ஆலத்தியூர் அனுமன் கோயில்

ஆலத்தியூர் இராம-அனுமன் கோவில், அல்லது ஆலத்தியூர் அனுமன் கோவில் என்பது இந்தியாவின் கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்திலுள்ள, திரூரின் அருகில் பொன்னானி ஆறு மற்றும் பாரதப்புழா ஆகியவற்றின் இடையே ஆலத்தியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற[1] இந்துக் கோவிலாகும். விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர் தான் இக்கோவிலின் மூலவர் என்றாலும் சிவனின் அவதாரம் என்று நம்பப்படுபவரும், இராம பக்தரும் சிரஞ்சீவிகளில் ஒருவருமான அனுமனுக்குத் தான் கோவிலில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது[2]. மேலும், சம முக்கியத்துவத்துடன் இலட்சுமணன், உபதெய்வங்களான கணபதி, விஷ்ணு, துர்க்கை, பத்ரகாளி, ஐயப்பன், நாக தேவதைகள், போன்றோருக்கும் கோவிலில் துணைச்சன்னதிகள் உள்ளன. ஆலத்தியூர் பெரும்திருக்கோவில் என்றும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது. உள்ளூர் புராணங்களின்படி, அனுமனின் பெரும்திருக்கோயில் சிலை 3000 ஆண்டுகளுக்கு முன்பாக சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது[3]. பங்குனி மாதத்தில் வரும் அஸ்த நட்சத்திரத்தன்று தான் இக்கோயிலின் பிரதிஷ்டை தினம் என தெரிகிறது. பல ஆண்டுகளாக இக்கோயிலின் பாதுகாவலர்களாக ஆலத்தியூர் கிராம நம்பூதிரிகள், வெட்டத்து ராஜா, கோழிக்கோடு சாமூத்திரியும் ஆகியோர் இருந்தனர். இக்கோவிலின் முக்கிய பிரசாதம் அவல் ஆகும். மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் சாமூத்திரி தலைமை அறங்காவலராக உள்ள அறக்கட்டளை மூலம் இந்த கோயில் நிர்வகிக்கப்படுகிறது. மலபார் தேவஸ்வம் வாரியத்தின் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் இந்த கோவில் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.[4]

அருள்மிகு ஆலத்தியூர் அனுமன் கோவில்
ஆள்கூறுகள்:10°52′20″N 75°56′21″E / 10.87236°N 75.93910°E / 10.87236; 75.93910
பெயர்
வேறு பெயர்(கள்):ஆலத்தியூர் அனுமன்காவு
பெயர்:அருள்மிகு ஆலத்தியூர் இராம-அனுமன் பெரும்திருக்கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:மலப்புறம்
அமைவிடம்:திரூர் அருகே ஆலத்தியூர்
சட்டமன்றத் தொகுதி:தவனூர்
மக்களவைத் தொகுதி:பொன்னானி
ஏற்றம்:9 m (30 அடி)
கோயில் தகவல்
மூலவர்:இராமர், அனுமன்
வரலாறு
கட்டிய நாள்:3000 ஆண்டுகளுக்கு முன்[சான்று தேவை]
இணையத்தளம்:https://www.alathiyoorhanumankavu.in/
ஆலத்தியூர் அனுமன் கோயிலிலுள்ள, அனுமன் இலங்கைக்குக் குதித்துச்சென்றதைக் குறிக்கும் கல்
ஆலத்தியூர் இராமர்-அனுமன் கோவில் பிராகாரம்
கோவில் வெளிப் பிராகாரம்

