விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2007

டிசம்பர் 25


இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தின் காரணரும், மைய நபரும் ஆவார். இவர் ஏசு, கிறிஸ்து இயேசு, நாசரேத்தூர் இயேசு மற்றும் நசரேயனாகிய இயேசு என்ற பெயர்களிலெல்லாம் அழைக்கப்படுகிறார். இஸ்லாம் மற்றும் பஹாய் நம்பிக்கை போன்ற சமயங்களிலும் இவர் ஒரு முக்கியமான தீர்க்கதரிசியாகக் கருதப்படுகிறார். இயேசு பற்றிய தகவல்கள் புனித விவிலியத்தின் நான்கு நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் மகன் என்றும், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (இரட்சகர்) என்றும் விசுவாசிக்கின்றனர். மேலும், சிலுவையில் மரித்த இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததாகவும், அவர் மூலமாக தாங்கள் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட முடியும் என்றும் நம்புகின்றனர். வரலாற்று ஆய்வாளரின் கருத்துப்படி இயேசு கி.மு. 8–2 தொடக்கம் கி.பி. 29–36 வரை பூமியில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர்.


காவிரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு புறநகர், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.


மிக குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பில்லிகுண்டுவை தாண்டி ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறு கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது.


டிசம்பர் 11

தெலுங்கு, தெலுங்கு திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.தென்னிந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேசத்தில் அரசு ஏற்புபெற்ற இம்மொழி இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்றாகும். தெலுங்கு தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 17வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 8 கோடியே 30 இலட்சம் (83 மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் தெலுங்கு ஆகும்.


தெலுங்கு திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி. மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப்போல் அல்லாது, தெலுங்கு மொழி சமசுகிருதத்தில் இருந்து தோன்றவில்லை. இந்தியாவில் ஆரியமொழி இந்தியாவில் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் திராவிட மொழி பேசப்பட்டு வந்தது என நம்பப்படுகிறது. முழுவதுமாக நிறுவப்படாது இருப்பினும், சிந்து சமவெளி நாகரீகம் திராவிட மொழி நாகரீகமாக இருப்பதற்கு அதிக அடிப்படை வாய்ப்புகள் உள்ளன.


நண்பர்களும் அன்னியர்களும் என்பதைப் பற்றிய கணிதத் தேற்றம் ராம்சே கோட்பாடு என்ற கணிதப் பிரிவைப் பாமரருக்கும் காண்பித்துக் கொடுக்கும் தேற்றமாகும்.


இத்தேற்றத்தைப் பற்றின மட்டில் இரு நபர்கள் இதற்கு முன் கை குலுக்கலோ அல்லது ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்தலோ செய்திருந்தால் அவர்களை நண்பர்கள் என்போம். இரு நபர்கள் நண்பர்களாக இல்லாவிட்டால் அவர்களை அன்னியர்கள் என்போம்.

இவ்வரையறையின் சிறப்பு என்னவென்றால், உலகத்திலுள்ள எந்த இரு நபர்களைக் காட்டினாலும் அவர்கள் நண்பர்களா அன்னியர்களா என்பதில் இப்பொழுது ஐயமே இருக்கமுடியாது. நமக்கு தெரியாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் நண்பர்களாகவோ அன்னியர்களாகவோ ஏதாவது ஒன்றாக இருந்துதான் ஆகவேண்டும். கணிதமரபின் துல்லியம் என்ற கட்டாயத்திற் குகந்த வரையறையிது.

ஆறு நபர்கள் ஒரு இடத்தில் காணப்படுகிறார்கள். அவர்களுக்குள் யார் யார் நண்பர்கள், யார் யார் அன்னியர்கள் என்பது தெரியாது. எப்படி யிருந்தாலும் அவர்களுக்குள் மூவராவது ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பார்கள்; அல்லது, மூவராவது ஒருவருக்கொருவர் அன்னியர்களாக இருப்பார்கள்.


டிசம்பர் 04
எடி மின்னோட்டம் (சுழல் மின்னோட்டம்)

சுழல் மின்னோட்டம் (swirls or eddies) அல்லது எடி மின்னோட்டம் என்பது மின்காந்தத் தூண்டல் மூலம் பெறப்படும் ஒரு நிகழ்வாகும். மின்கடத்தி ஒன்று மாறும் காந்தப்புலத்தில் அதன் திசைக்குச் செங்குத்தாக நகரும் போது, அக்கடத்தியில் தூண்டப்படும் மூடிய சுழல் மின்னோட்டம் உருவாகும். இதனை ஃபோகால்ட் என்பவர் கண்டறிந்தார். இது ஃபோகால்ட் மின்னோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.


