விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2022

சனவரி

பிசிசுட்ரேடசு என்பவர் கி.மு. 561 முதல் 527 இற்கு இடைப்பட்ட காலத்தில் பண்டைய ஏதென்சின் ஆட்சியாளராக இருந்தவராவார். ஏதென்சை உள்ளடக்கிய கிரேக்கத்தின் முக்கோண தீபகற்பமான அட்டிகாவை இவர் ஒன்றிணைத்து, பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாடுகளுடன் உருவாக்கி, பண்டைய கிரேக்கத்தில் ஏதென்சின் பிற்கால முக்கியத்துவத்திற்கான அடித்தளத்தை உருவாக்கினார். இவர் பனாதெனிக் விளையாட்டுகளில் பரிசு பெற்றவர். மேலும் இவர் ஓமரின் காவியங்களின் இறுதியான பதிப்பை அறிஞர் குழுவைக்கொண்டு உருவாக்கினார். மேலும்...


மாரி பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில், தற்கால சிரியாவின் கிழக்கு எல்லையில், கிழக்கு செமிடிக் மொழி பேசிய, பண்டைய நகர இராச்சியம் ஆகும். இந்நகரத்தின் சிதிலங்கள் சிரியாவின் டெல் அரிரி தொல்லியல் களத்தில் காணப்படுகிறது. சுமேரியா நாகரீகத்தின் மேற்கின் நுழைவாயில் என மாரி நகரம் அழைக்கப்பட்டது. மேலும்...

பெப்ரவரி

மௌரியப் பேரரசு (கிமு 322 – கிமு 185), இந்தியாவில் மௌரிய அரச வம்சத்தினர் ஆண்ட பேரரசு ஆகும். பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத்துறை தொடர்பில் மிகவும் வலுவானதுமாக இப்பேரரசு விளங்கியது. இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில், கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த மகத நாட்டை அடிப்படையாகக் கொண்டே இப் பேரரசு உருவானது. மேலும்...


பண்டைய எகிப்து இராச்சியத்தின் வரலாறு, கிமு 2686 இல் துவங்கி, கிமு 2181 முடிய விளங்கியது. இந்த இராச்சியத்தின் ஆட்சியாளர்களான பார்வோன்கள் இறந்ததற்கு பின்னர் உடல்களை அடக்கம் செய்வதற்கு பிரமிடுகளை கட்டியதால், பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடுகளின் காலம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். இந்த இராச்சியத்தை மூன்றாம் வம்சத்தவர் முதல் ஆறாம் வம்சத்தினர் வரை கிமு 2681 முதல் கிமு 2181 முடிய 500 ஆண்டுகள் ஆண்டனர். மேலும்...

ஏப்ரல்

சிமோன் என்பவர் கிரேக்கத்தில் கிமு 5 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு ஏதெனிய அரசியல்வாதியும் தளபதியும் ஆவார். இவர் மராத்தான் போரில் வெற்றி பெற்ற மில்டியாட்டீசின் மகனாவார். ஏதெனியன் கடல் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் சிமோன் முக்கிய பங்கு வகித்தார். சிமோன் புகழ்பெற்ற ஒரு இராணுவ வீரராக ஆனார். சலாமிஸ் போரில் ஈடுபட்ட பிறகு தளபதி இராணுவத் தரத்திற்கு உயர்ந்தார். மேலும்...


இராக்கிகர்கி இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட இத்தொல்லியல் களம், தில்லியிலிருந்து வடமேற்கே 150 கிமீ தொலைவில் உள்ளது. இராக்கிகடி தொல்லியல் களம் கிமு 6420 – 6230 மற்றும் கிமு 4470 – 4280 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். மேலும்...

சூன்

மிட்டிலீனியன் கிளர்ச்சி என்பது பெலோபொன்னேசியன் போரின்போது நடந்த ஒரு நிகழ்வாகும். அப்போது லெஸ்போஸ் தீவையும் அதில் உள்ள மிட்டிலீனி நகரத்தையும் ஏதெனியன் பேரரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஏதென்சின் ஆதிக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிட்டிலீனி கிளர்ச்சி செய்ய எண்ணம் கொண்டது. கிமு 428 இல், மிட்டிலீனியன் அரசாங்கம் எசுபார்த்தா, போயோட்டியா மற்றும் தீவில் உள்ள சில நகர அரசுகளிடன் இணைந்து கிளர்ச்சியில் ஈடுபடத் திட்டமிட்டது. மேலும்...


