திரிபுரியின் காலச்சூரிகள்

இந்தியாவின் பண்டைய வம்சம்

திரிபுரியின் காலச்சூரிகள் (Kalachuris of Tripuri) மேலும் சேதியின் காலச்சூரிகள் எனவும் அழைக்கப்படும் இவர்கள் 7 முதல் 13ஆம் நூற்றாண்டுகளில் மத்திய இந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்த அரச வம்சத்தினராவர். இவர்களின் முக்கிய பிரதேசத்தில் வரலாற்று புகழ் மிக்க சேதி நாடு பகுதியும் (பகேல்கண்ட் -மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது). இவர்களின் தலைநகரம் திரிபுரியில் (இன்றைய மத்திய பிரதேசத்தின் ஜபல்பூருக்கு அருகில் உள்ள தேவார்) அமைந்திருந்தது.

திரிபுரியின் கலாச்சூரிகள்
possibly 7th century–13th century
Map
திரிபுரியின் காலச்சூரிகளின் ஆட்சியின் போது வெளியிடப்பட்ட கல்வெட்டுகளின் இடங்களைக் காணலாம் (நீலம்)[1][2] இரத்னபுரியின் காலச்சூரிகளின் பிரதேசங்கள் (சாம்பல்)[3][4]
தலைநகரம்திரிபுரி
சமயம்
இந்து சமயம்
சைனம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
possibly 7th century
• முடிவு
13th century
முந்தையது
பின்னையது
Gurjara-Pratiharas
Gahadavala
Chandela
Paramara
Delhi Sultanate
தற்போதைய பகுதிகள்இந்தியா

வம்சத்தின் தோற்றம் நிச்சயமற்றது. இருப்பினும் ஒரு கோட்பாடு இவர்களை மகிழ்மதியின் காலச்சுரிகளுடன் இணைக்கிறது. 10 ஆம் நூற்றாண்டில், திரிபுரியின் காலச்சூரிகள் அண்டைப் பிரதேசங்களைத் தாக்கி, கூர்ஜர-பிரதிகாரர்கள், சந்தேலர்கள், பரமாரர்கள் ஆகியோருடன் போரிட்டு தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தினர். இவர்கள் இராஷ்டிரகூடர்கள், மேலைச் சாளுக்கியர்களுடன் திருமண உறவுகளையும் கொண்டிருந்தனர்.

1030களில், கலாச்சூரி மன்னன் கங்கேயதேவன் தனது கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் இராணுவ வெற்றிகளைப் பெற்ற பிறகு ஏகாதிபத்திய பட்டங்களை ஏற்றுக்கொண்டான். இவனது மகன் இலட்சுமிகர்ணனின் ஆட்சியின் போது இராச்சியம் அதன் உச்சத்தை அடைந்தது. இவன் பல அண்டை நாடுகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்குப் பிறகு 'சக்ரவர்த்தி' என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டான். பரமாரர்கள், சந்தேலர்கள் ஆகியோரின் இராச்சியங்களின் ஒரு பகுதியையும் இவன் சிறிது காலத்திற்குக் கட்டுப்படுத்தினான்.

இலட்சுமிகர்ணனுக்குப் பிறகு வம்சம் படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. இவனுடைய வாரிசுகள் ககாடவாலர்களிடம் தங்கள் வடக்குப் பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தனர். வம்சத்தின் கடைசி ஆட்சியாளனாக அறியப்பட்ட திரைலோக்யமல்லன், சுமார் கி.பி. 1212 வரை ஆட்சி செய்தான். ஆனால் இவனது ஆட்சி எப்படி எப்போது முடிந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், முன்னாள் கலாச்சூரி பிரதேசங்கள், பரமரார்கள், சந்தேலர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இறுதியில் தில்லி சுல்தானகத்தின் கீழ் வந்தது. இன்றைய சத்தீசுகரில் உள்ள இரத்தினபுரியில் (இப்போது இரதன்பூர் ) வம்சத்தின் ஒரு கிளை ஆட்சி செய்தது.

