எலண்ட் மான்

பாலூட்டி இனம்

Euteleostomi

எலாண்ட் மான், தெற்கு எலாண்ட் அல்லது எலாண்ட் ஆண்டிலோப் (common eland also known as the southern eland or eland antelope) என்பவை கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு புன்னில மற்றும் சமவெளி மறிமான் ஆகும். இது மாட்டுக் குடும்பம் மற்றும் டாரோட்ராகஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு இனமாகும். வயது வந்த ஒரு ஆண் மானானது தரையிலிருந்து தோள்வரை சுமார் 1.6 மீ (5 அடி) உயரம் (பெண் மான்கள் சுமார் 20 செமீ (1 அடி) உயரம் குறைவு) இவற்றில் ஆண் மானின் எடை 500–600 கிலோ வரையும், பெண் மான்களின் எடை 340–445 கிலோ வரை இருக்கும். குறிப்பிடத்தக சில மான்கள் 942 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். இது உலகின் இரண்டாவது பெரிய மறிமான் ஆகும். இது இராட்சத எலாண்டை விட சற்று சிறியது.[2] இது 1766 இல் பீட்டர் சைமன் பல்லாஸ் என்பவரால் அறிவியல் ரீதியாக விவரிக்கப்பட்டது.

எலண்ட் மான்
Common eland
நமீபியாவில் உள்ள எட்டோஷா தேசிய பூங்காவில் எலாண்ட் கிடாய்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. oryx
இருசொற் பெயரீடு
Taurotragus oryx
(Pallas, 1766)
Subspecies
  • T. o. livingstonii
  • T. o. oryx
  • T. o. pattersonianus
Distribution of the common eland over the புன்னிலம்s and சமவெளிs in eastern and southern Africa
வேறு பெயர்கள்
Species synonymy
  • Tragelaphus oryx (Pallas, 1766)
  • Taurotragus alces (Oken, 1816)
  • Taurotragus canna (C. H. Smith, 1827)
  • Taurotragus barbatus (Kerr, 1792)
  • Taurotragus oreas (Pallas, 1777)
  • Taurotragus typicus Selous, 1899
  • Taurotragus livingstonei (P. L. Sclater, 1864)
  • Taurotragus billingae Kershaw, 1923
  • Taurotragus kaufmanni (Matschie, 1912)
  • Taurotragus niediecki (Matschie, 1913)
  • Taurotragus selousi Lydekker, 1910
  • Taurotragus triangularis (Günther, 1889)
  • Taurotragus pattersonianus Lydekker, 1906

தாவர உண்ணியான இதன் முதன்மை உணவாக புற்களும், இலைகளும் உள்ளன. எலாண்ட்கள் 500 விலங்குகள் வரையிலான மந்தைகளாக உள்ளன. சவன்னா, மரக்காடு மற்றும் திறந்த மற்றும் மலைப் புல்வெளிகள் போன்ற பல்வேறு வகையான பூக்கும் தாவரங்களைக் கொண்ட வாழிடங்களை பொதுவானக விரும்புகின்றன. அதாவது அடர்ந்த காடுகளைத் தவிர்க்கிறது. கூட்டத்திற்கு ஆபத்து வரும்போது தலைமை மான் எச்சரிக்கை ஒலி எழுப்பி கூட்டடத்தை விரட்டும். பொதுவான எலண்ட்கள் மனிதர்களால் தோல், இறைச்சி, பால் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறன்றன. மேலும் பல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. எலாண்ட்களின் பாலில் பசுவின் பாலை விட அதிக வெண்ணெய் கொழுப்பு உள்ளது, மேலும் பாச்சர்முறை செய்யாமல் நீண்ட நேரம் வைத்திருக்க முடியும்.

