பெங்களூரின் வரலாறு

வரலாற்றின் அம்சம்

பெங்களூர் (Bangalore) கர்நாடக மாநிலத்தின் தலைநகரமாகும். பெங்களூர், ஒரு நகரமாக, 1537-இல் அந்த இடத்தில் ஒரு மண் கோட்டையை கட்டிய கெம்பெ கவுடா என்பவரால் நிறுவப்பட்டது. ஆனால் பெங்களூர் என்ற ஒரு இடம் இருந்ததற்கான ஆரம்பகால ஆதாரம் சுமார் 890-க்கு முந்தையது.[1]

பேகூரில் உள்ள 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக் கல். இது "பெங்களூர்" என்ற பெயரை முதல் முறையாகக் குறிப்பிடுகிறது.

இடைக்கால காலம் தொகு

தற்போதைய பெங்களூரில் உள்ள மிகப் பழமையான கல்வெட்டு எப்பாள்-கிட்டய்யா கல்வெட்டு ஆகும். இது கர்நாடகாவிலிருந்த கங்க வம்சத்திற்கு முந்தையது. மேலும், சிறீபுருசனின் நிர்வாகத்தைக் குறிப்பிடுகிறது. ஆரம்பகால கன்னட எழுத்துக்களில் செதுக்கப்பட்ட இது, சிறீபுருசனின் ஆட்சியின் போது ஒரு போரில் தனது நிலத்தைக் காத்து வீரமரணம் அடைந்த கிட்டய்யாவுக்கு அஞ்சலி செலுத்துகிறது.[2] கங்கர்கள் கோலாரில் இருந்து கங்கவாடியை ஆட்சி செய்தனர். 350 பின்னர் அவர்களின் தலைநகரை தலக்காடுக்கு மாற்றினர்.[3]

 
பொ.ச.750 காலத்திய எப்பாள்-கிட்டய்யா கல்வெட்டுக் கல் பெங்களூர் எப்பாளில் கண்டுபிடிக்கப்பட்டது.

பெங்களூர் என்ற பெயரின் முதல் குறிப்பு, 'பெங்களூர்' வடிவத்தில் இருந்தாலும், பேகூரில் உள்ள கல்வெட்டு 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பண்டைய கன்னடத்தில் எழுதப்பட்ட அதில் 'பெங்களூர் கடனா' (பெங்களூர் போர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேகூர் அருகே கிடைத்த கல்வெட்டுக் கல், மாவட்டம் கங்கவாடியிலிருந்து கிபி 1024 வரை ஆட்சி செய்த கங்க இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்ததை வெளிப்படுத்துகிறது. மேலும் இது பழைய கன்னடத்தில் காவலர்களின் நகரம் எனப்பொருள்ப்டும் 'பெங்கா-வல்-ஓரு' என்று அறியப்பட்டது.[4]

எட்கர் தர்ஸ்டன் (இந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர் தொகுதி 5) கொங்கு மண்டலம் தஞ்சை சோழர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு இருபத்தெட்டு மன்னர்களால் ஆளப்பட்டது என்று குறிப்பிடுகிறார். கொங்கு பதிவுகளின் முந்தைய பகுதியை மேற்கோள் காட்டி - கொங்கு தேச ராஜாக்கல் (ஒரு கையெழுத்துப் பிரதி) மக்கென்சி சேகரிப்பு ) இது கிறித்துவ சகாப்தத்தின் தொடக்கத்திலிருந்து சோழர்களால் கைப்பற்றப்பட்ட வரை நாட்டை ஆண்ட அனைத்து மன்னர்களின் ஆட்சிகளின் தொடர் சிறு அறிவிப்புகளை வழங்குகிறது. இந்த மன்னர்கள் இரண்டு தனித்துவமான வம்சங்களைச் சேர்ந்தவர்கள்: ரட்டி பழங்குடியினரின் ஏழு மன்னர்களின் வாரிசைக் கொண்டிருந்த சூரிய இனத்தின் முந்தைய வரிசையும், கங்க இனத்தின் பிற்கால வரிசையும் சூரிய இனத்தின் ஒரு கிளை என்று கூறப்பட்டது.