மூன்றாம் அமென்கோதேப் எகிப்தின் பதினெட்டாவது வம்சத்தவர்கள் ஆண்ட புது எகிப்து இராச்சியத்தின் ஒன்பதாவது பார்வோன் ஆவார். இவர் நான்காம் தூத்மேசின் இளவயது மனைவி முதேம்வியாவின் மகன் ஆவார். வரலாற்று ஆய்வாளர்கள் மூன்றாம் அமேன்கோதேப், புது எகிப்து இராச்சியத்தை கிமு 1386 முதல் 1349 முடிய ஆண்டதாகவும், வேறு சிலர் கிமு 1388 முதல் கிமு 1351/1350 முடிய ஆண்டதாக வேறுபட்டு கூறுகின்றனர். மேலும்...

சூலை

மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகள் என்பது 1221 முதல் 1327 வரை மங்கோலியப் பேரரசு பல்வேறு படையெடுப்புகளை இந்தியத் துணைக்கண்டத்தின் மீது நடத்தியதைக் குறிக்கும். அப்படையெடுப்புகளில் பிற்காலப் படையெடுப்புகள் பெரும்பாலும் மங்கோலியப் பூர்வீகம் உடைய கரவுனாக்கள் என்ற இனத்தவர்களாலேயே நடத்தப்பட்டன. மங்கோலியர்கள் துணைக்கண்டத்தின் பகுதிகளைப் பல தசாப்தங்களுக்கு ஆக்கிரமித்திருந்தனர். மேலும்...


சக்காரா என்பது மெம்பிசை தலைநகராகக் கொண்ட பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைகள் கொண்ட தொல்லியல் நகரம் ஆகும். இப்பண்டைய நகரம் கீழ் எகிப்தில் உள்ளது. இப்பண்டைய சக்காரா நகரத்தில், பழைய எகிப்து இராச்சியததை ஆண்ட ஜோசெர் மன்னரின் பிரமிடு, உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது. சக்கரா நகரத்தின் ஜோசர் பிரமிடு செவ்வக வடிவில் படிக்கட்டுகள் மற்றும், மேசை போன்ற அமைப்புகளுடன் கூடியது.மேலும்...

ஈல்கானரசு என்பது மங்கோலியப் பேரரசின் தென்மேற்குப் பகுதியாக நிறுவப்பட்ட ஒரு கானரசு ஆகும். இக்கானரசு மங்கோலியர்களால் குலாகு உளூஸ் என்றும் அலுவல் ரீதியாக ஈரான்சமீன் என்றும் அழைக்கப்பட்டது. ஈரான்சமீன் என்பதன் பொருள் ஈரானின் நிலம் ஆகும். இது மங்கோலிய குலாகுவின் குடும்பத்தால் ஆட்சி செய்யப்பட்டது. குலாகு என்பவர் செங்கிஸ் கானின் பேரனும் டொலுயின் மகனும் ஆவார். 1260இல் தன் அண்ணன் மேங்கே கான் இறந்த பிறகு மங்கோலியப் பேரரசின் மத்திய கிழக்குப் பகுதியை குலாகு பெற்றார். மேலும்...


பத்தாயிரம் என்பது பண்டைய கிரேக்கர்கள் அடங்கிய கூலிப்படையினர் ஆவர். இந்த படையைக் கொண்டு இளம் சைரஸ் பாரசீக பேரரசின் அரியாசனத்தை அவரது சகோதரர் இரண்டாம் அர்தசெர்க்சிடம் இருந்து கைப்பற்ற முயற்சித்தார். குனாக்சா போருக்கு அணிவகுத்து சென்ற அவர்கள் மீண்டும் கிரேக்கத்திற்கு (கிமு 401-399) திரும்பி வந்தனர். இப்பயணம் குறித்து அவர்களின் தலைவர்களில் ஒருவரான செனபோன் தனது படைப்பான அனாபாசிஸில் பதிவு செய்துள்ளார். மேலும்...