தோற்றம்

தொகு

இளவரசர் வல்லேகனின் (முதலாம் கோகல்லனின் மகன்) கியாரஸ்பூர் கல்வெட்டு போன்ற காலச்சூரி கல்வெட்டுகள், மகிழ்மதியில் இருந்து ஆட்சி செய்த புகழ்பெற்ற ஹேஹேய மன்னரான கார்த்தவீரிய அருச்சுனனின் வம்சத்தின் வம்சாவளியைக் குறிப்பிடுகின்றன. [5] பிருத்விராச விசயம் என்ற 12ஆம் நூற்றாண்டின் கவிதையின் ஹீரோ பிருத்திவிராச் சௌகானின் தாய்வழி மூதாதையரான ஒரு "தைரியமான" வீரன் மூலம் வம்சம் கார்த்தவீரியனிடமிருந்து வந்தது. இக்கவிதை கார்த்தவீரியனின் புராண வம்சாவளியைச் சந்திரனையும் (நிலா) அவனது மகன் புதனையும் (பாதரசம்) காட்டுகிறது. [6]

வரலாற்றாசிரியர் வி. வி. மிராஷி திரிபுரியின் கலாச்சுரிகளை மேற்கு-மத்திய இந்தியாவில் ஆட்சி செய்த மகிழ்மதியின் ஆரம்ப காலச்சுரிகளுடன் இணைத்தார். 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்ப காலச்சூரிகள் தங்கள் தலைநகரை மகிழ்மதியிலிருந்து கலிஞ்சருக்கு மாற்றியதாகவும், இறுதியாக திரிபுரிக்கு மாற்றப்பட்டதாகவும் மிராஷி கருதினார். [7] இருப்பினும், இரண்டு வம்சங்களும் தொடர்புடையவை என்பதை உறுதியாக நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. [8]

வரலாறு

தொகு

வம்சத்தின் ஆரம்பகால ஆட்சியாளர்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அவர்கள் கல்வெட்டு மரபுவழிகளில் குறிப்புகளைக் காணலாம். வம்சத்தின் ஆரம்பகால கல்வெட்டுகள் மத்தியப் பிரதேசத்தின் சோட்டி தியோரி, சாகர் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் முதலாம் சங்கரகனனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை. மேலும் அவை கிபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. [9]

இராஷ்டிரகூடர் மற்றும் பிரதிகார நிலப்பிரபுத்துவமாக

தொகு

முதலாம் இலட்சுமணராசனின் (பொ.ச.825-850 ) கரிதலை கல்வெட்டு ஒரு இராஷ்டிரகூட அரசனை (அவனது பெயர் அழிந்து விட்டது) புகழ்ந்து பேசுகிறது. மேலும் ஒரு நாகபட்டனின் தோல்வியைக் குறிப்பிடுகிறது (மறைமுகமாக கூர்ஜர-பிரதிகார அரசன் இரண்டாம் நாகபட்டன் ). இந்த நேரத்தில், காலச்சுரிகள் தங்கள் தெற்கு அண்டை நாடுகளான இராஷ்டிரகூட பேரரசர்களுக்கு அடிபணிந்து ஆட்சி புரிந்து வந்தனர். மேலும் தங்களின் வடக்கு அண்டை நாடுகளான பிரதிகார பேரரசர்களுக்கு எதிராக போரிட்டனர் என்று இது கூறுகிறது. இவர்கள் இராஷ்டிரகூடர்களுடன் பல திருமண தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இருப்பினும், இலட்சுமணராசனின் மகன் அல்லது பேரன் முதலாம் கோகல்லனிமிருந்து (ஆட்சி 850-890 பொ.ச.), இவர்கள் தங்கள் விசுவாசத்தை பிரதிகாரர்களிடம் மாற்றிவிட்டனர். [10]

ஆரம்பகால வெற்றிகள்

தொகு

இராஷ்டிரகூடர்கள், கூர்ஜர-பிரதிகாரர்கள் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பிறகு, காலச்சூரிகள் சுதந்திரம் பெற்றனர். [10]