இது அங்கோலா, போட்சுவானா சாம்பியா காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எசுவாத்தினி, எத்தியோப்பியா, கென்யா, மலாவி, லெசோத்தோ, மொசாம்பிக், நமீபியா, தென்னாப்பிரிக்கா, தெற்கு சூடான், உருவாண்டா, தன்சானியா, உகாண்டா, சிம்பாப்வே ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இப்போது புருண்டியில் இல்லை. எலண்டின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தால் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சொற்பிறப்பியல்

தொகு

எலண்டின் அறிவியல் பெயர் Taurotragus oryx ஆகும். இது tauros, tragos, oryx ஆகிய மூன்று சொற்களால் ஆனது. Tauros என்பது காளைக்கான கிரேக்க மொழி பெயராகும், இதன் இலத்தீன் taurus என்று பொருள்படும். Tragos என்பது ஆண் கிடாயைக் குறிக்கும் கிரேக்க மொழி சொல்லாகும். இது எலாண்டின் காதில் வளரும் முடி மற்றும் ஆட்டின் தாடியை ஒத்திருப்பதைக் குறிக்கிறது.[3] Oryx என்பது லத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் பிக்காக்சு கருவிக்கான பெயராகும். இது எலாண்ட் மற்றும் ஸ்கிமிட்டர்-கொம்புகள் கொண்ட ஓரிக்ஸ் போன்ற வட ஆப்பிரிக்க மிருகங்களின் கூரான கொம்புகளைக் குறிக்கிறது.[4]

உடல் விளக்கம்

தொகு
 
எலண்ட் கிடாய்
 
நமீபியாவில் உள்ள எட்டோஷா தேசிய பூங்காவில் உள்ள சுடோப் வாட்டர்ஹோலில் இரண்டு எலண்ட்கள் நீர் அருந்துகின்றன.

எலாண்ட்கள் முறுக்கிய கொம்புகள் கொண்ட விலங்கு ஆகும். இவை பால் ஈருருமை கொண்டவை. கிடாக்களைவிட பெட்டைகளை சிறியதாக இருக்கும்.[5] பெட்டடைகளின் எடை 300–600 கிலோ வரையும், நீளம் வாலின் நீளத்தையும் சேர்த்து 200–280 செமீ (79–110 அங்குலம்) இருக்கும். இவற்றின் உயரம் தரையில் இருந்து தோள் வரை 125–153 செமீ (49–60 அங்குலம்) இருக்கும். கிடாக்களின் எடை 400–942 கிலோ, நீளம் வாலின் நீளதையும் சேர்த்து 240–345 செமீ (94–136 அங்குலம்) ஆகும். உயரம் அடியில் இருந்து தோள் வரை 150–183 செமீ (59–72 அங்குலம்) இருக்கும்.[2] கிடாக்கள் 1,000 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.[6]

 
எலண்ட்டின் எலும்புக்கூடு

இவற்றின் உரோமத்தின் நிறம் புவியியல் ரீதியாக வேறுபட்டதாக உள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள எலாண்ட்கள் தெற்கில் இருப்பதை விட தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன (உடற்பகுதி கோடுகள், கால்களில் அடையாளங்கள், முதுகெலும்பு முகடு). இவற்றின் உடல் கரடுமுரடானதாக இருந்தாலும், உடல் உரோமம் மென்மையானது. பெட்டைகளுக்கு பழுப்பு நிற உரோமம் இருக்கும். அதே சமயம் கிடாக்களின் உரோமம் கருமையாகவும், நீல-சாம்பல் நிறத்துடன் இருக்கும். கிடாக்கின் பக்கங்களிலும் (முக்கியமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கரூவின் சில பகுதிகளில்) செங்குத்து வெள்ளை நிற கோடுகள் இருக்கலாம். கிடாக்களுக்கு வயதாகும்போது, அவற்றின் உரோமம் மேலும் சாம்பல் நிறமாகிறது. கிடாக்களின் நெற்றியில் அடர்த்தியான மென்மயிர்களும், தொண்டையில் பெரிய அலைதாடியும் இருக்கும்.[2]

