சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு மற்றும் புதுவையின் தலைமை நீதிமன்றம்.
(மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சென்னை உயர் நீதிமன்றம் (உயர் அறமன்றம்), (Madras High Court) இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது. இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது.[1][2].

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்ற வளாகம்
நிறுவப்பட்டது15 ஆகத்து 1862; 162 ஆண்டுகள் முன்னர் (1862-08-15)
அமைவிடம்சென்னை, மதுரை, புதுச்சேரி
புவியியல் ஆள்கூற்று13°05′12.8″N 80°17′16.4″E / 13.086889°N 80.287889°E / 13.086889; 80.287889
குறிக்கோளுரைவாய்மையே வெல்லும்
நியமன முறைஇந்தியத் தலைமை நீதிபதி மற்றும் அந்தந்த மாநில ஆளுநர்களின் அறிவுரை, ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் ஆணை.
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்புச் சட்டம்
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு62 அகவை வரை
நீதியரசர் பதவிக்காலம்62 அகவை வரை
இருக்கைகள் எண்ணிக்கை75
(நிரந்தரமாக 56; கூடுதல். 19)
வலைத்தளம்Madras High Court
தலைமை நீதிபதி
தற்போதையக. இரா. சிறீராம்
பதவியில்27 செப்டம்பர் 2024

வரலாறு

தொகு

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரித்தானிய அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டது.[3] சென்னை உயர்நீதிமன்றம் சூன் 26, 1862, ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக (மற்றவை மும்பை, கொல்கத்தா), சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின்[4] அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது. இதன் நீதிபரிபாலனை தமிழ்நாடு மற்றும் புதுவையை (பாண்டிச்சேரி) உள்ளடக்கியது.

தொடக்கத்தில், 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்றுதான் அழைக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862- ஆகஸ்ட் 15-ம் நாள் முதல் 'மெட்ராஸ் ஹை கோர்ட்' என்ற பெயர் மாற்றம் பெற்றது. தற்போதைய சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்துக்கு முன் கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்) என்ற இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கிவந்தது. பிரித்தானிய நீதிபதி ஹாலி ஹார்மன் உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது.

1996 ஆம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபொழுது உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மதராசு உயர்நீதிமன்றம் (Madras High Court) என்றே வழங்கப்பட்டு வந்தது.[5] 2016 ஆம் ஆண்டு சூலை மாதம் மதராசு உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற நடுவண் அரசு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.[6]

இதனோடு சேர்ந்து அமைக்கப்பட்ட மூன்று உயர்நீதி மன்றங்களில் மற்ற இரண்டான மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றங்களாக, 1861 உயர்நீதிமன்ற சட்ட வரைவிற்கு முன்பு வரை செயல்பட்டுக்கொண்டிருந்தன.

கட்டுமான அமைப்பு

தொகு
 
உயர் நீதிமன்ற வாளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழனின் சிலை.

இதன் கட்டுமானம் இந்தோ-சார்சியனிக் முறையில் 1888-ம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892இல் என்றி இர்வின்[7] வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டி முடிக்கப்பட்டது. இதன் கட்டுமானம் செப்டம்பர் 22, 1914 இல் முதல் உலகப்போரின் துவக்கத்தின்போது செர்மனின் எசு எம் எசு எம்டன் போர்க்கப்பலின் தாக்குதலினால் சேதமடைந்தது. உயர் நீதிமன்றக் கட்டடத்தை அமைப்பதற்கு, அப்போது ஆன செலவு 13 லட்ச ரூபாய் ஆகும். உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும் (உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன், பெய்லி நீதிமன்றம்), இந்தியாவில் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.[3]

