விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2016

திசம்பர்

கழுகு ஓர் வலுவான கொன்றுண்ணிப் பறவை ஆகும்.உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான நகங்களைக் கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. இவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. மேலும்...


ஏ. ஆர். ரகுமான் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். மேலும்...


நவம்பர்

கொரிய உணவு பல நூற்றாண்டுகளாக சமூக, அரசியல் மாற்றங்கள் ஊடாகப் படிமலர்ந்த உணவு ஆகும். இது கொரியத் தீவகம், தென்மஞ்சூரியாவின் முந்து வரலாற்று நாடோடி, வேளாண் மரபுகளில் தோன்றி, பல்வேறு பண்பாடுகளுடனும் இயற்கைச் சூழலுடனும் ஊடாடிப் படிமலர்ந்த உணவு வகையாகும். கொரிய உணவு அரிசி, காய்கறி, இறைச்சி ஆகிய உட்கூறுகளால் ஆகியதாகும். மரபுக் கொரிய உணவில் தொட்டுக்கொள்ளும் பக்க உணவுகள் நிறைய இருக்கும். மேலும்...


சமர்கந்து சொகிடிய மொழியில் "கற்கோட்டை" அல்லது "கல் நகரம்" என்றழைக்கப்படும், உசுபெக்கிசுத்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் சமர்கந்து மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான பட்டுப் பாதையின் நடுவில் உள்ள இதன் அமைவிடம் காரணமாகவும் இசுலாமிய அறிவியலின் மிக முதன்மையான தளமாகவும் இருப்பதால் இவ்வூர் புகழ் மிக்கதாயிருக்கின்றது. 14 ஆம் நூற்றாண்டில் சமர்கந்து நகரம் தைமூர்ப் பேரரசின் தலைநகரமாயிருந்தது. மேலும்...

யூதர்களின் தன்னாட்சி மாகாணம் என்பது உருசியாவின் கூட்டாட்சி அமைப்பைச் சேர்ந்த ஒரு கூட்டாட்சி மாகாணம் ஆகும். இது உருசிய தூரக்கிழக்கெல்லையில் உருசியாவின் கபதோஸ்க் கிராய் மற்றும் அமூர் மாகாணம் மற்றும் சீனாவின் கெய்லோங்சியாங் மாகாணம் போன்றவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இது "யேவ்ரே", "பைரோபிடிஜான்" என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரம் பைரோபிடிஜான் ஆகும். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 176,558 ஆகும். மேலும்...


சவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம் சவூதி அரேபியாவில் உள்ள ஒரு பெரிய தேசிய அருங்காட்சியகம் ஆகும். 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ரியாத்தில் உள்ள மன்னர் அப்துல் அச்சீசின் வரலாற்று மையத்தின் ஒரு பகுதியாகும். சவுதி அரேபியாவின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நிகழ்ந்தபோது, முராப்பா அரண்மனை மாவட்ட வளர்ச்சித் திட்டத்தில், முராப்பாவைச் சுற்றியுள்ள இடங்களை மறுசீரமைக்கும் பொழுது ஒரு பகுதியாக இத்தேசிய அருங்காட்சியகத்திற்கான முன்னெடுப்புகள் தோன்றின. மேலும்..

அக்டோபர்

கலீலியோ கலிலி ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மெய்யியலாளர் ஆவார். இவர் 17 ஆம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை" என்று பலவாறாக பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல், ஆராய்தல் ஆகியவை வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகளாகும். மேலும்...


காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். புராணங்களின் படி கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவன் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் "காரைக்கால் அம்மையார்" என்று வழங்கப்பெறுகிறார். ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார். மேலும்..

வெளிச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியாக பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இவ்வாறு கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து முளையமாகி அப்பெண், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். மேலும்..


திருவோவியம் என்பது சமயம் சார்ந்த, குறிப்பாகக் கிறித்தவ சமயம் சார்ந்த கீழைத் திருச்சபையிலும் கீழைக் கத்தோலிக்க திருச்சபையிலும் வழக்கத்திலிருக்கும் திருவுருவப் படத்தைக் குறிக்கும். மக்களின் உள்ளத்தில் பக்தியைத் தூண்டி எழுப்பவும், கடவுளுக்கு வழிபாடு நிகழ்த்த கருவியாக அமையவும், அலங்காரப் பொருளாகவும் இரு பரிமாணத் திருவோவியங்களும் முப்பரிமாணத் திருச்சிலைகளும் உருவாக்கப்பட்டன. மேலும்..