மாறுதிசை மின்னோட்டத்தை ஒரு கடத்தியினூடாகப் பாய விடும் போது, கடத்தியினுள்ளும் வெளியிலும் ஒரு காந்தப் புலம் உருவாகிறது. மின்னோட்டம் உச்ச நிலையை அடையும் போது காந்தப்புலம் ஏறு நிலையை அடைந்து, பின்னர் மின்னோட்டம் குறையும் போது காந்தப்புலமும் குறையும். வேறு ஒரு மின்கடத்தியை இந்த மாறும் காந்தப் புலத்துக்கு அருகில் காந்தப்புலத் திசைக்குச் செங்குத்தாகக் கொண்டு வரும் போது, இந்த இரண்டாவது கடத்தியில் ஒரு மின்னோட்டம் தூண்டப்படுகிறது. ஃபிளமிங்கின் வலக்கை விதிப்படி, காந்தப்புலத்தின் திசைக்குச் செங்குத்தாக இம்மின்னோட்டம் பாய்வதால், இவை உள்ளகத்தின் அச்சை மையமாகக் கொண்ட வட்டப் பாதையில் அமைகின்றன. இதற்காகவே இதனை சுழல் மின்னோட்டம் என அழைப்பர்.



இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் ஆதியான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது [1][2]. பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.


பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.


நவம்பர் 29
தூரயா செல்பேசிகள்

தூரயா (Thuraya) என்பது பூமி சார்பு செய்மதிகள் இரண்டின் மூலம் இயங்கும் செய்மதித் தொலைபேசியாகும். இது ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளை முதன்மையாகக் கருத்திற் கொண்டு நிலையாக இயங்கும் ஒரேயொரு பூமி சார்பு தொலைத் தொடர்பாடல் செயற்கைக்கோள் ஆகும். இன்னும் ஓரு செயற்கைக்கோள் பின்னணியில் இயங்குகின்றது. மேலும் ஒரு செயற்கைக்கோளை 2007 நவம்பர் 21 இல் ஏவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் இறுதியில் தூரகிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இருந்தும் இந்த வலையமைப்பை அணுகுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மார்ச் 2006 இன்படி 250,000 வாடிக்கையாளர்களை தூரயா கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இருந்து 360,000 தொலைத்தொடர்பாடல் கருவிகளை விற்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் ஏப்ரல் 15, 1997 இல் தொடங்கப்பட்டது. இது பல்வேறு சேவை வழங்கும் உரிமைகளை வேறு பல நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளது.


மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது கேள்விக்குரியதே. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு, லூக்கா என்பவற்றுடன் பொதுவான வசன எடுத்தாள்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.

இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலைப் பொதுவாக 4 பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்கலாம். ஒவ்வொன்றும் இயேசுவின் வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கிறது. இந்நூலின் முதன்மை நோக்கம் நாசரேத்தூர் இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை வலியுறுத்துவதாகும். மேலும் இந்நூல், இயேசு பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களை நிறைவு செய்ய வந்தார் என்பதை முன்னிறுத்துகிறது. இதற்காக குறைந்தது 65 சூழல்களில் பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுகிறது.


நவம்பர் 19

மஞ்சுஸ்ரீ (சீனம்: 文殊 Wénshū or 文殊師利菩薩 Wénshūshili Púsà; ஜப்.: மோஞ்சு; திபெத்: ஜம்பெல்யாங்;), அறிவாற்றலின் (பிரக்ஞை) போதிசத்துவர் ஆவார். சாக்கியமுனி புத்தரின் சீடரான இவர், அறிவு, புத்திக்கூர்மை மற்றும் மனத்தெளிவு முதலியவற்றின் வெளிப்பாடாக உள்ளார். அவலோகிதருக்கு அடுத்து மிகவும் புகழ் பெற்ற போதிசத்துவர் மஞ்சுஸ்ரீ ஆவார். இவருடையாக இணையாக சரசுவதி கருதப்படுகிறார்.