1024 இல், சோழப் பேரரசு நகரைக் கைப்பற்றியது. இன்று, இந்த காலகட்டத்திற்குரிய சிறிய சான்றுகள் காணப்படுகின்றன. தெற்கு பெங்களூரில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஒன்றும் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றும் சோழப் பெயரைக் கொண்டுள்ளது. ஆனால் குடியிருப்பாளர்கள் பூர்வீகக் குடிகளாக உள்ளனர். பிற்கால கங்கர்கள் பெரும்பாலும் சாளுக்கியர்கள், இராஷ்டிரகூடர்கள் மற்றும் போசளர்களுடன் இணைந்து போரிட்டனர். கிபி 1117 இல், போசள மன்னன் விட்டுணுவர்தனன் சோழர்களை தலக்காடு போரில் தோற்கடித்தார். இது தலக்காட்டின் கட்டுப்பாட்டை போசலர்கள் மீண்டும் கைப்பற்ற வழிவகுத்தது.

விஜயநகரமும் கெம்பே கவுடாவும் தொகு

நவீன பெங்களூர், விஜயநகரப் பேரரசின் நிலப்பிரபுவாக இருந்த கெம்பே கவுடாவால் நிறுவப்பட்டது. அவர் 1537 ஆம் ஆண்டில் ஒரு மண் கோட்டையைக் கட்டினார். கெம்பே கவுடா புதிய நகரத்தை தனது "கந்து பூமி" அல்லது "வீரர்களின் நிலம்" என்றும் குறிப்பிட்டார்.[5] பெங்களூருக்குள், நகரம் பேட்டை அல்லது சந்தைகளாக பிரிக்கப்பட்டது. நகரம் இரண்டு முக்கிய தெருக்களைக் கொண்டிருந்தது: சிக்கப்பேட்டை தெரு கிழக்கு-மேற்கு மற்றும் தொட்டபேட்டை தெரு வடக்கு-தெற்காக ஓடியது. இதன் சந்திப்பு தொட்டபேட்டை சதுக்கத்தை உருவாக்கியது [6] இது பெங்களூரின் மையப் பகுதியாக இருந்தது. கெம்பே கவுடாவின் வாரிசான இரண்டாம் கெம்பே கவுடா, பெங்களூரின் எல்லையைக் குறிக்கும் வகையில் கோயில்கள், கெம்பாபுரா மற்றும் கரஞ்சிகெரே உள்ளிட்ட இடங்களில் குளங்கள் மற்றும் நான்கு கண்காணிப்பு கோபுரங்களைக் கட்டினார்.[7] இங்குள்ள இரங்கநாதர் கோயிலில் கிபி 1628 ஆம் ஆண்டு கல்வெட்டு தெலுங்கில் உள்ளது.

பெங்களூரில் அந்தக் காலத்தில் கட்டப்பட்ட நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் இன்றும் பின்வரும் இடங்களில் காணப்படுகின்றன :

பிஜப்பூர் சுல்தான் தொகு

1638 இல் பீஜப்பூரின் அதில் சாகி சுல்தான்களுக்காகப் பணிபுரிந்த சிவாஜியின் தந்தையான மராட்டியத் தலைவரான சாகாஜி போஸ்லே என்பவரால் இது கைப்பற்றப்பட்டது. பெங்களூர் முற்றுகையின் போது, சிவாஜியின் மூத்த சகோதரர் சாம்பாஜி/சம்புஜி முதோல் மாநிலத்தின் பொறுப்பாளர்களால் கொல்லப்பட்டார் [9], அதற்காக சிவாஜி பின்னர் பழிவாங்க வேண்டியிருந்தது. 

முகலாய செல்வாக்கு தொகு

பிஜப்பூர் சுல்தானகத்தை கைப்பற்றிய பிறகு, காசிம் கானின் தலைமையில் முகலாயர்கள், சிவாஜியின் சகோதரர் வெங்கோஜி/எகோஜி போன்சலே ஆட்சி செய்த பெங்களூருக்கு வந்தனர். முகலாயர்களிடம் தனது நிலங்களை இழக்கும் வாய்ப்பை எதிர்கொண்ட ஏகோஜி, 1689ல் பெங்களூரை சிக்க தேவராச உடையார் என்பவருக்கு மூன்று லட்சத்திற்கு விற்க முன்வந்தார்.[10] பின்னர், பெங்களூர் 1759-ஆம் ஆண்டில் அப்போதைய உடையார் மன்னர் இரண்டாம் கிருட்டிணராச உடையாரால் அவரது தளவாய் ஐதர் அலிக்கு தனிப்பட்ட சாகிராக வழங்கப்பட்டது. ஆனால் 1761 வாக்கில், ஐதர் அலி ஒரு நடைமுறை ஆட்சியாளராகி, சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரி (ஆட்சிப் பிரதிநிதி) என்று அறிவித்துக் கொண்டார்.

