விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2024

சனவரி

சிட்டுக்குருவி என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு பறவை ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ.ம், எடை 24-39.5 கிராமும் இருக்கும். பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள 25 இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியதரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். மேலும்...


எசுபார்த்தாவின் மேலாதிக்கம் என்பது எசுபார்த்தா அரசு கிரேக்க பழங்காலத்தின் மிகப்பெரிய இராணுவ நில சக்தியாக இருந்ததைக் குறிக்கும். பாரம்பரியக் காலத்தில், எசுபார்த்தா முழு பெலொப்பொனேசியா மீதும் ஆதிக்கம் செலுத்தியது அல்லது செல்வாக்கு செலுத்தியது. கூடுதலாக, கிமு 431-404 இல் நடந்த பெலோபொன்னேசியப் போரில் ஏதெனியர் மற்றும் டெலியன் கூட்டணியின் தோல்வியின் விளைவாக கிமு 404 முதல் கிமு 371 வரை தெற்கு கிரேக்க உலகில் குறுகிய காலம் எசுபார்த்தன் ஒற்றை ஆதிக்கம் இருந்தது. மேலும்...

பெப்பிரவரி

சித்தோர்கார் முற்றுகை 1303 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானக ஆட்சியாளர் அலாவுதீன் கில்சி, குகிலா மன்னர் இரத்னசிம்காவிடமிருந்து சித்தோர்கார் கோட்டையை எட்டு மாத கால முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். படையெடுப்பாளர்களின் முன்புறத் தாக்குதல்கள் இரண்டு முறை தோல்வியடைந்தது. மழைக்காலத்தின் இரண்டு மாதங்களில், படையெடுப்பாளர்கள் மலையின் இடைப் பகுதியை அடைய முடிந்தது, ஆனால் மேலும் முன்னேற முடியவில்லை என்று கூறுகிறார். அலாவுதீன் கோட்டையை முற்றுகையிடும் சாதனங்களில் இருந்து கற்களை எறியுமாறு கட்டளையிட்டார். அதே நேரத்தில் அவரது கவச வீரர்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அதைத் தாக்கினர். மேலும்...


குயுக் கான் என்பவர் மங்கோலியப் பேரரசின் மூன்றாவது ககான் ஆவார். இவர் ஒக்தாயி கானின் மூத்த மகனும், செங்கிஸ் கானின் பேரனும் ஆவார். இவர் 1246 முதல் 1248 வரை ஆட்சி செய்தார். மங்கோலியத் தலைநகரான கரகோரத்திற்கு அருகில் 24 ஆகத்து 1246ஆம் ஆண்டு குயுக் முடிசூட்டிக் கொண்டார். இவ்விழாவில் பெருமளவிலான அயல்நாட்டுத் தூதுவர்கள் கலந்துகொண்டனர். மங்கோலிய சக்தியை ஐரோப்பாவிற்கு எதிராகத் திருப்பி விட குயுக் விரும்பினார். ஆனால் இவரது எதிர்பாராத மரணமானது மேலும் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குள் மங்கோலியப் படைகள் நகரும் முயற்சியைத் தடுத்தது. மேலும்...

மார்ச்சு

சிந்துவெளி நாகரிகம் என்பது தெற்காசியாவின் வடமேற்கு பகுதிகளில் இருந்த ஒரு வெண்கலக் கால நாகரிகம் ஆகும். இது பொ. ஊ. மு. 3300 முதல் பொ. ஊ. மு. 1300 வரை நீடித்திருந்தது. இது அதன் முதிர்ச்சியடைந்த கட்டத்தை பொ. ஊ. மு. 2600 முதல் பொ. ஊ. மு. 1900 வரை கொண்டிருந்தது. பண்டைய எகிப்து மற்றும் மெசொப்பொத்தேமியாவுடன் அண்மைக் கிழக்கு மற்றும் தெற்காசியாவின் மூன்று தொடக்க கால நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மூன்றில் இதுவே பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்தது. மேலும்...