ஆகத்து

சுபுதை என்பவர் செங்கிசு கானின் ஒரு மங்கோலியத் தளபதி. இவர் உரியாங்கை எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 20 இற்கும் மேற்பட்ட இராணுவப் படையெடுப்புகளுக்குத் தலைமை தாங்கி, 32 நாடுகளையும், களத்தில் நடைபெற்ற 65 போர்களையும் வென்றுள்ளார். வரலாற்றில் வேறு எந்த தளபதியையும் விட அதிக நிலப்பரப்பை வென்றோ அல்லது தாக்கியோ உள்ளார். மனித வரலாற்றில் மிகப்பெரிய தொடர்ச்சியான நிலப்பேரரசான மங்கோலியப் பேரரசை விரிவாக்கம் செய்வதற்காக இவர் இப்போர்களை நடத்தினார். தகவல் தொடர்பற்ற 13 ஆம் நூற்றாண்டில் ஒன்றுக்கொன்று சுமார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த படைகளை ஒருங்கிணைத்து இயக்கி வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும்...


ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்சு என்பது கிமு 480 முதல் 404 வரையிலான காலத்திய ஏதென்சின் கிரேக்க நகர அரசாகும். பெரிக்கிளீசு காலம் என அழைக்கப்படும் இக்காலம் "ஏதென்சின் பொற்காலம்" என்று அழைக்கப்பட்டது. இது ஏதென்சின் அரசியல் மேலாதிக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பண்பாட்டுச் செழிப்பு ஆகியவை நன்கு வளர்ந்த காலம் ஆகும். கிரேக்கத்தின் மீதான பாரசீகப் படையெடுப்பு தோல்வியடைந்த பிறகு, டெலியன் கூட்டணி என அழைக்கப்படும் ஏதெனியன் தலைமையிலான நகர அரசுகளின் கூட்டணி, பாரசீக ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆசிய, கிரேக்க நகரங்களை சுதந்திரமாக வைத்திருப்பதற்காக பாரசீகர்களை எதிர்கொண்ட காலகட்டம் கிமு 478 இல் தொடங்கியது. மேலும்...

செப்டம்பர்

மங்கோலியப் பேரரசு என்பது வரலாற்றின் மிகப்பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசு ஆகும். இது 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலியத் தாயகத்தில் பல்வேறு நாடோடிப் பழங்குடியினங்கள் செங்கிஸ் கானின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டதிலிருந்து மங்கோலியப் பேரரசு தோன்றியது. இதன் அதிகபட்ச பரப்பளவின்போது யப்பான் கடல் முதல் கிழக்கு ஐரோப்பாவின் பகுதிகள் வரையிலும், வடக்கே ஆர்க்டிக் பகுதிகள் வரையிலும், கிழக்கு மற்றும் தெற்கே இந்தியத் துணைக்கண்டம், இந்தோசீனா மற்றும் ஈரானியப் பீடபூமி வரையிலும், மேற்கே லெவண்ட் மற்றும் கார்பேத்திய மலைகள் வரையிலும் விரிவடைந்திருந்தது. மேலும்...


படிமம்:Krishna tells Gita to Arjuna.jpg

மகாபாரதத்தில் கிருட்டிணன் என்பது பண்டைய பரத கண்டத்தின் இதிகாசமான மகாபாரதத்தில், கிருட்டிணரின் அரசியல் தந்திரங்கள், பகவத் கீதை உபதேசம் மற்றும் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு ஆற்றிய உதவிகள் பற்றியதாகும். மதுராவை தலைநகராக் கொண்ட சூரசேன நாட்டின் கொடுங்கோல் மன்னரும், சொந்த தாய்மாமனுமாகிய கம்சனை கொன்று, தன் தாய்வழி தாத்தாவும், யது குல மன்னருமான உக்கிரசேனரை மீண்டும் மதுராவின் அரியணையில் அமர்த்தியது முதல் இவரின் பங்கு முக்கியத்துவம் ஆரம்பமாகின்றது. மேலும்...

ஆல்சிபியாடீசு என்பவர் ஒரு முக்கியமான ஏதெனிய அரசியல்வாதி, பேச்சாளர், தளபதி ஆவார். பெலோபொன்னேசியப் போருக்குப் பிறகு முக்கியத்துவம் குறைந்த அல்க்மேயோனிடேயின் வம்சாவளியில் கடைசியானவர் இவராவார். அந்தப் போரின் இரண்டாம் பாதியில் இவர் ஒரு மூலோபாய ஆலோசகர், இராணுவத் தளபதி, அரசியல்வாதி என முக்கிய பங்குகளை வகித்தார். பெலோபொன்னேசியன் போரின் போது, ஆல்சிபியாடீசு தனது அரசியல் விசுவாசத்தை பலமுறை மாற்றிக்கொண்டார். கிமு 410 களின் முற்பகுதியில் இவர் ஏதென்சில், ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையை ஆதரித்தார். மேலும்...


1258 பகுதாது முற்றுகை என்பது சனவரி 29 முதல் பெப்ரவரி 10, 1258 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முற்றுகைப் போர் ஆகும். இக்குறிப்பிட்ட காலத்திற்குள் மங்கோலியப் பேரரசின் ஈல்கானரசுப் படைகள் மற்றும் கூட்டாளித் துருப்புகள் அப்பாசியக் கலீபகத்தின் தலைநகரான பகுதாதுவைச் சுற்றிவளைத்து, கைப்பற்றிச் சூறையாடின. மங்கோலியக் ககான் மோங்கேயின் தம்பியான குலாகுவின் தலைமையில் இந்த முற்றுகையை மங்கோலியர்கள் நடத்தினர். மோங்கே தனது ஆட்சியை மெசொப்பொத்தேமியா வரை விரிவுபடுத்த எண்ணினார். மேலும்...

அக்டோபர்

ஐன் ஜலுட் போர் என்பது எகிப்தின் பகிரி அடிமை வம்சத்தவர் மற்றும் மங்கோலியப் பேரரசுக்கு இடையே தென்கிழக்கு கலிலேயாவிலுள்ள செசுரீல் பள்ளத்தாக்கில் 3 செப்டம்பர் 1260 ஆம் ஆண்டு நடைபெற்ற போர் ஆகும். இசுரேலிலுள்ள செசுரீல் பள்ளத்தாக்கின் தற்போதைய அழிந்துபோன கிராமமான சிரினின் தளத்திற்கு அருகில் இது நடைபெற்றது. மங்கோலியப் படையெடுப்புகளின் நீட்சியாக இந்தப் போர் நடைபெற்றது. முதன் முறையாக ஒரு மங்கோலிய முன்னேற்றமானது போர்க்களத்தில் நடந்த நேரடியான சண்டையில் நிரந்தரமாக தோற்கடிக்கப்பட்டது இந்தப்போரில்தான். மேலும்...


லைசாந்தர் என்பவர் ஒரு எசுபார்த்தன் இராணுவ மற்றும் அரசியல் தலைவர் ஆவார். கிமு 405 இல் நடந்த ஈகோஸ்ப்பொட்டாமி சமரில் இவர் ஏதெனியன் கடற்படையை அழித்து, ஏதென்சை சரணடையச் செய்தார். மேலும் பெலோபொன்னேசியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். காலியார்டஸ் போரில் இவர் இறக்கும் வரை அடுத்த தசாப்தத்தில் கிரேக்கத்தில் எசுபார்த்தாவின் ஆதிக்கம் நிலைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். எசுபார்த்தாவைப் பற்றிய லைசாந்தரின் பார்வை பெரும்பாலான எசுபார்த்தன்களிடமிருந்து வேறுபட்டது. அவர் ஏதெனியன் பேரரசை அகற்றி எசுபார்த்தன் மேலாதிக்கத்தை ஏற்படுத்த விரும்பினார். மேலும்...

டொலுய் என்பவர் ஒரு மங்கோலியக் கான் ஆவார். செங்கிஸ் கான் மற்றும் போர்ட்டேயின் நான்காவது மகன் ஆவார். 1227இல் இவரது தந்தை இறந்தபோது டொலுயின் உளூஸ் அல்லது மரபுவழிப் பிராந்தியமானது மங்கோலியப் பீடபூமியில் இருந்த மங்கோலியத் தாயகத்தைக் கொண்டிருந்தது. ஒக்தாயி பெரிய கானாகப் பதவியேற்கும் வரை ஒரு பிரதிநிதியாக டொலுய் மங்கோலியப் பேரரசை நிர்வகித்தார். டொலுய் அதற்கு முன் சின், சியா மற்றும் குவாரசமிய யுத்தங்களில் சிறப்பாகப் பங்கெடுத்திருந்தார். மேலும்...


ஏதென்சை அகாமனிசியர் அழித்தல் என்பது கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பு நடத்தபோது நடந்த நிகழ்வு ஆகும். இது முதலாம் செர்கசின் அகாமனிசிய இராணுவத்தால் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த அழிப்பானது இரண்டு ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக, கிமு 480-479 என நடந்தது. கிமு 480 இல் தெர்மோபைலேச் சமரில் முதலாம் செர்கசின் வெற்றிக்குப் பிறகு, போயோட்டியா முழுவதும் அகாமனிசிய இராணுவத்தின் வசம் வீழ்ந்தது. செர்கசை எதிர்த்த இரண்டு நகரங்களான தெஸ்பியா மற்றும் பிளாட்டீயா ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும்...

நவம்பர்

இலியோ இடால்ஸ்டாய் என்பவர் ஒரு உருசிய எழுத்தாளர் ஆவார். எக்காலத்திலும் மிகச் சிறந்த நூலாசிரியர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காக 1902 முதல் 1906 வரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், அமைதிக்கான நோபல் பரிசுக்காக 1901, 1902, 1909 ஆகிய ஆண்டுகளிலும் முன்மொழியப்பட்டுள்ளார். இவர் ஒருமுறை கூட நோபல் பரிசை வெல்லாதது மிகுந்த சர்ச்சைக்குரியதாக உள்ளது. போரும் அமைதியும், அன்னா கரேனினா ஆகிய புதினங்கள் இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும். மேலும்...


பாரம்பரிய கிரேக்கம் என்பது பண்டைய கிரேக்கத்தில் கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகள் வரையான சுமார் 200 ஆண்டுகள் ஆகும். மேற்கத்திய நாகரீகத்தின் துவக்கக்கால அரசியல், கலை சிந்தனை (கட்டடக்கலை, சிற்பம்), அறிவியல் சிந்தனை, நாடகம், இலக்கியம், மேற்கத்திய நாகரிகத்தின் மெய்யியல் ஆகியவை கிரேக்க வரலாற்றின் இந்த காலகட்டத்திலிருந்து வந்தவையே. இவை பிற்கால உரோமைப் பேரரசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும்...

திசம்பர்

சகதாயி கானரசு என்பது ஒரு மங்கோலியக் கானரசாகும். இது பிற்காலத்தில் துருக்கியமயமாக்கப்பட்டது. செங்கிஸ் கானின் இரண்டாவது மகனான சகதாயி கான், அவரது வழித்தோன்றல்கள் மற்றும் பின் வந்தவர்கள் ஆகியோரால் ஆளப்பட்ட நிலப்பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஆரம்பத்தில் இது யுவான் அரசமரபின் பெயரளவிலேயே இருந்த தலைமை நிலையை ஏற்றுக்கொண்டது. எனினும் குப்லாய் கானின் ஆட்சியின் போது சகதாயி கானான கியாசுத்தீன் பரக் பேரரசரின் ஆணைகளை ஏற்பதை நிறுத்திவிட்டார். மேலும்...


இரண்டாம் அஜிசிலேயஸ் என்பவர் எசுபார்த்தாவின் அரசராக கி.மு. 399 முதல் 358 வரை இருந்தவர். பொதுவாக எசுபார்த்தாவின் வரலாற்றில் மிக முக்கியமான மன்னராக இவர் கருதப்படுகிறார். பெலோபொன்னேசியப் போரைத் தொடர்ந்து (கிமு 431-404) ஏற்பட்ட எசுபார்த்தன் மேலாதிக்கத்தின் போது அஜெசிலேயஸ் முக்கிய பாத்திரம் வகித்தார். போரில் துணிச்சலான செயல்களில் ஈடுப்பட்ட போதிலும், எசுபார்த்தாவின் உயர்ந்த நிலையைப் பாதுகாப்பதற்கான இராசதந்திர திறன்களை அஜிசிலேயஸ் கொண்டிருக்கவில்லை. மேலும்...