பொ.ச. 970இல் காலச்சூரி அரியணையில் ஏறிய மூன்றாம் சங்கரகனன் ஒரு தீவிரமான விரிவாக்கக் கொள்கையைக் கொண்டிருந்தான். இவன் தனது சமகால கூர்ஜர-பிரதிகார மன்னனைத் தோற்கடித்தான். அவன் விசயபாலனாக இருக்கலாம். இவன் சந்தேலர்களுக்கு எதிரான போரில் இறந்திருக்கலாம். [11] சங்கரகனனுக்குப் பிறகு அவனது இளைய சகோதரன் இரண்டாம் யுவராசதேவன் ஆட்சிக்கு வந்தான். இவன் மேலைச் சாளுக்கிய ஆட்சியாளன் இரண்டாம் தைலப்பனுடன் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டான். [12] தைலப்பனின் எதிரியாக இருந்த பரமார மன்னன் முஞ்சா, கலாச்சூரி இராச்சியத்தின் மீது படையெடுத்து அவர்களின் தலைநகரான திரிபுரியை தாக்கினான். [13] இரண்டாம் யுவராசதேவனின் மரணத்திற்குப் பிறகு, அமைச்சர்கள் அவனது மகன் இரண்டாம் கோகல்லனை அரியணையில் அமர்த்தினார்கள். [14]

கோகல்லனின் குர்கி கல்வெட்டின் படி, மூன்று அண்டை மன்னர்கள் அவனைப் பற்றி பயந்தனர்: கூர்ஜர மன்னன் (பலவீனமான கூர்ஜர-பிரதிகார ஆட்சியாளன் இராச்சியபாலன்), கௌட மன்னன் ( பால ஆட்சியாளர் மகிபாலன் ), குந்தள மன்னன் ( மேலைச் சாளுக்கிய மன்னன் ஐந்தாம் விக்கிரமாதித்தன்). இந்த கூற்றுகள் கோகல்லன் இந்த மன்னர்களின் பிரதேசங்களை தாக்கியதாகக் கூறுகின்றன. [14]

கோகல்லனின் மகனும் வாரிசுமான கங்கேயதேவன் பொ.ச.1015இல் அரியணை ஏறினான். [15] அவனது ஆட்சியின் ஆரம்ப காலத்தில், இவன் மற்றொரு மன்னருக்கு, ஒருவேளை பரமார மன்னன் போஜனுக்கு அடிமையாக பணியாற்றினான். [16] இவன் மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிராக போரிட்டான். போஜன், கங்கேயதேவன் , இராசேந்திர சோழன் ஆகிய மூவரின் கூட்டணி சாளுக்கிய மன்னர் இரண்டாம் ஜெயசிம்மனை பல எல்லைகளில் தடுத்து நிறுத்தியது. [17] காலச்சுரி, சாளுக்கிய கல்வெட்டுகள் இரண்டும் இக்கூட்டணி இந்தப் போரில் வெற்றி பெற்றதாகக் கூறுகின்றன. கங்கேயதேவனும் அவனது கூட்டாளிகளும் சில ஆரம்ப வெற்றிகளைப் பெற்ற பிறகு விரட்டியடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. [15]

போஜன், கங்கேயதேவனை ஒரு போரில் தோற்கடித்தான். ஆனால் சரியான காலவரிசை குறித்து சில நிச்சயமற்ற நிலை உள்ளது. ஒரு கோட்பாட்டின் படி, சாளுக்கிய எதிர்ப்புப் போருக்கு முன் போஜன் கங்கேயதேவனை தோற்கடித்தான். அதில் கங்கேயதேவன் ஒரு பரமார அடிமையாகப் போரிட்டான். [16] சாளுக்கியர்களுக்கு எதிரான இவர்களின் முற்றுகைப் பிறகு இருவரும் எதிரிகளாக மாறினர் என்பது மற்றொரு கோட்பாடு. [18]

 
அமர்கந்தாக்கிலுள்ள இலட்சுமிகர்ணனால் கட்டப்பட்ட கர்ணன் கோவில்

1030களில், கங்கேயதேவன் தனது கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் இராணுவ வெற்றிகளைப் பெற்றான். மேலும் ஒரு இறையாண்மையுள்ள பேரரசன் என்ற பட்டங்களை ஏற்றுக்கொண்டான். [19] கிழக்கில், இவன், தன்னுடைய இரத்னபுரி அரசர்களின் உதவியோடு உத்கல நாட்டின் மீது தாக்குதல் நடத்தினான். இந்தப் போரில் பௌமா-கர மன்னன் இரண்டாம் சுபாகரனை கலாச்சூரிகள் தோற்கடித்திருக்கலாம். [15] கங்கேயதேவன், தெற்கு கோசலத்தின் சோமவன்சியின் ஆட்சியாளரான யயாதிக்கு எதிராக முடிவற்ற போரில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. [15]