எசுபார்த்தாவின் லைகர்கசு என்பவர் தெல்பியில் உள்ள அப்பல்லோ கோயில் பூசாரியின் அனுமதிக்கு இணங்க எசுபார்தா சமுதாயத்தின் இராணுவம் சார்ந்த சீர்திருத்தத்தை நிறுவிய எசுபார்த்தாவின் அரை-தொன்ம சட்டமியற்றியவர் ஆவார். இவரது அனைத்து சீர்திருத்தங்களும் மூன்று எசுபார்த்தன் நற்பண்புகளை ஊக்குவித்தன. இவர் பண்டைய வரலாற்றாசிரியர்கள் மற்றும் தத்துவவாதிகளான எரோடோட்டசு, செனபோன், பிளேட்டோ, பாலிபியசு, புளூட்டாக், எபிக்டெட்டசு ஆகியோரால் குறிப்பிடப்படுகிறார்.மேலும்...

கருங்கழுகு என்பது ஒரு வகைக் கழுகு இனப் பறவை ஆகும். எல்லா கழுகுகளையும் போலவே, இது பாறுக் குடும்பத்தில் உள்ளது, மேலும் இது இக்டினேட்டஸ் பேரினத்தின் ஒரே உறுப்பினர் ஆகும். இப்பறவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தெற்கு மற்றும் தென்கிழக்காசியா மற்றும் தென்கிழக்கு சீனாவின் மலைப்பாங்கான பகுதிகளின் காடுகளில் காணப்படுகிறது. இப்பறவையின் உடல் பார்க்க கறுப்பாகவும், அலகு மஞ்சளாகவும் இருக்கும். இவை எப்போதும் அடர்ந்த பசுமையான காடுகளிலேயே சார்ந்து வாழும். மேலும்...


மொடு சன்யூ என்பவர் சியோங்னு பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரது தந்தை தோவுமன் ஆவார். சிமா சியானின் கூற்றுப்படி மொடு ஒரு அறிவாற்றல் மிகுந்த குழந்தையாக இருந்தார். இவர் கி. மு. 209ஆம் ஆண்டு தன் தந்தையைக் கொல்லுமாறுத் தன் ஆட்களுக்கு ஆணையிட்டு ஆட்சிக்கு வந்தார். மொடு கி. மு. 209 முதல் கி. மு. 174 வரை ஆட்சி செய்தார். இவர் இவரது தந்தை தோவுமனுக்குக் கீழ் ஒரு இராணுவத் தலைவராகப் பணியாற்றினார். பிறகு சியோங்னு பேரரசின் சன்யூவாக முடிசூட்டிக் கொண்டார். இவரது பேரரசு தற்போதைய மங்கோலியாவில் அமைந்திருந்தது.மேலும்...

மே

கோட்டைக் கொச்சி என்பது இந்தியாவின், கேரளத்தின், கொச்சி (கொச்சி) நகரத்தின் சுற்றுப்புறமாகும். கோட்டைக் கொச்சி என்ற பெயர் இமானுவேல் கோட்டை என்பதில் இருந்து வந்தது. போர்த்துகேய பேரரசின் கட்டுப்பாட்டுக்கு இந்திய மண்ணில் முதன் முதலில் வந்த ஐரோப்பியருக்கான முதல் கோட்டை இதுவாகும். இது கொச்சியின் முதன்மை நிலப்பரப்பின் தென்மேற்கில் உள்ள ஒரு சில தீவுகள் கொண்ட ஒரு பகுதியாகும். மேலும் இது ஒட்டுமொத்தமாக பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என அழைக்கப்படுகிறது. இதை ஒட்டி மட்டாஞ்சேரி பகுதி உள்ளது. மேலும்...


முகியல்தீன் முகம்மது என்பவர் ஆறாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் பொதுவாக ஔரங்கசீப் என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் 1658 முதல் 1707ஆம் ஆண்டில் இவர் இறக்கும் வரை ஆட்சி புரிந்தார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் முகலாயப் பேரரசானது அதன் அதிகபட்ச பரப்பளவை அடைந்தது. முகலாயப் பேரரசின் நிலப்பரப்பானது கிட்டத்தட்ட இந்தியத் துணைக் கண்டத்தின் ஒட்டு மொத்த பரப்பளவையும் கொண்டிருந்தது. ஔரங்கசீப்பும், முகலாயர்களும் தைமூரிய அரசமரபின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாவர். மேலும்...

