மகாபாரதம்

இந்து மதத்தின் மிகப்பெரிய காவியம்
(மகா பாரதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகாபாரதம் (Mahabharata) பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமசுகிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசமாகவும் இதுவரை இயற்றப்பட்ட செய்யுட்களிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகிறது.[1][2] இதன் முழு அளவில் 100,000-க்கும் மேற்பட்ட சுலோகங்களும் (ஒவ்வொரு சுலோகங்களும் இரு வரிகள் கொண்டவையாக) 200,000-க்கும் மேற்பட்ட வரிகளும் உள்ளன. இது இலியட், ஒடிசி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.

நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.

இதனைத் தமிழில் "வில்லிபாரதம்" என்ற இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராசகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.[3]

தோற்றம்

தொகு

இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (பொ.ஊ.மு. 5ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பொ.ஊ. நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பருவம் கூறுகிறது இது செயம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.

இவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.

"மகாபாரதம்" என்னும் நூல் தலைப்பு, "பரத வம்சத்தின் பெருங்கதை" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே "பாரதம்" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது "மகாபாரதம்" என அழைக்கப்பட்டது.

உள்ளடக்கப் பரப்பு

தொகு

இது, குருச்சேத்திரப் போர் எனப்படும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்திய கதையாக இருந்தபோதிலும், இதில், பிரம்மம், ஆன்மா என்பன தொடர்பானமெய்யியல் உள்ளடக்கங்களும் பெருமளவில் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் நால்வகை நோக்கங்கள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம்.

மகாபாரதம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன் முதலாம் பர்வம், "இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படா" என்கிறது. இவ்விதிகாசத்தினுள் அடங்கியுள்ள முக்கிய ஆக்கங்களும் கதைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன.

வரலாறும் அமைப்பும்

தொகு
 
சூத புராணிகரான உக்கிரசிரவசு என்பவர் மகாபாரத இதிகாசத்தை, நைமிசாரண்ய முனிவர்களுக்கு எடுத்துரைத்தல்

இவ்விதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உக்கிரசிரவசு என்பவரால் நைமிசாரண்யம் எனும் காட்டில் வாழும் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.

மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கிமு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கிமு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.

வியாச பாரதத்தின் அமைப்பு

தொகு

மொத்தம் 18 பெரும் பருவங்கள் கொண்ட வியாச பாரதம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. ஆத்ய பஞ்சகம்: ஆதி, சபா, ஆர்ண்ய, விராட மற்றும் உத்யோக ஆகிய 5 பர்வங்கள்
  2. யுத்த பஞ்சகம்: பீசும, துரோண, கர்ண, சல்ய மற்றும் செளப்திக ஆகிய போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்
  3. சாந்தி த்ரையம்: சுதிரீ, சாந்தி மற்றும் அனுசாசன் ஆகிய அமைதி திரும்பியதை விவரிக்கும் 3 பர்வங்கள்
  4. அந்த்ய பஞ்சகம்: அசுவமேதிக, ஆச்ரமவாஸிக, மெளசல, மகாப்ரசுதானிக மற்றும் சுவர்க்காரோகண ஆகிய இறுதி நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்

18 பர்வங்கள்

தொகு

மகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு:

  1. ஆதி பருவம்: 19 துணைப் பருவங்களைக் (1-19) கொண்டது. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பருவத்தில் எடுத்தாளப்படுகின்றன.
  2. சபா பருவம்: 20 – 28 வரையான 9 துணைப் பருவங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராசசூய யாகம் செய்தல் என்பன இப் பருவத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பருவத்தில் அடங்குகின்றன.
  3. ஆரண்யக பருவம்: 29 – 44 வரையான 16 துணைப் பருவங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்க்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
  4. விராட பருவம்: 45 – 48 வரையான 4 துணைப் பருவங்களைக் கொண்ட இப் பருவம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
  5. உத்யோக பருவம்: 49 – 59 வரையான 11 துணைப் பருவங்களைக் கொண்டது இது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.
  6. பீசும பருவம்: இது 60 – 64 வரையான 5 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. இப்பருவத்தில் தான் பகவத் கீதை கிருட்டிணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. பீசுமர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.
  7. துரோண பருவம்: 65 – 72 வரையான 8 துணைப் பர்வங்களில், துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.
  8. கர்ண பருவம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.
  9. சல்லிய பருவம்: 74 – 77 வரையான 4 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரசுவதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான்.
  10. சௌப்திக பருவம்: 78 – 80 வரையான 3 துணைப் பர்வங்களை இது அடக்குகிறது. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.
  11. சுதிரீ பருவம்: 81 – 85 வரையான 5 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.
  12. சாந்தி பருவம்: 86 – 88 வரையான மூன்று துணைப் பர்வங்களை அடக்கியது இப் பர்வம். அத்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீசுமர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
  13. அனுசாசன பருவம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீசுமரின் இறுதி அறிவுரைகள்.
  14. அசுவமேத பருவம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
  15. ஆசிரமவாசிக பருவம்: 93 – 95 வரையான 3 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. திருதராட்டிரன், காந்தாரி, குந்திமற்றும் விதுரன் ஆகியோர் இமயமலையில் வனப்பிரசுதம் ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.
  16. மௌசல பருவம்: 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது.
  17. மகாபிரசுதானிக பருவம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடு முழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்த்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.
  18. சுவர்க்க ஆரோகன பருவம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.