உள்ளூர் புராணங்கள்

தொகு

அனுமன் சீதையைத் தேடி இலங்கைக்கு செல்வதற்கு முன், இராமர் இங்கு அனுமனுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியதாக நம்பப்படுகிறது. இராமர் விக்கிரகத்துக்கு அருகில் அனுமன் விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது. அனுமன், இராமரின் வார்த்தைகளைக் கேட்பது போல், கையில் தடியை ஏந்தியபடி முன்னோக்கி சாய்ந்து நிற்கிறார். இங்கிருந்து சில மீட்டர் தொலைவில் லட்சுமணன் கோவில் உள்ளது. அனுமனும் இராமனும் தனிமையில் பேசுவதற்காக லட்சுமணன் ஒதுங்கி நின்றதாக நம்பப்படுகிறது. அனுமன் கடல் கடந்து இலங்கைக்கு பாய்ந்ததை நினைவுபடுத்தும் வகையில் இங்கு ஒரு நடைமேடை கட்டப்பட்டுள்ளது. இந்த நடைமேடையின் ஒரு ஓரமாக கடலின் அடையாளமாக ஒரு பெரிய கரிங்கல் வைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் இந்த நடைமேடையின் வழியாக ஓடி கரிங்கல்லைத் தாண்டி குதிக்கின்றனர். இந்த கோவிலில் இவ்வாறு குதிப்பது அதிர்ஷ்டம், உடல்நலம், நீண்ட ஆயுள், செல்வம் ஆகியற்றை வழங்கும் என்று நம்பப்படுகிறது. பக்தர்களின் அனைத்து துக்கங்களையும் அச்சங்களையும் நீக்குவது மட்டுமல்லாமல் அவர்களின் விருப்பங்களையும் ஆலத்தியூர் அனுமன் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.

கோவில் கட்டுமானம்

தொகு

கோவில் வளாகம் மற்றும் சுவர்கள்

தொகு

இக்கோயில் ஆலத்தியூர் கிராமத்தின் சரியான மத்தியில் அமைந்துள்ளது. கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கோயிலுக்கு எதிரே பல கடைகள், சந்தைகள் உள்ளன. கோவிலின் நுழைவு வாயில் மிகவும் குறுகலாக உள்ளதால் பெரிய வாகனங்கள் வரும்போது பல சிரமங்கள் ஏற்படுகிறன. வடகிழக்குப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் வடக்கே கோவில் குளம் உள்ளது. மிகவும் அகலமானதும் அழகானதுமான இந்த குளத்தில் தான் பக்தர்களும் அர்ச்சகர்களும் நீராடி கோயிலுக்குள் நுழைகின்றனர். குளத்தின் முன்புறம் சிறிய அரசமரம் ஒன்று காணப்படுகிறது. இந்துக்களின் நம்பிக்கை, இந்த புனித மரத்தின் உச்சியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், கீழே சிவனும் வசிக்கின்றனர் என்பது தான். தினமும் காலையில் ஏழு முறை அரசமரத்தை வலம் வருவது ஆயுள், உடல்நலம் ஆகியவற்றை தருவதாக நம்பப்படுகிறது. அதே நிலத்தில் ஒரு அத்திமரம் உள்ளது. ஆயுர்வேதத்தில் புகழ்பெற்ற நால்பாமரங்களான ஆலமரம், அரசமரம், அத்திமரம், இத்திமரம் ஆகியவையில் இரண்டு இங்கு ஒன்றாக வளர்வதால் இத்தலம் ஆலத்தியூர் என்று பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது. கிழக்குப் பகுதியில் இரண்டு அடுக்கு கோபுரம் கட்டப்பட்டுள்ளது. பழமையின் காரணமாக இந்த கோபுரம் பழுதடைந்துள்ளது. கோபுரத்தின் மேல் இராமர், அனுமன் மற்றும் லட்சுமணன் உருவங்கள் கொண்ட தகடு உள்ளது.

