வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூலை 2014
- சூலை 31:
- சுட்டு வீழ்ழ்த்தப்பட்ட மலேசியா எயர்லைன்சு விமானம் 17 வீழ்ந்த இடத்தை ஆராய்வதற்காக பன்னாட்டு நிபுணர் குழுவை அனுமதிப்பதற்காக உக்ரைனிய அரசு ஒரு நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தது. (வாசிங்டன் போஸ்ட்)
- தைவானின் கவ்ஷியூங் நகரில் நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடித்ததில் 25 பேர் உயிரிழந்தனர். 271 பேர் காயம் அடைந்தனர். (பிபிசி), (வாய்ஸ் ஒப் அமெரிக்கா)
- சூலை 30:
- லிபியாவில் பங்காசி நகரில் சிறப்புப் படைத் தளம் ஒன்றை இசுலாமியப் போராளிகள் கைப்பற்றினர். (பிபிசி)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: டெல் அவீவ் நகரைத் தாக்கக்கூடிய ஆயுதங்களை மேற்குக் கரைக்கு வழங்குவதற்கு ஈரானிய மதத் தலைவர் அயத்தொல்லா அலி கமெய்னி முன்வந்துள்ளார். (வைநெட்)
- இந்தியாவின் புனேயில் அம்பே என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 150 பேர் சிக்குண்டனர். (ஐபிஎன்)
- உக்ரைனின் கிழக்கே அவ்தீவ்க்கா நகரை இராணுவத்தினர் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றினர். (பிபிசி)
- நைஜீரியாவின் கானோ நகரில் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- லைபீரியாவில் பரவி வரும் எபோலா நோயைத் தடுக்கும் நோக்கில் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன. மேற்கு ஆப்பிரிக்காவில் 672 பேர் இதுவரை உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)
- 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்: 105கிகி பாரம்தூக்குதலில் கிரிபட்டியின் டேவிட் கட்டாட்டாவு தங்கப்பதக்கப் பெற்றார். இது அந்நாடு முதலாவது பொதுநலவாயப் பதக்கம் ஆகும். (பிபிசி)
- சூலை 29:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: காசாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- சப்பானில் வெப்பக் காற்று வீசியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் (ஏஎஃப்பி)
- கினி தலைநகர் கொனாக்ரியில் ரமதான் முடிவையொட்டி இடம்பெற்ற ஒரு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- லைபீரியா, சியேரா லியோனியில் எபோலா நோய்த் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 672 ஆகியது. (பிபிசி)
- சியேரா லியோனியில் எபோலா நோய்க்கு எதிராகப் பரப்புரை செய்த சேக் உமர் கான் என்ற மருத்துவர் எபோலா வவைரசு தாக்கி உயிரிழந்தார். (ராய்ட்டர்சு)
- சூலை 28:
- உக்ரைனியப் படையினர் தோனெத்ஸ்க் வட்டத்தில் உள்ள தெபால்த்சேவெ, சாக்தார்ஸ்க், தோரெசு, லுத்துகைன் ஆகிய இடங்களை உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீளக் கைப்பற்றினர். (கீவ் போஸ்ட்)
- பிலிப்பீன்சில் அபு சயாப் போராளிகளின் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமடைந்தனர். (ஐஏஎன்எஸ்)
- சூலை 27:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: காசா கரையில் இசுரேலியத் தாங்கிகள் அகற்றப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு உடன்பட அமாசு இயக்கம் மறுத்ததை அடுத்து அங்கு மீண்டும் சண்டை ஆரம்பமானது. (பிடிஐ)
- லிபியாவில் பங்காசி நகரில் இராணுவத்தினருக்கு இருலாமியப் போராளிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 38 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் இராணுவத்தினராவார். (ஏஎஃப்பி)
- பிலிப்பீன்சின் மக்கள்தொகை 100 மில்லியனைத் தாண்டியது. (ஏஎஃப்பி)
- சூலை 26:
- காசா கரை மீது இசுரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்தது. (ஏஃப்பி)
- பாதுகாப்புக் கருதி திரிப்பொலியில் உள்ள தமது தூதரகத்தை அமெரிக்கா மூடியது. (ஏபி)
- ஆப்கானித்தானில் கோர் மாகாணத்தில் பேருந்துகளை மறித்த தாலிபான்கள் 14 சியா முஸ்லிம்களை சுட்டுக் கொன்றனர். (ஏபி)
- இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உலங்கு வானூர்தி ஒன்று விழுந்து நொறுங்கியதில் 7 விமானப் படையினர் உயிரிழந்தனர். (டைம்சு ஒஃப் இந்தியா)
- லைபீரியாவில் பணியாற்றும் ஓர் அமெரிக்க மருத்துவர் எபோலா நோயினால் பீடிக்கப்பட்டார். (ஏபி)