இரு பாலினத்துக்கும் உதிராமல் நிலையாக இருக்கும் முறுக்கிய நேரான கொம்புகள் உள்ளன. புதிதாகப் பிறந்த குட்டிகளுக்கு கொம்புகள் சிறிய மொட்டுகளாகத் தெரியும். மேலும் முதல் ஏழு மாதங்களில் வேகமாக வளரும். கிடாயின் கொம்புகள் பெட்டைகளின் கொம்பைக் காட்டிலும் தடிமனாகவும் குட்டையாகவும் இருக்கும் (கிடாய்களின் கொம்புகள் 43–66 சென்டிமீட்டர் (17–26 அங்குலம்) நீளமும், பெட்டைகளின் கொம்புகள் 51–69 சென்டிமீட்டர் (20–27 அங்குலம்) நீளமானதாக இருக்கும். கிடாய்கள் தங்கள் போட்டியாளர்களுடன் மோதுவதற்காக முட்டும்போது தங்கள் கொம்புகளைப் பயன்படுத்துகிறன. அதே நேரத்தில் பெட்டைகள் தங்கள் குட்டிகளை வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாக்க தங்கள் கொம்புகளைப் பயன்படுத்துகிறன.[2]

எலாண்ட்கள் மெதுவாக ஓடக்கூடியவை. இவற்றின் உச்ச வேகம் மணிக்கு 40 கிமீ (25 மைல்) வேகம் ஓடும்போது விரைவாக சோர்வடைகிறது. இருப்பினும், இவற்றால் மணிக்கு 22 கிமீ (14 மைல்) வேகத்தில் தொடர்ந்து ஓட முடியும். எலண்ட்கள் அவை நிற்கும் இடத்திலிருந்து 2.5 மீ (8 அடி 2 அங்குலம்) நீளம் வரை தாண்டி குதிக்கும் திறன் கொண்டவை. இளம் எலண்ட்கள் 3 மீ (9.8 அடி) வரை தாவும்.[2] பொதுவாக எலண்ட்களின் ஆயுட்காலம் பொதுவாக 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். விலங்குகாட்சி சாலை போன்ற பகுதிகளில் வளர்க்கப்படும் சில எலண்ட்கள் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.[2]

எலண்ட்கள் நடக்கும்போது கால்களில் இருந்து ஒலி உண்டாகிறது. இதற்கு காரணம் விலங்கின் எடை மற்றும் இதன் குளம்பின் இரண்டு பகுதிகளுக்கு இடையில் உள்ள பிளவாக இருக்கக் கூடும். ஒலி ஒரு மந்தையிலிருந்து சிறிது தூரம் செல்கிறது. இது தகவல்தொடர்பு வடிவமாக இருக்கலாம்.[6]

வகைபிரித்தல்

தொகு

எலாண்ட் முதன்முதலில் 1766 ஆம் ஆண்டில் ஜெர்மன் விலங்கியலாளரும், தாவரவியலாளருமான பீட்டர் சைமன் பல்லாசால் விவரிக்கப்பட்டது. இது இரட்டைப்படைக் குளம்பி வரிசை, மாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் போவினே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது.[7]

துணை இனங்கள்

தொகு

எலாண்டுகளில் மூன்று கிளையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றின் ஏற்பு தன்மை சர்ச்சைக்குரியதாக உள்ளது.[2][5]