கிழக்குத் தாழ்வாரம் வழியாக உள்ளே நுழைந்தால் முதலில் வருவது பெரிய யானை முற்றம் ஆகும். ஒப்பீட்டளவில் இந்த யானை முற்றம் நீண்ட காலத்திற்கு முன்பு கட்டப்பட்டது. கோயிலில் கொடியேற்ற திருவிழா இல்லாததால் கொடிமரம் இல்லை. அதை நிறுவும் திட்டம் உள்ளது. இராமர் முன் ஒரு பெரிய பலிக்கல்லகம் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முக்கிய பலிபீடக்கல் இங்கு உள்ளது. இது மிகவும் உயரமாக இருந்தாலும், விக்கிரகம் வெளியில் இருந்து தெளிவாகத் தெரியும் வகையில் சற்று தாழ்வாகக் கட்டப்பட்டுள்ளது. அதன் மேல் அனுமன் உருவமும் தொங்கவிடப்பட்டுள்ளது. பலிக்கல்லகத்தின் தென்புறத்தில் ஒரு சிறிய கதவு காணப்படுகிறது. இந்தக் கதவு அனுமனின் பாதங்களை நோக்கியவாறு உள்ளது. கோயிலுக்குள் செல்ல முடியாதவர்களுக்காக இது கட்டப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பகுதியில் பிரசாதம் வழங்குமிடம் கட்டப்பட்டு வருகிறது. ராமருக்கு பால் பாயசம், அனுமனுக்கு அவல் நிவேத்தியம் இங்கு முக்கிய பிரசாதமாகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பலர் தங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டிக்கொண்டு அவல் படைத்து வருகின்றனர். 1 நாழி, 50 நாழி, 100 நாழி போன்ற பல அளவுகளில் அவல் வழங்கப்படுகின்றன. முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா இங்கு வழிபட்டு வழக்கில் இருந்து தப்பியதாக செய்திகள் வெளியாகின.[5][6]. பிரசாதம் வழங்குமிடத்துக்கு அருகில் விஷ்ணுவின் சிறிய சன்னதி அமைந்துள்ளது. அருகில் உள்ள கல்பகஞ்சேரி கிராமத்தில் உள்ள ஐரணி கோயிலின் பிரதான விக்கிரகமாக விளங்கிய விஷ்ணு, அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இங்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக உள்ளூர் நம்பிக்கை. இது விஷ்ணுவின் சிலை என்றாலும், விக்கிரகம் கிருஷ்ணராகவே காணப்படுகிறது. தரிசனம் மேற்கு நோக்கி உள்ளது.

விஷ்ணுவின் தரிசனத்தை முடித்துக்கொண்டு சுற்றி வரும்போது, ​​தென்மேற்கில் ஒரு சிறிய மணல் மேட்டையும், அதில் குதிக்க ஒரு கிரானைட் பீடத்தையும் காணலாம். இது அனுமனின் இலங்கை பயணத்தை சித்தரிக்கிறது. அதன் பின்னால் ஓடுவதும், கல் மேடையில் மிதிக்காமல் குதிப்பதும் வாழ்க்கையில் தடைகளைத் தாண்டுவதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. எனவே, பல பக்தர்கள் இதை முயற்சி செய்கிறார்கள். இந்த விழா கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேற்குப் பகுதியில் குறிப்பிடத்தக்க காட்சிகள் எதுவும் இல்லை. கோவிலின் வடக்குப் பகுதியில் இராமரின் தம்பி லட்சுமணரின் கோவில் உள்ளது. இங்கே லட்சுமணன் துணை பிரதிஷ்டை அல்ல, சமமான முக்கியத்துவம் வாய்ந்த பிரதிஷ்டையே. இங்கு, இராமருக்கும் அனுமனுக்கும் இடையே நடந்த உரையாடல் கேட்காதபடி, லட்சுமணர் சற்று விலகியே எழுந்தருளியிருப்பதாக நம்பப்படுகிறது. நான்கு கைகளுடைய விஷ்ணுவின் வடிவிலுள்ள ஆதிசேஷனின் அவதாரமாக நம்பப்படும் லட்சுமணரின் பிரதிஷ்டை. கிழக்கு திசை நோக்கி தரிசனம். செம்பினால் பூசப்பட்டதாக சிறியதொரு கோவில் தான் இங்கு காட்சியளிக்கிறது. முன்னால் சிறியதொரு சேவிக்கும் மண்டபமும் உள்ளது. லட்சுமணர் கோவிலுக்கு தென் பகுதியில் சிறிய கணபதி பிரதிஷ்ட உள்ளது; பின்புறம் நாக தேவதைகளின் பிரதிஷ்டையும் காணலாம். லட்சுமணருக்கு தனிப்பட்ட முறையில் வழிபாட்டு ரசீது வழங்குமிடமும் இங்குள்ளது. பால் பாயசம் தான் இங்கேயும் முக்கிய பிரசாதம்.

