காவு
காவு (Kavu) என்பது தென் இந்தியாவின் கேரளத்தில் உள்ள மலபார் கடற்கரை முழுவதும் உள்ள புனித தோப்புகளுக்கு வழங்கப்படும் பாரம்பரியப் பெயராகும்.[1] கவுகள் பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கு நடனமான தெய்யத்துக்கு, குறிப்பிடத்தக்கவையாகும்.
பாம்புத் தோப்புகள்
தொகுசர்ப்பக் காவு (பொருள் பாம்புகளின் உறைவிடம்) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் பாரம்பரிய வீடுகளுக்கு அருகில் காணப்படும் இயற்கை புனித இடமாகும். இந்தத் தளங்களில் பாம்புகள் வசிப்பதாக நம்பப்படுகிறது, மேலும் இப்பகுதியில் பொதுவாக மானசா ('பாம்புகளின் தெய்வம்'), நாக ராஜா, பிற நாக தேவதைகள் போன்றவற்றிற்கான இடமாக கருதப்படுகிறது. மேலும் இங்கு நடக்கும் சிறப்பு விழாக்களின் போது காணிக்கை, சடங்குகள் போன்றவை செய்யப்படுகின்றன. இங்கு நம்பூதிரிகளில் சில பிரிவினரால் சடங்குகள் நடத்தப்படும்கின்றன. மேலும் அனைத்து சாதியினரும் சர்ப்ப காவுகளை பயபக்தியுடன் அணுகுகின்றனர். உரிய விழாக்களின்போது தவிர இப்பகுதிகளில் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஏராளமான சத்திரிய மன்னர்களைக் கொன்ற பரசுராமர், பின்னர் அரபிக்கடலில் இருந்து கேரளத்தை உருவாக்கி தான் செய்த அந்தக் கொலை பாவங்களுக்கு பரிகாரமாக, அந்த நிலத்தை "தானமாக" பிராமணர்களுக்கு (நம்பூதிரிகளுக்கு) வழங்கினார் என்று தொன்மங்கள் கூறுகின்றன. அந்த நிலம் காடுகளாலும், நச்சுப் பாம்பகளாலும் நிறைந்து காணப்பட்டது. எனவே பிராமணர்கள் அங்கே தங்க மறுத்தனர். அதனால் பரசுராமர் சிவபெருமானிடம் அதற்கு ஒரு தீர்வை வழங்குமாறு வேண்டினார். சிவன் பரசுராமனிடம் மானசா, அனந்தன், பாம்புகளின் அரசனான வாசுகி ஆகியோரை வணங்கத் தொடங்குமாறு கூறினார். பரசுராமர் அவ்வாறே செய்தார். மேலும் அவர் கேரளத்தில் பாம்பு வழிபாட்டைத் தொடங்கவும், குறிப்பாக சர்ப்பக்காவு (பாம்பு காடுகள்) என்ற பெயரில் பாம்புகளுக்கு சில காடுகளை வழங்கவும் அறிவுறுத்தினர். பரசுராமர் பின்னர் மன்னார்சாலை (ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு அருகே), வெட்டிக்கொட்டு (ஆலப்புழா மாவட்டத்தில் காயம்குளம் அருகில்) மானசா, அனந்தா, வாசுகி தேவி ஆகியோரின் சிலைகளை நிறுவி வழிபடத் தொடங்கினார். பிராமணர்களும் மானசா, அனந்தா , வாசுகி தேவி போன்றோரை வழிபட்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த நாக தெய்வங்கள் கேரளத்தை வாழ ஏற்றதாக மாற்றினர்.
