விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2009

டிசம்பர் 27, 2009

தச்சால் (Dajjal, அரபு:المسيح الدجّال, மஸீஹ் தஜ்ஜால்) அல்லது மசீக் தச்சால் என்பவன் உலக அழிவின் சமீபத்தில் வெளிப்படும் விசித்திர மனிதன் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆகும். உலக இறுதியின் பத்து அடையாளங்களின் தச்சாலின் வெளிப்பாடு இரண்டாவது மற்றும் மிக முக்கிய அடையாளம் ஆகும். இசுலாமிய நம்பிக்கைகளின் படி, பூமி தனது இறுதிநாளை நெருங்கும் நேரத்தில் தச்சால் நடு கிழக்கு ஆசியாவில் இருந்து வெளிப்படுவான். மெக்கா, மதினா, தூர் சீனா மலை மற்றும் அல் அக்சா மசூதி அகியவற்றை தவிர்த்து உலகின் அனைத்து பகுதிகளையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வருவான். பின்பு தானே கடவுள் எனவும் மக்கள் அனைவரும் தன்னையே வனங்க வேண்டும் எனவும் கட்டளையிடுவான். மாய மந்திர வித்தைகளை காட்டியும், இறந்த மனிதனை உயிர்ப்பத்தும் மக்களை தனது பக்கம் ஈர்ப்பான். பென்கள் மற்றும் இசுபகான் பகுதியை சேர்ந்த யூதர்களில் பெரும்பாலோனர் அவனை பின்பற்றுவார்கள். இறுதியில் சிரியாவில் இருந்து வெளிப்படும் நபி ஈசா (இயேசு) வினால் இசுரேலின் லூத்து என்னும் இடத்தில் வைத்து கொல்லப்படுவான்.


காற்றுச்சீரமைப்பி (Air conditioner) என்பது வீட்டில் பயன்படும் கருவி, சாதனம் அல்லது இயந்திர நுட்பம் ஆகும். இது ஈரப்பதமகற்றியாகவும், ஒரு இடத்தில் இருக்கும் சூட்டை அப்புறப்படுத்தவும், அல்லது அந்த இடத்திற்கு சூட்டை அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமான குளிர்ப்பதன சுழற்சியைப் பயன்படுத்தி இது குளிர்விக்கிறது. இதன் கட்டுமானம், ஒரு முழு அமைப்பான வெப்பமாக்கல் (heating), காற்றோட்டம் (ventilation) மற்றும் காற்றுச் சீரமைப்பு (air conditioning) என்பதைச் சுருக்கி "HVAC" என அழைக்கப்படுகிறது. ஒரு கட்டடத்தில் அல்லது ஒரு தானுந்தில் சூடான அல்லது குளிரான பருவநிலைக்கு ஏற்றவாறு இதத்தைத் தருவதே இதன் குறிக்கோளாகும்.


டிசம்பர் 13, 2009

திருடப்பட்ட தலைமுறைகள் (Stolen Generations) எனப்படுவது ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெஸ் நீரிணை தீவினர்களின் குடும்பங்களில் இருந்து ஆஸ்திரேலிய அரசினாலும் திருச்சபை மடங்களினாலும் அப்போதைய அரசுகளின் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய கிட்டத்தட்ட 1869 முதல் (அதிகாரபூர்வமாக) 1969 வரையான காலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கில் கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகளின் தலைமுறைகளை அடையாளமிட்டுக் கொடுக்கப்பட்ட பெயராகும். 2008இல் பிரதமர் கெவின் ரட் இந்நடவடிக்கையை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அத்தலைமுறையினரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.


எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இவை மிகவும் வியக்கவைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்வைக் கொண்டிருப்பனவாகும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் வேதிப்பொருள் வழிப்பட்ட தொடர்பாடலானது மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இவற்றின் எண்ணிக்கை உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன.


நவம்பர் 30, 2009

ஹொங்கொங் தமிழர் என்போர் ஹொங்கொங்கில் நிரந்தர வதிவிட உரிமைப் பெற்று வாழ்ந்து வரும் தமிழர்கள் ஆவர். ஹொங்கொங் வாழ் தமிழர்களின் எண்ணிக்கைத் தொடர்பான சரியான புள்ளிவிபர அறிக்கைகளோ பதிவுகளோ எதுவும் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட 2000 பேர் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவர்களில் பெருமான்மையானோர் தமிழகத்தை தாயகமாகக் கொண்டவர்களாவர். இருப்பினும் இவர்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்தே ஹொங்கொங் வந்தவர்கள் அல்லர். இலங்கையில் இருந்து வந்தவர்களும் உள்ளனர். இவர்களால் உருவாக்கப்பட்ட ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் 1967 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது.


சேனாதிராச முதலியார் (1750-1840) ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவராவார். இவர் தெல்லிப்பழை பொன். எதிர்வன்னியசிங்க முதலியாருக்கு பௌத்திரர், இருபாலை நெல்லைநாத முதலியாருக்கு மைந்தர், இராமலிங்க முதலியாருக்கும் பர்வதவத்தினி அம்மையாருக்கும் தந்தையார், கூழங்கைத் தம்பிரானுக்கும் மாதகற் சிற்றம்பலப்புலவருக்கும் தந்தையார் நெல்லைநாத முதலியாருக்கும் மாணவகர். ஆறுமுக நாவலருக்கும் சரவணமுத்துப் புலவருக்கும் அம்பலவாணப் பண்டிதருக்கும் நீர்வேலி பீதாம்பரப் புலவருக்கும் இவரே நற்தமிழ் ஆசிரியர் ஆவார். இவரும் இவர்களின் மாணவர்களும் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தமிழ் மற்றும் சைவ மறுமலர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கியவர்கள் என்பர்.


நவம்பர் 23, 2009

தமிழ்நாட்டு உலோகத் திருமேனிகள் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தற்காலம் வரை தமிழ் நாட்டுக் கோயில் தேவைகளுக்காக உலோகங்களினால் உருவாக்கப்பட்ட கடவுட் சிலைகள் ஆகும். இவ்வாறு உருவாக்கப்பட்ட திருமேனிகளில் பல பல்வேறு படையெடுப்புக்களின்போது அழிந்து போய்விட்டன அல்லது காணாமல் போய்விட்டன. மேலும் பல, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களில் இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுவிட்டன. சில இந்தியாவின் பல அருங்காட்சியகங்களிலும், ஏனையவை தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் அமைந்துள்ள கோயில்களிலும் உள்ளன. உலோகத் திருமேனிகள், பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன.


வாசிங்டன், டி. சி. (Washington, D.C.), முழுப்பெயர் வாசிங்டன், கொலம்பியா மாவட்டம் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமாகும். இப் பெயர் அந்நாட்டில் ஏற்பட்ட அமெரிக்கப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ராணுவத் தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக இடப்பட்டது. 2008ல் கொலம்பியா மாவட்டத்தில் 591,833 மக்கள் இருப்பதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை கணித்துள்ளது. அருகிலுள்ள மேரிலாந்து, வர்ஜீனியா கவுண்டிகளை இணைத்த வாசிங்டன் பெருநகர பகுதியின் மக்கள் தொகை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாகும், இது ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது பெரியதாகும். 2007ல் மக்கள்தொகையில் 55.6% கறுப்பு இன மக்களும், 36.3% வெள்ளை இன மக்களும், 8.3% எசுப்பானிய (எல்லா இனமும்) மக்களும், 5% மற்றவர்களும் (அமெரிக்க பூர்வகுடிகள், அலாசுக்கா மக்கள், அவாய் மக்கள், பசிபிக் தீவு மக்கள் இதில் அடங்குவர்) 3.1% ஆசிய இன மக்களும், 1.6% கலப்பு இன மக்களும் வாழ்வதாக கணக்கிடப்பட்டனர்.


நவம்பர் 16, 2009

பேராசிரியர் சி. இலக்குவனார் (1909 - 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நூல்கள் இயற்றியுள்ளார். இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார். 1944 முதல் 1947 வரை இவர் நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது.


ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம் (Hong Kong International Airport) உலகின் பரப்பான விமான நிலையங்களில் பன்னிரண்டாவது விமான நிலையமாகும். இதனை பேச்சு வழக்கில் செக் லப் கொக் விமான நிலையம் என்றும் அழைப்பர். அதற்கான காரணம் இவ்விமான நிலையம் அமையப்பட்டிருக்கும் தீவின் பெயர் செக் லப் கொக் என்பதாகும். இவ்விமான நிலையம் ஹொங்கொங்கின் முன்னால் விமான நிலையமான கை டக் விமான நிலையத்திற்கான மாற்றீடாக கட்டப்பட்டதாகும். இவ்விமான நிலையம் 1998 ஆம் ஆண்டு சேவையை தொடர்ந்தது. இது 1998 ஆம் ஆண்டிலிருந்து ஸ்கைடெக்ஸ் நிறுவனத்தினரால் வழங்கப்படும் உலகின் சிறந்த விமான நிலையத்திற்கான விருதை (Skytrax World Airport Awards) ஏழு தடவைகள் தட்டிக்கொண்டன.


நவம்பர் 8, 2009

மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைத் திரட்டி, ஒருங்கே குவித்து, சேமித்து வைப்பது ஆகும். மழைநீரை சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பயன்படுத்தலாம். மழைநீர் வீடு அல்லது நிறுவனங்களின் கட்டடங்களின் மேற்கூரைகளிலிருந்தும் அல்லது இதற்காகத் தயார் செய்யப்பட்டத் தரைவழியாகவும் சேகரிக்கப்படும். சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, அதிகச் செலவு பிடிக்காத சிக்கனமான நீர் ஆதாரம் ஆகும். மழைநீர் சேகரிப்பு ஒருங்கியம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாகக் கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தக்கூடியதும் ஆகும். கட்டடங்களின் மேற்கூரைகளில் சேகரிக்கப்படும் மழைநீரானது, பெரும்பாலும் நல்ல தரமானதாகவும் அதிக சுத்திகரிப்புக்கு உட்படுத்தத் தேவையில்லாததாகவும் இருக்கிறது. வேறுவகை நீராதாரம் இல்லாதபட்சத்தில், ஆண்டு மழைப்பொழிவு 200மிமீக்கு அதிகமுள்ள இடங்களில் குடும்பத்தின் குடிநீர் தேவைக்காக மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்துவது சிறப்பானது ஆகும்.


கணிமி என்பது ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும். நிலைக்கருவற்ற உயிரிகளில் நிறைந்து காணப்படும். பின்னாளில் நிலைக்கரு உயிரினமான ஓர் உயரணு இயீசுட்டில் (yeast) 2 மைக்ரோன் (2 micron) கணிமி கண்டுபிடிக்கப்பட்டது. இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை. கணிமிகள் குழலிணைவு (conjugation) என்னும் நிகழ்வு மூலம் ஒரு உயிரணுவில் இருந்து மற்றொன்றுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வாறு இன உயிரணுக்கள் இல்லாமல் அல்லது பாலுறவு இல்லாமல் மரபணு கடத்தப்படும் நிகழ்வுக்கு பாலுறவு சாரா மரபணு கடத்தல் (horizontal gene transfer) எனப்பெயர். கணிமிகள் தாம் இருக்கும் உயிரினத்துக்கு ஓர் எதிப்புத் தன்மையை அல்லது குழலிணைவு என்னும் நிகழ்வுக்கு உதவி புரிபவையாக இருக்கின்றன.


நவம்பர் 1, 2009

மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம். நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக, உணவினால், தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு நோய்க்காவியினால் தொற்றுநோயானது கடத்தப்படலாம். நோய்க்காரணி ஒன்றின் தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது (infectivity), அந் நோய்க்காரணியானது ஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள் பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும்.


தில்லி சுல்தானகம் என்பது 1206 ஆம் ஆண்டு முதல் 1526 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பல்வேறு அரசுகளைக் குறிக்கும். பல்வேறு துருக்கிய, பஸ்தூனிய வம்சத்தினர் தில்லியில் இருந்து இந்தியாவை ஆண்டனர். இவற்றுள் மம்லுக் வம்சம் (1206-90), கால்சி வம்சம் (1290-1320), துக்ளக் வம்சம் (1320-1413), சய்யித் வம்சம் (1414-51), லோடி வம்சம் (1451-1526) என்பன அடங்கும். கால்சிகள் குசராத்தையும், மால்வாவையும் கைப்பற்றியதுடன், முதன்முதலாக நர்மதை ஆற்றுக்குத் தெற்கே தமிழ் நாடு வரையும் படை நடத்திச் சென்றனர். தில்லி சுல்தானகத்தின் ஆட்சி தொடர்ந்து தென்னிந்தியாவுக்குள் விரிவடைந்தது. இக் காலத்தில் ஒன்றுபட்ட தென்னிந்தியா விசயநகரப் பேரரசின் தலைமையில் சில காலம் சுல்தானகங்களின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தியது. எனினும் இறுதியில் விசயநகரப் பேரரசும் 1565 இல் தக்காணச் சுல்தானகங்களிடம் வீழ்ச்சியடைந்தது.


அக்டோபர் 25, 2009

பேதை உள்ளான் (Ruff) என்பது "கரைப்பறவைகள்" வகையைச் சார்ந்த ஒரு பறவை. பல உள்ளான் வகைப் பறவைகளும் இப்பிரிவிலடங்கும். இப்பறவையின் விலங்கியல் பெயர் Philomachus pugnax ஆகும். இந்தியாவில் இது பரவலாகக் காணப்படும் குளிர்கால-வரவி ஆகும்; மேலும் இது ஒரு வழிசெல் இடம்பெயர்வி. நீண்ட கழுத்து, சிறிய தலை, நுனியில் சற்று-சரிந்த சிறிய அலகு, பானை வயிறு, சற்றே-பெரிய ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறக் கால்கள் கொண்ட கரைப்பறவை. இப்பறவை பால் ஈருருமை உடையது. இவை வட ஐரோப்பா, சைபீரியாவிலுள்ள ஆர்க்டிக் துந்துரா சமவெளிப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிரான பனிக்காலங்களில் இவை குடிபெயர்ந்து தென் ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் கடற்கரை-சதுப்பு நிலங்களுக்கு; தெற்காசியா, அவுசுதிரேலியா நோக்கியும் செல்கின்றன. இந்தியாவில், குறிப்பாக கோடிக்கரை வனவிலங்குகள், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பேதை உள்ளான்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.


தீ எச்சரிக்கை அமைப்பு (Fire Alarm System) எனப்படுவது வணிக, அலுவலக, குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் ஏற்ப்படும் தீ விபத்துகளை கணித்து எச்சரிக்கை செய்ய உதவும் ஒரு தானியங்கி மின்னணு அமைப்பு ஆகும். இவை பொருத்தப்பட்டிருக்கும் இடங்களில் தீ விபத்துகள் ஏற்படும் பொழுது இவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பான்கள் அதிக அழுத்த ஒலியை எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்கின்றன. பெரும்பாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தப்படும் இவை, தானியங்கி மற்றும் மனித தூண்டல் மூலமும் இயங்கவல்லன. மையக்கட்டுப்பாட்டு அமைப்பு, கணிப்பான் அமைப்பு, எச்சரிக்கை அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளை அடிப்படையாகக்கொண்டு இவை செயல்படுகின்றன.


அக்டோபர் 18, 2009

வடமுனை ஒளி (Auroras, அல்லது northern and southern (polar) lights) என்பது வடதுருவத்தை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒளியின் அபூர்வத் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றம் உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒளித்தோற்றத்துக்குரிய அறிவியற் பெயர் Aurora Borealis Celestial Phenomenon என்பதாகும். இதே போன்ற அபூர்வ ஒளித் தோற்றம் தெற்கு துருவத்தை அண்மிய பகுதிகளில் தெரிவதை "தென்முனை ஒளி" என்பர். இதை இயற்கையின் வாணவேடிக்கை என்று சொல்லலாம். இருண்ட வானத்தின் குறுக்காக, நிலையற்று ஆடும் ஒளியாலான திரைச் சீலையின் நடனம் போன்று இது காணப்படுவதாக, கற்பனையால் மெருகூட்டிச் சொல்லலாம்.


கணிதத்தில் நேரியல் இயற்கணிதப் பிரிவில் நேரியல் சார்பின்மையும் (Linear independence) நேரியல் சார்புடைமையும் (Linear dependence) அடிப்படைக் கருத்துகள். V என்ற திசையன் வெளி யில் என்ற திசையன்களின் கணம் நேரியல் சார்புடையது என்பதற்குப் பொருள், அவைகளில் ஏதாவதொன்று மற்றவைகளின் நேரியல் சேர்வு என்பதே. எடுத்துக்காட்டாக, இல் {(1,0,0), (1,2,-3), (0,1,-3/2)} என்ற கணம் நேரியல் சார்புடையது. ஏனென்றால், (1,2,-3) = 1(1,0,0) + 2(0,1,-3/2). S இல் எதுவுமே மற்றவைகளின் நேரியல் சேர்வாக இல்லையானால், அது நேரியல் சார்பின்மை என்ற பண்பை உடையது அல்லது நேரியல் சார்பற்றது எனப்படும். எடுத்துக்காட்டாக, இல் {(1,1,0), (1,0,1), (0,1,1)} என்ற கணம் நேரியல் சார்பற்றது.


