டி. வி. குமுதினி
டி. வி. குமுதினி (T. V. Kumuthini, அக்டோபர் 13, 1916[1] - 2000) பழம்பெரும் தென்னிந்தியத் திரைப்பட நடிகை. 1939 இல் வெளியான மாத்ரு பூமி என்ற சரித்திரத் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாகத் திரையுலகிற்கு அறிமுகமானவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பல வேடங்களில் நடித்தார்.
டி. வி. குமுதினி | |
---|---|
1940களில் டி. வி. குமுதினி | |
பிறப்பு | கல்யாணி காந்திமதி 13 அக்டோபர் 1916 ஆத்தங்கல், திருவிதாங்கூர், இந்தியா |
இறப்பு | 2000 (அகவை 83–84) இராயப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | நடிகை, பாடகி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகுமுதினியின் இயற்பெயர் கல்யாணி காந்திமதி ஆகும். அப்பெயரிலேயே மாத்ருபூமி திரைப்படத்தில் 'குமுதினி' என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றதால், குமுதினி என்ற பெயரிலேயே அவர் அறியப்பட்டார். அவரும் தனது பெயரை டி. வி. குமுதினி என மாற்றிக் கொண்டார்.[2][1] இவர் 1916 அக்டோபர் 13 இல் திருவனந்தபுரம் அருகே ஆத்தங்கல் என்ற ஊரில் பிறந்தார்.[1] ஒரேயொரு தமையன் அரிகர ஐயர். தந்தை வீரமணி ஐயர் குமுதினிக்கு நான்கு வயதானபோதே இறந்து விட்டார். சிறு வயதிலேயே கர்நாடக இசையை திருவனந்தபுரம் அனந்த பாகவதரிடமும், அய்யாச்சி பாகவதரிடமும் கற்றுக் கொண்டார்.[1] இவரது இசை அரங்கேற்றம் பத்மநாப சுவாமி கோயிலில் நிகழ்ந்தது. திருவாங்கூர் மன்னர் இவருக்குத் தங்கப் பதக்கம் அளித்துப் பாராட்டியிருக்கிறார்.[2] இவரது குடும்பம் பின்னர் மதுரைக்குக் குடி பெயர்ந்தது. குமுதினிக்கு 13-வது அகவையில் எஸ். வி. வெங்கடேசுவர ஐயர் என்பவருக்கு இரண்டாம் மனைவியாகத் திருமணம் நடந்தது.[1]
பிற்காலத்தில் சென்னை, இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ‘குமுதினி இல்லம்’ என்ற பெயருள்ள வீட்டில் வசித்து வந்தார்.[2]
திரைப்படங்களில்
தொகுமதுரையின் வசித்தபோது நாகசாமி பாகவதருடன் இணைந்து சரளி முதல் வர்ணம் வரை இசை ஆரம்பப் பாடங்களை "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்" இசைத்தட்டில் வெளிவந்தன. தொடர்ந்து குமுதினியின் சில தனிப்பாடல்களும் வெளிவந்தன.[1] குமுதினியின் கச்சேரிகளையும் பாடல்களையும் கேட்டு ரசித்தவர்களில் ஒருவரான பாடகரும், நடிகருமான டி. ஆர். மகாலிங்கம், இவரைத் திரைப்படங்களில் நடிக்க வைத்ததில் முக்கிய பங்காற்றினார்.[2] பிரபல இயக்குநர் எச்.எம்.ரெட்டியும், ஏ.எல்.ஆர்.எம் நிறுவனமும் தாங்கள் உருவாக்க இருந்த மாத்ரு பூமி திரைப்படத்தின் கதாநாயகி வேடத்துக்கு கல்யாணியின் கணவரின் ஒப்புதல் பெற்று நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தனர். நாராயணன் நாயர் என்பவர் கல்யாணிக்கு வாள் பயிற்சி, குதிரையேற்றம் அனைத்தையும் கற்றுத் தந்தார். இப்படம் அவருக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. அன்றில் இருந்து கல்யாணி டி. வி. குமுதினி ஆனார்.[2][2] இப்படத்தில் "நமது ஜன்ம பூமி", "அன்னையின் காலில் விலங்குகளோ" ஆகிய இரண்டு பாடல்களை குமுதினி பாடினார்.[1]
குமுதினியின் இரண்டாவது படம் அசோக் குமார் 1941-இல் வெளிவந்தது. தியாகராஜ பாகவதருடன் இணைந்து காஞ்சனமாலாவாக நடித்தார். இப்படமும் பெரும் வெற்றி பெற்று குமுதினிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுதது. ‘உள்ளங்கவருமென் பாவாய்…’, 'கிடையாது வாழ்விதிலே - சுகமே..' ஆகிய இரண்டு பாடல்களை பாகவதருடன் இணைந்து பாடினார்.[2]
அடுத்து எம். ஜி. இராமச்சந்திரன் கதாநாயகனாகவும், குமுதினி கதாநாயகியாகவும் ‘சாயா’ என்ற படத்தில் நடிக்க 1941-இல் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. எம்.ஜி.ஆர் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு பி. யு. சின்னப்பா குமுதினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படத் தயாரிப்பு முடிவடைந்தது. ஆனால் இப்படம் வெளிவரவில்லை.[3]
இதன் பின்னர் குமுதினி ஹொன்னப்ப பாகவதருடன் ‘பக்த காளத்தி’ (1945) படத்தில் நடித்தார். அடுத்து வெளியான ‘பக்த ஜனா’ திரைப்படம் இவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.[2]