சர்ப்பக் காவுகள் அதன் வளமான உயிரியல் செல்வத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் மண் மற்றும் நீர் வளத்தை பாதுகாப்பிற்கும் பயன்படுகின்றன. தோப்புகளை ஒட்டிய குளங்கள் மற்றும் நீரோடைகள் வற்றாத நீர் ஆதாரங்களாக உள்ளன. விலங்குகள், பறவைகள் போன்ற பல உயிர்களின் நீர் தேவைகளுக்காக, குறிப்பாக கோடையில் இவை கடைசி புகலிடமாக உள்ளன. புனித தோப்புகளிலிருந்து விழும் இலைதழைகளினால் உருவாகும் வளமான குப்பை கலவைகள் மண்ணை வளப்படுத்துகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் புனித தோப்பின் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் மறுசுழற்சி செய்யப்படுவது மட்டுமல்லாமல், அருகிலுள்ள வேளாண் அமைப்புகளுக்கும் உதவுகின்றன.
புனிதத் தோப்புகள்
தொகுகாவு என்பது இந்தியாவில் உள்ள புனிதத் தோப்பின் தென்னிந்திய வடிவமாகும்.
இந்தியாவில் புனித தோப்புகள் என்பவை பல்வேறு அளவுகளில் உள்ள காடுகளின் முண்டுகளாகும். அவை சமூக ரீதியாக பாதுகாக்கப்படுகின்றன. பொதுவாக அவற்றைப் பாதுகாக்கும் சமூகத்தின் குறிப்பிடத்தக்க சமய நம்பிக்கையைக் கொண்டுள்ளன. இந்தக் காடுகளில் பொதுவாக வேட்டையாடுதலும், மரம் வெட்டுதலும் போன்றவை கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. தேன் சேகரிப்பு, சுள்ளி சேகரிப்பு போன்றவை சில நேரங்களில் அனுமதிக்கப்படுகின்றன. புனித தோப்புகள் இந்தியாவில் கூட்டாட்சி சட்டத்தின் மூலம் பாதுகாப்பைப் பெறவில்லை. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அத்தகைய தோப்புகளைப் பாதுகாக்க உள்ளூர் கிராம மக்களுடன் இணைந்து செயல்படுகின்றன. பாரம்பரியமாக, சில சமயங்களில் இன்றும் கூட, உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி தோப்பைப் பாதுகாக்கின்றனர்.[3] இருப்பினும் வன விலங்கு (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2002 இன் கீழ் புனித தோப்புகளை உள்ளடக்கிய சமூகத்திற்கு சொந்தமான நிலங்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய புனித தோப்புகள் சில நேரங்களில் கோயில்கள் / மடங்கள் / இடுகாடுகளுடன் தொடர்புடையவை (இதுபோல் யப்பானில் முறையே சிந்தோ மற்றும் ரியுக்யுவான் சமயம்- அடிப்படையிலான புனித தோப்புகள் உள்ளன). ஆல்பைன் புல்வெளிகள் போன்ற சமய அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட பிற இயற்கை வாழ்விடங்களையும் புனித தோப்புகள் போன்றவையாக கருதலாம்.
புனித தோப்புகள் பற்றிய வரலாற்று குறிப்புகளை காளிதாசனின் விக்கிரமோவர்சியம் வரையிலான பண்டைய செவ்வியல் இலக்கியங்களில் இருந்து காணலாம்.
நம்பிக்கைகளும் நடைமுறைகளும்
தொகுபொதுவாக, இத்தகைய தோப்புகள் "முதன்மை தெய்வம்" என்ற கருத்துடன் தொடர்புடையவை. இந்த புனித தெய்வங்களில் பெரும்பாலானவை உள்ளூர் இந்து கடவுள்களுடன் தொடர்புடையவை என்றாலும், இஸ்லாமிய மற்றும் பௌத்த மரபைச் சேர்ந்த புனித தோப்புகள் மற்றும் சில சிறிய உள்ளூர் சமயங்கள் மற்றும் நாட்டுப்புற சமயங்களை அடிப்படையாகக் கொண்டவை (நாட்டுப்புற தெய்வங்கள் என்பவை அய்யனார், அம்மன் போன்றவை) என அறியப்படுகின்றன. கேரளம் மற்றும் கருநாடகத்தில் மட்டும் புனித தோப்புகளுடன் தொடர்புடைய 1000 தெய்வங்கள் உள்ளன. கருநாடகத்தின் குடகு மாவட்டத்தில் பழங்காலத்திலிருந்தே குடகுடகு மக்களின் தற்காப்பு சமூகம் ஐயப்ப வனக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 1000 தேவ காடுகளை பராமரித்து வந்தது.