அக்டோபர் 11, 2009

வெங்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (பிறப்பு: 1952) தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளரும் ஆவார். "ரைபோசோம் எனப்படும் உயிரணுக்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுகளுக்காக" வெங்கட்ராமனுக்கும் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன் என்பது பற்றிய தெளிவு ஏற்படுவதற்கும் அதன் மூலம் உயிர்களைக் காப்பதற்கும் இம்மூவரின் கண்டுபிடிப்புகள் பெரிதும் பயன்படும்.


நடுத்தர போர் வானூர்தி (Medium Combat Aircraft) என்றும், பொதுவாக MCA என்றும் அறியப்படும் போர்வானூர்தி வானூர்தி இந்தியாவால் வடிவமைக்கப்படும் இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட ஐந்தாவது தலைமுறை, இரகசிய தாக்குதல், பல்வகை தாக்குதல் வானூர்தி ஆகும். இவ்விமானம் நவீன ஒருங்கிணைக்கப்பட்ட பறப்பு மின்னணுவியல் ஒருங்கியம், தகவல் ஒருங்கிணைப்பு, கணினி வசதி ஆகிய பல்வேறு நவீன வசதிகளை கொண்டிருக்கும். இதன் பறப்பு மின்னணுவியல் வசதிகள் விமானி மிக துல்லியமாக் எதிரி குறிகளை தாக்க வல்ல வசதிகளை கொண்டிருக்கும். வானில் இருந்து வான் தாக்கும் அஸ்திரா ஏவுகணையும், மற்றும் வானில் இருந்து தரை தாக்கும் பல்வகை ஏவுகணைகளும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வானூர்தியை வடிவமைக்கும் பணி தொடக்கபட்டு விட்டது.


அக்டோபர் 4, 2009

மின்னூலகம் என்பது எண்ம அல்லது மின்னியல் முறையில் நூல்கள், படங்கள், ஆவணங்கள், தகவல் தொகுப்புகளைச் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கும், கணினி வழி அணுகக்கூடிய நூலகம் ஆகும். இதில் எண்ம உள்ளடக்கங்களை இணையம் மூலமாக தொலைவில் இருந்தே அணுகிப் பெறலாம். மிக விரிவான எண்ம உள்ளடக்கங்களைச் சேகரித்து, மேலாண்மை செய்து, பாதுகாத்து அதன் பயனர்களுக்கு அத் தொகுப்புகளை தேவைப்படும் போது தேவையான அளவில் எழுதப்பட்ட கொள்கை விதிகளின்படி அளிக்கும் இருப்பல்லாத அமைப்புக்கு மின்னூலகம் என்று பெயர். நூலகத் திட்டம், தமிழம் நாள் ஒரு நூல் திட்டம், மதுரைத் திட்டம் ஆகியவை தமிழ் மின்னூலகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.


மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு பெண்ணுக்கு தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் நிற்பது ஆகும். மாதவிடாய் நிறுத்தம் ஒரு பெண்ணின் இனப்பெருக்க சுழற்சியை நிறுத்துகிறது. உடலில் உற்பத்தியாகும் பல்வேறு ஊக்கிகள் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகின்றன. பொதுவாக 45-55 வயதுகளுக்கு இடையே மாதவிடாய் நிறுத்துகிறது. மாதவிடாய் நிறுத்தத்தால் ஒரு பெண்ணுக்கு உளவிய, உடலிய, சமூக பாதிப்புக்கள் உண்டு.


செப்டம்பர் 27, 2009

இணைய ஆவணகம் (Internet Archive) அல்லது இணைய ஆவணக் காப்பகம் என்பது இலவச, கட்டற்ற (திறமூல) அணுக்கம் கொண்ட கணினிவழி மின்னூலகம் மற்றும் உலகளாவிய இணைய தள ஆவணப்படுத்தல் ஆகியவற்றை கட்டமைத்து பேணும் ஓர் இலாப நோக்கமில்லா நிறுவனமாகும். இணைய ஆவணகத்தில் உலகளாவிய இணையத்தின் கண நேரப் படிமங்கள் (Snapshots) (பல்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட பக்கங்களின் படிம ஆவணம்), மென்பொருட்கள், திரைப்படங்கள், நூல்கள், ஒலிப்பேழைகள் ஆகியவை சேமிக்கப்படுகின்றன. இணைய ஆவணகத்தின் சேகரிப்புகள் ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பு அமெரிக்க நூலகக் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் உள்ளது. இதன் தலைமை அலுவலகம் அமெரிக்க நாட்டின் கலிஃபோர்னியா மாநிலம், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பிரிசிடியோ எனுமிடத்தில் உள்ளது.


கிருபானந்த வாரியார் (1906 - 1993, தமிழ்நாடு) சிறந்த பேச்சாளர், ஆன்மீகவாதி, முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுக்கலை,இசை போன்ற பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்பட்டவர். 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலையும் எழுதினார்.


செப்டம்பர் 20, 2009

காச நோய் அல்லது டியூபர்க்குலோசிசு என்பது மைக்கோபாக்டீரியா என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது. காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை. சில மருந்துகள் மூலம் நோய்த் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய்த் தொற்று வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக இல்லாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை


தாலந்துகள் உவமை இயேசு கடவுள் ஒவொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளைச் சரியாக பயன்படுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொருள் பட மக்களுக்கு கூறினார். "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாக குறிப்பிடலாம். இது புனித் விவிலியத்தில் மத்தேயு 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது.


செப்டம்பர் 13, 2009

நீர் மின் ஆற்றல் நீராற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை குறிக்கும். அதாவது, புவியீர்ப்பு விசையால் இயற்கையாக பாயும் நீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலை குறிக்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் முறைகளில் நீர்மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது. நீர்மின் உற்பத்தி மற்றைய புதைபடிவ எரிபொருள் மின் உற்பத்தி போலன்றி எவ்வித தீய திட கழிவுகளையோ, கார்பன்-டை-ஆக்சைடு போன்ற பைங்குடில் வளிகளையோ வெளியிடாமல் இருப்பமையால் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் முறைகளில் நீர்மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது. உலக அளவில், 2005 ஆம் ஆண்டில் நீர்மின்சாரம் மூலம் சுமார் 816 GWe (கிகா வாட் மின்திறன்) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது உலக மின் விளைவிப்பில் சுமார் 20% என்பது குறிப்பிடத்தக்கது.


யெடுகுரி சாலமன் ராஜசேகர ரெட்டி ( சூலை 8, 1949 - செப்டம்பர் 2, 2009) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்திய மக்களவைக்கு நான்கு முறையும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கு நான்கு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009, செப்டம்பர் 2 இல் உலங்கு வானூர்தியில் செல்கையில் நல்லமாலா காட்டுப் பகுதியில் இவரது வானூர்தி காணாமல் போனது. பலத்த தேடுதலின் பின்னர் செப்டம்பர் 3 காலையில் குர்னூலில் இருந்து 40 கடல் மைல் தூரத்தில் ருத்திரகொண்டா மலை உச்சியில் வானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.


ஆகத்து 30, 2009

வடகாடு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமமும் ஒரு பெரிய ஊராட்சியும் ஆகும். மா,பலாப்பழம்,வாழை முக்கனிகளுக்கு பெயர் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இது திகழ்கிறது. அனைத்து அரசு அலுவலகங்களும் இங்கு உள்ளன. அரசு மேல் நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை, விவசாய கூட்டுறவு வங்கி, மத்திய அரசுடமையுடைய தலைமை அஞ்சல் நிலையம், காவல் நிலையம், உயர் மி்ன்னழுத்த மி்ன்பகிர்வு நிலையம் உட்பட பல அரசு அலுவலகங்கள் இங்கே உள்ளன.


கிரிகோர் மெண்டல் (Gregor Johann Mendel 18221884), மரபியல் குறித்த அடிப்படை ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்படும் ஆஸ்திரிய பாதிரியாராவார். இவர், மரபியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல், தன்னுடைய தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்த சேர்க்கை நடைபெறச் செய்து, அதன் விளைவுகளை புள்ளிவிபரவியலின் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டார். அதன் பயனாக, மரபுப் பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்று கண்டறிந்து, 1866ல் அது குறித்து ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். இந்த மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கமையவே அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றன என அவர் கூறினார். அந்த விதிகள் பின்னாளில் மென்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.