ஸ்ரீகோவில் என்றழைக்கப்படும் கருவறையானது பெரிய இரண்டு அடுக்கு சதுரத்தில் அமைந்துள்ளது. கருங்கட்களாலான சன்னதியின் இரண்டு தளங்களும் செம்பினால் இழைக்கப்பட்டுள்ளது. மேலே தங்கத்தாலான மாடம் ஜொலிக்கிறது. சன்னதிக்குள் மூன்று அறைகள் உள்ளன. அவற்றில், விக்கிரகம் வைக்கப்பட்டுள்ள கர்ப்பக்கிரகம் மேற்கு முனையில் உள்ளது. இராமர் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணுவின் விக்கிரகத்தில் சுமார் ஐந்தடி உயரத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருப்பதை காணலாம். இங்குள்ள விக்கிரகம் கருமைநிறக் கல்லால் ஆனது. இருப்பினும், பஞ்ச உலோகத்தினால் மூடப்பட்டுள்ளது. நான்கு கைகளுடைய இறைவனின் பின் வலது கரத்தில் சுதர்சன சக்கரமும், பின் இடது கையில் பாஞ்சசன்யம் சங்கும், முன் இடது கையில் கௌமோதகி கதையும், முன் வலது கையில் தாமரையும் இருப்பதைக் காணலாம். சீதையைத் தேடும் போது தனிமையில் வாடும் இராமனாகக் கருதப்படுகிறார். எனவே, இங்கு சீதைக்கு சன்னதி இல்லை. இதன் தென்புறத்தில் கட்டப்பட்ட மற்றொரு சன்னதியில் தான் அனுமன் விக்கிரகம் உள்ளது. சுமார் மூன்றடி உயரமுள்ள அனுமன் விக்கிரகம் இரண்டு கைகளாலும் சேவிக்கும் பாவனையில் இடது பக்கம் நோக்கி நிற்கிறது. இராமர் இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் சீதைக்கு செய்தியனுப்ப அனுமனுக்கு தனிமையில் கூறும் சில விவரங்களை பணிவுடன் கேட்கும் பாவனையில் அனுமன் இருப்பதாக நம்பப்படுகிறது. அனுமன் தன்னுடைய தலையை இடது பக்கம் சாய்த்த நிலையில் உள்ளார்.

கருவறை நேர்த்தியான சுவரோவியங்கள் மற்றும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை மிகவும் பழமையானவை அல்ல எனக் கருதப்படுகிறது. இங்கு முக்கியமாக இராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இராமர் பிறப்பு, சீதா சுயம்வரம், சடாயு மோட்சம், கதலி வனத்தில் அனுமன் போன்றவை முக்கியமானவை. ஆனால் இவற்றில் மிகவும் முக்கியமானது எட்டு கரங்களுடன் காட்சி தரும் பத்திரகாளியின் உருவம் ஆகும். இந்தப் ஓவியம் இங்கு வந்ததற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. அது என்னவென்றால், ஒரு காலத்தில், சமீபத்திலுள்ள பெரிய கபாலத்திங்கல் பகவதி கோயிலிலும் இங்குள்ள அதே அர்ச்சகர் இருந்ததாகவும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் அர்ச்சகராக இருப்பது கடினமாக இருந்தபடியால், ​​​​பகவதியை இங்கு நிரந்தரமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவ்வாறுதான் இங்கு பத்திரகாளி எழுந்தருளியதாகவும் கூறப்படுகிறது.