இந்து பாரம்பரியம் காடுகள் தபோவனம், மகாவனம், ஸ்ரீவனம் என்ற மூன்று வகைகளாக கருதப்படுகின்றன. தபோவனம் என்பது தவத்துடன் தொடர்புடைய காடுகளாகும். அவற்றில் துறவிகளும், ரிஷிகளும் வசிப்பர். மகாவனம் என்பது பெரும் இயற்கை காடுகளைக் குறிக்கிறது. சாதாரண மனிதர்கள் இந்தக் காடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால், தபோவனமும், மகாவனமும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கான ஒரு சரணாலயமாக கருதப்படுகின்றன. ஸ்ரீவனம், அதாவது," செழிப்பு தெய்வத்தின் காடுகள்", அடர்ந்த காடுகள் மற்றும் தோப்புகளைக் கொண்டுள்ளதாகும். முந்தையவற்றிலிருந்து, மக்கள் காய்ந்த மரங்கள், இலைகள், வன விளைபொருட்கள், குறைந்த அளவு மரங்களை சேகரிப்பார்கள். இதனால் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பு தேவையில்லாமல் தொந்தரவு செய்யப்படாது. தோப்புகள் தான் அறுவடை செய்யக்கூடிய காடுகளகக் கருதப்பட்டன. சில நேரங்களில், மா மரங்கள் போன்ற குறிப்பிட்ட மரங்களை தோப்புகளில் நட்டு வளர்ப்பர். தோப்புகள் சமய சடங்குகள், திருவிழாக்கள், பொழுதுபோக்குகளுடன் தொடர்புடையவை. கிராமங்களில், பஞ்சவாடி, அல்லது காடுகளைக் குறிக்கும் ஐந்து மரங்களின் தொகுப்பு பராமரிக்கப்பட்டன. இந்த மரங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களைக் குறிக்கின்றன.[4]
இடங்கள்
தொகுபுனித தோப்புகள் நாடு முழுவதும் ஆங்காங்கே பரவியுள்ளன. அவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. இராசத்தானின் தார் பாலைவனத்தில் பிஷ்னோயிகளால், பராமரிக்கப்படும் புதர்க்காடுகள் முதல் கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பொழில் காடுகள் வரை உள்ளன. குறிப்பாக வடக்கில் இமாச்சலப் பிரதேசமும் தெற்கில் கேரளமும் ஏராளமான புனித தோப்புகளைக் கொண்டுள்ளதற்கு பெயர் பெற்றவை. கருநாடகத்தின் குடகு மக்கள் மட்டும் தங்கள் பகுதியில் 1000-இக்கும் மேற்பட்ட புனித தோப்புகளை பராமரித்து வந்தனர்.[5] இராத்தானின் குஜ்ஜர் மக்கள் வேப்ப மரத்தை நட்டு கடவுள் தேவ்நாராயணனின் இருப்பிடமாக கருதி வழிபடும் தனித்துவமான நடைமுறையைக் கொண்டுள்ளனர். இதனால், ஒரு குர்ஜர் குடியிருப்பானது மனிதர்கள் வசிக்கும் புனித தோப்பு போல் தோன்றுகிறது.[6] இதேபோல் தில்லியில் கடைசியாக எஞ்சியிருக்கும் இயற்கை காடான மங்கர் பானி அதன் அருகிலுள்ள குர்ஜர்களால் பாதுகாக்கப்படுகிறது.[7] இந்தியா முழுவதிலுமிருந்து 14,000 புனித தோப்புகள் பதிவாகியுள்ளன. அவை கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு மத்தியில் அரிய விலங்கினங்கள், அரிய தாவரங்கள் போன்றவற்றிற்கான வாழிடமாக செயல்படுகின்றன. புனித தோப்புகளின் மொத்த எண்ணிக்கை 100,000 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.[8]
வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத சுமார் 1000 கி. மீ.2 நிலங்களில் புனித தோப்புகளுக்குள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, மகத்தான பல்லுயிர் வளத்தைக் கொண்ட கேரளத்தின் காவுகள் சில மிகவும் பிரபலமான தோப்புகள் ஆகும். மேலும் மேகாலயாவின் சட்ட கிண்டாங்குகள் - ஒவ்வொரு கிராமத்துடனும் தொடர்புடைய புனித தோப்புகள் (மாவ்ப்லாங் [9] மற்றும் மௌஸ்மாய் ஆகிய இரண்டு இடங்களில்) பெரிய தோப்புகள் உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய புனித தோப்புகளில் உத்தரகாண்ட மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள கஞ்சருக்கு அருகில் உள்ள ஹரியாலி மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு அருகில் உள்ள ஷிபினில் உள்ள தேவதாரம் தோப்பு ஆகியவை அடங்கும். கருநாடகத்தின் குடகில், சுமார் 4000 கி. மீ.2 பரப்பளவிலான சிறிய பகுதியில், 1000-க்கும் மேற்பட்ட புனித தோப்புகள் இருந்தன.