ஐதர் அலியும் திப்பு சுல்தானும் தொகு

1782-இல் ஐதர் அலி இறந்தபோது, அவரது மகன் திப்பு சுல்தான் பலவீனமான உடையாரை பதவி நீக்கம் செய்து, தன்னை சுல்தானாக அறிவித்துக் கொண்டார். திப்பு சுல்தான் மற்றும் ஐதர் அலியின் கீழ் மாநிலம் பொருளாதார ரீதியாக முன்னேறியது. மேலும், மங்களூர் துறைமுகங்கள் மூலம் பல வெளிநாடுகளுடன் வர்த்தகம் செழித்தது. பெங்களூரைக் கைப்பற்ற ஆங்கிலேயர்களின் பல முயற்சிகள் மைசூர் இராணுவத்தால் முறியடிக்கப்பட்டன. குறிப்பாக 1768-ஆம் ஆண்டில் ஐதர் அலி பிரித்தானிய இராணுவத்தின் கர்னல் நிக்கல்சனை பெங்களூர் முற்றுகையை நீக்கும்படி கட்டாயப்படுத்தினார். நெப்போலியனின் கீழ் பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து விரட்டுவதாக உறுதியளித்தனர். திப்பு முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்.

மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போரின் போது [11] மார்ச் 1791 அன்று இந்தியத் தலைமை ஆளுநர் காரன்வாலிஸ் தலைமையில் கிழக்கிந்திய நிறுவனப் படைகளால் பெங்களூர்க் கோட்டை கைப்பற்றப்பட்டது. நான்காவது ஆங்கிலேய-மைசூர் போரில் (1799) திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு பிரித்தானிய இந்தியப் பேரரசு கோட்டையைக் கைப்பற்றுவதிலும், இராணுவ துருப்புகள் மையங்கள் அமைப்பதிலும், நகரத்தின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தியது. இதில் சென்னை பொறியாளர்கள் குழுமம் முக்கிய பங்கு வகித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த இந்திய இராணுவப் படைப்பிரிவின் நிரந்தர இல்லமாக பெங்களூர் உள்ளது.

உடையார்களும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் தொகு

 
1887 இல் கட்டப்பட்ட பெங்களூர் அரண்மனை, மைசூர் ஆட்சியாளர்களின் இல்லமாக இருந்தது

திப்பு சுல்தானின் மறைவுக்குப் பிறகு, மைசூர் உடையார்கள் (பெங்களூர் அரண்மனை) சிம்மாசனத்திற்குத் திரும்பினர். ஆனால் அவர்கள் பிரமுகர்களாக மட்டுமே இருந்தனர். ஆகஸ்ட் 1947 இல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை பெங்களூர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

மைசூர் மாநிலத்தின் 'குடியிருப்பு' முதலில் 1799 இல் மைசூரில் நிறுவப்பட்டது. பின்னர் 1804 ஆம் ஆண்டில் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இது 1843 இல் ஒழிக்கப்பட்டது, 1881 இல் பெங்களூரில் புத்துயிர் பெறப்பட்டது. இறுதியாக 1947 இல் ஆங்கிலேயர்களின் வெளியேற்றத்துடன் மூடப்பட்டது.[12]

1799 இல் திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் முதன்முதலில் நிறுத்தப்பட்ட ஆங்கிலேயத் துருப்புக்கள் பின்னர் 1809 இல் பெங்களூர் பொது மற்றும் இராணுவ நிலையத்திற்கு மாற்றப்பட்டன.