அழகாக வண்ணம் தீட்டப்பட்ட கட்டிடத்தின் கூரைகளும் வண்ணக் கண்ணாடிகள் பொதிந்த கதவுகளும் மிக்க கலைவண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில் மிக உயரமான மாடகோபுரத்தில் கலங்கரை விளக்கு செயல்பட்டு வந்தது. சரியான பராமரிப்பின்றியும், மெரினாக் கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கு அமைக்கப்பட்டதாலும், தற்போது இது செயல்படாது உள்ளது. இந்த நீதிமன்றத்தை 9.45 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு, 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய் செலவில் பணி முடிக்கப்பட்டது.[8]

 
உயர் நீதிமன்ற வளாகத்தின் சுற்றுப்புற காட்சி

புகழ்பெற்ற வழக்கறிஞர்கள்

தொகு

1870-க்கு முன் இதன் நீதிபரிபாலனையில் பிரித்தானியர் மட்டுமே வழக்கறிஞராக பங்குபெற முடியும் என்றிருந்த நிலை, பிரித்தானிய முடியாட்சியினரிடமிருந்து வழங்கப்பட்ட ஆணையினால், இந்திய வழக்குரைஞர்களும் பங்கு பெற முடியும் என்ற நிலையை அடைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிப் பின் நீதிபதியாக உயர்ந்த முத்துச்சாமி ஐயர் வழங்கிய நுட்பமான தீர்ப்புகள் நாடு கடந்தும் புகழ் பெற்றவை. அவருடைய தீர்ப்புகளை லண்டன் பிரிவியூ கவுன்சில் தொடர்ந்து கவனித்துப் பாராட்டி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் மற்ற மாநில உயர் நீதிமன்றங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த டி. பிரகாசம், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், சுதந்திர இந்தியாவில் செயல்பட்ட உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி போன்றவர்கள் வழக்கறிஞர்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய வழக்குகள் / குறிப்பிடத்தக்க வழக்குகள்

தொகு

தந்தை பெரியார் மீது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வழக்கு, நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக அண்ணாதுரை மீது தொடரப்பட்ட வழக்கு, தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் மீதான லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ஆகியவை இவ்வுயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சில முக்கிய வழக்குகளாகும்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி

தொகு

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவார். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40[9] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிமுறைமை புரிவர். தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின்படி, இதன் நீதி நிர்வாகங்களைச் செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

அரசுத் தலைமை வழக்குரைஞர்

தொகு

அரசுத் தலைமை வழக்குரைஞர்[10] (அட்வகேட் ஜென்ரல்) (அ) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப் பெற்றவராவார். இவர் தமிழக அரசு சார்பில் வாதாடுபவர் மற்றும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்குபவர். இவர் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்குரியத் தகுதிகளை உடையவர். தமிழகத்தின் தற்பொழுதய தலைமை வழக்குரைஞர் திரு ஏ. நவநீதகிருஷ்ணன்.[11] இவருக்கு துணை புரிகின்ற வகையில் இரு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள் செயல்படுகின்றனர்.

மதுரைக் கிளை

தொகு

சென்னை உயர் நீதிமன்றத்தின், மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர்நீதிமன்றக் கிளையாகும்.

துவக்கம்

தொகு

இக்கிளை உயர்நீதிமன்றம் சூலை 24, 2004 [12] முதல் அப்பொழுதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால்,[12] சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,[12] மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் ,[12] முன்னிலையில் துவக்கி வைக்கப் பெற்று இயங்கி வருகின்றது.

அமர்வு

தொகு

நீதியரசர் திரு.ஹேமன்த் லட்சுமண கோக்கலே[13] தலைமையின் கீழ் 54 நீதிபதிகள் (6 நடுவர்கள்) பணிபுரிகின்றனர். இவர்கள் உரிமை இயல் (சமூக நலன்- சிவில்) மற்றும் குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கின்றனர். இதன் கிளையான மதுரை அமர்வு 2004 முதல் செயல்படுகின்றது என்பது குறிப்படத்தக்கது. அமர்வில் முழு நீதிப்பீடம்(புல் பெஞ்ச்)(full bench,Full Court ) எனப்படுவது, ஒரு வழக்கை இரண்டு பேருக்கு மேற்பட்ட நீதிபதிகள் விசாரிப்பதைக் குறிக்கும்.[14]

  • உரிமையியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணையில்;[9]
    • மாவட்ட நீதிபதி
    • சார்பு நீதிபதி
    • மாவட்ட முன்சீப் ஆகியவர்கள் பங்காற்றுகின்றனர்.
  • குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைகள்;[9]
    • செசன்சு நீதிபதி
    • தலைமை நீதிமுறைமை நடுவர்
    • உதவி செசன்சு நீதிபதி
    • நீதிமுறைமை நடுவர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.

சார்நிலை நீதிமன்றங்கள்

தொகு

இந்தியாவின் மாநிலமான தமிழக மாவட்டங்களின் நீதிமன்றங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இவை இரண்டு அமர்வுகளாகப் பிரிந்து செயல்படுகின்றன. ஒன்று முதன்மை அமர்வின் கீழ் மற்றொன்று மதுரைக் கிளை அமர்வின் கீழ் செயல்படுகின்றன. இவை மாவட்ட நீதிமன்றங்கள் அ சார்பு நிலை நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தமிழகத்தின் இரண்டு அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்ற மாவட்டங்கள் அட்டவணையில் உள்ளபடி அமைந்துள்ளது. இதில் புதுவைப்பிரதேச நீதிமன்றங்களும் அடங்கும்.

சென்னை சட்டக்குறிப்பு

தொகு

இந்தியாவின் சட்ட நிகழ்வுகளை, மற்றும் தகவல்களை வெளியிடும் சென்னை சட்டக்குறிப்பு [16] உதயமான இடம் சென்னை உயர்நீதிமன்றம். இது தான் முதன் முதலில் தோன்றிய உயர் நீதிமன்ற சட்டக்குறிப்பு ஆகும். துவங்கிய ஆண்டு 1891.

சென்னை சட்டக்குறிப்பு துவங்கியதின் வரலாற்றை உற்று நோக்கும் பொழுது பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன, முறைப்படி இயங்காத சங்கமாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் 11 மணியளவில் வக்கீல் பார் எனப்படும் சங்கத்தில் மயிலாப்பூரில் மூத்த வழக்குரைஞரான, ஸ்ரீ எஸ் சுப்ரமணிய ஐயர் தலைமையில் இதர மூத்த உறுப்பினர்களுடன் கூடும் அளவில் 1888இல் துவங்கப்பட்டது. அதில் ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை சட்டக்குறிப்பு சஞ்சீகை என்ற ஒன்றை சட்ட காலாண்டு மதிப்பாய்வாகத் துவங்க இங்கிலாந்து, சர் பிரட்ரிக் பொல்லாக் கினால் 1885இல் துவங்கப்பட்டது, 1887இல் இது ஆர்வர்டு சட்ட பள்ளி அமைப்பால் விரிவடைந்தது.

ஆரம்பித்தநாள் முதல் இன்று வரை இது பலருக்கும் பயன்தரும் வகையில் பலரும் சட்டக்குறிப்புகளை அறிய, அகத்தூண்டுதலை உருவாக்க, குறிப்பாக மாணவர்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றது.

சமீபத்திய நிகழ்வுகள்

தொகு

தமிழகத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரவர்க்கம் நீதி தவறும் நேரங்களில், தன்னுடைய தீர்ப்புகளின் மூலம் சாதாரண மக்களுக்கு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தனியார் பள்ளிக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பது, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது, அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றத்துக்குத் தடை விதித்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தாமிரபரணி ஆற்றைக் காக்கத் தொடர்ந்த வழக்கில், தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்தது போன்றவை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதி முறைமைக்குச் சான்றுகளாகும்.