மாநிலம் | புனித தோப்புகளின் எண்ணிக்கை | உள்ளூர் பெயர் | மேற்கோள் |
---|---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | 691 | பவிவித்ரசேத்ராலு | கைலாஷ் சி. மல்ஹோத்ரா மற்றும் பலர்.[10] |
அருணாசலப் பிரதேசம் | 65 | கும்பா காடுகள் (மடங்களுடன் இணைக்கப்பட்டதிலிருந்து) |
டட்லி மற்றும் பலர்.[11] |
அசாம் | 40 | தான், மடைகோ | |
சத்தீசுகர் | 600* | சர்னா, தேவ்லாஸ், மாண்டர், புத்ததேவ் |
|
கோவா | தகவல் இல்லை* | SERBC document [12] | |
குசராத்து | 29* | ||
அரியானா | 248 | பீட் (बीड़), பானி (बणी), பான் (बण), ஜங்லட் (जंगलात), ஷாம்லத் (शामलात) | |
இமாச்சலப் பிரதேசம் | 5000 | தியோ பூமி | |
சார்க்கண்டு | 21* | சர்னா
ஜார்கண்டின் கோடாவில் 500க்கும் மேற்பட்ட "ஜஹர்தன்" |
Marine Carrin [13] |
கருநாடகம் | 1424 | தேவரகாடு, தேவ்கடு |
Gadgil et al.[14] |
கேரளம் | 2000 | காவு, சர்ப்ப காவு | எம். ஜெயராஜன் [15] |
மகாராட்டிரம் | 1600 | தியோராய்/தேவ்ராய் (புனே, இரத்தினகிரி, ராய்கட், கோல்ஹாப்பூர் மாவட்டங்கள்) |
Waghchaure et al. |
மணிப்பூர் | 365 | கம்காப், மௌஹாக் (புனித மூங்கில் காடுகள்) |
Khumbongyam et al. |
மேகாலயா | 79 | லா கிண்டாங், லா லிங்டோ |
Upadhyay et al. |
ஒடிசா | 322* | ஜஹேரா, தாகுரம்மா | |
புதுச்சேரி | 108 | கோயில் காடு | Ramanujam et al. |
இராசத்தான் | 9* | ஓரான் (ஜெய்சல்மேர், சோத்பூர், பிகானேர்), கென்கிரி (அஜ்மீர்), வாணி (மேவார்), ஷாம்லத் தேஹ், தேவபானி (அல்வார்), ஜோக்மாயா |
|
சிக்கிம் | 56 | கும்பா காடுகள் (மடங்களுடன் இணைக்கப்பட்டதிலிருந்து) |
S. S. Dash Dudley et al.[11] |
தமிழ்நாடு | 503 | கோயில் காடு | M. Amrithalingam |
தெலங்காணா | 65 | Kailash C. Malhotra et al.[10] | |
உத்தராகண்டம் | 18* | தேவபூமி, புக்யால் (புனித ஆல்பைன் புல்வெளிகள்) |
Anthwal et al.[16] |
மேற்கு வங்காளம் | 670* | கரம்தான், ஹரிதன், ஜஹேரா, சபித்ரிதன், Santalburithan |
R. K. Bhakat |
அனைத்து எண்களும் சி. பி. ஆர் பதிவுகளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்திய அரசின் சுற்றுச்சூழல் கல்வி மையம் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட புனித தோப்புகளின் முழுமையான பட்டியலைப் பராமரிக்கிறது, அவற்றில் பெரும்பாலானவை இணையத்தில் உள்ளன.
