மலேசிய மொழிகள்

மலேசியாவில் பேசப்படும் மொழிகள்

மலேசிய மொழிகள் (மலாய்: Bahasa di Malaysia; ஆங்கிலம்: Languages of Malaysia; சீனம்:馬來西亞語言) என்பது பழங்குடி மொழிகளான ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் மற்றும் மலாய-பொலினீசிய மொழிகள் குடும்பங்களைச் சேர்ந்த மொழிகளாகும். தேசிய மொழி அல்லது சிறப்புரிமை மொழியாக மலாய் மொழி உள்ளது. பெரும்பான்மையான மலாய் இனத்தவரின் தாய் மொழியாகவும் இந்த மொழிகள் உள்ளன.[1]

மலேசிய மொழிகள்
மலேசியாவின் மொழிக் குடும்பங்கள்
     மலாய் மொழி
     வடக்கு போர்னியோ மொழிகள்
     அசிலியான் மொழிகள்
     நில தயாக்கு மொழிகள்
     பஜாவு மொழிகள்
     பிலிப்பீன்சு மொழிகள்
     கிரியோல் மொழி
     பல மொழிப் பகுதிகள்
ஆட்சி மொழி(கள்)மலாய் மொழி
முக்கிய மொழிகள்மலாய் மொழி, சீனம், தமிழ், ஆங்கிலம்
சைகை மொழிமலேசிய சைகை மொழி
விசைப்பலகை
குவர்ட்டி

மலேசியாவில் உள்ள முக்கிய இனக்குழுக்களான மலாய்க்காரர்கள், சீனர்கள், தமிழர்கள் இனக்குழுக்கள்; மற்றும் பிற உள்நாட்டு இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த மொழிகளைக் கொண்டுள்ளன.

மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன; அவற்றில் 41 மொழிகள் தீபகற்ப மலேசியாவில் பயன்படுத்தப் படுகின்றன மலாய் மொழி, சீன மொழி தமிழ் மொழி ஆகிய மூன்று முக்கிய மொழிகளில் தொடக்கநிலைக் கல்வியை மலேசிய அரசாங்கம் வழங்குகிறது.[2]

பொது

தொகு
 
சபா டூசுன் இனத்தவர்

கிழக்கு மலேசியாவில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் மொழிகள் இபான் மொழி, டூசுன் மொழிகள் மற்றும் கடசான் மொழிகள் ஆகும். மலேசிய நாட்டின் நகர்ப்புறங்களில் ஆங்கிலம் பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது; ஓரளவிற்கு நன்றாகவும் பேசப்படுகிறது. தொடக்கநிலைக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வித் திட்டங்களில் ஆங்கில மொழி கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப் படுகிறது.[3]

பெரும்பாலான தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில், ஆங்கில மொழி முதன்மைப் பயிற்று மொழியாக உள்ளது.

தேசிய மொழிச் சட்டத்தின் (National Language Act) கீழ் வழங்கப்பட்ட சில சிறப்புரிமைச் சூழல்களில், குறிப்பாக சபா மற்றும் சரவாக் மாநிலங்களில், ஆங்கில மொழி சிறப்புரிமை பெற்ற அலுவல் மொழியாக உள்ளது. அத்துடன் மலாய் மொழியுடன் ஆங்கில மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.[4]

மலாய் மொழி

தொகு

மலேசியாவின் சிறப்புரிமை மொழி மலாய் மொழி ஆகும். அனைத்து இனங்களுக்கும் இடையில் நாட்டை ஒருங்கிணைக்கும் முறைமையில், மலாய் மொழி ஒரு நிலையான மொழியாக ஊக்குவிக்கப்படுகிறது. மலாய் மொழி என்பது மலேசிய நாட்டின் தேசிய மொழி எனும் தகுதி மலேசிய அரசியலமைப்பின் 152-ஆவது பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது.

