பாக்யராஜ்

இயக்குனர், நடிகர்
(பாக்கியராஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கே.பாக்யராஜ் (Bhagyaraj, பிறப்பு: சனவரி 7, 1953) ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளன்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் கிருஷ்ணசாமி-அமராவதி அம்மாள் மூன்றாவது மகனாக பிறந்தார். செல்வராஜ், தன்ராஜ் என இரு அண்ணன்கள் உண்டு . தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.

கே.பாக்யராஜ்
பிறப்புசனவரி 7, 1953 (1953-01-07) (அகவை 71)
வெள்ளன்கோயில்,கோபிசெட்டிபாளையம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்

திரையுலக வாழ்க்கை

தொகு

1977-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலேவில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார்.

ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள் (1979). (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). முதல் படத்தில் சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்யராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அதில் அமைந்திருந்தது.

அடுத்து, சொந்த தயாரிப்பான ஒரு கை ஓசை திரைப்படம் துவங்கி தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார்.அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது.

அடுத்து வெளியான மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு வெற்றிப் படங்களாயின. அடுத்து மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு படமாக விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார். பாக்யராஜ் தனது முத்திரையை முழுமையாகப் பதிந்து வெற்றி ஈட்டிய திரைப்படங்களாக அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை கருதப்படுகின்றன. டார்லிங், டார்லிங், டார்லிங் வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின், 1982 ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்யராஜ் கையாண்ட சில விஷயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு போன்ற படங்களுக்கு பெரிய வசூலையும், விருதுகளையும் பெற்றுத்தந்தன.

சொந்த வாழ்க்கை

தொகு

தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த "பிரவீணா" என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மணி" ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார்[1]. இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருக்கிறார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு தன் முதல் படமான சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார்.

அரசியல் ஈடுபாடு

தொகு

துவக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சியாக எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தற்போது, தி.மு.க. கட்சியில் உள்ளார்.

எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்

தொகு

எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 11 பிப்ரவரி 1989 இல் பாக்யராஜ் தொடங்கிய ஒரு அரசியல் கட்சியாகும் . இந்த கட்சி 1991 கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த கட்சி ஆரம்ப கட்டத்திலேயே படுதோல்வி அடைந்தது.[2] பாக்யராஜ் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.[3] ஏப்ரல் 5, 2006 அன்று, கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில் பாக்யராஜ் திமுகவில் இணைந்தார், மேலும் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதாவை விமர்சித்தார். திமுகவில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வந்தார்.[4] பின்னர் திமுகவில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வருகிறார்.[5].

இலக்கிய ஈடுபாடு

தொகு

இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்யராஜ். முற்றிலும் நகைச்சுவைப் படமான 'இன்று போய் நாளை வா' என்னும் திரைப்படத்தில் கூட ஜெயகாந்தன் எழுதிய 'சமூகம் என்பது நாலு பேர்' என்னும் சிறுகதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் பாக்யா எனும் வார இதழ் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.

பாக்யராஜ் உருவாக்கிய இயக்குனர்கள்

தொகு

தமது குருவான பாரதிராஜாவைப் போலவே, பாக்யராஜும், பல திறமையான இயக்குனர்களை உருவாக்கினார். இவர்களில், பாண்டியராஜன், ரா.பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன் மற்றும் ஜி. எம். குமார் ஆகியோர் வெற்றிகரமான இயக்குனர்களாகத் திகழ்ந்தனர்.

சிறப்புக் கூறுகள்:

தொகு

நடிகராக

பாக்யராஜ் ஒரு நடிகராகத் தமது எல்லைகளை உணர்ந்தவராக விளங்கினார். அவர் தனக்கென உருவாக்கிக் கொண்ட பாத்திரத்தை அப்பாவித்தனமும் சாமர்த்தியமும் சம அளவில் கலந்தோடிய ஒரு பண்புக்கூறாக வடித்திருந்தார். இப்பண்புக்கூறு மிகப் பெரும் அளவில் அவருக்கு வெற்றியைத் தந்தது. தன்னைத் தானே விமர்சித்து கேலி செய்து கொள்ளும் ஒரு அரிய பண்பு அவரது குணச்சித்திரமாக படங்களில் வெளிப்பட்டு, ஒரு தனிப்பாணியை உருவாக்கின. ஒரு சராசரித் திரை நாயகனுக்கான இலக்கணங்களிலிருந்து விடுபட்டு, யதார்த்த உலகின் அன்றாட வாழ்க்கையில் பலங்களும் பலவீனங்களும் நிறைந்த மனிதனைச் சித்தரிப்பதாக அவரது பாத்திரங்கள் அமைந்தன.