சூன்

யூக்ளிடு-ஆய்லர் தேற்றம் என்பது கணிதத்தின் எண்கோட்பாட்டில் செவ்விய எண்களை மெர்சென் பகாத்தனிகளுடன் தொடர்புபடுத்தும் ஒரு தேற்றமாகும். ஓர் இரட்டையெண்ணானது 2p−1(2p − 1) (இதில், 2p − 1 ஒரு பகா எண்) என்ற வடிவில் "இருந்தால், இருந்தால் மட்டுமே", அந்த இரட்டையெண் ஒரு செவ்விய எண்ணாக இருக்கமுடியும் என இத்தேற்றம் கூறுகிறது. இத்தேற்றத்தில் "இருந்தால்", "இருந்தால் மட்டுமே" எனும் இரு பகுதிகளை முறையே நிறுவிய யூக்ளிடு, ஆய்லர் கணிதவியலாளர்களின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. மேலும்...


இளைய சைரஸ் என்பவர் அகாமனிசிய இளவரசர் மற்றும் தளபதி ஆவார். இவர் கிமு 408 முதல் 401 வரை லிடியா மற்றும் ஐயோனியாவின் ஆளுநராக இருந்து ஆட்சி செய்தார். இவர் இரண்டாம் டேரியஸ் மற்றும் பாரிசாடிஸ் ஆகியோரின் மகனாவார். இவர் கிமு 401 இல் பாரசீக அரியாசத்திலிருந்து தன் அண்ணனான இரண்டாம் அர்த்தசெராக்சை அகற்றி அதில் தான் அமர குனக்சா சமரில் ஈடுபட்டு இறந்தார். சைரசின் வரலாறு குறித்து செனபோன் தனது அனபாசிஸ் என்ற நூலில் கூறியுள்ளார். மேலும்...

சூலை

ஸ்ப்பாக்ட்டீரியா சமர் என்பது பெலோபொன்னேசியன் போரின்போது நடந்த ஒரு தரைச் சமராகும். இது கிமு 425 இல் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையில் நடந்தது. பைலோஸ் சமர் மற்றும் அடுத்தடுத்த அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பல எசுபார்த்தன்கள் ஸ்ப்பாக்ட்டீரியா தீவில் சிக்கித் தவித்தனர். கிளியோன் மற்றும் டெமோஸ்தீனசின் தலைமையிலான ஏதெனியன் படை தீவை சுற்றிவளைத்து அவர்களை சரணடைய கட்டாயப்படுத்தியது. மேலும்...


அலாவுதீன் கில்சி என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட கல்சி அரசமரபைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளர் ஆவார். இவரது இயற்பெயர் அலி குர்ஷஸ்ப் ஆகும். வருவாய், விலைவாசி கட்டுப்பாடுகள் மற்றும் சமூகம் தொடர்பான, முக்கியமான ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிர்வாக சீர்திருத்தங்களை அலாவுதீன் தொடங்கி வைத்தார். இந்தியா மீதான பல மங்கோலிய படையெடுப்புகளிலிருந்தும் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார். மேலும்...

ஆகத்து

ஒளி மாசு என்பது தேவையற்ற அல்லது அதிகப்படியான செயற்கை விளக்குகளில் இருந்து வெளிப்படும் ஒளியாகும். விளக்கமாக கூறுவதானால் ஒளி மாசுபாடு என்பது பகல் அல்லது இரவின் போது, ​​மோசமாக பயன்படுத்தப்படும் ஒளி மூலங்களின் விளைவுகளைக் குறிக்கிறது. இந்த வகை மாசுபாடு பகல் முழுவதும் இருக்கக்கூடும் என்றாலும், இரவு வானத்தின் இருளில் தாக்கம் செலுத்துகின்றன. உலகின் 83 விழுக்காடு மக்கள் ஒளி மாசுபட்ட வானத்தின் கீழ் வாழ்கிறார்கள் என்றும், உலகின் 23 சதவிகித நிலப்பரப்பு ஒளிரும் வானத்தால் பாதிக்கப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும்...


தில்லி சுல்தானகம் என்பது ஓர் இசுலாமியப் பேரரசு ஆகும். இது தில்லியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டது. இப்பேரரசு 320 ஆண்டுகளுக்கு (1206–1526) நீடித்தது. தெற்கு ஆசியா மீது கோரி அரசமரபின் படையெடுப்பைத் தொடர்ந்து தில்லி சுல்தானகத்தை ஐந்து தொடர்பற்ற, பல்வேறு வகைப்பட்ட அரச மரபுகள் வரிசையாக ஆட்சி செய்தன. நவீனகால இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், தெற்கு நேபாளத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட பெரும் அளவிலான நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது. மேலும்...