ஆகத்து 16, 2009

கற்காலம் என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய (கிமு 6000 ஆண்டுகளுக்கு முன்பு) காலப் பகுதியைக் குறிக்கிறது. இது, மனிதனிடைய கூர்ப்பில் (பரிணாமம்), முதன் முதலாகத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பகுதியாகும். கிழக்கு ஆபிரிக்காவின் சமவெளிகளிலிருந்து மனிதர் உலகின் ஏனைய இடங்களுக்குப் பரவியதும் இக் காலப்பகுதியிலேயே. இது வேளாண்மை, விலங்கு வளர்ப்பு, செப்புத் தாதுக்களிலிருந்து செப்பின் உற்பத்தி என்பவற்றின் அறிமுகத்துடன் முடிவடைந்தது. இக்காலத்தில் மனிதர்கள் எழுத அறிந்திருக்கவில்லை என்பதால் எழுதப்பட்ட வரலாறு கிடையாது. எனவே இக்காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகின்றது.


பெர்ள் (Perl) ஒரு கணினி நிரலாக்க மொழி. இது மேல் நிலை, இயங்கியல், படிவ நிரலாக்க மொழி வகையைச் சார்ந்தது. இதன் முதல் பதிப்பு 1987 இம்மொழியின் ஆக்கர் லாரி வோல் (Larry Wall) அவர்களால் வெளியிடப்பட்டது. 1988 இல் இரண்டாவது பதிப்பும் 1989 இல் மூன்றாவது பதிப்பும் வெளியானது, பெர்ள் 6 விரைவில் வெளி வர இருக்கிறது. உரை ஆவணங்களை பகுப்பாய்வு செய்ய உதவும் சுருங்குறித்தொடர்களை பெர்ள் தொடக்கத்திலியே மொழியின் ஒரு கூறாக ஏதுவாக்கியது. உரை ஆவணப் பகுப்பாய்வு, கணினி நிர்வாகம், வலைப்பின்னல் நிரலாக்கம், தரவுதள வலை செயலிகள் வடிவமைப்பு போன்ற பல தேவைகளுக்கு பெர்ள் பயன்படுகிறது. இது ஒரு கட்டற்ற மென்பொருளாகும். குனு கட்டற்ற ஆவண உரிமத்தின் கீழும் வெளியிடப்படுகிறது.


ஆகத்து 9, 2009

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (இ.தொ.க. சென்னை, Indian Institute of Technology Madras) ) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். 1959ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு செருமனி அரசின் பண மற்றும் நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதிமூன்று தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவதாக இது நிறுவப்பட்டது.


பக்டிரியல் படிவாக்கம் (bacterial cloning) என்னும் நுட்பம் மூலக்கூற்று உயிரியலின் ஒரு அடிப்படை நுட்பமும், தலையாய முறையுமாகும். ஒரு புரதத்தை மிகைப்படுத்த வேண்டும் என்றாலும் (எ.க: தீ நுண்ம தடுப்பு மருந்துகள்) அல்லது மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உருவாக்க வேண்டும் என்றாலும் இந்நுட்பம் பயன்படுகிறது. மேலும் புரதங்களுக்கு இடையே நடைபெறும் இணைவாக்கம், தொடரூக்கி ஆய்வுகள் (Promoter studies) என பலவித மூலக்கூறு உயிரியலின் ஆய்வுகளிலும் இது பயன்படுகிறது. பக்டிரியல் படிவாக்கத்தில் (படியெடுப்பு) பல முறைகள் உள்ளன. பி.சி.ஆர். படிவாக்கம், உள்-பிணைவு படிவாக்கம் (In-fusion cloning) என்ற முறைகளும் உள்ளன.


சூலை 27, 2009

ஐ.என்.எசு. அரிகந்த் (INS ARIHANT) என்பது இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரான அணுக்கரு ஆற்றலினாலான முதல் நீர்மூழ்கிக் கப்பல். இதனை வடிவமைத்து உருவாக்கியதன் மூலம், உருசியா, அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஆறாவது நாடாக இந்தியா உலக அரங்கில் சிறப்பைப் பெற்றுள்ளது. அரிகந்த் (அரிஃகந்த்) என்கிற சமசுக்கிருதச் சொல்லுக்கு 'எதிரிகளை அழிப்பவன்' என்பது பொருள்.


நீலான் (Boselaphus tragocamelus) நடு மற்றும் வட இந்தியா, தெற்கு நேபாளம் மற்றும் கிழக்கு பாக்கிசுத்தான் பகுதிகளில் மிகப்பெரும் அளவில் காணப்படும் மானினமாகும். ஆசியாவில் காணப்படும் மானிங்களிலேயே நீலான் உருவ அளவில் மிகப்பெரியதாகும். நன்கு வளர்ந்த ஆண் நீலான் குதிரையின் உருவத்தை ஒத்திருக்கும். இவ்விலங்கின் உடல் நீலம் கலந்த கருப்பு நிறத்தில் இருப்பதால் இதற்கு நீலான் என்று பெயர். நீலான் இந்தியாவின் உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும்.


சூலை 21, 2009

டி.என்.ஏ. கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி (DNA gel electrophoresis) டி.என்.ஏ. கூழ் மூலக்கூற்று உயிரியலில் பயன்படுத்தபடும் ஒரு நுட்ப முறை ஆகும். இம்முறையின் துணையால் டி.என்.ஏக்களைக் கண்களால் பார்க்கலாம். மேலும் டி.என்.ஏ.க்கள் தரமானதா, தூய்மையானதா எனவும் அறிந்து கொள்ளலாம். தூய்மை எனில் இவ்விடத்தில் ஆர்.என்.ஏ பற்றி குறிக்கப்படும். ஆர்.என்.ஏ இல்லாத டி.என்.ஏக்கள் தூய்மையானதாகக் கருதப்படும்.


சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 - ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர். சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல். இது பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆய்வு ரீதியாக விபரிக்கும் முதல் நூலாகும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். சேக்சுபியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், மதங்க சூளாமணி என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.


சூலை 14, 2009

வாழை தாவர வகைப்படுத்தலின் படி ஒரு சிறுசெடியாகும். வாழையின் அறிவியல் பெயர் Musa sp. வாழை தென் கிழக்கு ஆசியாவில் தோன்றியது. வாழைமரம் 8 மீ உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3 மீ நீளம் வரை இருக்கும். வாழைப்பழம் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக இருக்கும். வழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துக்கொத்தாய் அமைந்திருக்கும். ஒவ்வொரு கொத்தும் 'சீப்பு' என்றும், பல சீப்புகளைக் கொண்ட முழு வாழைக்கொத்து 'குலை' அல்லது 'தார்' என்றும் அழைக்கப்படுகிறது.


பி. ஸ்ரீநிவாச்சாரி அல்லது பி.ஸ்ரீ. (ஏப்ரல் 16, 1886 - அக்டோபர் 28, 1981) பேச்சாளராக, எழுத்தாளராக, உரையாசிரியராக, பதிப்பாசிரியராக, விமர்சகராக, வரலாற்று ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, சமயாச்சாரியராக, திறனாய்வாளராக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர்.தினமணி, தினமலர், சுடர், சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களுக்கும், கல்கி, ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களுக்கும் கலைமகள், அமுதசுரபி போன்ற மாத இதழ்களுக்கும் எண்ணற்ற கட்டுரைகளை எழுதியுள்ளார்.


சூலை 6, 2009

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், தர்க்கம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்றைய எல்லா உயிரிகளையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.


தீயணைப்பான் எனப்படுவது குடியிருப்புக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஏற்படும் சிறிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய தீப் பற்றல், பரவல்களை தடுத்துத் தீ அணைக்க உதவும் ஒரு கருவி. இவை பொதுவாக இரண்டு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. முதலாவது, அழுத்தம் கொடுக்கப்பட்ட தீயணைப்பான். இவற்றில் நீர், வளிமம் போன்ற அடிப்படை தீயணைப்புக் காரணிகள் அதிக அழுத்தத்தில் அடைக்கப்படுகின்றன. மற்றது, அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான். இவற்றில் அடிப்படை தீயணைப்பு காரணிகளான வேதிப்பொருள்கள் ஒரே உருளையின் இருவேறு கண்ணாடி குடுவைக்குள் வைக்கப்படுகின்றன. இவற்றின் தலை தாக்கப்படும்பொழுது இந்த கண்ணாடிக் குடுவை உடைந்து, இருவேறு வேதிப்பொருள்களும் ஒன்று சேர்கின்றன. இதனால் ஏற்படும் வேதிவினையால் உருவாகும் வேதிப்பொருளானது அதிக அழுத்தத்தில் விரைந்து வெளியேறி நெருப்பை அணைக்கிறது.