பயன்கள்
தொகுபாரம்பரிய பயன்பாடுகள்: புனித தோப்புகளின் மிக முக்கியமான பாரம்பரிய பயன்பாடுகளில் ஒன்றாக, பல்வேறு ஆயுர்வேதம், சித்த மருந்துகளின் களஞ்சியமாக செயல்படுகின்றன. மற்ற பயன்பாடுகளில் பழங்கள், தேன் போன்ற வளங்களின் ஆதாரமாகவும் விளங்கின. இருப்பினும், பெரும்பாலான புனித் தோப்புகளில் மரங்களை வெட்டுவது தடைசெய்யப்பட்டது. இவை மண் அரிப்பைக் குறைக்கவும், பாலைவனமாக்கல்லைத் தடுக்க உதவுகிறது. புனிதத் தோப்புகள் பெரும்பாலும் குளங்கள் மற்றும் நீரோடைகளுடன் தொடர்புடையவை, அவை உள்ளூர் சமூகங்களின் நீர் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. அவை சில நேரங்களில் நிலத்தடி நீர்நிலைகளை பெருக்கவும் பயன்பட்டன.
நவீன பயன்கள்: நவீன காலங்களில், பல்வேறு உயிரினங்கள் அவற்றின் வாழ்விட அழிப்பு, வேட்டையாடுதல் காரணமாக இந்தப் பகுதிகளில் தஞ்சம் அடைவதால், புனித தோப்புகள் பல்லுயிர் மையங்களாக மாறிவிட்டன. புனித தோப்புகளில் பெரும்பாலும் அண்டைப் பகுதிகளில் அழிந்துபோன தாவர, விலங்கு இனங்களின் விழிடமாக உள்ளன. இது தவிர, நகர்ப்புற நிலப்பரப்புகளில் உள்ள புனித தோப்புகள் நகரத்திற்கு "நுரையீரல்களாகவும்" செயல்படுகின்றன.
அச்சுறுத்தல்கள்
தொகுதோப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களில் நகரமயமாக்கல், வளங்களை அதிகப்படியாக சுரண்டுதல் (அதிகப்படியான மிகை மேய்தல் மற்றும் மிகுதியான விறகு சேகரிப்பு போன்றவை), சமய நடைமுறைகள் காரணமாக சுற்றுச்சூழல் அழிவு ஏற்படுகின்றது. தோப்புகள் பல நாட்டார் தெய்வங்களின் வசிப்பிடங்களாகக் கருதப்பட்டாலும், அண்மைக் காலங்களில் அவற்றில் பல இந்து கோயில்கள் கட்டுவதற்கு ஓரளவு அழிக்கப்பட்டுள்ளன. புனித தோப்புகளுக்கு ஏற்படும் மற்ற அச்சுறுத்தல்களில் ஆக்கிரமிப்பு உயிரினங்களான குரோமோலேனா ஓடோராட்டா, உண்ணிச்செடி , சீமைக்கருவேலம் போன்ற தாவர இனங்கள் அடங்கும்.