செப்டம்பர்

ஆகத்து

எருசலேம் என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும்......


இயல்நிலைப் பரவல் என்பது புள்ளியியலின், நிகழ்தவுக் கோட்பாட்டில், ஒரு தொடர் நிகழ்தகவுப் பரவலாகும். ஒரு சமவாய்ப்பு மாறியின் மெய்மதிப்புகள், சராசரி மதிப்பைச் சுற்றி நெருக்கமாக அணுகும் தோராயநிலையை விளக்குவதற்கு இப்பரவல் பெரும்பாலும் பயன்படுகிறது. புள்ளியியலில் இயல்நிலைப் பரவல் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மேலும்.....


சூலை

இந்தோனேசிய ரூபாய் இந்தோனேசியாவின் அலுவல்முறை நாணயம் ஆகும். இந்தோனேசிய வங்கியால் வெளியிடப்பட்டு கட்டுப்படுத்தப்படும் இதன் ஐ.எசு.ஓ 4217 நாணயக் குறியீடு (ஐடிஆர்) IDR ஆகும். "ரூபியா" என்ற பெயர் இந்துத்தானிய சொல்லான ரூப்யா மற்றும் சமசுகிருத வேரிலிருந்து (வார்ப்பு வெள்ளி) வந்துள்ளது. பேச்சுவழக்கில் இந்தோனேசியர்கள் வெள்ளி என்பதற்கான இந்தோனேசியச் சொல்லான "பெராக்" என்பதையும் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ரூபியாவும் 100 சென்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தால் சென் நாணயங்களும் வங்கித்தாள்களும் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன. மேலும்...


ஹுனான் மாகாணம் என்பது சீன மக்கள் குடியரசு நாட்டின் தென்மத்திய சீனப்பகுதியிலுள்ள மாகாணங்களுள் ஒன்று. தோங்டிங் ஏரியின் தெற்கில் மாகாணம் உள்ளது. இதனால் "ஏரியின் தெற்கு" என்னும் பொருளில் இதன் பெயர் ஹுனான் என்று ஏற்பட்டது. ஹுனான் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாகவும், சுருக்கமாகமாகவும் "ஷியாங்" என்று அழைக்கப்படுகிறது. ஷியாங் ஆறு மாகாணத்தில் பாய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மேலும்..

சுடுமட்சிலைப் படை என்பது முதலாவது சீனச் சக்கரவர்த்தி சின் ஷி ஹுவாங்கின் போர் வீரர்களை சித்தரிக்கும் சுடுமட்சிலை சிற்பங்களாகும். இது சக்கரவர்த்தியை மறு வாழ்விலும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, சக்கரவர்த்தியுடன் கி.மு. 210 இல் அடக்கம் செய்யப்பட்ட ஒரு மரணச்சடங்குக் கலையின் வடிவமாகும். கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இவ்வுருவங்கள், சாங்சி மாணத்திலுள்ள சிய்யான் என்னுமிடத்தின் லின்டோங் மாவட்டத்தில் உள்ளூர் விவசாயி ஒருவரால் 1974 இல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்...


மயோன் எரிமலை என்பது உயிர்துடிப்புடைய எரிமலை ஆகும். இது பிலிப்பைன்சு நாட்டின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ளது. இது "முழுமையான கூம்பு" எனப் புகழ்பெற்ற எரிமலையாகும். ஏனெனில் அது கிட்டத்தட்ட சமச்சீரான கூம்பு வடிவத்தில் உள்ளது. இந்த மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் சூலை 20, 1938 இல், நாட்டின் முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் மயோன் எரிமலை இயற்கை பூங்கா என வகைப்பாடு செய்யப்பட்டு மயோன் எரிமலை தேசியப் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும்..