- 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்: இலங்கையின் சுதேஷ் பீரிஸ் ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் 62கிகி பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். 2014 போட்டிகளில் இலங்கை பெற்ற முதலாவது பதக்கம் இதுவாகும். (டெய்லிமிரர்)
- சூலை 25:
- சூலை ஆரம்பத்தில் ஆத்திரேலியக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு படகிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்த 157 இலங்கைத் தமிழ் அகதிகளை ஆத்திரேலியப் பெரும்பரப்பினுள் அழைத்து வர அரசு முடிவு செய்தது. (பிபிசி)
- சிரிய உள்நாட்டுப் போர்: ஜோர்தானின் வடகிழக்கே சிரிய எல்லைப் பகுதியில் பறந்த ஆளில்லா விமானம் ஒன்றை ஜோர்தானிய வான்படையினர் சுட்டு வீழ்த்தினர். (சேனல் ஏசியா)
- இசுலாமிய தேசப் போராளிகள் குறைந்தது 50 சிரிய இராணுவத்தினரைப் படுகொலை செய்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (ஏஎஃப்பி)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலும், அமாசும் 12 மணி நேர போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். (டைம்சு ஒஃப் இசுரேல்)
- சூலை 24:
- இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மேடக்கில் பாதுகாப்பற்ற கடவையைக் கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது தொடருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 20 மாணவர்கள் மற்றும் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். (இந்துஸ்தான் டைம்ஸ்)
- புர்க்கினா பாசோவில் இருந்து 116 பேருடன் அல்சீரியா நோக்கிப் புறப்பட்ட ஏர் அல்சீரியா விமானம் 5017 புறப்பட்ட 50 நிமிடங்களில் தொடர்புகளை இழந்தது. இதன் சிதந்த பாகங்கள் மாலியில் கண்டுபிடிக்கப்பட்டன. (ஏஎஃப்பி), (என்பிசி)
- உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் இருந்து மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. (தி ஆஸ்திரேலியன்)
- பாக்தாதின் வடக்கே கைதிகளின் அணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 52 கைதிகளும் 8 ஈராக்கிய இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஈராக்கின் 7வது அரசுத்தலைவராக புவாத் மாசும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)
- சூலை 23:
- இலங்கையிலிருந்து 2014 இல் ஹஜ் புனிதப் பயணம் செல்வோர்களை முடிவு செய்யும் பட்டியலை இலங்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.(மலரும்)
- மலேசியா எயர்லைன்சு விமானம் 17: கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கறுப்புப் பெட்டியுடன் உக்ரைன் இலிருந்து நெதர்லாந்துக்கு எடுத்துவரப்பட்டது. (பிசினெஸ் வர்ல்ட்)
- உக்ரைனில் நடைபெறும் போர் ஓர் உள்நாட்டுப் போர் என பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்ஆறிவித்துள்ளது. (த லோக்கல்)
- உக்ரைனியப் படையினர் தோனெத்ஸ்க் வட்டத்தில் கார்லீவ்க்கா, நெத்தய்லோவ், பெயர்வமாய்ஸ்கயே ஆகிய நகரங்களை உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றினர். (கீவ் போஸ்ட்)
- சவூர் மோகிலா என்ற இடத்தில் இரண்டு உக்ரைனியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களினால் சுட்டு வீழ்த்தப்பட்டன. (ஏபி)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலும், அமாசும் போர்க்குற்றங்கள் இழைப்பதாக ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை எச்சரித்துள்ளார். (பிபிசி)
- வடக்கு நைஜீரியாவில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 82 பேர் கொல்லப்பட்டனர். (யாகூ)
- ரம்மாசான் புயலில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 151 ஆக உயர்ந்தது. (ஏபி)
- லித்துவேனியா நாடு 2015 சனவரி 1 முதல் யூரோவைத் தனது நாணயமாக வைத்திருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொண்டது. (கொன்சீலியம்)
- டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் 222 சீனக் குடியரசில் வீழ்ந்ததில் 51 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர். (யூஎஸ்ஏ டுடே), (தமிழ்மிரர்)
- பொதுநலவாய விளையாட்டுகளின் ஆரம்ப நிகழ்வுகள் கிளாஸ்கோவில் இடம்பெற்றன. (பிபிசி)
- பொதுநலவாய விளையாட்டு நிகழ்வுகளில் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச கலந்து கொள்ள மாட்டார் என இலங்கை அறிவித்தது. மகிந்தவின் வருகையை எதிர்த்து பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புகள் கிளாஸ்கோவில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. (பிபிசி)