நாலம்பலம்

தொகு

கர்ப்பகிரகத்திலிருந்து வெளியேறும்போதுள்ள நான்காவது சுவர் கட்டுமானத்தை நாலம்பலம் என்று கூறுகின்றனர். சன்னதியை சுற்றி, மிகவும் அகலமான நாலம்பலம் கட்டப்பட்டு உள்ளது. கருங்கட்களாலான நாலம்பலம் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. நாலம்பலத்தின் நுழைவாயிலின் இருபுறமும் கதவுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் தெற்கு வாசல், குறிப்பாக பூஜைகள் மற்றும் ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வடக்குப் பக்கம் உள்ள வாசல் வாத்திய இசைக்கும் நாம ஜெபத்திற்கும் பயன்படுகிறது. நலம்பலத்தின் உள்ளே, தென்கிழக்கு மூலையில் வழக்கம் போல் திடப்பள்ளி என்றழைக்கப்படும் சமையலறை கட்டப்பட்டுள்ளது; வடகிழக்கு மூலையில் கிணறும் உள்ளது. சமையலறையை ஒட்டி அமைந்துள்ள தனி அறையில் பிரசாதம் விநியோகம் செய்யப்படுகிறது. தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய ஒற்றை அறையில் பிள்ளையார், ஐயப்பன் ஆகியோர் காட்சி தருகின்றனர். இத்தகைய பிரதிஷ்டை மிகவும் அரிது. சுமார் மூன்றடி உயரத்தில் நான்கு கைகளுடன் கூடிய வலம்புரி விநாயகர் உள்ளார். இவர், பின் வலது கையில் மழு, பின் இடது கையில் கயிறு, முன் இடது கையில் மோதகம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஐயப்பன் விக்கிரகம் சபரிமலை விக்கிரகத்தை மிகவும் ஒத்திருக்கிறது. இங்கு தான் சபரிமலை பக்தர்கள் மாலை அணிவித்தல், கட்டுநிறை எனப்படும் கோவிலுக்கு கொண்டுசெல்லும் பொருட்களை மூட்டை கட்டும் செயல் போன்றவை எல்லாம் செய்துவருகின்றனர். வடமேற்கு மூலையில் உள்ள ஒரு அறையில், துர்கா தேவியின் விக்கிரகம் கிழக்கு நோக்கி இருக்கிறது. நான்கு கரங்களுடைய விஷ்ணுதுர்க்கை தான் இங்கு வீற்றிருக்கிறார். இருப்பினும் திருமாலின் மார்பில் குடிகொண்டிருப்பவர் ஆதலால் லட்சுமியாகவும் இவர் வழிபடப்படுகிறார். சுமார் மூன்றடி உயரமுள்ள அம்மனின் விக்கிரகம் நான்கு கைகளுடையது. பின்னாலுள்ள வலது கையில் ஸ்ரீ சக்கரமும், பின் இடது கையில் சங்கும் உடைய தேவி முன் இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டிருக்கிறாள். முன் வலது கையால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இங்குள்ள தேவிக்கு நவராத்திரி நாட்கள் மிகவும் முக்கியமானவை.

சன்னதியைச் சுற்றி உள் பலிபீடம் கட்டப்பட்டுள்ளது. திக்பாலர்களை (கிழக்கு-இந்திரன், தென்கிழக்கு-அக்னி, தெற்கு-யமன், தென்மேற்கு-நிர்ருதி, மேற்கு-வருணன், வடமேற்கு-வாயு, வடக்கு-குபேரன், வடகிழக்கு-ஈசானன்) குறிக்கும் பலி கற்களும், சப்தகன்னியர் (தெற்கே ஒற்றை பீடத்தில் முறையே பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி), வீரபத்திரர் (கிழக்கில் சப்தகன்னியருக்கு அருகே), கணபதி (மேற்கில் சப்தகன்னியர்), சாஸ்தா (தெற்கு மற்றும் தென்மேற்கு இடையே), பிரம்மா (வடகிழக்கு மற்றும் கிழக்கு இடையே), அனந்தன் ( தென்மேற்கு மற்றும் மேற்கு இடையே), துர்கா தேவி (வடமேற்கு மற்றும் வடக்கு இடையே), சுப்பிரமணியன், விசுவக்சேனர்(வடக்கு மற்றும் வடகிழக்கு இடையே), ஆகியோரை குறிக்கும் பலி கற்கள் இங்கு காணப்படுகின்றன. இருப்பினும், கோவிலில் தினமும் சீவேலி என்ற பலி நிவேத்தியம் நடைபெறாததால், இவை குறியீட்டு கட்டமைப்புகள் மட்டுமே. விஷ்ணு ஆலயம் என்பதால், வடநாட்டில் உத்தரமாதர்கள் என்ற கருத்து ஒன்று உள்ளது. இதில் பாகீசுவரி, கிரியா, கீர்த்தி, லட்சுமி, சிருஷ்டி, வித்யா மற்றும் சாந்தி ஆகியோர் அடங்குவர். வீரபத்திரரும் கணபதியும் சப்தகன்னியருடன் வாசம் செய்வது போல் ஸ்ரீதரன், அஸ்வமுகன் என இரு தேவதைகளும் இடம் பெற்றுள்ளன. பலி கற்கள் கடவுள்/தெய்வத்தின் வெளிப்பாடுகள் என்று நம்பப்படுகிறது. எனவே, அவற்றை மிதிப்பதும், தொடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