வேதியியலின் வரலாறு என்பது பண்டைய வரலாற்றில் தொடங்கி நிகழ்காலம் வரையிலான காலப்பகுதியைப் பிரதிபலிக்கிறது. கி.பி 1000 ஆண்டுகளில் வாழ்ந்த குடிமக்கள் பயன்படுத்திய பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் முடிவில் வேதியியலின் பலவகைப் பிரிவுகளாக உருவாகியுள்ளன. தாதுக்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், மட்பாண்டங்கள் செய்தல் மற்றும் மெருகூட்டுதல், மதுவகைகளை நொதிக்கச் செய்தல் போன்ற செயல்களை உதாரணமாகக் கூறலாம். மேலும்...


டுயோங் தூ யோங் ஒரு வியட்நாமிய எழுத்தாளரும், அரசியல் மாற்றுக்கருத்தாளரும் ஆவார். வியட்நாமியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான இவர், இவரது படைப்புகளுக்காகவும், வியட்நாமிய அரசில் நிலவிய ஊழலை வெளிப்படையாக விமர்சித்ததற்காகவும் 1989 இல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்படவும், சில காலம் சிறைவாசம் அனுபவிக்கவும் நேரிட்டது. மேலும்..

பட்டை ஒன்று பாதை ஒன்று என்பது சீன மக்கள் குடியரசு முன்வைத்துள்ள ஒரு மேம்பாட்டுச் செயல்நெறியும், சட்டகமும் ஆகும். இது "பட்டையும் பாதையும்" அல்லது "பட்டை ஒன்று, பாதை ஒன்று" அல்லது "பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பு" என்றும் வழங்கப்படுகிறது. முதன்மையாக யூரேசிய நாடுகளுக்கிடையே இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதைக் குவிமையமாகக் கொண்ட இந்த உத்தியில் நிலவழி பட்டுச் சாலைப் பொருளாதாரப் பட்டை, கடல்வழி பட்டுப் பெரும்பாதை ஆகிய இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. மேலும்...


புனித சோபியா பேராலயம் என்பது நொவ்கொரொட் பேராயரின் பேராலயக் கோயிலும் நொவ்கொரொட் திருச்சபையின் தாயக் கோயிலும் ஆகும். 38 மீட்டர் உயரம், ஐந்து குவிமாடங்கள் கொண்ட கல்லாலான பேராலயம் நொவ்கொரொட்டின் விளாடிமிரினார் 1045 இற்கும் 1050 இற்கும் இடைப்பட்ட காலத்தில், பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருவாலி மரத்தால் கட்டப்பட்ட பேராலயத்திற்குப் பதிலாகக் கட்டப்பட்டது. இது ஆயர் லூகா சிடியாடாவினால் 1050 அல்லது 1052 செப்டம்பர் 14 அன்று சிலுவைத் திருவிழா அன்று அர்ப்பணிக்கப்பட்டது. மேலும்..


சூன்

முதலாம் யூத-உரோமைப் போர் என அழைக்கப்படும் இது யூதர்களின் உரோமைப் பேரரசுக்கு எதிரான பாரிய மூன்று கிளர்ச்சிகளில் முதலாவதாகும். இரண்டாவது கிளர்ச்சி கி.பி. 115-117 இலும் மூன்றாவது கிளர்ச்சி கி.பி. 132-135 இலும் இடம்பெற்றது. இந்த பெரும் கிளர்ச்சி கி.பி 66 இல், உரோம, யூத இனங்களுக்கிடையே உருவாகியது. வரி எதிர்ப்பு போராட்டம், உரோமானியா குடிமக்கள் மீதான தாக்குதல் ஆகியன நெருக்கடியை அதிகமாக்கியது. மேலும்...


லாசு பல்மாசு, கேனரித் தீவுகளின் அங்கமாக உள்ள கிராண் கேனரியா தீவின் தலைநகரமாகவும் எசுப்பானியாவின் தன்னாட்சி சமூகமான கேனரித் தீவு அரசின் இணைத் தலைநகரமும் (சான்டா குரூசு தெ டெனிரீஃபேயுடன் கூட்டாக) ஆகும். இதுவே கேனரித் தீவுகளில் உள்ள நகரங்களில் மிகப் பெரியதாகும். எசுப்பானியாவில் ஒன்பதாவது பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. மேலும்..