புரூணையில் பேசப்படும் மாறுபட்ட மலாய் மொழி கிழக்கு மலேசியாவிலும் பரவலாகப் பேசப்படுகிறது. 13 மே துர்நிகழ்ச்சிக்குப் பிறகு, மழலையர் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரையில் தேசியக் கல்வி ஊடகமாக இருந்த ஆங்கில மொழி, 1970-களில் இருந்து படிப்படியாக மலாய் மொழிக்கு மாற்றப்பட்டது.[5]

பழங்குடியினர் மொழிகள்

தொகு

மினாங்கபாவு மக்கள், பூகிஸ் அல்லது ஜாவானிய வம்சாவளியைச் சேர்ந்த குடிமக்கள், மலேசிய அரசியலமைப்பு வரையறைகளின் கீழ்மலாய் மக்கள் என வகைப்படுத்தப் படுகின்றனர். ஆகவே அவர்கள் மலாய் மொழியுடன் அவர்களின் மூதாதையர் மொழிகளையும் பயன்படுத்தலாம்.

கிழக்கு மலேசியாவின் பூர்வீக பழங்குடியினர் தங்கள் சொந்த மொழிகளைக் கொண்டுள்ளனர். அந்த மொழிகள் மலாய் மொழியுடன் தொடர்புடையவை. ஆனாலும் மலாய் மொழியில் இருந்து எளிதில் வேறுபடுத்தப்படும் மொழிகளாக உள்ளன.

இன மொழிகள்

தொகு
 
தீபகற்ப மலேசியாவின் மலேசியப் பழங்குடியினர்

இபான் மொழி சரவாக்கில் உள்ள முக்கியப் பழங்குடி மொழியாகும். அதே வேளையில் டூசுன் மொழி மற்றும் கடசான் மொழி ஆகிய இரு மொழிகளும் சபாவில் உள்ள பழங்குடியினரால் பேசப்படுகின்றன.[6]

சபாவில் மேலும் பத்து துணை இன மொழிகள் உள்ளன: பஜாவு மொழி, புரூணை மொழி, கெனிங்காவ் மூருட், லுன் பாவாங் மொழி, ருங்குஸ் மொழி, பிசாயா மொழி, இரனுன், சாமா, சுலுக், சுங்கை மொழிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மேலும் 30-க்கும் மேற்பட்ட பூர்வீக இனக்குழுக்கள் சபாவில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அதன் சொந்த பேச்சுவழக்குகளைக் கொண்டுள்ளன.[7]

தீபகற்ப மலேசியாவில் உள்ள பழங்குடி மொழிகளை மூன்று பெரிய குழுக்களாகப் பிரிக்கலாம்: நெக்ரிட்டோ, செனோய் மற்றும் மலாய்க் எனும் குழுக்கள். மேலும் அவை 18 துணை மொழிக்குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன.[8]

ஆங்கில மொழி

தொகு

மலேசிய ஆங்கிலம் என்பது மலேசிய தர ஆங்கிலம் (MySE) என்றும் அழைக்கப் படுகிறது. இது பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து பெறப்பட்ட ஆங்கிலத்தின் ஒரு வடிவமாகும். மலாயா விடுதலை பெறுவதற்கு முன்னர் மலேசிய நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் சிறிது காலம் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக மலாய் மொழிக்கு மாற்றம் கண்டது.

இருப்பினும், சபா மாநில சட்டமன்றம் மற்றும் சரவாக் மாநில சட்டமன்றம் ஆகிய இரு சட்டமன்றங்களிலும்; சபா, சரவாக் நீதிமன்றங்களிலும் ஆங்கில மொழி சிறப்புரிமை மொழியாக உள்ளது.[9][10][11]

சீன மொழி

தொகு
 
தீபகற்ப மலேசியாவின் சீனப் பெண்மணி

மலேசியச் சீன மொழியைப் பொருத்த வரையில் மாண்டரின் மொழி என்பது மலேசிய சீனர்கள் மத்தியில் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். சீனப் பள்ளிகளில் மாண்டரின் மொழி பயிற்று மொழியாகவும் வணிகத் துறையில் முக்கியமான மொழியாகவும் உள்ளது. பெரும்பாலான மலேசிய சீனர்கள் சீனாவின் தெற்கு மாநிலங்களின் வம்சாவளியைக் கொண்டிருப்பதால், பல்வேறு தென் சீன மொழி வகைகள் மலேசியாவில் பேசப்படுகின்றன.