- சூலை 22:
- காபூல் பன்னாட்டு விமான நிலையத்தில் தாலிபான் போராளி தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் மூன்று வெளிநாட்டவர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- மலேசியா எயர்லைன்சு விமானம் 17: கொல்லப்பட்ட 298 பேரில் 200 பேரின் உடல்கள் உக்ரைனின் கார்கீவ் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடல் சோதனை ஆரம்பிக்கப்பட்டது. (பிபிசி)
- இந்தோனேசியாவின் அரசுத்தலைவராக ஜோக்கோ விடோடோ அதிகாரபூர்வமாகத் தேர்தெடுக்கப்பட்டார். (ஜகார்த்தா போஸ்ட்)
- சூலை 21:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: காசா கரையில் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கோரியுள்ளது. (பிபிசி)
- சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியா எயர்லைன்சு விமானம் 17 இன் கறுப்புப் பெட்டிகளை மலேசியாவிடம் கையளிக்க உருசிய-சார்பு கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் நஜீப் துன் ரசாக் கூறினார். (வாசிங்டன் போஸ்ட்)
- பாக்கித்தான், மற்றும் காஷ்மீர் இற்கிடையே பேருந்து ஒன்று பள்ளத்தாக்கு ஒன்றில் வீழ்ந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- சூலை 20:
- லிபியாவின் திரிப்பொலி பன்னாட்டு விமான நிலையம் மீது இசுலாமியப் போராளிகள் தாக்குதல் நடத்தினர். (ஸ்கை)
- மலேசியா எயர்லைன்சு விமானம் 17: விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இறந்த 298 பேரில் 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. (ஏபி)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: செஞ்சிலுவைச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க காசா கரையில் இரு மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு இசுரேல் உடன்பட்டது. (ஹாரெட்சு)
- ரம்மாசன் சூறாவளித் தாக்கத்தில் பிலிப்பீன்சில் இறந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்தது. தெற்கு சீனாவில் 18 பேர் உயிரிழந்தனர். (ஏபி)
- சூலை 19:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலின் தாக்குதலில் காசா கரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டியது. (ஏஎஃப்பி)
- எகிப்திய மேற்குப் பாலைவனப் பகுதியில் துப்பாக்கி நபர்கள் சுட்டதில் 21 படையினர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- போலந்து, உக்ரைன் நாட்டு பேருந்துகள் இரண்டு செருமனியின் டிரெஸ்டன் நகரில் மோதிக் கொண்டதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். (ஏபி)
- மலேசியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்களில் ஒருவர் தமிழர், மற்றையோர் சிங்களவரும், முஸ்லிமும் ஆவர். (டெய்லிமிரர்)
- சூலை 18:
- மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உருசிய-சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தே சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதைத் தாம் "நம்புவதாக" அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா தெரிவித்தார். (நியூயோர்க் டைம்சு)
- சிரிய உள்நாட்டுப் போர்: மத்திய சிரியாவில் எரிவாயுப் பகுதி ஒன்றைக் கைப்பற்றிய இசுலாமிய தேசப் போராளிகளின் தாக்குதலில் 100 சிரிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (இன்டிபென்டென்ட்)
- இசுலாமிய தேசப் போராளிகளின் எச்சரிக்கையை அடுத்து ஈராக்க்கிய நகரமான மோசுலில் இருந்து கிறித்தவர்கள் வெளியேறி வருகின்றனர். (பிபிசி)
- நைஜீரியாவில் தம்போவா நகரைத் தாக்கிய போகோ அராம் போராளிகள் பல பகுதிகளைத் தீக்கிரையாக்கினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ரம்மாசன் சூறாவளி தாக்கியதில் பிலிப்பின்சில் குறைந்தது 54 பேர் உயிரிழந்தனர். சூறாவளி தெற்கு சீனாவின் ஆய்னான், குவாங்டொங் மாகாணங்களை நெருங்கியது. (ராய்ட்டர்சு)
- 2011 இல் இலங்கையின் தங்காலை நகரில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி குராம் சேக் என்பவரைப் படுகொலை செய்து, அவரது காதலியான உருசியப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தங்காலை ஆளும் கட்சி முன்னாள் பிரதேச சபைத் தலைவர் சம்பத் சந்திர புஷ்ப விதானபத்திரன உட்பட நால்வருக்கு 20 ஆண்டுக் கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. (டெய்லிமிரர்)