சூன் 29, 2009

பர்பரோசா நடவடிக்கை என்பது நாசி ஜெர்மனி சோவியத் நாட்டின் மீது நடத்திய படையெடுப்பிற்கான குறிப்புச் சொல். அது ஜூன் 21, 1941 அன்று தொடங்கியது. 4.5 மில்லியனுக்கு அதிகமான அச்சு அணியினரின் படைகள் சோவியத் ஒன்றியத்தினை 2900 கிமீ அகல வெளியான அணிவகுப்பில் படையெடுத்தனர். பர்பரோசவின் திட்டம் 18, டிசம்பர் 1940ல் தொடங்கி, மறைமுகமான ஏற்பாடுகளும், படைத்தள நடவடிக்கைகளும் 18 மாதங்களாக நடந்திருந்தன. பர்பரோசா நடவடிக்கையின் இலக்கு சோவியத் ஒன்றியத்தின் ஐரோப்பிய பகுதிகளை வேகமாக வென்றெடுத்து, ஆர்க்கன்கெல்சுக்கு மற்றும் ஆசுத்ராக்கன் நகரங்களை இணைக்கும் கோடு வரை, 1941 ஆம் ஆண்டு முடியும் முன்னர் கைப்பற்றுவதாகும். ஆனால் இந்நடவடிக்கையில் நாசி படைகள் பெரும் தோல்வியை சந்தித்தன. பர்பரோசா நடவடிக்கையின் தோல்வி, இட்லரை இன்னும் பல படை முன்னெடுப்புகளையும், போர்களையும் சோவியத் ஒன்றியத்துக்குள் செய்யத்தூண்டியது.



இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில், தொடங்கப்பட்டது. 1850 களில் இது பற்றிய எண்ணம் உருவானபோதும், 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27 இலேயே, கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் அமைக்கப்பட்ட 54 கிலோமீட்டர் நீளமான பாதையில் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894 இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன. இலங்கையின் தொடர்வண்டிப் பாதைகள் அனைத்தும், தலைநகரான கொழும்பில் இருந்து பல்வேறு நகரங்களை நோக்கி விரிந்து செல்கின்றன. இவ் வலையமைப்பானது ஒன்பது பாதைகளைக் கொண்டுள்ளது. இவை, வடக்கில் காங்கேசன்துறை, தலைமன்னார் ஆகிய இடங்களிலும், கிழக்கில், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும், மலையகப் பகுதியில், மாத்தளை, பதுளை ஆகிய இடங்களிலும், தெற்கில் மாத்தறையிலும் மேற்கில் புத்தளத்திலும் முடிவடைகின்றன. இன்னொரு பாதை அவிசாவளை வரை செல்கின்றது.


சூன் 21, 2009

பெர்ட்ரண்டு ரசல் (Bertrand Arthur William Russell) (1872-1970) ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, தருக்கவாதி, சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். ரசல் 1900 ஆரம்பங்களில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கினார். பகுப்பாய்வு தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் ஃபிரேக என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை ஏரணத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை "ஆன் டிநோட்டிங்" குறிப்பிடுவது பற்றி (On Denoting) "தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு" என கருதப்படுகிறது. இரு நூல்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணக் கோட்பாடு, பகுப்பாய்வு மெய்யியல் முதலியவற்றின் மேல் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தின.


செந்நாய் (Cuon alpinus), நாய்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உள்ளினம் ஆகும். இதை ஆசிய காட்டு நாய், இந்திய காட்டு நாய், காட்டு நாய் எனப் பல பெயர்களிலும் அழைக்கிறார்கள். செந்நாய் கடைசி உறைபனி காலத்தில் தப்பிப்பிழைத்த விலங்காகும். செந்நாய் லூப்பசு என்ற மூதாதைய நாய் குடும்ப உறுப்பினரிடம் இருந்து சுமார் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு பிரிந்து படிவளர்ச்சி அடைந்ததாக இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி கொண்டு ஆராய்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 12 முதல் 20 கிலோ வரையிலான எடையில் இருக்கும் செந்நாய் 90 செ.மீ நீளமும் 50 செ மீ தோல் பட்டை உயரமும் உடையவையாகும். வாலின் நீளம் 40 முதல் 14 செ மீ வரை இருக்கும். ஆண் மற்றும் பெண் செந்நாய்களிடையே மிகமிக குறைந்த பாலியல் இருவத்தோற்றம் காணப்படுகிறது. செந்நாயின் உடல் மயிர்ப் போர்வை சிகப்பு முதல் பளுப்பு நிறத்தையும், முன் கழுத்து, நெஞ்சு மற்றும் அடிப்பகுதிகள் வெள்ளை நிறத்தையும் கொண்டவை. செந்நாய் நாய் குடும்பத்திலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த பல்லமைப்பைக் கொண்டவை,


சூன் 14, 2009

கல்லோயாப் படுகொலைகள் என்பது விடுதலை பெற்றபின்னர் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை இலங்கைத் தமிழர் மீதான முதலாவது பெரும் இனத்தாக்குதல் ஆகும். கலவரம் 1956 ஆம் ஆண்டில் சூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது. உள்ளூர் பெரும்பான்மையின சிங்களக் குடியேற்றவாதிகள், மற்றும் கல்லோயாக் குடியேற்றத்திட்ட சபையின் ஊழியர்களும் இணைந்து அரச வாகனங்களில் வந்து நூற்றுக்கணக்கான தமிழரைக் கொன்றனர். 150 இற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பாராமுகமாக இருந்த காவல்துறையினரும் இராணுவத்தினரும், பின்னர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கொல்கத்தா (வங்காளம்: কলকাতা) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள்தொகை சுமார் 15 மில்லியன் ஆகும். இது இந்தியாவில் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகர் ஆகும். இந்நகர் உலக அளவில் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகருமாகும். கல்கத்தா நகர், ஆங்கிலேய ஆட்சியின்போது, 1911 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் தலைநகராக விளங்கியது. முற்காலத்தில் கல்வி, அறிவியல், தொழில், பண்பாடு, அரசியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கொல்கத்தா நகர், 1954 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற அரசியல் சார்ந்த வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவுற்றது. 2000 ஆம் ஆண்டுக்கு பின், சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி கண்டுள்ளது.


சூன் 7, 2009

கணிதத்தில் மெர்சென் எண், மெர்சென் பகாத்தனி (Mersenne prime) என இரண்டு கருத்துகள் உள்ளன. மெர்சென் எண் என்பது இரண்டின் அடுக்கு எண் கழித்தல் ஒன்று (இரண்டடுக்குக்கு ஒன்று குறை) என்னும் வடிவில் எழுதத்தக்க ஒரு நேர்ம முழு எண்.:

மேற்கண்டவாறு எழுதத்தக்க மெர்சென் எண் பகா எண்ணாக (பகாத்தனியாக) இருந்தால் அதனை மெர்சென் பகாத்தனி என்று வரையறை செய்வர். எடுத்துக்காட்டாக என்பது என்று அழைக்கப்படும், 7 என்னும் மதிப்பு கொண்ட, பகா எண். ஆனால் என்பது என்று அழைக்கப்படும், 15 என்னும் மதிப்பு கொண்ட, மெர்சென் எண், ஆனால் பகா எண் அல்ல. ஏனெனில் 15 என்பதை 3x5 என எழுதலாம். அது ஒரு வகுபடும் எண். இதுகாறும் (2008 ஆண்டு வரை) மொத்தம் 46 மெர்சென் பகாத்தனிகள்தாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று அறியப்பட்டுள்ள பகா எண்களிலேயே மிகப்பெரிய பகா எண் ஒரு மெர்சென் பகா எண்ணாகும்: 243,112,609 − 1. முன்னர் கண்டுபிடித்த மெர்சென் பகாத்தனிகள் போலவே இதுவும் இணையவழி மெர்சென் பெருந்தேடல் (Great Internet Mersenne Prime Search) (GIMPS), “கிம்ப்”, என்னும் திட்டத்தினூடாக கூட்டுழைப்பில் கண்டுபிடித்ததாகும்.