 
மத்திய நூலகம்

1898 இன் பிளேக்-நெருக்கடி தொகு

பெங்களூர் நகரம் 1898-இல் [13] பிளேக் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டது. கொள்ளைநோய் ஒரு பெரிய எண்ணிக்கையில் பரவியது. இந்த நேரத்தில் மாரியம்மன் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பல கோயில்கள் கட்டப்பட்டன. இந்த தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடி பெங்களூருவின் முன்னேற்றம் மற்றும் சுகாதாரத்தை ஊக்குவித்தது. இதையொட்டி, சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் மூலம் பெங்களூருவை நவீனமயமாக்க உதவியது.

பிளேக் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி இணைப்புகள் அமைக்கப்பட்டன. முறையான சுகாதார வசதிகளுடன் புதிய வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. 1898-இல் ஒரு சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டார். சிறந்த ஒருங்கிணைப்புக்காக நகரம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. விக்டோரியா மருத்துவமனை 1900 -இல் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுரரான கர்சன் பிரபு அவர்களால் திறக்கப்பட்டது.

1900கள் தொகு

பெங்களூர் 1906 ஆம் ஆண்டில், சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் நிலையத்தால் வழங்கப்பட்ட மின்சாரம் பெற்ற ஆசியாவின் முதல் நகரமானது. ஆனாலும் 1898 ஆம் ஆண்டே கொல்கத்தாவில் அப்போதைய பெங்கால் வங்கிக்கு முதல் மின்சாரம் வழங்கப்பட்டதால், இந்த தகவல் சர்ச்சைக்குரியது.

பசவனகுடி (பசவண்ணா கோயில் அல்லது சுங்கேனஹள்ளி கிராமத்தில் உள்ள காளைக் கோயில் ) மற்றும் மல்லேசுவரம் (பழைய மல்லாபுரா கிராமத்தில் உள்ள காடு மல்லேசுவரர் கோயிலின் பெயரால் அழைக்கப்படுகிறது) ஆகியவை இந்த காலத்தில் உருவாக்கப்பட்டன. கலாசிபாளையம் (பழைய கோட்டைக்கு அருகில்) மற்றும் காந்திநகர் 1921-1931 க்கு இடையில் உருவாக்கப்பட்டன.

1927 ஆம் ஆண்டு நான்காம் கிருட்டிணராச உடையார் ஆட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டங்களுடன் பெங்களூரின் புகழ் இந்தியாவின் தோட்ட நகரமாகத் தொடங்கியது. நகரத்தை மேம்படுத்த பூங்காக்கள், பொது கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல திட்டங்கள் நிறுவப்பட்டன.[14] எனவே, தென்னிந்தியத்தைச் சுற்றியுள்ள தென்னிந்தியப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குப் பாரம்பரியமாக பெங்களூர் தங்கும் இடமாக விளங்கியது. இன்றும், நகர நிர்வாகம் பல பூங்காக்களை பராமரிக்கிறது. கப்பன் பூங்கா, லால் பாக் போன்றவை இரண்டு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்திய சுதந்திரம் (1947) தொகு

ஆகஸ்ட் 1947 இல் இந்திய சுதந்திரத்தின் பிறகு, பெங்களூர் மைசூர் மாநிலத்தில் இருந்தது. அதில் மைசூர் மகாராஜா "இராஜபிரமுகராக" இருந்தார்.[14]

 
விதான சௌதா

1956 இல் உருவாக்கப்பட்ட மற்றும் 1973 இல் கர்நாடகா என மறுபெயரிடப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் மொழிவாரி கன்னட மொழி பேசும் புதிய மைசூர் மாநிலத்தின் தலைநகராக பெங்களூர் தொடர்ந்தது.

குமார பூங்கா 1947 ஆம் ஆண்டிலும், ஜெயநகர் 1948 ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டது. 1960கள் மற்றும் 1970களில் பெங்களூர் அரண்மனையின் முன்னாள் தோட்டங்களில் ஒரு உயரடுக்கு சுற்றுப்புறம் உருவாக்கப்பட்டது. "அரண்மனை பழத்தோட்டங்கள்" என்று அறியப்படும் இது இப்போது சதாசிவநகர் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதி இப்போது பெங்களூர் சமூகத்தின் பல செல்வந்தர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தாயகமாக உள்ளது.