திரைக்கதை அமைப்பாளராக

இந்தியாவின் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என 1980-ம் ஆண்டுகளில் பாக்யராஜ் போற்றப்பட்டார்[6]. திரைக்கதை அமைப்பில் அவர் கொண்டிருந்த ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான 'அவசர போலீஸ் 100'. 1977-ம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், “அண்ணா நீ என் தெய்வம்”. இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்து, தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்யராஜ் உருவாக்கிய 'அவசர போலீஸ் 100' வெற்றிப்படமாக விளைந்தது. கமலஹாசன் நடித்த “ஒரு கைதியின் டைரி” திரைப்படத்திற்கு பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் அமைத்திருந்தார். இப்படத்தைப் பின்னர் இந்தியில் அமிதாப் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்க 'ஆக்ரி ராஸ்தா' என்னும் பெயரில் பாக்யராஜ் இயக்கினார். இது மாபெரும் வெற்றி அடைந்தது.

இயக்குனராக

பாக்யராஜ் பாசாங்குகளற்ற, யதார்த்தமான ஒரு இயக்குனர். இவரது படங்களில் நகைச்சுவை உணர்வு இறுதிவரை இழையோடும்[7] தமது படங்களின் வழியாகத் தம்மை ஒரு அறிவுஜீவி என நிலை நிறுத்திக் கொள்ள அவர் முயன்றதில்லை. பெரிய தொழில் நுட்பங்களையும் அவர் சார்ந்திருக்கவில்லை. அநேகமாக அவர் படங்களில் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளோ, வெளி நாட்டுப் படப்பிடிப்புகளோ இருந்ததில்லை. அவர் முழுக்க முழுக்க, தாம் தமக்கென அமைத்துக் கொண்ட பாணி, தமது திறமைகள், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பித் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

இசையமைப்பாளராக

“இது நம்ம ஆளு” திரைப்படத்திற்குப் பாக்யராஜே இசை அமைத்து, ஒரு பாடலையும் பாடியிருந்தார். மேலும் ஐந்து படங்கள் வரை இசையையும் தொடர்ந்தார்.

விமர்சனங்கள்

பாக்யராஜ் தமது படங்களில் பாலியலை முன்னிறுத்துவதாக ஒரு விமர்சனம் எழுவதுண்டு. இதற்கு உதாரணமாக, மாபெரும் வெற்றி பெற்ற 'முந்தானை முடிச்சில்' முருங்கைக்காய், ‘சின்ன வீடு’ படத்தின் சில காட்சிகள், ‘இது நம்ம ஆளு’ போன்றவற்றைக் குறிப்பிடுவதுண்டு. ஆயினும், பாக்யராஜ், பாலியல் நெருக்கம் ஆபாசமாகத் தோன்றாதவாறு இவை அனைத்தையும் கணவன்-மனைவிக்கு இடையிலான நெருக்கத்தை மக்கள் விரும்பி ரசிக்கும் வகையில் வெளிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உடன் நடித்த நாயகியர்

தொகு

பாக்யராஜின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது பாத்திரத்தை முன்னிறுத்தியவையாகவே அமைந்தமையால், நாயகியருக்குப் பொதுவாக, பெருமளவில், அவற்றில் பணி இருந்ததில்லை. இருப்பினும், அந்த ஏழு நாட்கள் படத்தில் அம்பிகா மற்றும் மௌன கீதங்கள் திரைப்படத்தில் சரிதா ஆகியோர் தமது பாத்திரங்களில் திறம்பட நடித்து நற்பெயர் பெற்றனர்.