உ. வே. சாமிநாதையர் (1855–1942) (உ.வே.சா, தமிழ் தாத்தா) சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர். பலராலும் மறக்கப்பட்டு அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அவற்றை அச்சிட்டு பதிப்பித்தவர். இவரது அச்சுப்பதிப்பிற்கும் பணி தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், செழுமையும் எல்லோராலும் அறியும்படி வெளிக்கொண்டுவர பெரிதும் உதவியது. உ.வே.சா அவர்கள் 90 ற்கும் அதிகமான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 ற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள் ஆகியவற்றை சேகரித்தும் இருந்தார்.


மே 31, 2009

கலைக்களஞ்சியம் (Encyclopedia) என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம். கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். தற்காலத்தில் விக்கிப்பீடியா போன்ற இணையக் கலைக்களஞ்சியங்கள் பரந்த பயன்பாட்டுக்கு வருகின்றன.


மேகநாத சாஃகா (1893 - 1956) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர் இவரே. சூரிய நிறமாலையில் காணப்படும் (உட்கவர்) கரு வரிகள் பிரான்கோபர் (Fraunhofer) வரிகள் எனப்படும். இவ்வரிகளின் தோற்றத்துக்கான அடிப்படை விளக்கத்தை கிர்ச்சாஃப் (Kirchhoff) அளித்தார். கிர்ச்சாஃபின் விளக்கம் சூரியனிலுள்ள தனிமங்களுக்கும் இவ்வரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அளவில் இருந்தது. சாஃகா உருவாக்கிய சமன்பாடு, இவ்வரிகளின் மூலத்தை விளக்கியது மட்டுமில்லாது சூரியன், விண்மீன்கள் இவற்றின் வெப்பநிலை, அழுத்தம் போன்ற புறநிலை இயல்புகளை அறியவும் உதவுகிறது.


மே 23, 2009

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 23, 2009


மே 17, 2009

பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது. இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள். மார்ச் 2009 மெக்சிக்கோவில் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டது அறியப்பட்டது, அதைத் தொடர்ந்து பல நாடுகளுக்கு இந்த நோய் பரவியது.


தமிழ்நாடு வனத்துறை தமிழக மாநிலத்திற்குட்பட்ட காட்டுப் பகுதிகளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதி சுமார் 22,877 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. இது தமிழ்நாட்டுப் புவிப்பரப்பளவில் 17.59% ஆகும். தமிழ்நாடு அரசு ஈரப்பதமுள்ள பசுமை மாறாக் காடுகள் முதல் குறை ஈரப்பதமுள்ள இலையுதிர் காடுகள் வரை தனது கவனத்தை செலுத்துகின்றது. அரிய விலங்குகள், பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றைக் பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு மாநில வனச் சட்டம், 1882, வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, வனப் பாதுகாத்தல் சட்டம், 1980 மற்றும் அதன் துணை விதிகள் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இவ்வனங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகின்றது.


மே 10, 2009

ஆங்கில மொழியின் வரலாறு நான்கு கட்டங்களாக பிரித்து ஆயப்படுகிறது. அவை பழம் ஆங்கிலம் (400-1100), இடைக்கால ஆங்கிலம் (1100-1500), முன் தற்கால ஆங்கிலம் (1500-1800), தற்கால ஆங்கிலம் (1800-2009+) எனப்படுகின்றன. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஒர் உலக மொழியாக இருக்கிறது. இம்மொழியை 1.8 பில்லியன் மக்கள் அல்லது மூன்றில் ஒரு மக்கள் பேசுகின்றனர். 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், ஊடகவியல், அரசியல் என எல்லாத்துறைகளும் இம்மொழியில் நடைபெறுகின்றன.


கண்ணாடி என்று பொதுவாகக் குறிப்பிடும்போது இது, சாளரங்கள், போத்தல்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றின் உற்பத்தியில் பயன்படுவதும்; கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. தொழில்நுட்ப அடிப்படையில், கண்ணாடி என்பது குளிர்ந்து பளிங்காகாமல் திண்மமாகிய கனிமப் பொருட் கலவை ஆகும். பெரும்பாலான கண்ணாடிகள் சிலிக்காவை முக்கிய கூறாக கொண்டுள்ளன. அறிவியல் அடிப்படையில் கண்ணாடி என்பது நெகிழிகள், ரெசின்கள், பிற சிலிக்காவைக் கொண்டிராத பளிங்குருவற்ற திண்மங்கள் போன்ற எல்லாப் பளிங்குருவற்ற திண்மங்களையும் குறிக்கப் பயன்படுவதுண்டு.


மே 3, 2009

முடி அல்லது முடிச்சு என்பது கயிறு போன்ற நீளவடிவப் பொருட்களை ஏதொன்றையும் பொருத்துவதற்கு அல்லது பற்றுவதற்குப் பயன்படும் ஒரு வழிமுறை ஆகும். ஒரு முடிச்சில் ஒரே கயிறோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கயிறுகளோ பயன்படலாம். நூல்கள், இழைகள், முறுக்குக் கயிறுகள், பட்டிகள், சங்கிலி போன்றவற்றைப் பயன்படுத்தி முடிச்சுக்கள் இடமுடியும் (முடிய முடியும்). முடிச்சுக்களை மேற்குறிப்பிட்ட பொருட்களிலேயே இடலாம் அல்லது கழி, வளையம் போன்ற பிற பொருட்களை அவற்றினால் கட்டுவதற்குப் பயன்படுத்தலாம். முடிச்சுக்களை மனிதர் மிகப் பழங்காலம் தொட்டே பயன்படுத்தி வருகின்றனர். இதனாலும், இவற்றின் மிகப் பரவலான பயன்பாட்டுத் தன்மையினாலும், முடிச்சுக் கோட்பாடு போன்ற கணிதக் கோட்பாடுகளோடு இவற்றுக்குள்ள தொடர்பு காரணமாகவும் முடிச்சுக்கள் மீது எப்போதும் ஆர்வம் உள்ளது.


எண்கோட்பாட்டு இயலில் ரீமன் இசீட்டா சார்பியம் அல்லது ரீமன் இசீட்டா சார்பு (Riemann zeta function) என்பது முதன்மையான சார்புகளில் ஒன்று. இச் சார்பியம் என்பது என்னும் சிக்கல் எண் மாறியால் அமைந்த முடிவிலித் தொடர். இதன் வரையறை:

இச் சார்பியம் இயற்பியல், நிகழ்தகவியல், பயன்முகப் புள்ளியியல் போன்ற பல துறைகளிலும் பயன்படுகிறது. இச் சார்பியம் பகா எண் தேற்றத்தோடும் தொடர்பு கொண்டது. ரீமன் கருதுகோள் (Riemann hypothesis) என்று அறியப்படும், ரீமன் ஊகம், தனிக்கணிதத்தில் (pure mathematics) இன்னும் நிறுவப்படாத மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று. இந்த ரீமன் ஊகம் என்பது ரீமன் இசீட்டா சார்பியத்தின் வேர்கள்(zeros) பற்றிய ஓரு கணித ஊகம் (நிறுவா முன்கருத்து).


ஏப்ரல் 26, 2009

அய்யாவழி பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும். அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. அய்யாவழி மக்கள், 80 லட்சத்துக்கு மேல் இருப்பதாக கூறப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிவரம் இல்லை. அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.


நாற்கொம்பு மான் (Tetracerus quadricornis) தெற்காசியாவின் திறந்தவெளிக்காடுகளில் வாழும் ஒரு மானினமாகும். இது இந்தியாவில் கங்கை நதியின் தெற்கிலிருந்து தமிழ் நாடு வரையிலும், ஒரிசா மாநிலத்திற்கு மேற்கிலிருந்து குசராத்தின் கீர் காடுகள் வரை வாழ்கின்றது. மேலும் இவ்வினத்தின் ஓரு சிறிய உயிர்த்தொகை நேபாளத்திலும் வாழ்கின்றது. கொப்புகளில் வளையங்கள் இல்லாமல் இருப்பது இந்த மான் குலத்தின் முக்கிய பண்பாகும், மேலும் இப்பண்பே இவற்றை மற்ற மானினத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.


ஏப்ரல் 19, 2009

இந்திய காண்டாமிருகம் இந்தியாவின் வடகிழக்கு பகுதி, நேபாளம், மற்றும் பூட்டானின் சில பகுதிகளில் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். மூக்குக்கொம்பன் என்றும் அறியப்படும் இந்த விலங்கு நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்று. தடித்த தோலும் (1.5 - 5.0 செமீ), பருத்த உடலும், 1-1.8 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இப்பெரிய விலங்கு விரைவாகவும் ஓட வல்லது - மணிக்கு 40 கிமீ விரைவில் ஓடவல்லது. இவ்விலங்கு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ளக் காடுகளில் வாழ்கின்றது. முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது, பின்னர் ஏற்ப்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும், வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3,000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கிறன.


இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5 இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147 ன் கீழ் எழுதப்பட்டுள்ளன.


ஏப்ரல் 12, 2009

சூரியன் மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின் திணிவு மட்டும் சூரிய மண்டலத் திணிவில் 98.6 விழுக்காடைக் கொண்டுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். ஒளி இத்தொலைவை சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் சூரிய ஆற்றலே. ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில் சேகரிக்கப்படும் சூரிய ஆற்றல் பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும்.


பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ச்சுனன் அங்கே தன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருட்ணன், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்றார். மேலும் அப்போது அவனுடன் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் உரையாடினார். இந்த உரையாடலே பகவத் கீதை ஆனது.


ஏப்ரல் 5, 2009

இராச நாகம் என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. சுமா 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சு ஒரே கடியிலேயே ஒரு மனிதனை கொல்லவல்லது.


பத்துக் கட்டளைகள் அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இசுரவேலருக்கு கொடுக்கப்பட்டது. கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் யாத்திராகமம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை" என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்பயிகை என்ற பதத்தை பாவிக்கிறது. கடவுளை விசுவாசி, அவர் திருப்பெயரை வீணாக உச்சரிக்காதே, அவர் திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதே, பெற்ரோரைக் கனம்பண்ணு, கொலை செய்யாதே, மோக பாவம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி செல்லோதே, பிறர் மனையை விரும்பாதே, பிறர் உடைமையை விரும்பாதே ஆகியவை அப் பத்துக் கட்டளைகள் ஆகும்.


மார்ச் 29, 2009

e என்னும் மாறிலி கணிதத்திலேயே மிகச்சிறப்பான மூன்று மாறிலிகளில் ஒன்று. பை மற்றும் i என்பன ஏனைய இரண்டு கணித மாறிலிகளாகும். 1614 இல் மடக்கைகளை அறிமுகப்படுத்திய நேப்பியருக்காக e என்ற இம்மாறிலியை நேப்பியர் மாறிலி என்றும், 1761 இல் அதை பல தசம இலக்கங்களுக்குக் கணித்து மெக்கானிக்கா என்ற தன் கணித நூலில் புகுத்திய ஆய்லரின் நினைவாக ஆய்லர் மாறிலி என்றும் சொல்வதுண்டு. ஆய்லருடைய கணிப்புப்படி e யின் பொறுமதி e = 2.718 281 828 459 045 235 360 287 4 ... ஆகும்.


ஆறுமுக நாவலர் (1822 - 1879; நல்லூர், யாழ்ப்பாணம்) 19 ம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். தற்காலத் தமிழ் உரைநடையின் முன்னேடிகளில் ஒருவர். பல தமிழ் நூல்களை எழுதியும், பழம் பெரும் நூல்களை அச்சுப் பதிப்பித்தும் தமிழ்ப் பணி ஆற்றினார். சைவ சமயத்துக்கும் பெரும் பங்களிப்புக்கள் செய்தார். இவர் எழுதிய இலக்கணச் சுருக்கம், சைவ வினாவிடை ஆகியவை மாணவர்களுக்குப் பாட நூல்களாக அமைந்தன. எனினும் இவர் சாதிப் படிநிலை அமைப்பையும், வர்ணாச்சிரமத்தையும் வலியுறுத்தியமை சமூக சீர்திருத்தவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.



மார்ச் 22, 2009

லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci, ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.


ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை, இயேசு கூறிய ஒரு உவமையாகும். இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது தங்களை நீதிமான்களாக எண்ணிக்கொண்ட பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து, இவர்(இயேசு) பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார். காணாமல் போன ஆடு, காணாமல் போன காசு உவமைகளை தொடர்ந்து இவ்வுவமையை இயேசு கூறினார். இது லூக்கா 15:11-32 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.



மார்ச் 15, 2009

இந்திய தரைப்படை இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும். இது இந்தியாவின் பாதுகாப்பு நலனை காப்பதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதிலும், எல்லை கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதிலும், பயங்கரவாத எதிர்ப்பு பணிகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும், இயற்கை சீற்றங்களின் போது மீட்புப்பணி மற்றும் மனிதாபிமான பணிகளிலும் ஈடுபடுகின்றது. இந்திய தரைப்படை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. 1,130,000 படைவீரர்களைப் பணியில் கொண்டும், 1,800,000 பேரை இருப்பில் கொண்டும், இந்திய தரைப்படை உலகில் இரண்டாவது பெரிய தரைப்படையாகும். .


எலிக்குடும்பம் அல்லது முரிடீ (Muridae) என்பது பாலூட்டிகள் வகுப்பில் உள்ள குடும்பங்கள் யாவற்றினும் மிகப்பெரிய குடும்பம். இக் குடும்பத்தில் ஏறக்குறைய 650 இனங்கள் உள்ளன. இவை ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா ஆகிய இடங்களில் இயற்கையாக வாழ்கின்றன. எலி இனங்கள் உலகெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு எங்கும் பரவி உள்ளன. இந்தக் குடும்பத்தை சேர்ந்த சில இனங்கள், சுண்டெலி, வயல் எலிகள், கெர்பில் என்னும் எலி வகைகள் ஆகும். அறிவியற் பெயராகிய முரிடீ (Muridae) என்பதன் பொருள் இலத்தீனில் எலி என்பதே.



மார்ச் 8, 2009

பழ. நெடுமாறன் (1933, தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தை தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.


கிராமின் வங்கி (வங்காள மொழி: গ্রামীণ ব্যাংক) என்பது பிணை வைப்பின்றி வறியவர்களுக்கு சிறுகடன்கள் வழங்குவதற்கென வங்களாதேசத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிதியமைப்பாகும். இதன் தாபகர் முனைவர் முகமது யூனுஸ் ஆவார். இவ் வங்கி சிறுகடன் வழங்குவது மட்டுமின்றி வைப்புக்களை ஏற்றல், வங்கிசாரா சேவைகளை வழங்குதல், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் வணிக அமைப்புக்களை நடாத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றது. ஏழைமக்களின் சமூக பொருளாதார முன்னேற்றதிற்காக முன்னின்று உழைத்தமைக்காக கிராமின் வங்கிக்கும்,தாபகர் யூனுஸிற்கும் 2006ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


மார்ச் 1, 2009

மின்னோட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட குறுக்கு வெட்டுப் பரப்பை நொடிக்கு எவ்வளவு மின்மம் கடக்கின்றது என்பதன் விரைவு அளவு ஆகும். எனவே மின்மம் கடக்கும் கால விகிதம் மின்னோட்டம். மின்னோட்டம் ஒரே திசையில் பாய்ந்தால் அது நேர் மின்னோட்டம். மின்னோட்டம் முன்னும் பின்னுமாக மாறி மாறி ஓடினால் அது மாறு மின்னோட்டம். மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.


கேடலான் எண்கள் (Catalan numbers) என்ற கருத்து 1830ம் ஆண்டு யுஜீன் கேடலான் (1814-1894) என்பவர் எழுதின ஒரு ஆய்வுக் கட்டுரையிலிருந்து தொடங்கியது. பற்பல எண்ணிக்கைப் பிரச்சினைகளில் அது திரும்பத் திரும்ப வருவதைப் பார்க்கலாம். அதனாலேயே சேர்வியலில் இது ஒரு முக்கிய அத்தியாயமாக நிலைபெற்றுவிட்டது. ஒரு தொடர்வரிசையாக வரும் இந்த எண்களின் n –வது எண்ணுக்கு Cn என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய மதிப்பு

.அதாவது,

ஆகையால் C2 =1; C3 = 2; C4 =5; C5 = 14, C6 = 42 .....

C1 ஐ 1 என்று எடுத்துக்கொள்வது வழக்கம்




பெப்ரவரி 22, 2009

ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் என்பது 2009 சனவரி, மற்றும் பெப்ரவரி மாதங்களில் வன்னியில் இலங்கை அரசு நடத்தும் ஈழத்தமிழர் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், உடனடியாக அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகம், மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமிழர்கள் சிலர் மேற்கொண்ட தீக்குளிப்பு நடவடிக்கைகளைக் குறிக்கும். இதில் தமிழ்நாட்டில் ஆறு பேர், மலேசியாவில் ஒருவர், சுவிட்சர்லாந்தில் ஒருவர் என எட்டுப்பேர் இறந்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர் கு. முத்துக்குமாரே (படம்) சனவரி 29, 2009 இல் முதலில் தீக்குளித்து இறந்தார்.