இரண்டாம் பூவர் போர் 11 அக்டோபர் 1899 முதல் 31 மே 1902 வரை பிரித்தானியப் பேரரசு ஒரு புறத்திலும் தென்னாபிரிக்கக் குடியரசும் (டிரான்சுவால் குடியரசு) ஆரஞ்சு விடுதலை இராச்சியமும் எதிரணியிலும் போரிட்ட சண்டைகளாகும். பிரித்தானிய போர்முனையில் பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளிலிருந்தும் துருப்புக்கள் வரவழைக்கப்பட்டனர். தெற்கு ஆபிரிக்கா, ஆத்திரேலியக் குடியேற்றங்கள், கனடா, நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், பிரித்தானிய இந்தியா, மற்றும் நியூசிலாந்தின் பகுதிகளிலிருந்து துருப்புக்கள் வந்தன. மேலும்...


கிங்காகு ஜி சப்பானின் கியோத்தோவில் உள்ள சென் புத்தமதக் கோயில் ஆகும். இது சப்பானிலுள்ள புகழ் வாய்ந்த கட்டடங்களில் ஒன்றும், அதிகளவு வருகையாளர்களைக் கவரும் ஒன்றாகவும் உள்ளது. இது சப்பானின் தேசிய சிறப்பு வரலாற்று இடமாகவும், தேசிய சிறப்பு நிலத் தோற்றமாகவும், 17 பண்டைய கேயோடோ வரலாற்று நினைவுச் சின்னங்களின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் உள்ளது. கிங்காகு ஜி பகுதி ஆரம்பத்தில் கிராம மாளிகையாக, ஆற்றமிக்க அரசியல் மேதையான "சயோன்ஜி" என்பவருக்குச் சொந்தமாக இருந்தபோது "கிட்டாயமா டாய்" என அழைக்கப்பட்டது. மேலும்..

சுயம்புநாதர் கோயில் நேபாள நாட்டின் தலைநகரம் காட்மாண்டு நகரத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு சிறு மலையில் தூபியுடன் அமைந்த பண்டைய கால பௌத்த கோயிலாகும். இருப்பினும் இது இந்து மற்றும் பௌத்த யாத்திரிகர்களுக்கு புனிதமான மலைக் கோயிலாகும். சுயம்புநாதர் வளாகம் ஒரு பௌத்த நினைவுத் தூணையும், பல கோயில்களையும் கொண்டுள்ளது. அவற்றுள் பல கிறித்து பிறப்பிற்கு முன், லிச்சாவி அரச குலத்தினரால் எழுப்பப்பட்டதாகும். மேலும்...


பெர்சப்பொலிஸ் என்பது அகாமனிசியப் பேரரசின் சடங்குக்குரிய தலைநராக (சுமார் கி.மு. 550–330) இருந்தது. பெர்சப்பொலிஸ் ஈரானிய பார்ஸ் மாகாணத்தில் உள்ள சிராஸ் நகரிலிருந்து 60 கி.மீ தூரம் வடகிழக்கில் அமைந்துள்ளது. ஆரம்ப பெர்சப்பொலிஸ் இடிபாடுகள் கி.மு. 515 ஆம் ஆண்டு காலத்துக்குரியன. இது அகாமனிசியப் பாணி கட்டடக்கலையின் முன்மாதிரியாக உள்ளது. 1979 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பெர்சப்பொலிஸ் இடிபாடுகளை உலகப் பாரம்பரியக் களம் என அறிவித்தது. மேலும்..

தங்குதன் இருகுளோரைடு ஈராக்சைடு என்பது WO2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற தங்குதன் சேர்மங்களைத் தயாரிக்க இச்சேர்மம் ஒரு முன்னோடியாகப் பயன்படுத்தப்படுகிறது. தங்குதன் ஆலைடுகளைப் போலவே தங்குதன் ஆக்சி குளோரைடும் ஈரக்காற்றால் பாதிக்கப்படுகிறது, நீராற்பகுத்தல் வினைக்கும் உட்படுகிறது. தங்குதன் மூவாக்சைடு மற்றும் தங்குதன் அறுகுளோரைடு ஆகிய சேர்மங்கள் ஈதல் தொகுதி மறுபங்கீட்டு வினையினால் மூலம் தங்குதன் இருகுளோரைடு ஈராக்சைடாக மாறுகின்றன.மேலும்...