தினசரி வழிபாட்டு முறை

தொகு

இந்த இராம அனுமன் பெரும்திருக்கோவிலில் தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. அதிகாலை 4:30 மணிக்கு நாதஸ்வரம், தவில், போன்ற வாத்தியங்களுடன் ஏழு முறை சங்கு ஊதப்பட்டு தேவதைகள் துயில் எழுப்பப்படுகின்றனர். அதன்பின், ஐந்து மணிக்கு கோவில் திறக்கப்படுகிறது. வழக்கம் போல நிர்மால்ய தரிசனம் தான் முதல் சடங்கு. அதன் பிறகு அபிஷேகங்கள் தொடங்குகின்றன. எண்ணெய், தண்ணீர் (சங்கு அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம்), வாசனை தூள், போன்றவற்றால் மூலவருக்கு விரிவான அபிஷேகம் செய்த பிறகு பொரி, வெல்லம், கதலிப்பழம் போன்றவை ஒன்றாக நிவேத்தியம் செய்யப்படுகின்றன. பின்னர் விக்கிரகம் மலர் மாலைகள், தங்க ரத்தின ஆபரணங்கள் மற்றும் சந்தனத்தால் மிக அழகாக அலங்கரிக்கப்படுகின்றது. பின்னர் ஆறு மணிக்கு கதவுகள் மூடப்பட்டு காலை பூஜை நடக்கிறது. இந்த நேரத்தில் நெய் பாயசம் தான் முக்கிய பிரசாதம் ஆகும். அதே நேரத்தில் கோவிலில் கணபதி ஹோமமும் நடத்தப்படுகிறது. அதன் பின்னர் துணை தேவதைகளுக்கான பூஜைகள் நடைபெறுகின்றன. அனுமனுக்கு சிறப்பு அவல் பிரசாத நிவேத்தியம் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. ஒரே வேளை சுமார் 12 நாழி (சுமார் 312 மில்லி லிட்டர் அளவுடைய ஒரு கேரள அளவீடு) அவல் இங்கு நிவேத்தியம் செய்யப்படுவதுண்டு. பின்னர், சுமார் 9:15 மணியளவில் கதவுகள் சாத்தப்பட்டு மதியகால பூஜை நடைபெறுகிறது. பால் பாயசம், சதுஸ்சதம் (காய்ந்த நெல்லை புழுங்காமல் எடுத்த அரிசி, வெல்லம், தேங்காய், மற்றும் கதலிப்பழம் ஆகிய நான்கு வித பொருட்கள் அடங்கிய பிரசாதம்) போன்றவை நிவேத்தியம் செய்யப்படுகின்றன. மதியகால பூஜை முடிந்து சுமார் 10 மணியளவில் கோவில் சாத்தப்படுகிறது.

மாலை ஐந்துமணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. கதிரவன் மறையும் வேளை தீப ஆராதனை நடைபெறுகிறது. கோயிலுக்குள்ளும் வெளியேயும் உள்ள தீபங்கள் முழுவதும் இந்த நேரத்தில் ஏற்றிவைக்கப்படுகின்றன. இது மிக அழகானதொரு காட்சியாகும். கோயிலில் கற்பூர ஆராதனை நடத்துவது இந்த நேரத்தில்தான். மற்ற நேரங்களில் சிறிய ஒரு நெய்விளக்கு ஏற்றி ஆராதனை செய்வதே வழக்கமாகும். இரவு ஏழு மணியளவில் அத்தாழ பூஜை எனப்படும் இரவுக்கான உணவு நிவேத்தியம் செய்யப்படுகிறது. அதன் பிறகு சுமார் 7:30 மணியளவில் கோவில் கதவுகள் மூடப்படும்.