  • டி.ஓ. ஓரிக்ஸ் ( பல்லாஸ், 1766; கேப் எலண்ட்): அல்சஸ், பார்பாட்டஸ், கன்னா மற்றும் ஓரியாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது தெற்கு மற்றும் தென்மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. உரோமங்கள் பழுப்பு நிறமாகவும், வளர்ந்தவை தங்கள் உடல் கோடுகளை இழக்கின்றன.
  • டி.ஓ. லிவிங்ஸ்டோனி ( ஸ்க்லேட்டர், 1864; லிவிங்ஸ்டோனின் எலண்ட்): காஃப்மன்னி, நீடிக்கி, செலோசி, ட்ரையாங்குலாரிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய ஜாம்பேசியன் மியோம்போ காடுகளில் காணப்படுகிறது. லிவிங்ஸ்டோனின் எலாண்ட் உடலில் 12 கோடுகள் வரை பழுப்பு நிற உரோமங்களைக் கொண்டுள்ளது.
  • டி.ஓ. பேட்டர்சோனியனஸ் ( லிடெக்கர், 1906; கிழக்கு ஆப்பிரிக்க எலாண்ட் அல்லது பேட்டர்சன்ஸ் எலண்ட்): பில்லிங்கே என்றும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இதன் உரோமங்களும் 12 கோடுகள் வரை கொண்டதாக இருக்கும்.

வாழ்விடம் மற்றும் பரவல்

தொகு
 
தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையில் உள்ள எலண்ட்கள்

எலாண்ட்கள் தென்னாப்பிரிக்காவின் திறந்த சமவெளிகளிலும், பெருந் தென்னாப்பிரிக்க பீடபூமியின் அடிவாரத்திலும் வாழ்கின்றன. இந்த இனம் வடக்கே எத்தியோப்பியா மற்றும் தெற்கு சூடானின் பெரும்பாலான வறண்ட மண்டலங்களிலும், மேற்கில் கிழக்கு அங்கோலா மற்றும் நமீபியாவிலும், தெற்கே தென்னாப்பிரிக்கா வரை பரவியுள்ளன. வேட்டையாடுதல் மற்றும் மனித குடியேற்றம் காரணமாக ஆப்பிரிக்காவில் எலாண்ட்களின் அடர்த்தி குறைந்து உள்ளது.

இவை புதர்களைக் கொண்ட அரை வறண்ட பகுதிகளில் வாழ விரும்புகின்றன. மேலும் பெரும்பாலும் புல்வெளிகள், வனப்பகுதிகள், துணை பாலைவனங்கள், புதர்கள் உள்ள பகுதிகளிலும் மலைகளில் சுமார் 15,000 அடி (4,600 மீ) உயரத்தில் வசிக்கின்றன.[8] எலட்கள் காடுகள், சதுப்பு நிலங்கள், பாலைவனங்கள் போன்ற இடங்களைத் தவிர்க்கின்றன. எலண்ட்கள் வசிக்கும் இடங்களில் பொதுவாக அகாசியா, கொம்ப்ரேட்டம், கமிபோரா, பனிச்சை மரம், பனிபிடுங்கி, ரஸ் ஜிசிபஸ் போன்ற மரங்கள் மற்றும் புதர்கள் உள்ளன; இவற்றில் சில அவற்றின் உணவாகவும் பயன்படுகின்றன.

இவை நைரோபி தேசிய பூங்கா, சாவோ கிழக்கு தேசிய பூங்கா, சாவோ மேற்கு தேசிய பூங்கா, மசாய் மாரா தேசிய பூங்கா, (கென்யா), செரெங்கெட்டி தேசியப் பூங்கா, ருவாஹா தேசிய பூங்கா, தரங்கிரே தேசிய பூங்கா, இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி, (தான்சானியா); ககேரா தேசிய பூங்கா (ருவாண்டா); நைக்கா தேசிய பூங்கா (மலாவி); ஏரி புரோ தேசிய பூங்கா (உகாண்டா); கிடெபோ பள்ளத்தாக்கு தேசிய பூங்கா (உகாண்டா); லுவாங்வா பள்ளத்தாக்கு மற்றும் காஃப்யூ தேசிய பூங்கா (சாம்பியா); ஹ்வாங்கே தேசிய பூங்கா, மாடோபோ தேசிய பூங்கா, துலி சஃபாரி பகுதி, சிமானிமணி எலண்ட் சரணாலயம் (ஜிம்பாப்வே); குருகர் தேசியப் பூங்கா, குகலகாடி டிரான்ஸ்ஃபிரண்டியர் பூங்கா, ஜெயண்ட்ஸ் கோட்டையகம் சுய்கர்போஸ்ராண்ட் என்ஆர் (தென்னாப்பிரிக்கா) உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களில் காணப்படுகின்றன.[9]