99, 100 ஆகிய துணைப் பருவங்களை உள்ளடக்கிய அரிவம்ச பருவம் எனப்படும் பருவம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.

வரலாற்றுச் சூழல்

தொகு

வரலாற்று நோக்கில் குருச்சேத்திரப் போர் பற்றித் தெளிவு இல்லை. இப்படி ஒரு போர் நிகழ்ந்திருப்பின் அது பொ.ஊ.மு. 10 ஆம் நூற்றாண்டளவில் இரும்புக் காலத்தில் நடைபெற்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பொ.ஊ.மு. 1200–800 காலப்பகுதியில், குரு இராச்சியம் அரசியல் அதிகார மையமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இடம்பெற்ற வம்சம் சார்ந்த பிணக்கு ஒன்று தொடக்ககால பாரதம் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்.

புராண இலக்கியங்கள் மகாபாரதத்துடன் தொடர்புடைய மரபுகளின் பட்டியல்களைத் தருகின்றன.[4]

தொல்வானியல் முறைகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளின் காலத்தைக் கணிக்க எடுத்த முயற்சிகள் போர்க் காலத்தை கிமு நான்காம் ஆயிரவாண்டு முதல் கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை குறிக்கின்றன.ஆனாலும் இதில் தவறு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது ஆரியர்களின் காலம் கி.மு 1300 க்கு பிறகே வருவதாலும் ,அதற்கு பிறகே நடந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

கதைச் சுருக்கம்

தொகு

மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு குலத்தவரால் ஆளப்பட்டு வந்த அத்தினாபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே உண்டான பிணக்கு ஆகும். திருதராட்டிரன் மற்றும் பாண்டு ஆகிய சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருச்சேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.[5] இப்போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது.

மகாபாரதம் கர்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது.

தமிழில் மகாபாரதம்

தொகு

பாரதம் பாடிய பெருந்தேவனார் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்தை தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் தெரியவில்லை. இவர் தமிழ் மொழிப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை.

பின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு சனியூரைச் சேர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக்கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தருமன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள்.

இதன் பின்னர் மகாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். அவற்றுள் முழுமையானதாக திருத்தமிகு பதிப்பாகக் கருதப்படுவது, 1903 இலிருந்து இருபத்தைந்து ஆண்டு காலம், ம. வீ. இராமானுசச்சாரியார் தலைமையில் பல வடமொழி தமிழ் மொழி வித்வான்களால் மொழிபெயர்க்கப் பட்ட மகாபாரதப் (கும்பகோண) பதிப்பாகும். 9000 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 1930களிலும் 1950களிலும் 2008இலும் பதிப்பிக்கப் பட்டன.

அதைத் தவிர குறிப்பிடத்தக்கவர் இராசாசி. அவருடையது "வியாசர் விருந்து" குறிப்பிடத் தகுந்தது.

அ. லெ. நடராசன் "வியாசர் அருளிய மகாபாரதம்" என்ற பெயரில் நான்கு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் சோ "மகாபாரதம் பேசுகிறது" என்ற பெயரில் வியாச பாரதத்தை இரு பாகங்களாக எழுதியுள்ளார்.

இராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசரைத் தழுவி எழுதிய மகாபாரதம் குறிப்பிடத்தகுந்தது. 2013ஆம் ஆண்டு வெளியான பத்தொன்பதாம் பதிப்பு வரை 2,35,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

ஜெயமோகன் மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாவல் வடிவில் எழுதிருக்கிறார். அவரது இணையதளத்தில்[6] 2014 ஜனவரி 1 ஆம் தேதிமுதல் 2020 ஜூலை 16 வரை தொடராகப் பதிவேற்றப்பட்டது. மொத்தம் பத்து தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டு, 26 நாவல்களும் 25000 பக்கங்களும் அது விரிவடைந்து வெளியிடப்பட்டுள்ளது.[7]

இதனையும் காண்க

தொகு

மேற்கோற்கள்

தொகு
  1. James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M. The Rosen Publishing Group. p. 399. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3179-8. Archived from the original on 7 September 2023. பார்க்கப்பட்ட நாள் 15 November 2015.
  2. T. R. S. Sharma; June Gaur; Sahitya Akademi (New Delhi, Inde). (2000). Ancient Indian Literature: An Anthology. Sahitya Akademi. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0794-3. Archived from the original on 7 September 2023. பார்க்கப்பட்ட நாள் 15 November 2015.
  3. "MAHABHARATA retold by C. Rajagopalachari" (PDF). Archived from the original (PDF) on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
  4. கிருஷ்ணமாச்சாரியார். பதினெண் புராணங்கள். சென்னை 17: நர்மதா பதிப்பகம்.{{cite book}}: CS1 maint: location (link)
  5. THE MAHABHARATA
  6. "வெண்முரசு". Archived from the original on 2022-08-09. பார்க்கப்பட்ட நாள் 2022-07-19.
  7. "வெண்முரசு நிறைவு, எழுத்தாளர் ஜெயமோகன்". web.archive.org. 2020-07-17. Archived from the original on 2020-07-17. பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.{{cite web}}: CS1 maint: unfit URL (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபாரதம்&oldid=4152594" இலிருந்து மீள்விக்கப்பட்டது