செப்டெம்பர்

பாசேனியஸ் என்பவர் ஒரு எசுபார்த்தன் அரசப் பிரதிநிதியும் தளபதியும் ஆவார். இவர் கிமு 479 இல், கிரேக்க நகர அரசுகளின் கூட்டணியின் ஒருங்கிணைந்த தரைப் படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். அப்போது இவரது தலைமையிலான படைகள், கிரேக்கத்தின் மீதான இரண்டாவது பாரசீக படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பிளாட்டீயா போரில் முக்கிய வெற்றியைப் பெற்றன. மேலும்...


ஒக்தாயி கான் என்பவர் செங்கிஸ் கானின் மூன்றாவது மகன் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் இரண்டாவது ககான் ஆவார். இவர் தனது தந்தைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை தொடங்கி வைத்த பேரரசின் விரிவாக்கத்தை இவர் தொடர்ந்தார். மங்கோலியப் பேரரசு அதன் அதிக பட்ச பரப்பளவை அடைந்தபோது உலகின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேற்கு மற்றும் தெற்கில் ஐரோப்பா மற்றும் சீனா மீது படையெடுத்தார். மேலும்...

அக்டோபர்

ஜனபாதங்கள் என்பவை வேத காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த நாடுகள், குடியரசுகள் (கனபதங்கள்) மற்றும் முடியரசுகள் (சாம இராச்சியங்கள்) ஆகும். வேத காலமானது பிந்தைய வெண்கலக் காலம் முதல் இரும்புக் காலத்துக்குள் வரையிலான காலங்களைத் தொடுகிறது. இது கி. மு. 1500ஆம் ஆண்டு முதல் கி. மு. 6ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. 16 மகாஜனபாதங்களின் வளர்ச்சியின் போது, பெரும்பாலான ஜனபாதங்கள் அதிக சக்தி வாய்ந்த அண்டை நாடுகளால் இணைத்துக் கொள்ளப்பட்டன. மேலும்...


இராசாளி என்பது இந்திய துணைக்கண்டத்தில் முக்கியமாகக் காணப்படும் பொரி வல்லூறின் வலசை போகாத துணையினம் ஆகும். இது வலசை செல்லும் துணையினமாகவும் விவரிக்கபட்டுள்ளது. இராசாளி ஒரு சிறிய வலு உள்ள பறவையாகும். இதன் தோள் அகன்று இருக்கும். இதன் அலகு வெளுத்த ஈய நிறத்திலும் அதன் முனை சற்றுக் கருத்தும் காணப்படும். இதன் விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பாகவும், கால்கள் குரோம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதன் தலையும் கன்னத்தின் வழியாக செல்லும் கோடும் கருப்பாக இருக்கும். மேலும்...

நவம்பர்

ஈகோஸ்ப்பொட்டாமி சமர் என்பது பண்டைய கிரேக்கத்தில் கிமு 405 இல் நடந்த ஒரு கடற்படை சமராகும். மேலும் இது பெலோபொன்னேசியப் போரின் கடைசி பெரிய போராகும். இந்தப் போரில், லைசாந்தரின் தலைமையிலான எசுபார்த்தன் கடற்படையானது ஏதெனியன் கடற்படையை அழித்தது. ஏதென்சு தானியங்களை இறக்குமதி செய்யவோ அல்லது கடலில் தடையின்றி தன் பேரரசின் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தப் போருடன் பெலோபொனிசியப் போர் முடிவுக்கு வந்தது. மேலும்...


குருதேசம் என்பது இரும்புக் கால வட இந்தியாவில் அமைந்திருந்த ஒரு வேத கால இந்தோ-ஆரியப் பழங்குடியினக் கூட்டமைப்பு ஆகும். தற்போதைய மாநிலங்களான அரியானா, தில்லி, மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. இது நடு வேத காலத்தின் (அண். 1200 – அண். 900 பொ. ஊ. மு.) போது தோன்றியது. இந்தியத் துணைக்கண்டத்தில் முதன் முதலாக பதியப்பட்ட அரசு நிலை சமூகமாகக் குரு இராச்சியம் திகழ்கிறது. மேலும்...