வடக்கில், கசனவித்துகளின் படையெடுப்புகளால் பலவீனமடைந்த சந்தேலர்களின் இழப்பில் கங்கேயதேவன் தனது இராச்சியத்தை விரிவுபடுத்தினான். [20] இவன் சந்தேல மன்னன் விசயபாலனுக்கு எதிராப் போரிட்டு தோல்வியடைந்தான். [21] ஆனால் இறுதியில் வாரணாசி, பிரயாகை ஆகிய புனித நகரங்களின் மீது தனது கட்டுப்பாட்டை நீட்டித்தான். [19] இவனது ஆட்சியின் போது, கசனவீது தளபதி அகமது நியால்திஜின் கிபி 1033இல் வாரணாசியைத் தாக்கினான்.[22]

கங்கேயதேவனின் வாரிசான இலட்சுமிகர்ணன் (ஆட்சி. 1041-1073 பொ.ச.), வம்சத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தளபதி ஆவான். அண்டை நாடுகளுக்கு எதிராக பல வெற்றிகரமான ப் போர்களையடுத்து இவன் 'சக்கரவர்த்தி' என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டான். கிழக்கில், இவன் அங்கம் , வங்கம் (நவீன வங்காளம்) மீது படையெடுத்தான். [23] வங்கத்தில், இவன் ஒரு சந்திர வம்ச அரசனைத் தோற்கடித்தான். ஒருவேளை கோவிந்தச்சந்திர்னாக இருக்கலாம். [23] பின்னர், பாலப் பேரரசின் ஆட்சிப் பகுதிகளான கௌடப் பகுதியையும் ஆக்கிரமித்தான். [24] இவனது படையெடுப்பு நாயபாலனால் முறியடிக்கப்பட்டது. பௌத்தத் துறவி அதிசர் இரு அரசர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்தியதாக திபெத்திய கணக்குகள் தெரிவிக்கின்றன. [25] நாயபாலனின் வாரிசான மூன்றாம் விக்ரகபாலனின் ஆட்சியின் போது இலட்சுமிகர்ணன் கௌடர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இரண்டு அரசர்களும் இறுதியில் ஒரு சமாதான உடன்படிக்கையில் போரை முடித்துக்கொண்டனர். இதன்மூலம் இலட்சுமிகர்ணனின் மகள் யுவனாசிறீ ஒரு இளவரசனை மணந்தாள். [24]

தென்மேற்கில், இலட்சுமிகர்ணன் மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனுடன் முடிவற்ற போரில் ஈடுபட்டான். [23] மேலும், இவன் தென்கிழக்கில் சோழ மன்னன் இராஜாதிராஜச் சோழனுடன் போரிட்டதாகவும் தெரிகிறது. [23] கிழக்கில், ஒரு கூர்ஜர மன்னனை தோற்கடித்தான். இவன் சோலாங்கி அரசன் முதலாம் பீமனுடன் அடையாளம் காணப்படுகிறான். [23]

1050களின் நடுப்பகுதியில், இலட்சுமிகர்ணனும், பீமனும் பரமார மன்னன் போஜனுக்கு எதிராக கூட்டணி சேர்ந்தனர். இருவரும் எதிரெதிர் திசைகளில் இருந்து ஒரே நேரத்தில் மால்வாவின் பரமார இராச்சியத்தைத் தாக்கினர். [24] 14ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் மெருதுங்காவின் கூற்றுப்படி, இப்போரில் போஜன் இறந்தான். இலட்சுமிகர்ணன் பரமார இராச்சியத்தைக் கைப்பற்றினான். பீமன் போரில் கொள்ளையடித்ததில் தனது பங்கை மீட்க ஒரு போரைத் தொடங்க வேண்டியிருந்தது.[24] சிறிது காலத்திற்குள், இலட்சுமிகர்ணன் போஜனின் வாரிசான செயசிம்மன் ஆறாம் விக்கிரமாதித்தனின் உதவியுடன் மாலவத்தின் கட்டுப்பாட்டை மீட்டான். [24] அதைத் தொடர்ந்து, கர்ணன் விக்ரமாதித்தனின் போட்டியாளரும் சகோதரருமான இரண்டாம் சோமேசுவரனுடன் கூட்டணி சேர்ந்து , மீண்டும் மாலவத்தின் மீது படையெடுத்தான். இருப்பினும், போஜனின் சகோதரன் உதயாதித்தனின் எதிர்ப்பால் இருவரும் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [26]