ஜப்பானில் மஞ்சுஸ்ரீ, சாக்கியமுனி மற்றும் சமந்தபத்திரர் ஸான்ஃஸோன் ஷாகா என்ற மும்மூர்த்தியாக உள்ளனர். மஞ்சுஸ்ரீ எட்டு அறிவாற்றலின் போதிசத்துவர்களுள் (எட்டு அறிவுணர்வு(பிரக்ஞா) போதிசத்துவர்களுள்) ஒருவர் ஆவார். மேலும் ஜப்பானில் வணங்கப்படும் 13 புத்தர்களுள் ஒருவர். திபெத்திய பௌத்தத்தில் இவர், அவலோகிதர் மற்றும் வச்சிரபாணியுடன் மும்மூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார்.


ரெக்காவின் நெருப்பு (ஃப்ளேம் ஆஃப் ரெக்கா) (烈火の炎 ரெக்கா நொ ஹோனோ?) என்பது நொபுயுகி அன்ஸாய் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு மங்கா தொடர். இதனுடைய தொலைக்காட்சி தழுவலாக இதே பெயரில் ஒரு அனிமே தொடரையும் உருவாக்கினர். இந்த மங்கா "ஷோனென் சண்டே" என்ற இதழில் 18 அக்டோபர் முதல் 18 ஏப்ரல் 2002 வரை 33 அத்தியாயங்களாக வெளி வந்தது. இத்தொடரை தழுவி இரண்டு வீடியோ கேம்களை கேம்பாய் அட்வான்ஸ் நிறுவனம் விறபனையில் விட்டுள்ளது.

ரெக்காவின் நெருப்பு என்ற இத்தொடர், ""ரெக்கா ஹானிபீஷீ" என்ற இளைஞனின் வாழ்க்கையை ஒட்டியது. இவன் தன்னை வீழ்த்துபவர்களுக்கு நிஞ்சாவாக இருப்பதாக அறிவித்ததால், அவ்வப்போது சகவயதினரிடன் எப்போதும் சண்டையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பான். இருப்பினும், யனாகி சகோஷிடா என்ற பெண்ணிடம் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் அவளுக்கு காலம் முழுவதும் நிஞ்சாவாக இருப்பதாக வாக்குறுதி அளிக்கிறான். யனாகி சகோஷிடா குணப்படுத்தும் ஆற்றலுள்ள ஒரு பெண், மேலும் கருணையும் அன்பும் நிரம்பியவள். இதற்கு இடையில், காகே ஹோஷி என்கிற மாயப்பெண் ரெக்காவின் வாழ்வில் புகுகிறாள். வெகு விரைவில் தனக்குள் நெருப்பைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளதை உணருகிறான் ரெக்கா. மேலும் அவன் 400 ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட, ஹொக்காகே நிஞ்சா இனத்தவரின் ஆறாம் தலைமுறை தலைவரின் ம்கன் என்பதையும், மாய ஆயுதங்களான மடோகுவை குறித்தும் அறிகிறான். இந்நிலையில் மோரியும், குரேயும் யனாகியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கின்றனர். அதற்காக பல்வேறு மடோகுகளை உபயோகிப்பவர்களை ரெக்காவுக்கு எதிராக ஏவுகின்றனர். ரெக்காவும் அவனது நண்பர்களும் தங்களது மடோகுகளையும் நெருப்பு டிராகன்களையும் வைத்துக்கொண்டு மோரியிடத்திலிருந்து எவ்வாறு யனாகியை காப்பாற்றுகின்றனர் என்பது தான் கதை. அதே நேரத்தில் ரெக்கா தனது தாயின் சாபத்தையும் தீர்க்க வேண்டும்.


நவம்பர் 05

சு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார். 1987 இல் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார். 1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; 2007 நவம்பர் இலங்கை வான்படையின் தாக்குதலில் கொல்லப்படும் வரை அப்பதவியில் இருந்தார். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்கமாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்த்தார். புலிகளின் சமாதானப் பேச்சுவாத்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடியாது என பிபிசி கருத்து வெளியிட்டுள்ளது.


காட்டீசியன் ஆள்கூற்று முறைமை.

