தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance, TNA) என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இது இலங்கைத் தமிழ்சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இக்கூட்டணி மிதவாதத் தமிழ்த் தேசியக்கட்சிகளும் முன்னாள் போராளி இயக்கங்கள் சிலவும் இணைந்து 2001 அக்டோபரில் அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி ஆரம்பத்தில் இலங்கைத் தீவின் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற ஒரு தன்னாட்சி மாநிலத்தில் சுயநிர்ணயத்தை ஆதரித்தது. இலங்கையில் உள்நாட்டுப் போரைத் தீர்க்க ஆயுதப் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை அது ஆதரித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளாக பெரும்பான்மையினரின் மத்தியில் கருதப்பட்டாலும், அதன் தலைமை ஒருபோதும் தாம் புலிகளை ஆதரிக்கவில்லை எனவும், அரசாங்கத்தைப் போலவே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்து வந்தது.[1][2][3][4][5]
2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்து, விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூடமைப்பு தனியரசுக்கான கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய சுயாட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் ஏராளமான தாக்குதல்களுக்கு உள்ளாகினர், அதன் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கி. சிவநேசன், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் அரசு ஆதரவுக் குழுக்களால் கொல்லப்பட்டனர்.[6][7][8]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.[9] இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 33 உள்ளூராட்சி சபைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் உள்ளார். இவர் செப்டம்பர் 2015 முதல் 2018 திசம்பர் வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.[10][11]
த.தே.கூ உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்தது. புலிகளின் "விடுதலைப் போராட்டத்தை" அங்கீகரித்து, அவர்களே இலங்கைத் தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என அறிவித்தது.[15] இது அக்கூட்டமைப்புக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தியது. வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால், 2004 தேர்தலில் தமது சின்னத்தைப் பயன்படுத்த அனந்தசங்கரி நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றார்.[16] இதனால், கூட்டமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை மீளக் கொண்டு வந்தார்கள்.[17] 2004 தேர்தலில், கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, 633,654 வாக்குகளைப் (6.84%) பெற்று 22 இடங்களைக் கைப்பற்றியது.[18]
2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவுக்கு வந்தது.[23] 40,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் இறுதிப் போரில் ஆயுதப் படைகளினால் கொல்லப்பட்டனர்.[24][25][26] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குரல் கொடுத்து வந்தது.[27][28][29]
2015 மார்ச்சில், கிழக்கு மாகாண சபையில் முசுலிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.[47][48][49] இரண்டு கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.[50][51]
2015 ஆகத்து 17 இல் இடம்பெற்ற தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4.62% வாக்குகளைப் பெற்று, இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 16 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தது. முக்கிய கட்சிகளான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[56][57][58][59]
2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று 1வது வட மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியது.[61]
↑Robert C Oberst; Yogendra K Malik; Charles Kennedy; Ashok Kapur; Mahendra Lawoti, Syedur Rahman & Ahrar Ahmad (9 July 2013). Government and Politics in South Asia. Avalon Publishing. pp. 255–. ISBN978-0-8133-4880-3. Retrieved 30 July 2017.