சூழலியல் மற்றும் நடத்தை

தொகு
 
மந்தைகளாக ஓய்வெடுக்கும் எலாண்ட்கள்

ஏலாண்ட்கள் உணவுக்காக நாடோடிக் கூட்டமாக இடம்விட்டு இடம் பெயற்பவை. இவை காலையிலும் மாலையிலும் மேய்கின்றன. வெப்பம் மிகுந்து இருக்கும்போது எங்காவது நிழலில் ஓய்வெடுக்கின்றன. குளிரான சமயத்தில் சூரிய ஒளியில் வெயில் காய்கின்றன. இந்த மந்தைகளில் பொதுவாக 500 வரையிலான மான்கள் காணப்படுகின்றன. தனிப்பட்ட மான்கள் பல மணிநேரங்கள் முதல் பல மாதங்கள் வரை மந்தையோடு இருக்கும். குட்டிகளும், தாய்மார்களும் சேர்ந்து பெரிய மந்தைகளாக உருவாகின்றன. அதே நேரத்தில் கிடாய்கள் சிறிய குழுக்களாக பிரிந்து செல்கின்றன அல்லது தனித்தனியாக அலைகின்றன. சினைப்பருவச் சுழற்சியின் போது, முதன்மையாக மழைக்காலத்தில், புதிய குழுக்கள் உருவாகின்றன.[2] தென்னாப்பிரிக்காவில், எலாண்ட்கள் பெரும்பாலும் வரிக்குதிரைகள், ரோன் ஆண்டிலோப்கள், ஆப்பிரிக்க மறிமான்கள் போன்ற மந்தைகளுடன் தொடர்பு கொண்டவையாக வாழ்கின்றன.

எலாண்ட்கள் சைகைகள், குரல், மோப்பம், காட்சி நடத்தை மூலம் தொடர்பு கொள்கின்றன. பெட்டைகளின் சிறுநீர் அல்லது பிறப்புறுப்புகளில் வரும் வாசனை மூலம் கிடாக்கள் இனச்சேர்க்கைக்கான எதிர்வினையைப் பெறுகின்றன. பெட்டைகள் தங்கள் சினைப்பருவச் சுழற்சியின்போது பொருத்தமான கட்டத்தில் கருவுறுதலைக் குறிக்க சிறுநீர் கழிக்கின்றன.[2] கிடாக்கள் வேட்டையாடிகள் ஏதையவதை அருகில் கண்டால், எச்சரிக்கை ஓலி எழுப்பி மந்தையானது ஆபத்தை உணரும் வரை முன்னும் பின்னுமாக நகர்ந்து அவற்றின் கவனத்தை ஈர்த்து எச்சரிக்கின்றன. இவற்றை முதன்மையாக வேட்டையாடுபவைகளாக சிங்கங்கள், ஆப்பிரிக்க காட்டு நாய்கள், சிவிங்கிப்புலிகள் புள்ளிக் கழுதைப்புலிகள் ஆகியவை உள்ளன. வளர்ந்த எலாண்ட்களைவிட குட்டிகளே வேட்டையாடிகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.[2]

உணவுமுறை

தொகு
 
எலண்ட்களி்ன் முதன்மையான மேய்ச்சல் நிலங்கள்.