கணிதவியலில், காட்டீசியன் ஆள்கூற்று முறைமை (Cartesian coordinate system) என்பது, இட வெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் துல்லியமாய்க் குழப்பம் ஏதும் இன்றிக் குறிக்கப் பயன்படும் ஒரு முறை. எடுத்துக்காட்டாக ஒரு தளத்திலுள்ள புள்ளிகள் ஒவ்வொன்றையும் இரண்டு எண்கள் மூலமாக இம்முறைப்படி வேறுபடுத்திக் குறிக்கலாம். இந்த இரண்டு எண்களும் குறிப்பிட்டத் தொடக்கப் புள்ளியில் இருந்து அளந்தறியப்படும். இவை x- ஆள்கூறு, y- ஆள்கூறு என அழைக்கப்படுகின்றன. ஆள்கூறுகளைத் தீர்மானிப்பதற்காக ஒன்றுக்கொன்று செங்குத்தான இரண்டு கோடுகள் வரையப்படுகின்றன இவைதான் ஒப்பீட்டுச் சட்டக் கோடுகள். இவை x- அச்சு, y- அச்சு எனப்படுகின்றன. x- அச்சைக் கிடை நிலையிலும், y- அச்சை நிலைக்குத்தாகவும் வரைவது மரபாகும். இக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டும் புள்ளி தொடக்கப்புள்ளி எனப்படும். இப்புள்ளியிலிருந்து தொடங்கி அச்சுக்கள் வழியே அருகிலுள்ள படத்தில் காட்டியபடி, அளவுகள் குறிக்கப்படுகின்றன.


அக்டோபர் 29

எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும் மேலதிகமாக தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வானூர்திகளும் அழிக்கப்பட்டன. ஈழப் போர் தொடங்கியதிலிருந்து கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும்.


சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.


அக்டோபர் 21
பிரகதீஸ்வரர் கோவிலில் இராஜராஜ சோழனின் சிலை

சோழர்களின் புகழ் பெற்ற மன்னருள் முதலாம் இராஜராஜன் முதன்மையானவன். கி.பி 985 முதல் கி.பி 1012 வரை சோழ நாட்டைப் பெரும் புகழுடன் ஆட்சி புரிந்தவன் மாமன்னன் இராஜராஜன். இராஜராஜ சோழன் இடைக்கால சோழ மன்னர்களில் மிக உன்னதமானவன். இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.


பிரித்தானிய கன்னித் தீவுகள் கரிபியத்தில் போட்ட ரிக்கோவுக்கு கிழக்கில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது தீவுக் கூட்டத்திந் எஞ்சிய பகுதியில் அமெரிக்க வெர்ஜின் தீவுகள் அமைந்துள்ளது. பிரித்தானிய கன்னித் தீவுகளில் டொர்டோலா, வெர்ஜின் கோர்டா, அனேகாடா, ஜோஸ்ட் வன் டைக் என்ற முக்கிய நான்கு தீவுகளும் மேலும் பல சிறிய தீவுகளும் மணல்மேடுகளும் காணப்படுகின்றன. இங்கு அண்ணளவாக 15 தீவுகளில் குடியேற்றங்கள் காணப்படுகின்றன. மண்டலத்தில் காணப்படும் மிகப்பெரிய தீவான டொர்டோலா சுமார் 20 கி.மீ. (சுமார் 12 மைல்) நீளமும் 5 கி.மீ.(சுமார் 3 மைல்) அகலமும் கொண்டதாகும். இம்மண்டலம் அண்ணளவாக 22,000 மக்களைக் கொண்டுள்ளது இதில் சுமார் 18,000 பேர் டொர்டோலாவில் வசிக்கின்றனர். மண்டலத்தின் தலைநகரான ரோட் டவுண் டொர்டோலா தீவில் அமைந்துள்ளது.


அக்டோபர் 14

பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில் வழங்கப்படினும், தொல்காப்பியத்தில் குறித்துள்ள படியும், இன்றைய தாவரவியல் அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும்.

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.


கெரார்டு எர்ட்டில் (Gerhard Ertl) (பிறப்பு. அக்டோபர் 10 1936, பிறப்பிடம் ஸ்டுட்கார்ட்,ஜெர்மனி) ஜெர்மானிய நாட்டு இயல்பிய வேதியியல் அறிஞர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்றார். இவர் புகழ்பெற்ற மாக்ஸ் பிளாங்க் கெசெல்ஷாஃவ்ட்டின் ஃவிரிட்ஸ் ஹாபர் இன்ஸ்டியூட்டில் (Fritz-Haber-Institut der Max-Planck-Gesellschaft) ஓய்வுபெற்ற இயல்பிய வேதியியல் பேராசிரியர் ஆவார்.


அக்டோபர் 08

நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், earthquake) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்திட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.

பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் தட்டுகளாக இருக்கின்றன. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு தட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது பன்னிரண்டு சிறிய தட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் தட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய பெருங்கடல் பகுதிகளும் அடக்கம்.