விடுமுறை நாட்களிலும் குடும்ப நல நீதிமன்றங்களை நடத்துவது, மிகவும் சிக்கலான சிவில் வழக்குகளில் இரண்டு தரப்புக்கும் இடையே கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த சமரச மையங்களை அமைத்து இருப்பது போன்றவை இந்தியாவுக்கே சென்னை உயர் நீதிமன்றம் காட்டிய வழிமுறைகள் ஆகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பெப்ரவரி 19,2009 [17] அன்று நீதிமன்றத்திற்குள்ளே வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் ஒருவரையொருவர்த் தாக்கிக் கொண்டனர். உயர் நீநிமன்றத்தில் உள்ள காவல் நிலையமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இவ்வன்முறையால் நீதிபதிகள் தாக்கப்பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன.

செப்டம்பர் 8, 2012 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் தலைவர்கள் முன்னிலையில் கோலகலமாக நடந்தது. விழாவில் 150வது ஆண்டு விழா நினைவு கல்வெட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.[18]

பாதுகாப்பு

தொகு

சென்னை உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறையே இதுவரை கவனித்து வந்தது. இந்தக் காவல் போதாது, மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வேண்டும் என்று நீதிபதிகள் உச்ச நீதி மன்றத்திற்குப் பரிந்துரை செய்தார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[19]

பெயர் மாற்றம்

தொகு

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை தமிழ்நாடு மதுரைக் கிளை என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என 2016 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 1 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டது.[20]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Madras High Court". BSNL. Archived from the original on 30 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "High Court Building". CHENNAI-DIRECTORY.COM. Archived from the original on 5 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 http://en.vikatan.com/article.php?aid=23203&sid=642&mid=31#cmt241%7C விகடன்.காம்
  4. "சென்னை உயர் நீதிமன்றம்-அறிமுகம்". Archived from the original on 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.
  5. "High Court of Judicature at Madras". சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல்முறை வலைத்தளம். Archived from the original on 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "மெட்ராஸ் ஐகோர்ட்டு சென்னை ஐகோர்ட்டு என பெயர் மாற்றம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2016.
  7. "நினைவலைகள் நியூ இன்ட் பிரஸ் கட்டுரை". Archived from the original on 2006-11-26. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.
  8. ந.வினோத் குமார் (23 செப்டம்பர் 2017). "நீதியின் 'கோயில்'!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  9. 9.0 9.1 9.2 சென்னை உயர்நீதிமன்ற வரலாறு- உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2014-03-11 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009
  10. [1]
  11. தமிழக அரசு இணையம்- அரசுத் தலைமை வழக்கரைஞர் தொலைபேசி குறிப்பேடு
  12. 12.0 12.1 12.2 12.3 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு-உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-08-23 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009
  13. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் அரசு இணையம் பரணிடப்பட்டது 2018-12-26 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009
  14. பயன்படுத்தப்படாத காரணத்தால் குளம், குட்டை, ஏரியை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் தி இந்து தமிழ் 04 நவம்பர் 2015
  15. "தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.
  16. சென்னை சட்டக்குறிப்பு இணையம்
  17. "தினமலர்- உயர்நீதிமன்ற மோதல்". தினமலர் (20/02/2009). 2009-02-20. http://www.dinamalar.com/fpnnews.asp?news_id=3050&ncat=&archive=1&showfrom=2/20/2009. பார்த்த நாள்: 2009-03-04. 
  18. "சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா கோலாகலம்". New India News.com. செப்டம்பர் 9, 2012. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 9, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  19. நீதிமன்றப் பாதுகாப்பு குறித்து தமிழக அரசின் மனு தள்ளுபடி: கருணாநிதி கருத்து தி இந்து தமிழ் 04 நவம்பர் 2015
  20. "சென்னை உயர்நீதிமன்ற பெயரை மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்". தினகரன். 1 August 2016. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=235408. பார்த்த நாள்: 1 Aug 2016. 

வெளி இணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_உயர்_நீதிமன்றம்&oldid=4151373" இலிருந்து மீள்விக்கப்பட்டது