மாண்டரின் மொழி வட சீனாவில் உருவான மொழி என்பதால் அதுவே மலேசியாவின் சீனக் கல்வி முறையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. தீபகற்ப மலேசியாவில் ஒக்கியான், கண்டோனீயம், கேசிய மொழி, அயினான் மொழி, தியோச்சியூ மொழி, ஒக்சியூ மொழி போன்ற சீன மொழிகள் பேசப்படுகின்றன.[8]

பினாங்கு, கெடா, பெர்லிஸ், கிள்ளான், ஜொகூர், வடக்கு பேராக், கிளாந்தான், திராங்கானு மற்றும் மலாக்கா போன்ற இடங்களில் ஒக்கியான் மொழி பேசப்படுன்றது; அதே வேளையில் கண்டோனீயம் பெரும்பாலும் ஈப்போ, கோலாலம்பூர், சிரம்பான் மற்றும் குவாந்தான் போன்ற இடங்களில் பேசப்படுகின்றன. சரவாக்கில், பெரும்பாலான சீன இனத்தவர் ஒக்கியான் மொழி, ஆக்சியூ மொழி அல்லது கேசிய மொழிகளைப் பேசுகிறார்கள். சபாவில் கேசிய மொழி ஆதிக்கம் செலுத்துகிறது. சண்டக்கான் நகரில் மட்டும் அதிகமானோர் கண்டோனீயம் பேசுகிறார்கள்.

மலேசியத் தமிழ்

தொகு
 
கெடா சங்லூன் தமிழ்ப்பள்ளி

மலேசியத் தமிழ் மொழியும் அதன் பேச்சுவழக்கும் பெரும்பாலும் மலேசியத் தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது. மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையானவர் மலேசியத் தமிழர்கள் ஆகும்.[12] தீபகற்ப மலேசியாவில் மலேசியத் தமிழ் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

1996-ஆம் ஆண்டு மலேசியக் கல்விச் சட்டம்; மலேசிய தேசிய வகைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் மொழியாகத் தமிழைப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது. மேலும், தமிழ்ப்பள்ளிகள் அல்லாத தேசிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தேசிய இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் வகுப்புகளை நடத்துவதற்குத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு உரிமை அளிக்கிறது.

தமிழ்ப்பள்ளிகள் அல்லாத தேசிய தொடக்கப் பள்ளிகளில், ஒரு வகுப்பில் 15 தமிழ் மாணவர்கள் இருந்தால், பெற்றோர்களின் கோரிக்கையின் பேரில் தமிழ் மொழியைக் கற்பிக்க 1996-ஆம் ஆண்டு மலேசியக் கல்விச் சட்டம் வகை செய்கிறது..[13][14]

இருவகைப் பேச்சுவழக்குகள்

தொகு

மலேசியாவில் தமிழ் பேசும் மக்கள் இரண்டு குழுக்களாக உள்ளனர். இலங்கைத் தமிழ்ப் பேச்சுவழக்குகளில் யாழ்ப்பாணத் தமிழ் பேச்சுவழக்கு கொண்ட இலங்கைத் தமிழர்கள்; தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேச்சுவழக்குகளில் தமிழகத் தமிழ் பேச்சுவழக்கு கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என இரு பிரிவினர் உள்ளனர்.

இந்த இருவகைப் பேச்சுவழக்குகள் வர்க்க வேறுபாடுகளையும் பிரதிபலித்தன. 1940 - 1970-ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்கள் அதிகக் கல்வியறிவு பெற்றவர்களாகவும்; ரப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளித் தமிழர்களை மேற்பார்வையிடும் அதிகாரிகளாகவும் இருந்தனர். வெவ்வேறு பேச்சுவழக்குகளைக் கொண்ட இந்த இரண்டு சமூகங்களும் மலேசியாவில் பெரும்பாலும் தனித்தனியாகவே தடம் பதித்தன; இரண்டு தனிச் சமூகங்களாக இயங்கின.

தற்போது மலேசியாவில் அதிகக் கல்வியறிவு பெற்ற தமிழ் மக்களிடையே தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதிகக் கல்வியறிவு பெற்ற தமிழ்ர்கள் பெரும்பாலோர் ஆங்கில மொழியைப் பயன்படுத்துகின்றனர்; மற்றும் ஒரு சிறுபான்மையினர் மலாய் மொழிக்குள் ஈர்க்கப்படுகிறார்கள்.

