அறிக்கை
  7. ஆறாம் வகுப்பு சமச்சீர்கல்வி தமிழ்ப்பாடநூல். பக்கம் 7
  8. அரிகிருட்டினன் தொகுத்தது

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
U. V. Swaminatha Iyer
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உ._வே._சாமிநாதையர்&oldid=4027746" இலிருந்து மீள்விக்கப்பட்டது