பிரவீணா, பூர்ணிமா பாக்கியராஜ் (இவர்கள் இருவரும் பாக்யராஜுடன் வாழ்விலும் இணைந்தவர்கள்), ரதி அக்னிஹோத்ரி (பாக்யராஜின் முதல் நாயகி), ராதிகா, ஊர்வசி (பாக்யராஜின் அறிமுகமான இவர் நகைச்சுவை மிளிரும் நடிப்பிற்குப் பெயர் பெற்றவர்), பானுப்ரியா, குஷ்பூ, மீனாக்‌ஷி சேஷாத்ரி ஆகியோர் பாக்யராஜின் திரை நாயகியரில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

பிற மொழிகளில் பாக்யராஜின் திரைப்படங்கள்

தொகு

இந்தியில் பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் ஆக்ரி ராஸ்தா. ஆயினும், அவரது பல படங்கள் தமிழில் வெற்றிக்கொடி நாட்டியமையால் ஏறக்குறைய அவரின் அனைத்துப் படங்களும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அந்தந்த மொழி முன்னணி நடிகர்களால் நடிக்கப்பெற்று பெருவெற்றி பெற்றன. இவற்றில் பலவற்றில் இந்தி நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார். சிலவற்றில் கோவிந்தாவும், முந்தானை முடிச்சின் மறுவாக்கத்தில் ராஜேஷ் கன்னாவும் நடித்திருந்தனர். இவற்றில் இந்தியில் ஓ சாத் தின் என்ற பெயரில் வெளியான அந்த ஏழு நாட்கள் மற்றும் பேட்டா என்ற பெயரில் வெளியான 'எங்க சின்ன ராசா' ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி அடைந்தன.

பாக்யராஜ் திரைப்படங்கள்

தொகு
ஆண்டு எண் தலைப்பு மொழி பாத்திரம் குறிப்புகள்
இயக்கம் தயாரிப்பு எழுத்து நடிப்பு
1977 1 16 வயதினிலே தமிழ்  Y உதவி இயக்குனர்