கிமேஜி கோட்டைமனை என்பது சப்பானின் கிமேஜி எனுமிடத்தில் சிறு மலையின் மேல் அமைந்துள்ள சப்பானியக் கோட்டையகத் தொகுதியாகும். மேம்பட்ட பாதுகாப்புமுறைகளைக் கொண்ட பண்ணைமுறைக் கால 83 கட்டடங்களைக் கூட்டாகக் கொண்ட இக்கோட்டைமனை முன்னோடியான சப்பானியக் கோட்டைமனைக் கட்டடக்கலையின் எஞ்சியிருக்கின்ற நேர்த்தியான எடுத்துக்காட்டாகும். வெளிப்புறம் பளிச்சிடும் வெண்மை நிறத்தில் பறவை பறப்பதைப் போன்ற அமைப்பை வெளிப்படுத்துவதால், இது "வெள்ளைக் கொக்குக் கோட்டைமனை" அல்லது "வெள்ளை நாரைக் கோட்டைமனை" எனவும் அழைக்கப்படுகிறது. மேலும்..


மே

காசுமீர் அக்கரோட்டு மரச்செதுக்கல் என்பது காசுமீர் பள்ளத்தாக்கில் அதிகம் வளரும் அக்கரோட்டு மரத்தில் கைகளால் செய்யப்படும் மரச்செதுக்கல் சிற்ப வேலைப்பாடு ஆகும். பாரம்பரியமாக நாகஸ் என அறியப்படும் மரச்செதுக்கல் சிற்ப வேலைப்பாட்டுக் கைவினைஞர்கள் இதில் ஈடுபடுகின்றனர். அக்கரோட்டு மரம் அதிகம் பாரம் அற்ற எடையையும், இதன் இழையமைப்புக் கட்டமைப்பு கயிறு போன்ற வடிவமைப்பையும், சிறப்பு வண்ண முறைகளுடன் கூடிய அமைப்பு முறையையும் கொண்டுள்ளது. மேலும்...


சுவத் மாவட்டம் பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மலைகள் சூழ அமைந்த, சுவத் ஆற்றுச் சமவெளி மாவட்டமாகும். இதன் தலைமையிட நகரம் சையது செரீப் ஆகும். ஆனால் பெரிய நகரமாக மிங்கோரா விளங்குகிறது. சுவத் மாவட்டத்தை கிழக்கின் சுவிட்சர்லாந்து என்பர். இங்கு பஷ்தூன் பழங்குடி மக்கள், குஜ்ஜர் எனும் கால்நடை மேய்க்கும் மக்கள் மற்றும் கோகிஸ்தானி இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மேலும்..

தோக்கியோ கோபுரம் என்பது சப்பானின் மினடோ மாவட்டத்தில் அமைந்துள்ள தொடர்பாடல், அவதானிப்புக் கோபுரமாகும். 332.9 மீற்றர்கள் (1,092 அடி) உயரமுள்ள இது சப்பானில் இரண்டாவது உயரமான கட்டமைப்பாகும். ஈபெல் கோபுரம் போன்ற பின்னல் அமைப்புக் கோபுர கட்டமைப்புக் கொண்ட இது, வான் பாதுகாப்பு முறைக்கமைவாக வெள்ளை, செம்மஞ்சல் நிறங்களுடன் காணப்படுகிறது. மேலும்...


ஆலாவெர்தி என்பது ஆர்மீனியாவின் வடகிழக்குப் பகுதியில் சியார்சியாவின் எல்லைக்கு அருகில் உள்ள உலோரி மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். ஆர்மீனியா மற்றும் சியார்சியா நகருங்களுக்கு இடையில் நேரடியான இரயில் இணைப்பில் அமைந்துள்ளது. தெபெட் அல்லது தெபெடா அல்லது டோனா என்றழைக்கப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நகரம் அமைந்துள்ளது. மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் முழுக்குடியரசுக்கும் இந்நகரம் ஒரு முக்கியமான வணிக மற்றும் தொழில்துறை நகரமாக திகழ்கிறது. மேலும்..