2011 இல் 8.5 மில்லியன் மக்கள்தொகையுடன்,[15] பெங்களூர் இப்போது இந்தியாவில் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகவும், உலகின் 28 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது.[16] 1991-2001 க்கு இடையில் புது தில்லிக்குப் பிறகு பெங்களூர் வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பெருநகரமாகும்.

பெங்களூரு தொகு

2005 ஆம் ஆண்டில், பெங்களூரை பெங்களூரு என்று பெயர் மாற்றும் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக கர்நாடக அரசு அறிவித்தது. 2006 ஆம் ஆண்டில், பெரிய பெங்களூர் மாநகரப் பேரவை (பிபிஎம்பி), நகராட்சி, முன்மொழியப்பட்ட பெயர் மாற்றத்தை செயல்படுத்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், இந்த செயல்முறை நிறுத்தப்பட்டது. 2014ல் பெங்களூரு என பெயரை மாற்ற மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.[17]

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. "Inscription reveals Bengaluru is over 1,000 years old". தி இந்து. 20 August 2004 இம் மூலத்தில் இருந்து 12 செப்டம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040912144705/http://www.hindu.com/2004/08/20/stories/2004082016400300.htm. 
  2. "Sister duo build fictional stories from inscription stones dating back to Karnataka's Ganga dynasty". தி எகனாமிக் டைம்ஸ். 30 April 2019. https://economictimes.indiatimes.com/magazines/panache/sister-duo-build-fictional-stories-from-inscription-stones-dating-back-to-karnatakas-ganga-dynasty/articleshow/69107619.cms. 
  3. "History of Bangalore".
  4. "1000-year-old inscription stone bears earliest reference to Bengaluru". Times of India. 2 December 2012. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/1000-year-old-inscription-stone-bears-earliest-reference-to-bengaluru/articleshow/17446311.cms. 
  5. "About Bangalore - History". Department of IT and Biotechnology, Government of Karnataka. Archived from the original on 19 September 2006.
  6. "The Making of Bengaluru". www.livehistoryindia.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-02-07. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  7. Vagale, Uday Kumar. "Public Space in Bengaluru: Present and Future Projections". Digital Libraries and Archives. 2006. Virginia Tech. 27 Apr. 2004.
  8. Vinoda, K. (1989-09-27). The Lalbagh - A History, By K. Vinoda. Department of history, Bangalore University. பக். 1. https://archive.org/details/TheLalbaghAHistoryByKVinoda. 
  9. "The Marathas: Shivaji's Ancestors". www.historyfiles.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  10. "How Bengaluru was bought for Rs 3 lakh 333 years ago | Deccan Herald -".
  11. Sandes, Lt Col E.W.C. (1933). The Military Engineer in India, Vol I. Chatham: The Institution of Royal Engineers. பக். 163–165. 
  12. https://web.archive.org/web/20120206190404/http://rajbhavan.kar.nic.in/history/fromresi-rajbhavan.htm
  13. Tennant, Warren S. D.; Tildesley, Mike J.; Spencer, Simon E. F.; Keeling, Matt J. (2020-06-10). "Climate drivers of plague epidemiology in British India, 1898–1949". Proceedings of the Royal Society B: Biological Sciences 287 (1928): 20200538. doi:10.1098/rspb.2020.0538. பப்மெட்:32517609. 
  14. 14.0 14.1 "ElectriCity". 10 April 2006. http://www.outlookindia.com/article.aspx?230851. 
  15. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Censusindia. The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
  16. "World: largest cities and towns and statistics of their population". World-Gazetter.com. Archived from the original on 17 December 2012. பார்க்கப்பட்ட நாள் 17 October 2007.
  17. Indian Express. "Bangalore is now Bengaluru". (149 KB).

குறிப்புகள் தொகு

  • Fazlul Hasan. 1970. Bengaluru Through the Centuries. Historical Publications.
  • Sundara Rao, B.N. 1985. Bengalurina Itihasa - A History of Bangalore in Kannada. Second reprint 2011, Ankita Pustaka, Bangalore.
  • Annaswamy, T.V. 2003. Bengaluru to Bangalore: urban history of Bangalore from the pre-historic period to the end of the 18th century. Vengadam Publications, Bangalore.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்களூரின்_வரலாறு&oldid=3742744" இலிருந்து மீள்விக்கப்பட்டது