- பொலிவியாவில் 10 வயது சிறுவர்கள் பாடசலைக்கு சென்றுகொண்டே சுய தொழிலில் ஈடுபடவும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தவும் அனுமதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. (பிபிசி)
- நைஜீரிய காற்பந்து அணிக்கு எதிரான தடையை பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தளர்த்தியது. (பிபிசி)
- சூலை 17:
- கலிபோர்னியாவில் மரணதண்டனை நிறைவேற்றம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. (எல்லே டைம்சு)
- ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கரிம வரியை நீக்க ஆதரவாக வாக்களித்தது. (ஏஎஃப்பி)
- ஈழப்போர்: இலங்கையில் காணாமல் போனோர்கள் தொடர்பிலான சனாதிபதி ஆணைக்குழுவிற்கு நிபுணத்துவ ஆலோசனை வழங்கும் நோக்கில் மூவரடங்கிய பன்னாட்டு நிபுணர் குழு ஒன்றை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச நியமித்தார். (டெய்லிமிரர்)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாசு, எகிப்தியப் பிரதமர் அப்துல் பத்தா அல்-சிசி ஆகியோரின் அனுசரனையில் அறிவிக்கப்பட்ட மற்றும் ஒரு போர்நிறுத்த உடன்பாட்டை இசுரேல் எற்றுக் கொண்டது, ஆனாலும் அமாசு இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை அடுத்து இசுரேல் காசா மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. (பிபிசி)(டைம்சு ஒஃப் இசுரேல்)
- உக்ரைனியப் போர் விமானம் ஒன்றை உருசிய வான் படையினர் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. (ஸ்கை)
- இரண்டாம் உலகப் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் போர்க்குற்ற ஆணயகத்திடம் இருந்த ஆவணங்களின் பிரதிகளை ஐக்கிய அமெரிக்காவின் பெரும் இன அழிப்பு நினைவு அருங்காட்சியகம் பெற்றுக் கொண்டு அதனை இணையத்தில் வெளியிட்டது. (ஏபி)
- ஆம்ஸ்டர்டாம் இலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைனின் தோனெத்ஸ்க்கில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர். (பிபிசி),(ராய்ட்டர்சு)
- தென் கொரியாவில் புசான் நகரில் சுரங்கத் தொடர்வண்டி ஒன்றில் தீப்பிடித்ததில் ஐவர் காயமடைந்தனர். (குளோபல்போஸ்ட்)
- உருசியாவில் யமால் தீபகற்பத்தில் திடீரென ஒரு மாபெரும் குழி ஒன்றும் எரிமலைவாய் ஒன்றும் உருவாகியது. (கிஸ்மோதோ)
- சூலை 16:
- ஆப்கானித்தான் எல்லைப் பகுதியில் வடக்கு வசீரித்தானில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். (பாக்கித்தான் டிரிபியூன்)
- பிலிப்பீன்சில் லூசோன் தீவை ரம்மாசன் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், பலத்த சேதம் ஏற்பட்டது. (சிஎனென்), (ராய்ட்டர்சு)
- சிரியாவின் அரசுத்தலைவராக மூன்றாம் முறையாக பசார் அல்-அசத் பதவியேற்றார். (ஏபி)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: காசாவில் இசுரேலிய எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்ததில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். (கார்டியன்)
- ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியின் அபூர்வமான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது. இவ்வால்வெள்ளி இரு பொருட்களால் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. (பிபிசி)
- 1995 பொசுனியா போரின் போது சிரெபிரெனிக்காவில் 300 இற்கும் மேற்பட்ட மக்களின் படுகொலைக்கு நெதர்லாந்து அரசாங்கம் பொறுப்பு என நெதர்லாந்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. (பிபிசி)
- சூலை 15:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: எகிப்தினால் முன்னெடுக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை இசுரேல் ஏற்றுக் கொண்டாலும், அமாசின் இராணுவப் பிரிவு ஏற்க மறுத்து விட்டது. (டைம்சு ஒஃப் இசுரேல்)
- மலேசியாவின் கடற்பகுதியில் 80 சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். ('சன் டெய்லி)
- இலங்கைக்கு எதிராக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்னெடுத்துள்ள விசாரணைகள் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. (தமிழ்வின்)
- பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கை ஒன்றை ஏற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. (தினகரன்)
- கிழக்கு ஆப்கானித்தான் பக்தில்க்கா மாகாணத்தில் சந்தை ஒன்றில் கார்க்குண்டு வெடித்ததில் குறைந்தது 89 பேர் கொல்லப்பட்டனர். (BBC) (ராய்ட்டர்சு)
- உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சினீச்னி நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (ஏபி)
- மாஸ்கோவில் சுரங்கத் தொடருன்று ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (ஏபி)
- மெக்சிக்கோவில் துஷ்பிரயோகத்திற்குள்ளான 458 சிறுவர்கள் உட்பட 596 பேரை அந்நாட்டுக் காவல்துறையினர் மீட்டனர். (ஏபி)
- சூலை 14:
- கம்போடியாவில் இராணுவ உலங்குவானூர்தி ஒன்று விழுந்து நொறுங்கியதில் நால்வர் கொல்லப்பட்டனர். (கம்போடியா டெய்லி),(கல்ப் டுடே)
- இரண்டரை ஆண்டுகளுக்கு முன் விபத்தில் மூழ்கிய இத்தாலியின் கொஸ்டா கொன்கோர்டியா பயணிகள் கப்பலை மீண்டும் இயக்க வைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பமாயின. (ஸ்கை நியூஸ்)
- வடகொரியா சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள கடற் பகுதியில் எறிகணைகளை ஏவியதாக தென் கொரியா அற்வித்துள்ளது. (ஏபி)
- உக்ரைனிய இராணுவ விமானம் ஒன்று லுகான்ஸ்க் நகருக்கு அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உருசியாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம் இது வீழ்த்தப்பட்டிருக்கலாம் என உக்ரைன் கூறுகிறது. (ஏபி)
- பெண்களை ஆயர்களாக நியமிப்பதற்காக வாக்கெடுப்பு ஒன்றை இங்கிலாந்து திருச்சபை நடத்துகிறது. (பிபிசி)
- மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா தீநுண்ம நோய் அதி வேகமாகப் பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 500 ஐத் தான்டியது. (ஏபி)
- சூலை 13:
- தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் (Nadine Gordimer) தன் 90வது வயதில் காலமானார்.(சீஎனென்)
- இசுரேலிய பாதுகாப்புப் படைகள் காசா கரையில் அமைந்திருந்த ஓர் ஏவுகணைட் தளம் ஒன்றைத் தாக்கி அழித்தனர். (சீஎனென்)
- சுலோவீனியா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றது. (சுலோவீனியா டைம்சு)
- 2014 உலகக்கோப்பை காற்பந்து: இறுதிப் போட்டியில் செருமனி அணி அர்ச்சென்டீனாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோபையைக் கைப்பற்றியது. (ஏபிசி)
- இலங்கைத் துடுப்பாட்ட வீரர் மகேல ஜயவர்தன தென்னாப்பிரிக்க, மற்றும் பாக்கித்தான் உடனான தொடர்களின் பின்னர் தேர்வுத் துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (டெய்லிமிரர்)
- சூலை 12:
- காசா கரை மீது இசுரேல் நடத்திய வான் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120 ஐத் தாண்டியது. (ஏபி)
- ஆப்கானியத் தாலிபான்கள் பாக்கித்தானில் ஊடுருவி நடுவண் நிருவாகத்தில் உள்ள பழங்குடிப் பகுதியில் மூன்று இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றனர். (ஏஎஃப்பி)
- துருக்கியின் இசுதான்புல் நகரில் வணிக நிறுவனம் ஒன்றில் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். (வேர்ல்ட் புலெட்டின்)
- ஆப்கானித்தானில் நடந்து முடிந்த சர்ச்சைக்குரிய அரசுத்தலைவர் தேர்தலில் வாக்குகள் மீள எண்ணப்படவிருக்கிறது. அப்துல்லா அப்துல்லா, அசுரப் கானி இருவரும் தாமே வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். (ராய்ட்டர்சு)
- ஜப்பானின் வடக்கு கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட 6.8 நிலநடுக்கத்தை அடுத்து சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. (ஏபி)
- 2014 உலகக்கோப்பை காற்பந்து: நெதர்லாந்து அணி பிரேசில் அணியை 3-0 என்ற கணக்கில் வென்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது. (ராய்ட்டர்சு)
- இலங்கையின் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர் சச்சித்திர சேனநாயக்கா சட்ட விதிகளை மீறிப் பந்து வீசியதாகக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பன்னாட்டுப் போட்டிகளில் அவர் விளையாட ஐசிசி தடை விதித்தது. (டெய்லிமிரர்)
- சூலை 11:
- சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே. கவுல் நியமிக்கப்பட்டார்.(ஒன் இந்தியா)