இலட்சுமிகர்ணன் சந்தேல மன்னன் தேவவர்மனை (ஆட்சி 1050-1060 பொ.ச.) அடிபணியச் செய்தான். தேவவர்மன் இப்போரில் இறந்ததாகத் தெரிகிறது. [24] பொ.ச.1070இல் தேவவர்மனின் வாரிசான கிருத்திவர்மனால் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, இவன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சந்தேல பிரதேசத்தின் பெரும்பகுதியின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. [24]

தோல்விகள்

தொகு

இலட்சுமிகர்ணனின் மகன் யசகர்ணன் (ஆட்சி. 1073-1123 பொ.ச.) சில அண்டைப் பிரதேசங்களைத் தாக்கினான். ஆனால் வாரணாசி உட்பட தனது இராச்சியத்தின் வடக்குப் பகுதிகளை ககாடவாலர்களிடம் இழந்தான். [27] பரமார மன்னன் இலட்சுமதேவன், சந்தேல மன்னன் சல்லக்சணவர்மன் ஆகியோருக்கு எதிராகவும் இவன் தோல்வியடைந்தான்.. [28]

யசகர்ணனின் மகன் கயகர்ணன் பரமார மன்னன் உதயாதித்தனின் பேத்தியை மணந்தான். இது இரு இராச்சியங்களுக்கிடையில் அமைதிக்கு வழிவகுத்தது. [28] இருப்பினும், கயகர்ணன் சந்தேல மன்னன் மதனவர்மனுக்கு எதிராகப் பின்னடைவைச் சந்தித்ததாகத் தெரிகிறது. [29] முன்னதாக திரிபுரி காலச்சூரிகளின் அடிமைகளாக பணியாற்றிய இரத்தினபுரியின் காலச்சுரிகள் கயகர்ணனின் ஆட்சியின் போது தங்கள் சுதந்திரத்தை அறிவித்தனர். கயகர்ணன் அவர்களை அடிபணியச் செய்ய முயன்று தோல்வியடைந்தான். [28]

கயகர்ணனின் மகன் நரசிம்மன் மதனவர்மனிடம் இழந்த பகுதிகளை மீட்டான். நரசிம்மன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவனுக்குப் பிறகு அவனது சகோதரன் செயசிம்மன் ஆட்சிக்கு வந்தான். [28] சந்தேல மன்னன் பரமார்த்திக்கு எதிராக செயசிம்மன் தோல்வியடைந்தான். இவன் இரத்தினபுரி கலாச்சுரிகளுக்கு எதிராக ஒரு தோல்வியையும் சந்தித்தான். [30]

செயசிம்மனின் வாரிசான விசயசிம்மனின் ஆட்சியின் போது, சல்லக்சணன் என்ற வடநாட்டு நிலப்பிரபுத்துவ ஆட்சியாளன் காலச்சூரி ஆட்சியைக் கவிழ்க்க முயன்று தோல்வியடைந்தான். [31] விசயசிம்மனின் வாரிசான திரைலோக்யமல்லன் சுமார் கிபி 1212 வரை ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது. இவன் "கன்யாகுப்ஜத்தின் இறைவன்" என்ற பட்டத்தை வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால், இவன் உண்மையில் கன்னியாகுப்ஜைக் கைப்பற்றினான் என்பதை உறுதியாகக் கூற முடியாது. [31]

இவனது வம்சத்தின் கடைசியாக அறியப்பட்ட அரசன் திரைலோக்யமல்லனாவான். இவனது ஆட்சி எப்போது எப்படி முடிந்தது என்று தெரியவில்லை. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், முன்னாள் கலாச்சூரி பிரதேசங்கள் பரமரார்கள், சந்தேலர்கள், தில்லி சுல்தானகம் , தேவகிரியின் யாதவர்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாக அறியப்படுகிறது. [32]