கௌரவ வேடம்

1978 2 கிழக்கே போகும் ரயில் தமிழ்  Y உதவி இயக்குனர்

கௌரவ வேடம்

3 சிகப்பு ரோஜாக்கள் தமிழ்  Y  Y கௌரவ வேடம்
1979 4 புதிய வார்ப்புகள் தமிழ்  Y  Y கதாநாயகனாக அறிமுகம்
5 கன்னிப்பருவத்திலே தமிழ்  Y  Y
6 சுவர் இல்லாத சித்திரங்கள் தமிழ்  Y  Y  Y இயக்குனராக அறிமுகம்
1980 7 பாமா ருக்மணி தமிழ்  Y  Y
8 ஒரு கை ஓசை தமிழ்  Y  Y  Y  Y
9 குமரி பெண்ணின் உள்ளத்திலே தமிழ்  Y
1981 10 மௌன கீதங்கள் தமிழ்  Y  Y  Y
11 இன்று போய் நாளை வா தமிழ்  Y  Y  Y
12 விடியும் வரை காத்திரு தமிழ்  Y  Y  Y
13 அந்த 7 நாட்கள் தமிழ்  Y  Y  Y
14 ஏக் ஹை பூல் இந்தி  Y மௌன கீதங்கள் படத்தின் மறு ஆக்கம்
15 ராதா கல்யாணம் தெலுங்கு  Y அந்த 7 நாட்கள் படத்தின் மறு ஆக்கம்
1982 16 தூறல் நின்னு போச்சு தமிழ்  Y  Y  Y
17 பொய் சாட்சி தமிழ்  Y  Y  Y
18 டார்லிங், டார்லிங், டார்லிங் தமிழ்  Y  Y  Y
1983 19 முந்தானை முடிச்சு தமிழ்  Y  Y  Y சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
20 சாட்டை இல்லாத பம்பரம் தமிழ்  Y
21 மூடு முள்ளு தெலுங்கு  Y முந்தானை முடிச்சு படத்தின் மறு ஆக்கம்
22 ஓ சாத் தின் இந்தி  Y அந்த 7 நாட்கள் படத்தின் மறு ஆக்கம்
1984 23 விதி தமிழ்  Y கௌரவ வேடம்
24 அன்புள்ள ரஜினிகாந்த் தமிழ்  Y கௌரவ வேடம்
25 தாவணிக் கனவுகள் தமிழ்  Y  Y  Y  Y
1985 26 ஒரு கைதியின் டைரி தமிழ்  Y
27 நான் சிகப்பு மனிதன் தமிழ்  Y
28 சின்ன வீடு தமிழ்  Y  Y  Y
29 மாஸ்டர்ஜி இந்தி  Y முந்தானை முடிச்சு படத்தின் மறு ஆக்கம்
1986 30 ஆக்ரி ராஸ்தா இந்தி  Y  Y ஒரு கைதியின் டைரி படத்தின் மறு ஆக்கம்
31 சம்சாரத குட்டு கன்னடம்  Y கன்னிப்பருவத்திலே படத்தின் மறு ஆக்கம்
32 கண்ணத் தொறக்கணும் சாமி தமிழ்  Y
1987 33 எங்க சின்ன ராசா தமிழ்  Y  Y  Y
34 சின்னக்குயில் பாடுது தமிழ்  Y
1988 35 இது நம்ம ஆளு தமிழ்  Y  Y இசை அமைப்பும் இவரே
1989 36 ௭ன் ரத்தத்தின் ரத்தமே தமிழ்  Y மிஸ்டர் இந்தியா இந்திப்படத்தின் தமிழாக்கம்
37 ஆராரோ ஆரிரரோ தமிழ்  Y  Y  Y  Y இசை அமைப்பும் இவரே
38 லவ் மாடி நோடு கன்னடம்  Y அந்த 7 நாட்கள் படத்தின் மறு ஆக்கம்
39 பொண்ணு பாக்க போறேன் தமிழ்  Y இசை அமைப்பும் இவரே
1990 39 அவசர போலீஸ் 100 தமிழ்  Y  Y  Y இவரின் மிகச்சிறந்த வெற்றிப்படம்
40 சாப்பல சென்னிகரயா கன்னடம்  Y சின்ன வீடு படத்தின் மறு ஆக்கம்
1991 41 பவுனு பவுனுதான் தமிழ்  Y  Y  Y இசை அமைப்பும் இவரே
42 ருத்ரா தமிழ்  Y  Y
1992 43 சுந்தர காண்டம் தமிழ்  Y  Y  Y  Y
44 பேட்டா தமிழ்  Y எங்க சின்ன ராசா படத்தின் மறு ஆக்கம்
45 அம்மா வந்தாச்சு தமிழ்  Y நந்தகுமார்
46 சுந்தரகாண்டா தெலுங்கு  Y சுந்தர காண்டம் படத்தின் மறு ஆக்கம்
47 ஹள்ளி மேஸ்த்ரு கன்னடம்  Y முந்தானை முடிச்சு படத்தின் மறு ஆக்கம்
48 ராசுக்குட்டி தமிழ்  Y  Y  Y
1993 49 மனே தேவரு கன்னடம்  Y மௌன கீதங்கள் படத்தின் மறு ஆக்கம்
50 அன்னய்யா கன்னடம்  Y எங்க சின்ன ராசா படத்தின் மறு ஆக்கம்
1994 51 வீட்ல விசேஷங்க தமிழ்  Y  Y  Y
52 ராஜா பாபு இந்தி  Y ராசுக்குட்டி படத்தின் மறு ஆக்கம்
53 அன்டாஸ் இந்தி  Y சுந்தர காண்டம் படத்தின் மறு ஆக்கம்
54 கோபி கிஷன் இந்தி  Y அவசர போலீஸ் 100 படத்தின் மறு ஆக்கம்
1995 55 ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தமிழ்  Y  Y  Y
56 தாய்க்குலமே தாய்க்குலமே தமிழ்  Y
1996 57 இன்ட்லோ இல்லாலு வன்டின்லோ பிரியுரலு தெலுங்கு  Y தாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் மறு ஆக்கம்
58 அதிரிந்தி அல்லுடு தெலுங்கு  Y இது நம்ம ஆளு படத்தின் மறு ஆக்கம்
59 மிஸ்டர்பெச்சரா இந்தி  Y  Y வீட்ல விசேஷங்க படத்தின் மறு ஆக்கம்
60 ஞானப்பழம் தமிழ்  Y இசை அமைப்பும் இவரே
1998 61 வேட்டிய மடிச்சுக்கட்டு தமிழ்  Y  Y  Y  Y
62 கர்வாலி பஹர்வாலி இந்தி  Y தாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் மறு ஆக்கம்
63 ஜகத் கில்லாடி கன்னடம்  Y அவசர போலீஸ் 100 படத்தின் மறு ஆக்கம்
1999 64 படேல் கன்னடம்  Y ராசுக்குட்டி படத்தின் மறு ஆக்கம்
65 நானு நன்ன ஹென்திரு கன்னடம்  Y தாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் மறு ஆக்கம்
2000 66 பாப்பா தி கிரேட் இந்தி  Y  Y வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தின் மறு ஆக்கம்
67 கபடி கபடி தமிழ்  Y
2001 68 பானல்லு நீனே புவியல்லு நீனே கன்னடம் வீட்ல விசேஷங்க படத்தின் மறு ஆக்கம்
69 12 பி தமிழ்  Y வசனமும் இவரே
2002 70 சுந்தரகாண்டா கன்னடம்  Y சுந்தர காண்டம் படத்தின் மறு ஆக்கம்
2003 71 சொக்கத்தங்கம் தமிழ்  Y  Y
2006 72 பாரிஜாதம் தமிழ்  Y  Y  Y
73 சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் தமிழ்  Y
74 ரெண்டு தமிழ்  Y
75 ரவி சாஸ்திரி கன்னடம்  Y
2007 76 முதல் முதலாய் தமிழ்  Y
77 காசு இருக்கணும் தமிழ்  Y ஜி.ஆர்.
2008 78 மாணவன் நினைத்தால் தமிழ்  Y
2009 79 நினைத்தாலே இனிக்கும் தமிழ்  Y
2010 80 உத்தம புத்திரன் தமிழ்  Y
81 சித்து +2 தமிழ்  Y  Y  Y  Y
2011 82 அப்பாவி தமிழ்  Y
83 மாவீரன் தமிழ்  Y வசனம் எழுதியுள்ளார்.