- ஜப்பானின் வடக்கு கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.(சிஎன்என்)
- உக்ரைனின் லுகான்ஸ்க் நகரில் ஏவுகணை ஒன்று வீழ்ந்து வெடித்ததில் குறைந்தது 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 37 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.(தினகரன்)
- இலங்கையின் வட மாகாண சபையின் ஆளுனராக சர்ச்சைக்குரிய முன்னாள் இலங்கை ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டார். (டெய்லிமிரர்)
- சூலை 10:
- உக்ரைனியப் படையினர் சிவேர்ஸ்க் நகரை உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றினர். (வால் ஸ்ட்ரீட் ஜர்னல்)
- காசா மீதான இசுரேலின் வான் தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர். இசுரேல் மீது தற்கொலை, மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தாம் நடத்தப்போவதாக ஹமாஸ் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். (பாலத்தீன மீடியா வாட்ச்)
- பர்மாவில் அரசு இரகசியங்களை வெளியிட்டமைக்காக நான்கு செய்தியாளர்கள் மற்றும் யங்கோனில் இருந்து வெளிவரும் யுனிட்டி என்ற பத்திரிகையின் ஆசிரியருக்கும் பர்மிய நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டுகள் கடின உழைப்புத் தண்டனை வழங்கியது. (ஏபி)
- சூலை 9:
- பக்தாத்தின் தெற்கே ஹம்சா நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட 53 பேரின் உடல்களை ஈராக்கியப் படையினர் கண்டெடுத்தனர். (பிபிசி)
- இந்தோனேசியாவில் அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது. (ஏபிசி)
- ஈழத்தமிழ் அகதிகள் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆத்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்தார். இவர் யாழ்ப்பாணத்திற்கு இரகசியப் பயணம் மேற்கொண்டார். (டெய்லிமிரர்),(தி ஆத்திரேலியன்)
- 2014 உலகக்கோப்பை காற்பந்து: அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அர்ச்சென்டீனா அணி நெதர்லாந்தை சமன்நீக்கி மோதலில் 4-2 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. (எல்லே டைம்சு)
- அதிகளவு அரசுத் தலையீடுகளைக் காரணம் காட்டி நைஜீரியக் காற்பந்து அணியை பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஃபீஃபா தடை விதித்தது. (பிபிசி)
- சூலை 8:
- இலங்கைவந்துள்ள தென்னாப்பிரிக்க உதவி அரசுத்தலைவர் சிறில் ரமபோசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடன் கொழும்பில் பேச்சுக்கள் நடத்தினார். (தமிழ்வின்)
- அமாசு படையினரின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இசுரேலிய விமானப்படையினர் காசா கரை மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினர். (பிபிசி)
- அல்-சபாப் இசுலாமியப் போராளிகள் சோமாலியா தலைநகர் மொகடிசுவில் அரசுத்தலைவர் மாளிகை மீது தாக்குதல் நடத்தினர். (ஏபி)
- நியோகுரி சூறாவளி சப்பானின் தெற்கே ஓக்கினாவா தீவைத் தாக்கியது. இருவர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 50 பேர் காயமடைந்தனர். (ஏபி)
- இந்தியாவுக்கும் வங்காளதேசத்திற்கும் இடையே வங்காள விரிகுடா குறித்த எல்லைத் தகராறு பற்றி விசாரித்த ஐக்கிய நாடுகள் அவையின் நிரந்தர நடுவர் நீதிமன்றம் வங்காளதேசத்துக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தது. (ராய்ட்டர்சு)
- 2014 உலகக்கோப்பை காற்பந்து: அரையிறுதிப் போட்டி ஒன்றில் செருமனியிடம் பிரேசில் அணி 1-7 என்ற கணக்கில் தோற்றதை அடுத்து ஏற்பட்ட வன்முறையில் சாவோ பாவுலோ நகரில் பேருந்துகள் பல தீக்கிரையாக்கப்பட்டன, வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. (ஏஎஃப்பி)
- சூலை 7:
- ஒரு வாரத்துக்கு முன்னர் ஆத்திரேலியாவுக்கு கடல் வழியாக படகில் வந்த 153 பேரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு ஆத்திரேலிய நீதிமன்றம் சூலை 8 செவ்வாய்க்கிழமை வரை இடைக்காலத் தடை விதித்தது. இவர்கள் ஆத்திரேலியக் கடற்படைக் கப்பலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். (தமிழ்நெட்), (பிபிசி)
- இலங்கையில் தாக்குதலுக்குள்ளாகிப் பின்னர் கைது செய்யப்பட்ட வட்டரக்க விஜித்த தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார். (தமிழ்மிரர்)
- இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக தென்னாப்பிரிக்காவின் உதவி அரசுத்தலைவர் சிறில் ரமபோசா தலைமையில் தூதுக்குழு ஒன்று இலங்கை வந்தது. (டெய்லிமிரர்)
- உக்ரைனின் கிழக்கே உருசிய-சார்பு கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அர்த்தியேமிஸ்க், துருஷ்கீவ்க்கா ஆகிய நகரங்களை உக்ரைனியப் படைகள் கைப்பற்றின. (பிபிசி)
- உக்ரைனின் கிழக்கே தோனெத்ஸ்க் நகருக்கு வெளியே மூன்று தரைவழிப் பாலங்களை கிளர்ச்சியாளர்கள் தகர்த்தனர். (பிபிசி)
- இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு போராளிகள் பக்தாத்தின் புறநகர் ஒன்றில் ஈராக்கிய இராணுவ ஜெனரல் ஒருவரைப் படுகொலை செய்தனர். (ராய்ட்டர்சு)
- உருசியத் தயாரிப்பு மில் எம்.ஐ.-8 உலங்குவானூர்தி வியட்நாம் தலைநகர் அனோயில் விபத்துக்குள்ளானதில் 16 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- தெற்கு மெக்சிக்கோ, குவாத்தமாலா பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். (வால் ஸ்ட்ரீட் ஜர்னல்)
- கென்ய அரசுத்தலைவர் உகுரு கென்யாட்டாவின் ஆட்சிக்கு எதிராக நைரோபி நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (ஏபி)
- சியாச்சியாவின் முன்னாள் அரசுத்தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான எதுவார்து செவர்துநாத்சே தனது 86வது அகவையில் காலமானார். (பிபிசி)
- சூலை 6:
- பாலத்தீன சிறுவன் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிழக்கு எருசலேமிலும் நாசரேத்திலும் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்ந்தன. 6 இசுரேலியர்கள் படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர். (எருசலேம் போஸ்டு)
- காசாவில் இருந்து இசுரேல் நோக்கி 25 ஏவுகணைகள் ஏவப்பட்டன. பதிலுக்கு இசுரேல் நடத்திய வான்தாக்குதலில் 6 அமாசுப் போராளிகள் கொல்லப்பட்டனர். (எருசலேம் போஸ்ட்)
- ஒரு வாரத்துக்கு முன்னர் ஆத்திரேலியாவுக்கு கடல் வழியாக இரு படகுகளில் சென்ற இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 203 பேரில் 41 பேரை ஆத்திரேலிய அரசு மட்டக்களப்புக்கு அருகில் கடற்பரப்பில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. (டெய்லிமிரர்)
- சூலை 5:
- ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில், 200க்கும் மேற்பட்ட எண்ணெய் லாரிகள் எரிந்து நாசம் அடைந்தன.(எல்படில்)(மஸ்ரேசஸ்)(ஸ்பெஷல் -ஓப்ஸ்).
- உக்ரைனின் கிழக்கே தமது கட்டுப்பாட்டில் இருந்த சிலோவியான்ஸ்க் நகரில் இருந்து உருசிய-சார்பு பிரிவினைவாதிகள் வெளியேறினர். (பிபிசி)
- கொழும்பு, பம்பலப்பிட்டியில் மாத்தறையில் இருந்து சென்ற தொடருந்து ஒன்றின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்தனர். (டெய்லிமிரர்)
- இசுரேலில் சூலை 2 இல் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலத்தீன சிறுவன் "உயிருடன் எரித்துக்" கொல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (பிபிசி)
- ஈழப்போர்: ஆத்திரேலியாவின் கடல் பகுதியில் 200 இற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகளுடன் வந்த இரண்டு கப்பல்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது பற்றிக் கருத்து தெரிவிக்க ஆத்திரேலியா மறுத்து வருகிறது. இவர்கள் இலங்கைக்குத் திரும்ப அனுப்பப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. (பிபிசி), (சிட்னி மோர்னிங் எரால்டு)
- 2014 உலகக்கோப்பை காற்பந்து: பிரேசில் வீரர் நெய்மார் கொலம்பியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் முதுகெலும்பு முறிவடைந்ததை அடுத்து எஞ்சிய உலகக்கோப்பை ஆட்டங்களில் விளையாட மாட்டார் அறிவிக்கப்பட்டது. (எஸ்பிநேசன்)
- சூலை 4:
- இலங்கையில் 1997 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவனை பகிடிவதை செய்து படுகொலை செய்தமைக்காக சந்திரன் சத்தீஸ்கரன் என்ற மாணவனுக்கு நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. (டெய்லிமிரர்)
- இலங்கையின் தெற்கு, மற்றும் கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட இரண்டு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர். (தமிழ்மிரர்), (டெய்லிமிரர்)
- சூலை 3:
- ஈழப்போர்: இலங்கையில் பளை, முகமாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மூன்று எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. (தமிழ்மிரர்)