இவை சாதாரண நாட்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகளே. விசேஷ நாட்கள், உதயாஸ்தமன பூஜை நடக்கும் நாட்கள், கிரகணம் நடைபெறும் வேளைகள், ஆகியவற்றின் போது வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு. உதயாஸ்தமன பூஜையின் போது இங்கு 18 பூஜைகள் நடைபெறுவதுண்டு. கிரகணமுள்ள நாட்களில் அது தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மூடப்படும் கதவுகள் அது முடிவடைந்த பின்னர் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே திறக்கும். அனுமனுக்கு நிவேத்தியம் மட்டும் தான் உள்ளது. காலை நேர பூஜைகளுக்கிடையேயும் மாலை நேர பூஜைகளின் போதும் செண்டை எனப்படும் வாத்தியம் பயன்படுத்தப்படுகிறது. இங்கு வழிபாடுகள் செய்யும் உரிமை அருகிலுள்ள கிராமமான திருநாவாயிலுள்ள கல்ப்புழ இல்லத்தாருக்கு தான் உண்டு. பிரதான அர்ச்சகர், மற்றும் துணை அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரம் கோவில் தேவஸ்தானத்துக்கு தான் உண்டு.

சிறப்பு நாட்கள்

தொகு

திருவோணத் திருவிழா

தொகு

ஆலத்தியூர் கோவிலில் வருடத்தின் மிக முக்கிய நிகழ்வான திருவோணத் திருவிழா கார்த்திகை மாதத்தின் பூராடம், உத்தராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் நடைபெறுகின்றது. இராமாயண மாதம் என்றழைக்கப்படும் ஆடிமாதத்தில் இங்கு அதிகமான மக்கள் கூடுகின்றனர். மேலும் அனுமனுக்கு முக்கியமான நாட்களாக கருதப்படும் செவ்வாய், வியாழன், மற்றும் சனி ஆகிய கிழமைகளும் இங்கு விசேஷம் ஆகும். மூன்று நாட்களும் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

போக்குவரத்து

தொகு

அருகிலுள்ள இரயில் நிலையம் திரூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் சுமார் 44 கி.மீ. தொலைவிலுள்ள கோழிக்கோடு நகரில் உள்ளது. பேருந்தில் வருவதாக இருந்தால் திரூரிலிருந்து திருக்கண்டியூர் வழியாக குற்றிப்புறம் செல்லும் பாதையில் 7.6 கி.மீ. தொலைவிலுள்ள முஸிலியாரங்காடி சந்திப்பிலிருந்து 800 மீ. தொலைவில், அனுமன்காவு செல்லும் பாதையிலுள்ளது இந்த கோவில்.

சுற்றிலுமுள்ள பார்க்கவேண்டிய இடங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை பிரதமர் ஒரு நாள் பயணமாக கேரளா வருகை". டைமெஸ் ஆஃப் இந்தியா. 2003-08-23. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/sri-lankan-pm-arrives-on-a-days-visit-to-kerala/articleshow/142980.cms. 
  2. "ஒரு ஊரே கோவிலாகிறது, ஆலத்தியூரில்". மாத்ருபூமி. 2020-02-15. https://www.mathrubhumi.com/travel/destination/kerala-alathiyur-hanuman-temple-is-a-favourite-pilgrimagation-ceneter-1.4531138. 
  3. "ஆர்வமுள்ள இடங்கள்". மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மலப்புறம், கேரள அரசு. பார்க்கப்பட்ட நாள் 2023-12-10.
  4. "முக்கியமான கோவில்கள்". மலபார் தேவஸ்வம் வாரியத்தின் நிர்வாகத்திலுள்ள கோவில்கள். பார்க்கப்பட்ட நாள் 2023-12-09.
  5. "Jayalalitha's 'divine' tryst" (in en). டைம்ஸ் ஆஃப் இந்தியா (கொச்சி). 2016-12-7. https://timesofindia.indiatimes.com/city/kochi/jayalalithaas-divine-tryst/articleshow/55848590.cms. 
  6. இராமகிருஷ்ணன், வெங்கடேஷ் (2016-12-7). "JAYALALITHA IN JUMBO THANKSGIVING" (in en). டெலகிராஃப் ஆன்லைன் (கொச்சி). https://www.telegraphindia.com/india/jayalalitha-in-jumbo-thanksgiving/cid/928666. 

வெளி இணைப்புகள்

தொகு