தமிழ்ச் சமூகத்தினர்

தொகு

இதற்கிடையில், மலேசிய அரசாங்கம் மலேசியத் தொடக்கத் தமிழ்ப் பள்ளிக் கல்விக்கு வரையறுக்கப்பட்ட ஆதரவையே வழங்கி வருகிறது. மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பொதுவான கற்பித்தல் ஊடகமாக மலாய் மொழி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் தனியார் தமிழ் பள்ளிகளும் இல்லை.

இருப்பினும், குறைந்த கல்வியறிவு பெற்ற தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழ் மொழிப் பயன்பாடு இன்றும் தொடர்கிறது. அவர்களினால்தான் மலேசியாவில் தமிழ் மொழி இன்றும் வாழ்கிறது. அவர்களில் பெரும்பாலோர் இன்றும் தோட்டங்களில் வாழ்கின்றனர்; அல்லது தோட்டங்களுக்கு அருகாமையில் உள்ள புதிய குடியிருப்பு மனைத்திட்டங்களில் வாழ்கின்றனர்; அல்லது நகர்ப்புறக் குடியேற்றக் குடியிருப்புகளில் தொடர்ந்து வாழ்கின்றனர்.

மலாக்காவில் சிட்டி எனும் ஒரு சிறு தமிழர்க் குழுவினர் இன்றும் உள்ளனர். இவர்கள, தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட மலாய் மொழி பேசும் சமூகமாகவே மாறிவிட்டனர். தமிழர்களாய்த் தடம் பதித்தவர்கள்; இருப்பினும் பண்பாட்டுத் தாக்கங்களினால் திசை மாறிய பறவைகள்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Adelaar, K. Alexander; Himmelmann, Nikolaus, eds. (2005). The Austronesian Languages of Asia and Madagascar. Psychology Press. pp. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0700712860.
  2. "Languages of Malaysia". Ethnologue. Archived from the original on 18 October 2010. பார்க்கப்பட்ட நாள் 18 October 2010.
  3. Kärchner-Ober, Renate (2013). "Linguistic Quandary in Multilingual Malaysia: Socio-Political Issues, Language Policy, Educational Changes". In Singleton, David; Fishman, Joshua A; Aronin, Larissa; Ó Laoire, Muiris (eds.). Current Multilingualism: A New Linguistic Dispensation. Berlin: De Gruyter Mouton. pp. 299–310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61451-389-6.
  4. "In Personam: Malay Language Usage in the Malaysian Courts". www.in-personam.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
  5. Barbara Watson Andaya; Leonard Y. Andaya (1984). A History of Malaysia. Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-38121-9.
  6. Adelaar, Alexander; Himmelmann, Nikolaus P., eds. (2005). The Austronesian Languages of Asia and Madagascar. London: Routledge. pp. 397–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1286-0.
  7. Luke Rintod (30 November 2010). "Speak Up, Native Language Champions urged". Free Malaysia Today இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101203014820/http://www.freemalaysiatoday.com/fmt-english/politics/sabah-and-sarawak/13511-speak-up-native-language-champions-urged. 
  8. 8.0 8.1 "Malaysia" (listed as "Foochow" there). Cia.gov. Archived from the original on 8 November 2021. பார்க்கப்பட்ட நாள் 26 October 2010.
  9. "My Constitution: Sabah, Sarawak and special interests". Malaysian Bar. 2 February 2011. பார்க்கப்பட்ட நாள் 15 February 2022.
  10. "Article 32 of the National Language Act Has No Legal Effect in Sarawak". Dayak Daily. 5 September 2018. https://dayakdaily.com/article-32-of-the-federal-constitution-has-no-legal-effect-in-sarawak/. 
  11. "S'wak Govt Never Agreed to Change Present Policy on English Usage". Borneo Post. 5 September 2018. https://www.theborneopost.com/2018/09/05/swak-govt-never-agreed-to-change-present-policy-on-english-usage/. 
  12. West, Barbara A. (2009). Encyclopedia of the Peoples of Asia and Oceania. New York, New York: Facts on File. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7109-8.
  13. Act 550 – Education Act 1996 (PDF) – via UNESCO.
  14. Kamila Ghazali (2010). "National Identity and Minority Languages". UN Chronicle. பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_மொழிகள்&oldid=4107848" இலிருந்து மீள்விக்கப்பட்டது