மகதீராவின் தமிழ் மொழி மாற்றுப் படம்

84 வாகை சூட வா தமிழ்  Y
2012 85 மிஸ்டர் மருமகன் Malayalam  Y பாலசுப்ரமணியம்
2013 86 ஒருவர் மீது இருவர் சாய்ந்து தமிழ்
2014 87 நினைத்தது யாரோ தமிழ்  Y அவராகவே கௌரவ வேடம்
2015 88 துணை முதல்வர் தமிழ்  Y  Y பெரியபாண்டி
89 மூணே மூணு வார்த்தை தமிழ்  Y அவராகவே
2016 90 கணிதன் தமிழ்  Y
91 வாய்மை தமிழ்  Y கௌரவ வேடம்
2017 92 முப்பரிமாணம் தமிழ்  Y அவராகவே கௌரவ வேடம்
93 அய்யனார் வீதி தமிழ்  Y
94 வெருளி தமிழ்  Y
95 இவன் யாரென்று தெரிகிறதா தமிழ்  Y
96 துப்பறிவாளன் தமிழ்  Y முத்து
97 பிரம்மா.காம் தமிழ்  Y குருக்கள்
2018 98 கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா தமிழ்  Y
99 கூத்தன் தமிழ்  Y
2019 100 சீதா தெலுங்கு  Y சீதாவின் அப்பாவாக

மேற்கோள்கள்

தொகு
  1. "K.Bhaagya Raj - Chitchat". Telugucinema.com. 12 June 2010. Archived from the original on 30 December 2010. பார்க்கப்பட்ட நாள் 17 November 2012.
  2. "அரசியலில் இருந்து திரையரங்குகள்: தமிழ்நாட்டின் சில வெற்றிகள் மற்றும் பல மிஸ்ஸின் கதை" (in en). The Hindu Businessline. https://www.thehindubusinessline.com/news/national/theatrics-to-politics-tamil-nadus-story-of-a-few-hits-and-many-misses/article10007040.ece. 
  3. "நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் திமுகவில் இணைந்தார்". 5 April 2006.
  4. "பாக்யராஜ் அதிமுகவுக்கு திரும்பலாம்". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-04-20.
  5. Kan, Arsath (2020-11-29). "அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா பாக்யராஜ்... பிரச்சாரத்துக்காக படை திரட்டப்படும் நட்சத்திர பட்டாளம்.!". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-20.
  6. "Stars : Star Interviews : K.Bhaagya Raj - Chitchat". web.archive.org. Archived from the original on 30 December 2010. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  7. Social Post. "Bhagyaraj – Movies, Photos, Filmography, biography, Wallpapers, Videos, Fan Club". entertainment.oneindia.in. Archived from the original on 13 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 November 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

குறிப்புதவிகள்

தொகு

பாக்கியராஜின் அரசியல் பற்றிய ஒரு வலைத்தளப் பதிவு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்யராஜ்&oldid=3933043" இலிருந்து மீள்விக்கப்பட்டது