கார்த்திகை என்பது ஒரு நாள்மீன் கூட்டத்திற்கு பெயர். இது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (ஓரை வட்டத்தில்) (Zodiac) குறிப்பிடப்படும் 27 நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் ஆகும். இது இந்திய மரபுப்படி கால் பாகம் மேட இராசியிலும் (மேட ஓரையிலும்) (Aries) முக்கால் பாகம் இடப ராசியிலும் (இடப ஓரையிலும்) (Taurus) உள்ள பரவலாக அறியப்பெற்ற ஒரு நாள்மீன் கூட்டம் (நட்சத்திரக்கூட்டம்). எளிதில் யாரும் வெறுங்கண்ணால் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடியது. இதனுடைய அறிவியற்பெயர் M45. சாதாரண வழக்கில் பேசப்படும் பெயர் Pleiades.


பெப்ரவரி 15, 2009

ஆஸ்திரேலியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். தமிழ் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆகவும், 2001 இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. இலங்கையில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் 1983 இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.


தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் என்பது, 1948 ஆம் ஆண்டுக்கும், 1990 ஆம் ஆண்டுக்கும் இடையில் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த தேசியக் கட்சி அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்ட அடிப்படையிலான இனவாரித் தனிமைப்படுத்தல் முறையைக் குறிக்கும். இனவொதுக்கல் சட்டம், குடிமக்களையும், நாட்டுக்கு வருகை தந்திருப்போரையும், கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. தென்னாபிரிக்கக் கறுப்பினத்தவரின் குடியுரிமை நீக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுக்காலக் கறுப்பின மக்களின் போராட்டத்தை அடுத்து 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் முதன் முதலாக அனைத்து மக்கள் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் இடம்பெற்றது.


பெப்ரவரி 8, 2009

நீர்மூழ்கிக் கப்பல் என்பது நீரில் மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகுதொலைவு செல்லக்கூடிய நீரூர்தி ஆகும். நீர்மூழ்கிக் கப்பல் என்னும் சொல் பொதுவான பெரிய அளவிலான, மனிதர்களை தாங்கி செல்லவல்ல தானியங்கு கலங்களை குறிக்க பயன்படுத்தப் படுகிறது. சில இடங்களில் இதே சொல் சிறிய உருவத்தில், தொலைக் கட்டுப்பாட்டுடன் இயங்கக்கூடிய இயந்திர உணர்கருவிகள் கொண்டடக்கிய ஆராய்ச்சிக் கலங்களையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு பல படைத்துறை, குடிசார் பயன்பாடுகள் உண்டு.


ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் என்பது, ஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவையினால் உருவாக்கப்பட்ட பசுமைக் கட்டிடம் தொடர்பான தரவரிசைப்படுத்தல் முறைமை (Green Building Rating System) ஆகும். இதன் ஆங்கிலப் பெயரான Leadership in Energy and Environmental Design என்பதன் சுருக்கமான LEED (லீட்) என்ற பெயரில் இது பரவலாக அழைக்கப்படுகின்றது. இது, சூழல்சார்ந்த பேண்தகு தன்மை (environmentally-sustainable) கொண்ட கட்டுமானத்துக்கான தரப் பட்டியலொன்றை உருவாக்கியுள்ளது. கட்டிடத் தொழில்துறையின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள், லீட் முறைமையை உருவாக்கி அதனைத் தொடர்ந்து செப்பனிட்டு வருகிறார்கள்.


பெப்ரவரி 1, 2009

கர்நாடகம் இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. கர்நாடகத்தின் தலை நகரம் பெங்களூர். மங்களூர், மைசூர் ஆகியன ஏனைய பெரிய நகரங்களாகும். மைசூர் மாநிலம் என்ற பெயரில் அறியப்பட்ட இம்மாநிலம் 1956 ஆம் ஆண்டு உருவாகப்பட்டாலும் 1972 ஆம் ஆண்டே கர்நாடக மாநிலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்திய மாநிலங்கள் பட்டியலில் பரப்பளவுவின்படி எட்டாம் இடத்திலும் மக்கள்தொகையில் ஒன்பதாவது இடத்திலும் உள்ள கர்நாடக மாநிலம 29 மாவட்டங்களாக பிரிக்கப்படுள்ளது. கன்னடம் மொழி அலுவல் மொழியாகவும், அதிகமாக பேசப்படும் மொழியாகவும் உள்ளது.


ஒக்டோப்பஸ் செலவட்டை (Octopus Card) என்பது ஒரு வித மின்னணுப் பணம் செலுத்தும் செலவட்டையாகும். அதாவது ஒக்டோப்பஸ் செலவட்டை பொதுப் போக்குவரத்து, உணவகம், பொருள் கொள்முதல், கட்டண அறவீடு மற்றும் வேறு சிலவற்றிற்கும் ஹொங்கொங் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. இது எம்.டி.ஆர் தொடருந்துச் சேவை நிறுவனத்தால் 1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.


ஜனவரி 25, 2009

கமில் சுவெலபில் (Kamil Vaclav Zvelebil, 1927 - 2009) செக் நாட்டில் பிறந்து தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநர்களில் ஒருவர். தமிழ், தமிழர் பற்றிப் பிறமொழியினருக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தவர்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. திராவிட மொழியியல், சங்க இலக்கியம், முருக வழிபாடு, தமிழ் யாப்பு, தமிழ் வழக்குச் சொற்கள், இருளர் மொழி ஆகியவை பற்றி விரிவாக ஆங்கிலத்தில் இவர் எழுதியுள்ளார்.


பி.எச்.பி (PHP: Hypertext Preprocessor) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பொது நோக்க படிவ நிரலாக்க மொழி. இது இணைய நிரலாக்கத்திற்கு மிக உகந்ததாகக் கருதப்படுகிறது. இம் மொழியின் நிரற்றொடர்களை எச்.டி.எம்.எல் பக்கங்களுக்குள்ளேயே பொதிந்து விடலாம். பி.எச்.பி 5.0 பதிப்பு பொருள் நோக்கு நிரலாக்க கூறுகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளிவந்தது.


ஜனவரி 18, 2009

மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் மாம்பழம் பயன்படுகிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன. மங்கோ அல்லது மேங்கோ (Mango) என்ற ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானதே ஆகும்.


கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் (கேட்க; Johann Carl Friedrich Gauss; ஜேர்மனி; 1777 1855) கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர். அவர் கணிதம், இயற்பியல், வானியல்,புவிப்பரப்பு ஆகிய நான்கு துறைகளிலும் கணிசமாகப் பங்களித்தவர். கணிதத்தில், எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் ஆகிய மூன்றிலும் பற்பல விதங்களில் அடிக்கல் நாட்டி அவர் காலத்திலேயே கோபுரம் எழுப்பினவர். கணித இளவரசர் (இலத்தீன்: princeps mathematicorum) என்றும் அறியப்படுகிறார்.


ஜனவரி 11, 2009

கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, சிரா என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன.


இராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.


ஜனவரி 4, 2009

பொறியியல் என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருளறிவியல், திண்ம / பாய்ம விசைப்பொறியியல், வெப்ப இயக்கவியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர்.


கணிதத்தில் பகுவியல் (Analysis) என்ற உப இயல் நியூடன் தொடங்கிவைத்த நுண்கணிதக்கருத்துகளில் விதையிடப்பட்டு, 17, 18, 19 வது நூற்றாண்டுகளில் ஆய்லர், லாக்ரான்ஜி, கோஷி, வியர்ஸ்ட்ராஸ், காஸ், ரீமான், ஜோசப் ஃவூரியே இன்னும் பலருடைய ஆய்வுகளினால் பெரிய ஆலமரமாக வளர்ந்துவிட்ட ஒரு மிகச்சிறந்த பிரிவு. இத்துறையினுடைய எண்ணப் பாதைகள் இயற்பியல், பொறியியல், இரண்டிலும் ஆழப்புகுந்து, 19 வது நூற்றாண்டின் பிற்பாதியில், அறிவியலில் எந்தப் பிரச்சினையானாலும் அதை சரியானபடி உருவகப்படுத்திவிட்டால் கணிதம் அதைத் தீர்வு செய்துவிடும் என்ற ஒரு நம்பிக்கையை அறிவியலுலகில் அனைவருக்கும் உண்டுபண்ணியது.

முதற்பக்கக் கட்டுரைகள் காப்பகம்
  • விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்