எலாண்ட்களானவை தாவர உண்ணிகள் ஆகும். இவை வறண்ட குளிர்காலத்தில் உலவுகின்றன. ஆனால் மழைக்காலத்தில்தான் புற்கள் சத்தானதாகவும் மேய்ச்சலுக்கு ஏற்றவாறும் இருக்கும்.[2] பூக்கும் தாவரங்களிலிருந்து சதைப்பற்றுள்ள இலைகளின் புரதம் மிக்க உணவு இவற்றிற்குத் தேவைப்படுகிறது. ஆனால் ஃபோர்ப்ஸ், மரங்கள், புதர்கள், புற்கள், விதைகள், கிழங்குகள் உள்ளிட்ட குறைந்த தரம்வாய்த தாவரப் பொருட்களையும் உட்கொள்கின்றன.[2][8][10]

நாள்தோறும் நீர் அருந்தவேண்டும் என்ற கட்டாமய் இவற்றிற்கு இல்லை. நீர்பசையுள்ள இலைகளைத் தின்றே உடலுக்குத் தேவையான நீரைப் பெற்றுவிடுகின்றன. ஆனாலும் கிடைக்கும் போது தண்ணீர் அருந்துவது உண்டு.[2] பருவகால மாற்றங்கள் மற்றும் பிற காரணங்களால் இவை விரைவாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்கின்றன. எட்டுவதற்கு கடினமாக இருக்கும் கிளைகளை உடைப்பதற்கு தங்கள் கொம்புகளைப் பயன்படுத்துகிறன.

சமூகத்தன்மை மற்றும் இனப்பெருக்கம்

தொகு
 
நோஸ்லி சபாரி பூங்காவில், இரண்டு ஆண் எலேண்ட்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சண்டையிடுகிறன.

பெட்டைகள் 15 முதல் 36 மாதங்களிலும், கிடாய்கள் 4 முதல் 5 வயது வரையிலும் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. பாலியல் முதிர்ச்சி அடைந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் இனச்சேர்க்கையில் ஈடுபடக்கூடும். ஆனால் பெரும்பாலும் மழைக்காலத்தில்தான் இனச்சேர்கையில் ஈடுபடுகின்றன. ஜாம்பியாவில், சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் குட்டிகள் பிறக்கின்றன. மற்ற இடங்களில் இது இனச்சேர்க்கை காலமாக உள்ளது.[8] எலாண்ட்கள் செழிப்பான, பசுமையான சமவெளிகளை மேய சென்றடையும் போது புணர்ச்சி தொடங்குகிறது. அப்போது சில கிடாய்களும் பெட்டைகளும் தனித்தனி இணைகளாக ஒன்றுக்கொன்று இனச்சேர்க்கையில் ஈடுபடத் தொடங்குகிறன. பெட்டைகள் சினைப்பருவச் சுழற்சியில் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய கிடாக்கள் அவற்றைப் பின் தொடர்கின்றன. பெட்டையின் சிறுநீரை மோப்பம் பிடிக்கின்றன. பொதுவாக, ஒரு பெட்டையானது இனச்சேர்க்கைக்கு தனக்குப் பொருத்தமான கிடாயைத் தேர்ந்தெடுக்கும். சில நேரங்களில், பெட்டை தன்னிடம் இனச்சேர்க்கைக்கு முயற்சிக்கும் கிடாய்களிடம் இருந்து விலகி ஓடிவிடுகிறது. இதனால் கிடாய்களுக்கு இடையில் மிகுதியான போட்டி ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக கிடாய்களுக்கு இடையே சண்டைகள் ஏற்படுகின்றன. இதில் அவை தங்கள் கடினமான கொம்புகளைப் பயன்படுத்தி சண்டையிடுகின்றன. ஒரு பெட்டை இரண்டு முதல் நான்கு மணி நேரம் கழித்து ஒரு கிடாயை உறவுகொள்ள அனுமதிக்கிறது. இனச்சேர்க்கை காலத்தில் கிடாய்கள் பொதுவாக பெட்டைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்.[10] ஆதிக்கம் செலுத்தும் கிடாய் ஒன்றுக்கு மேற்பட்ட பெட்டைகளுடன் கலவியில் ஈடுபட முடியும்.[8] பெட்டைகளின் சினை காலம் ஒன்பது மாதங்களாகும். ஒருமுறைக்கும் ஒரு குட்டி மட்டுமே பிறக்கும்.[11]