வள்ளுவர் கோட்டம், புகழ் பெற்ற திருக்குறள் என்னும் நூலைத் தமிழுக்குத் தந்த சங்ககாலத் தமிழ்ப் புலவரான திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது தமிழ் நாடு மாநிலத் தலைநகரமான சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு மற்றும் வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயிலில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை, ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.


செப்டெம்பர் 30

கோழி வளர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க தொழிற் துறையாகும். சிறிய அளவில் குடிசைக் கைத்தொழில் முதல் மிகப் பெரும் பண்ணைகள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் நோய்க் காரணமாக கோழிவளர்ப்பு பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.

கோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது.


கணிதத்தில் வரிசைமாற்றம், சேர்மானம் என்ற இரண்டு அடிப்படைக் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஒரு கணத்தின் உறுப்புக்களை ஒரு வரிசையில் வைத்து அவ்வரிசையை மாற்றி அமைத்தால் இம்ம்மாறுதல் ஒரு வரிசைமாற்றம் அல்லது வரிசை மாற்றல் எனப்படும். மாற்றிக்கிடைத்த வரிசைக்கும் வரிசைமாற்றம் என்றே பெயர். வரிசை என்ற கருத்தையே கொண்டு வராமல் கணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தால் இச்செயல் ஒரு சேர்வு எனப்படும். இச்செயலினால் கிடைக்கும் உட்கணத்திற்கும் சேர்வு என்றே பெயர். இவ்விரண்டு கருத்துக்களாகிற விதைகளிலிருந்து சிறுசிறு செடிகளாகப் பல வேறுபட்ட இடங்களில் வேரூன்றி முளைத்து 19ம் நூற்றாண்டில் பெரிய ஆலமரமாகப் பரவி அதன் விழுதுகள் புள்ளியியல், இயற்பியல், வேதியியல், இயலறிவியல்கள் எனப் பல அறிவியல் பிரிவுகளிலும் இன்றியமையாத கணிதக் கரணமாகப் பயன்படத் தொடங்கின. 20ம் நூற்றாண்டில் அவ்விழுதுகளும் எல்லா பயன்பாடுகளும் ஒன்றுசேர்க்கப்பட்டு இன்று கணிதத்தில் சேர்வியல் என்ற ஒரு மிகப்பெரிய பிரிவாகத் திகழ்கிறது. இக்கட்டுரையில் வரிசைமாற்றம் என்ற அடிக்கருத்தைப் பார்ப்போம்.


ஜூலை 25

எண் என்பது கணக்கிடப் பயன்படும் ஒரு அடிப்படையான நுண் கருத்துரு. கணிதத்துறையில் பலவகையான எண்கள் உள்ளன. மனிதன் தோன்றிய காலத்திலேயே அவன் கைவிரல்களை எண்ண எப்பொழுது தானே கற்றுக்கொண்டானோ அன்றே 'எண்' என்ற கருத்து உண்டானதாகக் கொள்ளலாம். எண்களின் கருத்து வளர்ச்சியே கணிதவியலின் தோன்றல்.

நடைமுறையில் மிகவும் பழக்கமான எண்கள், எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் இயற்கை எண்களாகும். இவைகளை இயல்பெண்கள் அல்லது இயலெண்கள் என்று குறிப்பிடலாம். இவை 0, 1, 2, ... என்பன. இவ்வெண் தொகுதி (அல்லது கணம்) என்னும் சிறப்பெழுத்தால் கணிதத்தில் குறிக்கப்படுகின்றது. இவற்றுடன் எதிர்ம எண்களையும் (-1, -2, -3, ...) சேர்த்து, முழு எண்கள் (integers) தொகுதி என அழைக்கப்படுகின்றது. இதன் குறியீடு .


வட கொரியா கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. வடகொரியாவின் தொன்ம வரலாறு கொரிய வரலாற்றோடு பிணைந்தது. வடகொரியாவின் அண்மைக்கால வரலாற்றையே இந்தக் கட்டுரை விபரிக்கின்றது.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த கொரிய வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910 இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945 இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய 'நேச நாடுக'ளான அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன.


மே 23

தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் பல அறுகோண அறைகள் கொண்ட, கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் வெளியிடும் மெழுகால் இந்த கூடுகள் அமைக்கப்படுகின்றன.


வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.

முதற்பக்கக் கட்டுரைகள் காப்பகம்
  • விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்