‘ஔவையார்’ படத்தில் குழந்தை ஔவையை சீராட்டி வளர்க்கும் தாயாகவும், ‘வியட்நாம் வீடு’ படத்தில் பத்மினியின் தாயாராகவும் நடித்தார்.[2]
வானொலிப் பாடகர்
தொகுகுமுதினி ஆலந்தூர் சகோதரர்களில் ஒருவரான சுப்பு என்பவரிடம் மேலதிக கருநாடக இசைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். அகில இந்திய வானொலியில் பல இசைக் கச்சேரிகளை நடத்திப் பல விருதுகளைப் பெற்றார்.[1]
நாடகங்களில்
தொகுடி. எஸ். பாலையா, வி. எஸ். ராகவன், சச்சு இவர்களுடன் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். இவற்றில் ‘நீரோட்டம்’ என்ற நாடகம் குறிப்பிடத்தக்கது. 1940களிலிருந்து ஏராளமான வானொலி நாடகங்களிலும் நடித்து வந்தார்.[2]
விருதுகள்
தொகுஇவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது. இது தவிர கலைச்செல்வம், சங்கீத ஜோதி, வீர வனிதை போன்ற பட்டங்களும் கிடைத்தன. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிக்குழு உறுப்பினராக இருந்தார்.[2]
மறைவு
தொகுடி. வி. குமுதினி 2000 ஆம் ஆண்டில் தனது 84வது அகவையில் காலமானார்.[4]
நடித்த திரைபடங்கள்
தொகு- மாத்ரு பூமி (1939)
- அசோக் குமார் (1941)
- பக்த காளத்தி (1945)
- ஸ்ரீ முருகன் (1946)
- சுலோசனா (1947)
- பக்த ஜனா (1948)
- வனசுந்தரி (1951)
- வேலைக்காரன் (1952)
- பொன்வயல் (1954)
- விடுதலை (1954)[5]
- கிரகலட்சுமி (1955)
- ஒன்றே குலம் (1956)
- மல்லிகா (1957)
- மனமுள்ள மறுதாரம் (1958)
- மணிமேகலை (1959)
- பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1959)
- தோழன் (1960)
- தங்கம் மனசு தங்கம் (1960)
- மகாவீர பீமன் (1962)
- நீங்காத நினைவு (1963)
- சிவந்த மண் (1969)[6]
- வியட்நாம் வீடு (1970)
- ஒரு தாய் மக்கள் (1971)
- தர்மம் எங்கே (1972)
- சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)
- உனக்காக நான் (1973)
- ஜானகி சபதம் (1976)
- இளைய தலைமுறை (1977)
- தாலியா சலங்கையா (1977)
- திசை மாறிய பறவைகள் (1979)
- அன்னப்பறவை (1980)
- காதோடுதான் நான் பேசுவேன் (1981)
- நலந்தானா (1982)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 கோபால், பி. ஆர். எஸ். (நவம்பர் 1949). நட்சத்திர மாலை பாகம் 2. ராயப்பேட்டை, சென்னை: பேசும் படம். p. 40-46.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 "வீர தீரப் பெண்ணாக அறிமுகமான டி.வி.குமுதினி". குங்குமம் தோழி. 1 சூன் 2009. http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5692&id1=85&issue=20190601. பார்த்த நாள்: 24 திசம்பர் 2020.
- ↑ "நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் அத்தியாயம் - 18". விகடன். 03 மார்ச் 2017. https://www.vikatan.com/government-and-politics/politics/82552-mgrs-first-marriage-held-at-palakkad---life-history-of-mgr--episode--18. பார்த்த நாள்: 24 திசம்பர் 2020.
- ↑ "2000 ஆம் ஆண்டு சினிமா கண்ணோட்டம்". தென்றல். பிப்ரவரி 2001. http://tamilonline.com/thendral/article.aspx?aid=3863. பார்த்த நாள்: 24 திசம்பர் 2020.
- ↑ "திரைப்படங்களான இலக்கியங்களும் நாடகங்களும்". அறந்தை மணியன். https://books.google.com.au/books?id=JPQOEAAAQBAJ&pg=RA1-PA1975&lpg=RA1-PA1975&dq=%22%E0%AE%9F%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AE%BF.+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%22&source=bl&ots=EV_ouEQxF4&sig=ACfU3U0ei72C87PExAc1myfySdhO5rdt8Q&hl=en&sa=X&ved=2ahUKEwj8toPjyubtAhUezTgGHeVJDu04ChDoATAGegQICBAC#v=onepage&q=%22%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%22&f=false. பார்த்த நாள்: 24 திசம்பர் 2020.
- ↑ "அன்னிய மண்ணில் சிவந்த மண்". கலாசக்கரம் நரசிம்மா. https://books.google.com.au/books?id=hjv2DwAAQBAJ&pg=PT22&lpg=PT22&dq=%22%E0%AE%9F%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AE%BF.+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%22&source=bl&ots=WHHXgIsiQk&sig=ACfU3U1TcQEqZj6aQq0N7m8ru3HuZjrY3Q&hl=en&sa=X&ved=2ahUKEwj67LrLy-btAhXzzDgGHd8SDzI4FBDoATAEegQICBAC#v=onepage&q=%22%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%22&f=false. பார்த்த நாள்: 24 திசம்பர் 2020.