மரபுகள்
தொகுதோப்புகளின் தெய்வங்களுடன் தொடர்புடையவையாக ஏராளமான தனித்துவமான உள்ளூர் கலை வடிவங்களும், நாட்டுப்புற மரபுகளும் உள்ளன. தோப்புகளைப் பாதுகாக்கும் உள்ளூர் தெய்வங்களை அடிப்படையாகக் கொண்ட சடங்கு நடனங்கள் மற்றும் நாடகங்கள் கேரளத்தில் தெய்யம் என்றும் கருநாடகத்தில் நாகமண்டலம் என்றும் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும், விரிவான சடங்குகள், நாட்டார் வழக்காற்றியல், நாட்டுப்புறத் தொன்மங்கள், மரபுகள் போன்றவற்றுடன் புனித தோப்புகளுடன் தொடர்புடையவையாக உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ M. Jayarajan, Sacred Groves of North Malabar பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம், Kerala Research Programme on Local Level Development, Centre for Development Studies, Thiruvananthapuram (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87621-95-8)
- ↑ "Nagaraja Temples in Kerala". Vaikhari.org. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.
- ↑ Sudha, P., Rekha, P. V., Gunaga, V. S., Patagar, S., Naik, M. B., Indu, K. M., and N. H Ravindranath, Community Forest Management and Joint Forest Management: An Ecological, Economic and Institutional Assessment in Western Ghats, India பரணிடப்பட்டது 2007-06-10 at the வந்தவழி இயந்திரம், Presented at "Crossing Boundaries", the seventh annual conference of the International Association for the Study of Common Property, Vancouver, British Columbia, Canada, 10–14 June 1998
- ↑ Ranchor Prime, Vedic Ecology: Practical Wisdom for Surviving the 21st Century, Mandala Publishing, Novato, CA, 2002
- ↑ A series பரணிடப்பட்டது 3 பெப்பிரவரி 2007 at the வந்தவழி இயந்திரம் of articles in the journal Down to Earth on sacred groves
- ↑ "Sacred Forestry".
- ↑ http://www.ngtba.org/index.php/news?start=190 பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Ramachandra Guha, The Unquiet Woods, University of California Press, 2000 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520222359)
- ↑ "Eco Destination . Mawphlang Sacred Forest". Archived from the original on 9 December 2011. பார்க்கப்பட்ட நாள் 31 March 2017.
- ↑ 10.0 10.1 Kailash C. Malhotra, Yogesh Gokhale, Sudipto Chatterjee, and Sanjeev Srivastava (2001). Cultural and Ecological Dimensions of Sacred Groves in India. Indian National Science Academy, New Delhi, and Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya, Bhopal. பரணிடப்பட்டது 8 ஆகத்து 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 11.0 11.1 Ed. N. Dudley, L. Higgins-Zogib, and S. Mansourian; The Arguments for Protection Series - Beyond Belief: Linking faiths and protected areas to support biodiversity conservation, pp. 91-95; World Wide Fund for Nature, 2005 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-88085-270-6)
- ↑ Website பரணிடப்பட்டது 30 மே 2004 at the வந்தவழி இயந்திரம் of the Sacred Grove Restoration Project, Society for Ecological Restoration
- ↑ Marine Carrin, Santal autonomy as a social ecology[தொடர்பிழந்த இணைப்பு], 16th European Conference on Modern South Asian Studies, Edinburgh, 2000
- ↑ Gadgil, M., D. Subash Chandran, Sacred Groves and Sacred Trees of Uttara Kannada பரணிடப்பட்டது 31 மார்ச்சு 2017 at the வந்தவழி இயந்திரம், Lifestyle and Ecology, edited by Baidyanath Saraswati. New Delhi: Indira Gandhi National Centre for the Arts 1998
- ↑ M. Jayarajan, Sacred Groves of North Malabar பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம், Kerala Research Programme on Local Level Development, Centre for Development Studies, Thiruvananthapuram (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87621-95-8)
- ↑ Ashish Anthwal, Ramesh C. Sharma, and Archana Sharma, Sacred Groves: Traditional Way of Conserving Plant Diversity in Garhwal Himalaya, Uttaranchal பரணிடப்பட்டது 6 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம், The Journal of American Science, 2(2), 2006, Anthwal et al., Sacred Groves: Conserving Plant Diversity