கிடாய்கள், பெட்டைகள், இளம் கன்றுகள் ஒவ்வொன்றும் தனித்தனி சமூகக் குழுக்களாக இருக்கின்றன. ஆண் குழுக்கள் மிகச் சிறியவை; மந்தைகள் ஒன்றாக சேர்ந்து உணவு அல்லது நீர் ஆதாரங்களை தேடுகின்றன. பெண் குழு மிகவும் பெரியது பெரிய பரப்பளவைக் கொண்டது.[8] இவை ஈரமான காலங்களில் புல்வெளியில் பயணம் செய்கிறன. வறண்ட காலங்களில் புதர் நிறைந்த பகுதிகளை விரும்புகின்றன. குன்றுகள் குழு இயற்கையாகவே பெட்டைகள் குட்டிகளை ஈனும் போது உருவாகிறது. பிரசவம் முடிந்து சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகு, தாயும் கன்றும் இந்தக் குழுவில் இணைகின்றன. கன்றுகள் ஒருவருக்கொருவர் நட்பாக இருக்கத் தொடங்குகி, ஒரே குழுவாக இருக்கின்றன. அதே நேரத்தில் தாய் பெட்டைகளின் குழுவிற்குத் திரும்புகிறது. கன்றுகள் குறைந்தது இரண்டு வயது இருக்கும் போது குட்டிகள் குழுவை விட்டு வெளியேறி ஆண் அல்லது பெண் குழுக்களில் இணைகின்றன.[11]

குறிப்புகள்

தொகு
  1. IUCN SSC Antelope Specialist Group (2008). "Tragelaphus oryx". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/22055/0. பார்த்த நாள்: 21 November 2011. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 Pappas, LA; Elaine Anderson; Lui Marnelli; Virginia Hayssen (5 July 2002). "Taurotragus oryx". Mammalian Species 689: 1–5. doi:10.1644/1545-1410(2002)689<0001:TO>2.0.CO;2. http://www.science.smith.edu/msi/pdf/689_Taurotragus_oryx.pdf. 
  3. Harper, Douglas. "Tragos". Online Etymology Dictionary.
  4. Harper, Douglas. "Oryx". Online Etymology Dictionary.
  5. 5.0 5.1 Harris, H (April 30, 2010). "Husbandry Guidelines For The Common Eland" (PDF). Archived from the original (PDF) on April 17, 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
  6. 6.0 6.1 "Animal Bytes – Common Eland". Seaworld.org. Archived from the original on 2012-06-19. பார்க்கப்பட்ட நாள் 2012-04-08.
  7. "Common eland: Taxonomy". Museumstuff.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2011.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 "Taurotragus Oryx:Information". University of Michigan Museum of Zoology. Animal Diversity Web.
  9. "Wild Animals of Africa-Common eland". Wackywildlifewonders.com. Archived from the original on 6 January 2011. பார்க்கப்பட்ட நாள் 5 January 2011.
  10. 10.0 10.1 "The Living Africa: Wildlife – Bovid Family – Common Eland". Library.thinkquest.org. Archived from the original on 2012-02-17. பார்க்கப்பட்ட நாள் 2012-04-09.
  11. 11.0 11.1 "Taurotragus oryx (Common eland)-Ontogeny and Reproduction". Ultimateungulate.com. Archived from the original on 9 January 2011. பார்க்கப்பட்ட நாள் 5 January 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலண்ட்_மான்&oldid=3928216" இலிருந்து மீள்விக்கப்பட்டது