மதம்

தொகு

திரிபுரி காலச்சூரி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் முதன்மையான நம்பிக்கை சைவமாகும். [33] பல சைவத் தலைவர்கள் ( ஆச்சார்யர்கள் ) காலச்சூரி அரசர்களுக்கு அரச ஆசான்களாக (ராஜகுரு) பணியாற்றினர்; புருச-சிவன் ( யசகர்ணன் ), சக்தி-சிவன் ( கயகர்ணன் ), கீர்த்தி-சிவன் ( நரசிம்மன் ), விமல-சிவன் ( செயசிம்மன் ) ஆகியவை இதில் அடங்கும். [34] கங்கேயதேவன் பியாவான் என்ற இடத்தில் ஒரு சிவலிங்கத்தை நிறுவினான்.[23] மேலும், இவனது மகன் இலட்சுமிகர்ணன் வாரணாசியில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 'கர்ணமேரு' என்ற ஒரு கோயிலை எழுப்பினான். ஆந்திரப் பகுதியின் படையெடுப்பின் போது யசகர்ணன் திரக்சாரமத்திலுள்ள சிவன் கோயிலில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. [27] கயகர்ணனின் அரசி அல்கனாதேவியின் ஆதரவால் கலாச்சூரி சாம்ராஜ்யத்தில் பாசுபத சைவ மதத் தலைவர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. [28]

முதலாம் கோகல்லனின் மகன் வல்லேகனின் கியாரஸ்பூர் கல்வெட்டு, இளவரசரால் கட்டப்பட்ட ஒரு சைனக் கோயிலின் அடித்தளத்தைப் பதிவுசெய்கிறது. முக்கியமாக சைவ உருவங்களும், வார்த்தைகளும் வைணவ மேலோட்டங்களைக் கொண்டுள்ளது. [33] இந்தக் கல்வெட்டு வம்சத்தின் ஒரே சைனத்துடன் இணைந்த பதிவாக இருப்பதால், காலச்சூரி பிரதேசத்தில் நடைமுறையில் இருந்த சமண சமயத்தின் இத்தகைய ஒத்திசைவுப் போக்கு இருந்ததா, அல்லது கல்வெட்டு ஒருமுறை எழுதப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. [35] கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கோவிலானது இன்றைய மாலாதேவி கோவிலாக இருக்கலாம். இதில் சைன மற்றும் பிராமண உருவப்படங்களின் கலவை உள்ளது. [36]

ஆட்சியாளர்களின் பட்டியல்

தொகு
 
கலாச்சூரி ஆட்சியின் போது கட்டப்பட்ட அமர்கந்தாக் கோயில்கள்

பின்வருபவை திரிபுரி காலச்சூரி ஆட்சியாளர்களின் பட்டியலாகும். அவர்களின் ஆட்சிக்கால மதிப்பீடுகள்: [37]

  • வாமராஜ-தேவன் (675-700 பொ.ச.)
  • முதலாம் சங்கரகனன் (750-775 பொ.ச.)
  • முதலாம் இலட்சுமண-ராசன் (825-850 பொ.ச.)
    • கயாரஸ்பூர் கல்வெட்டில் கோகல்லனின் முன்னோடியாக விவரிக்கப்பட்டுள்ள வொப்ப-ராசன், முதலாம் இலட்சுமண-ராசனின் மகன் அல்லது அந்த மன்னனின் மற்றொரு பெயர் [5]
  • முதலாம் கோகல்லன் (850-890 பொ.ச.; இவனது இளைய மகன் இரத்தினபுரி காலச்சூரி கிளையை நிறுவினான்
  • இரண்டாம் சங்கரகனன் என்கிற முகதுங்கன்(890-910 பொ.ச.)
  • பலகர்சன் (910-915 பொ.ச.)
  • முதலாம் யுவராசதேவன் (915-945 பொ.ச.)
  • இரண்டாம் இலட்சுமண-ராசன் (945-970 பொ.ச.)
  • மூன்றாம் சங்கரகனன் (970-80 பொ.ச.)
  • இரண்டாம் யுவராசதேவன் (980-990 பொ.ச.)
  • இரண்டாம் கோகல்லன் (990-1015 பொ.ச.)
  • கங்கேயதேவன் (1015-1041 பொ.ச.)
  • இலட்சுமிகர்ணன் என்கிற கர்ணன்(1041-1073 பொ.ச.)
  • யசகர்ணன்(1073-1123 பொ.ச.)
  • கயகர்ணன் (1123-1153 பொ.ச.)
  • நரசிம்மன் (1153-1163 பொ.ச.)
  • செயசிம்மன் (1163-118பொ.ச.E)
  • திரைலோக்யமல்லன் (சுமார் 1210-1212 பொ.ச.) [31]

சான்றுகள்

தொகு

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு