சிந்துவெளி நாகரிகம்

சிந்து சமவெளி நாகரிகம்
(சிந்துவெளி நாகரீகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப் பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை.[2]

சிந்துவெளி நாகரிகம்
புவியியல் பகுதிதெற்கு ஆசியா
காலப்பகுதிவெண்கலக் காலம்
காலம்கிமு 3300 - 1900[1]
தற்கால நாடுகளின் எல்லைகளைக் காட்டும் படத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் அமைவைக் காட்டும் படம்
பிந்தைய கால சிந்துவெளி நாகரிகத்தின் (கிமு 1900-1300) கல்லறை எச் கலாச்சாரம்,காந்தார கல்லறை பண்பாடு மற்றும் காவி நிற மட்பாண்டப் பண்பாடு தொல்லியல் களங்கள்

சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தொகு

சிந்துவெளிப் பகுதியில் கி.மு 7000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் என்பன இக்கூற்றுக்கான சான்றுகளாகும். எனினும் இவை சிறிய நகரங்களாகவும், சுதந்திரமான நிர்வாகம் மற்றும் தன்நிறைவுப் பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட நகர அரசுகளாகவே இருந்தன.

தற்போது ஹரப்பா நாகரிகம் என்று அறியப்படுகின்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம், முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அக்காலத்து வேறெந்த நாகரிகத்திலும் பார்க்க அளவிற் பெரிதாக சுமார் 13 இலட்சம் சதுர கிலோமீட்டர் (5 இலட்சம் சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டதாக வளர்ந்திருந்தது. இங்கே சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன. இந்த நகரங்கள், குடியேற்றங்களுடைய ஒரு தன்மைத்தான அமைப்பு இவையனைத்தும் ஓர் உயர் வளர்ச்சி நிலையில் சமூக ஒருங்கிணைப்பு வல்லமை கொண்ட ஒரே நிர்வாகத்திக் கீழ் அமைந்திருந்தமையைக் காட்டுகின்றது.

சிந்துவெளிப் பண்பாட்டின் காலப் பகுப்பு தொகு

முறையான ஹரப்பா பண்பாடு கி.மு 2600 இலிருந்து 1900 வரை நிலவியது. இதன் முன் நிலவிய மற்றும் பின் நிலவிய பண்பாடுகளான முந்தைய மற்றும் பிந்தைய ஹரப்பாப் பண்பாடுகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, இது, கி.மு 33 – 14 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பித்ததாகக் கருதலாம். சிந்துவெளிப் பண்பாட்டின் காலப் பகுப்பு தொடர்பில் இரண்டுவகையான பகுப்புகள் உள்ளன. ஒன்று சகாப்தங்கள் (Eras) மற்றது கட்டங்கள் (Phases).

கால எல்லை கட்டம் காலகட்டம்
7000 – 5500 மெஹெர்கர் I ஆரம்பகால உணவு உற்பத்தி
5500-3300 மெஹெர்கர் II-VI மண்டலமயமாக்கல் காலகட்டம்

(Regionalisation Era)

3300-2600 முந்தைய அரப்பா
3300-2800 அரப்பா 1 (ராவி காலம்)
2800-2600 அரப்பா 2 (கோட் திஜி காலம், நௌஷாரோ I,மெஹெர்கர் VII)
2600-1900 முதிர் அரப்பா ஒருங்கிணைப்பு
காலகட்டம்ம்

(Integration Era)

2600-2450 அரப்பா 3A (நௌஷாரோ II)
2450-2200 அரப்பா 3B
2200-1900 அரப்பா 3C
1900-1300 பிந்தைய அரப்பா (கல்லறை எச் கலாச்சாரம்) ஓரிடமாக்கல் காலகட்டம்

(Localisation Era)

1900-1700 அரப்பா 4
1700-1300 அரப்பா 5

மக்களினம் தொகு

சிந்து வெளிப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும், ஆய்வாளர்கள் பல்வேறு ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற கருத்துக்களை முன் வைத்து வாதிட்டு வருகின்றனர். சிந்து வெளி பண்பாட்டுக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என ஒரு சாராரும், இல்லை ஆரியரே என இன்னொரு பகுதியினரும் கூற வேறு பலர் பலவிதமான கலப்பினக் கொள்கைகளையும் முன் வைத்துள்ளனர்.

பொருளாதாரம் தொகு

 
பண்டைய லோத்தல் நகரிலுள்ள கப்பற் துறையின் இன்றைய தோற்றம்

சிந்துவெளி நாகரிகத்தின் பொருளாதாரம் வணிகத்திலேயே பெரும்பாலும் தங்கியிருந்தது எனலாம். போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டமை இதற்குக் காரணமாகும். சிந்துவெளி நாகரிக மக்களே சக்கரத்தை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும்.[3] இன்று தெற்காசியா முழுவதும் காணக்கூடிய மாட்டு வண்டிகளும், படகுகளும் அன்று பயன்படுத்தப்பட்டிருக்கலாம். படகுகள் பெரும்பாலும் சிறிய தட்டையான வடிவில் காணப்பட்டதோடு, இவை பாய்மரம் மூலம் செயற்படுத்தப்பட்டிருக்கலாம். தொல்பொருளியலாளர்கள் மேற்கு இந்தியாவின் குஜராத்தின் கடற்கரை நகரான லோத்தலில் பாரிய ஆழமான கால்வாயொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு கப்பற்துறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்ட பாரிய கால்வாய் வலையமைப்பொன்றை H. P. பிராங்போர்ட் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

4300–3200 BCEக்கு இடைப்பட்ட கல்கோலிதிக் (செப்புக் காலம்) காலத்தில், சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செரமிக் பொருட்கள் தெற்கு துர்க்மெனிஸ்தானிலும், வடக்கு ஈரானிலும் காணப்பட்ட செரமிக் பாண்டங்களுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் சிந்துவெளி மக்கள் அப்பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முந்திய ஹரப்பாக் காலத்தில் (கிட்டத்தட்ட 3200–2600 BCE) மட்பாண்டங்கள், முத்திரைகள், உருவங்கள், அணிகலன்கள் போன்றவை, மத்திய ஆசியா மற்றும் ஈரானியப் பீடபூமிப் பிரதேசங்களுடன் சிறப்பான முறையில் வணிகம் நடைபெற்றதை எடுத்துக்காட்டுகின்றன.[4]

சிந்துவெளி நாகரிக கலைப்படைப்புகளின் பரவலைக் கொண்டு மதிப்பிடும் போது, வணிகத் தொடர்புகள் ஒரு பரந்த பிரதேசத்தில் நடைபெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இப் பகுதிகள், ஆப்கானிஸ்தானின் பகுதிகள், பாரசீகத்தின் கடற்கரைப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு இந்தியா மற்றும் மெசொப்பொத்தேமியா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.

வணிகத் தொடர்புகள் கிரீட் மற்றும் எகிப்து வரை பரந்திருந்தமைக்கான சில சான்றுகளும் உள்ளன.[5]

நடு ஹரப்பாக் காலத்திலேயே, ஹரப்பா மற்றும் மெசொப்பொத்தேமிய நாகரிகங்களுக்கிடையில் பாரிய கடல்வழி வணிக நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளன. இவ் வணிக நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை "தில்முன்னிலுள்ள நடுத்தர வணிகர்கள்" முன்னெடுத்தனர் (பாரசீக வளைகுடாவிலுள்ள இன்றைய பக்ரைன் மற்றும் பைலகா பகுதிகள்).[6] பலகையினால் கட்டப்பட்ட, தனிக் கொடிமரத்தில் கட்டப்பட்ட பாய்மரப் படகுகள் மூலமாக இவ்வாறான நீண்ட தூர கடல் வணிகம் சாத்தியமானது.

பாகிஸ்தானிலுள்ள சொட்காஜென்-டோர் (ஜிவானிக்கு வடக்கேயுள்ள அஸ்ட்ரைட் டாஸ்ட் நதி), சொக்டா கொஹ் (பஸ்னிக்கு வடக்கேயுள்ள அஸ்ட்ரைட் ஷாடி நதி) மற்றும் பாலாகோட் (சொன்மியானிக்கு அருகிலுள்ளது) போன்ற கரையோரக் குடியிருப்புக்கள் மற்றும் இந்தியாவிலுள்ள லோத்தல் ஆகியன, ஹரப்பாவின் வணிக நிலையங்களாக இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. கடலுக்கு அருகிலுள்ள கழிமுகங்களில் அமைந்துள்ள ஆழமற்ற துறைமுகங்கள், மெசொப்பொத்தேமியா நகரங்களுடன் சிறப்பான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியுள்ளன.

சமயம் தொகு

 
பசுபதி முத்திரை, விலங்குகளால் சூழப்பட்ட யோகியின் தலையில் காளையின் கொம்புகள் மற்றும் திரிசூலத்துடன் கூடிய உருவம்

சமயச் சடங்குகளோடு தொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில் அகப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால சைவ சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது.

மொழி தொகு

சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை. இங்கு பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. இவ்வெழுத்துக்களை வாசிக்கும் முயற்சிகளில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் இன்னும் வெற்றி பெறாதது ஒரு புறமிருக்க இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீட்டு அடையாளங்களே என அண்மையில் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். எனினும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து தான் வருகின்றன. இது சிந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழிக்குரிய எழுத்துக்களே என நம்பும் ஆய்வாளர்களும், இம்மொழி எந்த மொழியினத்தைச் சார்ந்தது என்பது குறித்து ஒத்த கருத்துக்கு வரமுடியாமல் உள்ளனர். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும்பான்மையாகப் பேசப்படுவது இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகும். எனினும், இம்மொழி பேசுவோர், சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப்படுவதால், இது இந்தோ-ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பாக, இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரிடையே ஆதரவு உண்டு. இது முண்டா மொழியாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள். சிறப்பாக, இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன.

நகர அமைப்பும், கட்டிடக்கலையும் தொகு

 
மொகெஞ்சதாரோவில் அகழப்பட்ட அழிபாடுகள். குளிப்பிடம் முன் பகுதியில் உள்ளது.
 
லோத்தலில் கண்டெடுக்கப்பட்ட சிதிலமடைந்த நகரம்

சிந்துவெளி நாகரீகத்தில், சிக்கல் தன்மை வாய்ந்த, உயர்நிலை நகர்சார் பண்பாடு இருந்தது. இங்கே காணப்படுகின்ற நகர அமைப்பின் தன்மை, சுகாதாரத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கின்ற உள்ளூராட்சி அமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான அறிவு இந் நாகரீக மக்களிடையே நிலவியமையைக் காட்டுகின்றது. மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் தெருக்கள், முறையான வலைப்பின்னல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தம், துர்நாற்றம், கள்வர் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹரப்பா, மொஹெஞ்சதாரோ, மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கிகர்ஹி ஆகியவற்றில் காணப்படுகின்ற சுகாதார அமைப்பு முறைமைகள், உலகிலேயே முதல் நகர்சார் சுகாதார அமைப்பு முறைமைகளாகும். நகரங்களில், வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீர் பெற்றன. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.

பண்டைக்காலச் சிந்து வெளியின் செல்வாக்குக்கு உட்பட்ட எல்லா நகரப் பகுதிகளிலும் காணப்பட்ட கழிவு நீரகற்றல் மற்றும் வடிகால் அமைப்பு முறைகள், சமகால மத்திய கிழக்கு நகரங்களில் காணப்பட்டவற்றிலும் திறன் மிக்கவையாக இருந்தது மட்டுமன்றித் தற்கால இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள சில பகுதிகளில் காணப்படுபவற்றிலும் சிறந்தவையாகவும் காணப்படன.

சிந்துவெளி நாகரீகக்காலக் கட்டிடக்கலையின் தரம் பற்றி, அங்கே காணப்படுகின்ற இறங்கு தளங்கள், தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கற் கட்டுமான மேடைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் போன்ற இன்னோரன்ன அமைப்புக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பெரிய அளவிலான நகர் பாதுகாப்புக் கோட்டைகள், அக்காலத்து மெசொப்பொத்தேமியாவில் காணப்பட்ட பெரும்பாலான ஸிகரெட்டுக்களிலும் பெரியவை.

இவ்வாறான கோட்டைகள் கட்டப்பட்டதற்கான காரணம் இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. மெசொப்பொத்தேமியா, எகிப்து போன்ற, இப் பண்பாட்டின் சமகாலப் பண்பாடுகளில் காணப்படுவதற்கு முரணாக, இங்கே பிரம்மாண்டமான கட்டுமானச் சின்னங்கள் (monumental structures) எதுவும் காணப்படவில்லை. இங்கே, அரண்மனைகளோ, கோயில்களோ இருந்ததற்கான முடிவான சான்றுகளோ, அரசர், படைகள், சமயக் குருமார் போன்றவர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. ஒரு நகரத்தில், பொதுக் குளியல் இடம் எனக் கருதப்படுகின்ற, சிறப்பாகக் கட்டப்பட்ட குளியல் தடாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டைகள் மதிலால் சூழப்பட்டிருந்தபோதும், இவை பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்பட்டவையா என்பதில் தெளிவு இல்லை. இவை வெள்ள நீர் உட்புகாது தடுப்பதற்காகக் கட்டப்பட்டவையாகவும் இருக்கலாம்.

பெரும்பாலான நகரவாசிகள், வணிகராகவும், கைவினைஞராகவும் இருந்ததாகத் தெரிகிறது. முத்திரைகள், மணிகள் (beads) மற்றும் பலவகைப் பொருட்களைச் செய்வதற்காக தொலைதூர இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சில வீடுகள் ஏனையவற்றிலும் பெரியவையாகக் காணப்பட்டபோதிலும், பொதுவாக இவற்றின் அமைப்பு, சிந்துவெளி நகரச் சமுதாயம் பெருமளவுக்கு ஒரு சமத்துவச் சமுதாய அமைப்பைக் கொண்டு விளங்கியமையையே காட்டுகிறது.

சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி தொகு

கி.மு 1800 அளவில் இப் பண்பாட்டின் படிப்படியான வீழ்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகிறது. கி.மு 1700 இல் பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டுவிட்டன. ஆனாலும்,சிந்துவெளிப் பண்பாடு சடுதியாக மறைந்துவிடவில்லை. இப் பண்பாட்டின் பல கூறுகள் பிற்காலப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. நடப்புத் தொல்லியல் தரவுகள், பிந்திய ஹரப்பாப் பண்பாடு என்று குறிக்கப்படுகின்ற பொருள்சார் பண்பாடு, கி.மு 1000 – 900 வரையிலுமாவது தொடர்ந்திருக்கக்கூடும் என்று காட்டுகின்றன.

சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சிக்குக் காலநிலை மாற்றம் தொடர்பான இயற்கைக் காரணங்கள் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. .[7] சிந்துவெளியின் காலநிலை கி.மு 1800 இலிருந்து, குறிப்பிடத் தக்க அளவு குளிரானதாகவும், வறண்டதாகவும் மாறியது. காக்கர் ஹக்ரா ஆற்று (Ghaggar Hakra river) முறைமையில் குறிப்பிடத்தக்க பகுதி இல்லாமல் போனதும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் மேற்படி எடுகோள் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆரியர் முதலாக, ஆப்கானியர், துருக்கியர், முகலாயர் போன்றோர் இந்து குஷ் பகுதியில் உள்ள கணவாய்கள் வழியாகத் தென்னாசியாவுக்குள் ஊடுருவிய பாதையில், இப் பகுதி உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சிந்து வெளிப் பண்பாட்டின் வீழ்ச்சி மற்றும் ஆரியர் வட இந்தியாவுக்குள் நுழைந்த இந்திய-ஆரிய இடப்பெயர்வு தொடர்பான எடுகோள்கள் ஆராயப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ஒரு "ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை"யாக முன்வைக்கப்பட்டது. இதன் வீழ்ச்சிக்காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இக் கோட்பாட்டுக்கு ஒரு சான்றாக அமைந்தது. அத்துடன் போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் மேற்படைகளில் காணப்பட்டதும் இக் கோட்பாட்டிற்கு வலு சேர்த்தது. தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) இது பற்றிக் குறிப்பிட்டபோது, இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே, அழிவுக்காகக் "குற்றம் சாட்டப்படுகிறான்" என்றார். இன்று இக் கொள்கைக்கு மாற்றாக வேறு பல கொள்கைகளும் நிலவுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் வெளியிலிருந்து வரவில்லையென்றும், இந்தியாவே அவர்களது தாயகம் என்றும், இந்தோ ஐரோப்பிய மொழிகள் தோன்றியது இந்தியாவிலேயே என்றும், சில இந்திய ஆய்வாளர்கள், குறிப்பாக வட இந்திய ஆய்வாளர்கள் வாதாடி வருகிறார்கள். சிந்துவெளி நாகரீகம் ஆரியர்களுடையது என்பதும் இவர்களது வாதம். எனினும் இவ்வாதங்களுக்கு அனைத்துலக அளவில் அறிஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெறவில்லை.

சிந்துவெளி நகைகள் தொகு

 
ஊரின் முதல் வம்சத்தின் அரச குடுமப கல்லறையில் கிடைத்த மணிகள் பொறிக்கப்பட்ட தங்கத்திலான கழத்தணி. இது ஊரின் முதல் வம்ச (கிமு 2600-2500) காலத்தில் சிந்துவெளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.[8]

மெசொப்பொத்தோமியாவின் ஊரின் முதல் வம்சத்தினர் காலத்தில் அழகிய பல வண்ண கல் தங்க நகைகள் சிந்துவெளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.[8]

சிந்துவெளி எழுத்துக்கள் தொகு

மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள் தொகு

 
மயிலாடுதுறையில் கண்டறியப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடாரி

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.[9] இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.[10]

காவிரிக்கரையில் சிந்துசமவெளி எழுத்துக்கள் தொகு

தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.[11]

சிந்து சமவெளி நாகரிகம் தொகு

சிந்து சமவெளி நாகரிகம் உள்ள நகரான மொகஞ்சதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.

இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்து சமவெளியில் திராவிட குடும்ப மொழியே பேசப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.[12] சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால போருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.[13]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. John Marshall (archaeologist) (1931). Mohenjo-Daro and the Indus Civilization. https://archive.org/details/dli.ministry.17386. 
  2. சிந்து சமவெளி நாகரிகம்!
  3. Hasenpflug, Rainer, The Inscriptions of the Indus civilization Nordersrstedt, Germany, 2006.
  4. Parpola 2005, ப. 2–3
  5. The Hindus, Wendy Doniger, 2010, Oxford University Press, p.67, ISBN 978-0-19-959333-47
  6. Neyland, R. S. (1992). "The seagoing vessels on Dilmun seals". in Keith, D.H.; Carrell, T.L. (eds.). Underwater archaeology proceedings of the Society for Historical Archaeology Conference at Kingston, Jamaica 1992. Tucson, AZ: Society for Historical Archaeology. பக். 68–74. 
  7. சிந்து சமவெளி நாகரீகத்தின் அழிவிற்கு காரணம் http://www.maalaimalar.com/2014/02/28184609/Weak-monsoon-led-to-Indus-Vall.html
  8. 8.0 8.1 British Museum notice: "Gold and carnelians beads. The two beads etched with patterns in white were probably imported from the Indus Valley. They were made by a technique developed by the Harappan civilization" Photograph of the necklace in question
  9. http://www.bbc.co.uk/tamil/science/2014/11/141118_indusvalleydravidian
  10. தி இந்து நாளிதழ்(மே 1, 2006). "Significance of Mayiladuthurai find". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சூன் 17, 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.hindu.com/2006/05/01/stories/2006050101992000.htm. 
  11. பிபிசி இணையத்தில் இது தொடர்பாக வந்த செய்தி http://www.bbc.co.uk/tamil/highlights/story/2008/05/080522_archeologyfind.shtml
  12. "சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்தது". தினமணி. http://www.dinamani.com/tamilnadu/2015/01/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/article2642064.ece. பார்த்த நாள்: 29 சனவரி 2015. 
  13. சமவெளி நாகரிக காலத்து அரிய பொருட்கள்: சென்னை அருங்காட்சியகத்தில் பார்க்கலாம் தி இந்து தமிழ் 19 மே 2015

நூல்தொகை தொகு

மேலும் படிக்க தொகு

  • Coningham, Robin; Young, Ruth (2015), The Archaeology of South Asia: From the Indus to Asoka, c.6500 BCE–200 CE, Cambridge University Press

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துவெளி_நாகரிகம்&oldid=3739746" இருந்து மீள்விக்கப்பட்டது