- இந்தியாவுக்கு ஆர்ப்பூன் எனப்படும் அதிநவீன ஏவுகணைகள் வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. (இன்டர்நேசனல் பிசினஸ் டைம்ஸ்)
- மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 மணி நேரம் முடங்கியது. (டைம்ஸ் ஒப் இந்தியா), (இன்டர்நேசனல் பிசினஸ் டைம்ஸ்)
- ஈராக்கிய இராணுவம் சவூதி அரேபிய எல்லைப்பகுதியில் இருந்து மீள அழைக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேலியா தனது 30,000 இராணுவத்தினரை அங்கு அனுப்பியுள்ளது. (ராய்ட்டர்சு)
- தொங்கா அரசு லாவு தீவுகளுக்காக சர்ச்சைக்குரிய மினெர்வா பவழப்பாறைப் பகுதியை பிஜி நாட்டுக்கு வழங்கும் திட்டம் ஒன்றைப் பரிந்துரைத்துள்ளது. (பிஜி டைம்சு)
- ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் 4-கிமீ அகலமான 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளிக்கு மிக அருகில் நெருங்கியுள்ளது. (பிபிசி)
- சூலை 2:
- பொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் மக்களுக்கு உள்ளதென இலங்கை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. (தமிழ்மிரர்)
- ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் விமானப்படைக்கு சொந்தமான பேருந்தின் மீது தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படையினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 8 இராணுவத்தினர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.(பிபிசி),(வாஷிங்டன் போஸ்ட்),(டெய்லி மெயில் யுகே),(நியூ யார்க் டெய்லி நியூஸ்)
- வடகொரியா பசிபிக் கடலில் இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரியா கூறியுள்ளது. (ஏபி)
- எகிப்திய அரசுத்தலைவர் அப்துல் பத்தா அல்-சிசியின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்ற முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர் உடன்பட்டார். (கார்டியன்)
- பிரான்சின் முன்னாள் அரசுத்தலைவர் நிக்கொலா சார்கோசிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். (நைன்எம்எஸ்என்)
- 2013 ஆம் ஆண்டில் 4000 இற்கும் அதிகமான சிறுவர்கள் போர்களில் ஈடுபடுத்தப்பட்டதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. (சிட்னி மோர்னிங் எரால்டு)
- நியூசிலாந்தில் இடம்பெறும் குடும்ப வன்முறைகளைக் கண்டுபிடிப்பதற்கு புவியிடங்காட்டிகளைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. (நியூஸ்.கொம்)
- சூலை 1:
- இந்திய-அமெரிக்க அறிவியலாளர் அக்கோரி சின்ஹாவை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய அமெரிக்கா அண்டார்க்டிகாவில் உள்ள மலை ஒன்றுக்கு சின்ஹா என்று பெயர் வைத்தது. (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
- இந்தியாவின் ராசத்தான் மாநிலத்தின் பாரம்பரிய விலங்காக ஒட்டகத்தை பிரகடனப்படுத்த அம்மாநில ஆளும் அரசு முடிவெடுத்துள்ளது. (தி இந்து)
- சிசிலியின் கடற் பிரதேசத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 70 பேர் மூழ்கினர், 27 காப்பாற்றப்பட்டனர். (பிபிசி)
- கொச்சியில் இருந்து 164 பயணிகளுடன் தில்லி புறப்பட்ட ஏர்பஸ் 320 ரக விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, விமானம் அவசரமாக பெங்களூருவில் தரையிறக்கப்பட்டது.(இந்தியா டுடே),(எகோநோமிக் டைம்ஸ்),(இந்தியன் எக்ஸ்பிரஸ்)
- ஒருவாரகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உருசிய-சார்பு பிரிவினைவாதிகள் மீதான் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என உக்ரைன் அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ கூறினார். (ராய்ட்டர்சு)
- நைஜீரியாவின் மைதுகிரி நகரில் கார்க்குண்டு வெடித்ததில் 20 பேரை கொல்லப்பட்டனர். (ஏபி)
- வடக்கு அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டின் கிழக்கே கு கிளக்சு கிளான் கொடியொன்று கண்டுபிடிக்கப்பட்ட்டது. (த கார்டியன்)
- நியூசிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லோவு வின்சென்ட் பணத்துக்காக முறைகேடாக விளையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் தடையைப் பெற்றார். (ஏபிசி)
- சப்பான் தனது இராணுவத்தை நேச நாடுகளின் பாதுகாப்புக்கான போர்களில் ஈடுபடுவதற்கு அனுமதி அளித்தது. (ஸ்கைநியூஸ்)