குவிவுப் பல்கோணம் என்பது தனக்குத்தானே வெட்டிக் கொள்ளாத எளிய பல்கோணம் ஆகும். இப்பல்கோணத்தின் வரம்பின் மீதமையும் எந்த இரு புள்ளிகளையும் இணைக்கும் கோட்டுத்துண்டு பல்கோணத்திற்கு வெளியில் செல்லாது. அதாவது குவிவுப் பல்கோணம், உட்புறத்தை குவிவு கணமாகக் கொண்ட எளிய பல்கோணமாக இருக்கும். ஒரு குவிவுப் பல்கோணத்தின் அனைத்து உட்கோணங்களும் 180 பாகையைவிடக் குறைந்த அல்லது சமமான அளவுள்ளவையாகும். ஒரு கண்டிப்பான குவிவுப் பல்கோணத்தின் உட்கோணங்கள் எல்லாம் 180 பாகையைவிடக் குறைந்த அளவாக இருக்கும். மேலும்...


தஞ்சாவூர் ஓவியத்தட்டு என்பது தஞ்சாவூரில் உருவாக்கப் பெற்ற செயற்கை அலங்காரப் பொருளாகும். இந்த வட்டமான தட்டு பரிசுப் பொருளாக உருவாக்கப்படுகிறது. இக் கைவினைத்திறன் வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற உலோகங்களினால், நடுவில் கடவுள்கள் அல்லது தேவர்களின் உருவங்களினால் புடைப்புரு சித்திர வேலைப்பாடுகளுடன் செதுக்கப்படுகிறது. இக் கலை வேலைப்பாடு அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தின் புவியியல் சார்ந்த குறியீடு பாதுகாப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்..

பெச்சகுச்சா என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு முன்வைப்பு வடிவம் ஆகும். முன்வைப்புப் படவில்லைக் காட்சிகளைத் திட்பமாகவும், விறுவிறுப்பாகவும் ஆக்கும் இவ்வடிவத்தை முன்னிறுத்தி பெச்சகுச்சா இரவுகள் என்ற உரையரங்கங்கள் நிகழ்த்தப்படுகின்றன. தங்களது பரீட்சார்த்த நிகழ்த்துவெளிக்கு மக்களைக் கவரவும்; இளம் வடிவமைப்பாளர்கள் தங்களுக்குள் கூடி, தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காகவும் பிப்ரவரி 2003 இல் பெச்சகுச்சா இரவு முதலில் வடிவமைக்கப்பட்டது. மேலும்...


மஞ்சள் மலைகள் கிழக்கு சீனாவின் தென் அன்ஹுயி மாகாணத்தில் உள்ள ஒரு மலைத் தொடர் ஆகும். இத்தொடர் பகுதியில் உள்ள தாவர வளர்ச்சிச் செறிவு 1,100 மீட்டர் இற்குக் கீழும் மரங்களின் வளர்ச்சி 1,800 மீட்டர் என்ற அளவிலும் காணப்படுகிறது. இப்பபகுதி இயற்கைக்காட்சி, சூரிய மறைவு, விசித்திரமாக வடிவ கருங்கல் உச்சிகள், குவாங்சான் ஊசியிலை மரங்கள், வெந்நீர் ஊற்றுகள், குளிர்காலப் பனி, மேலிருந்து பார்க்கக்கூடிய மேகக் காட்சிகள் போன்றவற்றுக்காக நன்கு அறியப்படுகிறது. மேலும்..

செவ்வகம் என்பது யூக்ளிடிய தள வடிவவியலில் அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது நான்கு செங்கோணங்களைக்கொண்ட ஒரு நாற்கரமாகும். சமகோண நாற்கரம் என்றும் இதனைக் கூறலாம். இதன் எதிர்ப் பக்கங்கள் சம நீளம் கொண்டவை; ஒவ்வொரு கோணமும் செங்கோணமாகும். இதனால் செவ்வகத்தின் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. எனவே இது இணைகரத்தின் ஒரு சிறப்பு வடிவமாகும். அதாவது செங்கோணமுடைய ஒரு இணைகரமாக இருக்கும். செவ்வகத்தின் மூலை விட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன. மேலும்...


காத்மாண்டு நகர சதுக்கம் என்பது நேபாளத்தின் காத்மாண்டு நாட்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது காத்மாண்டு சமவெளியில் உள்ள மூன்று நகர சதுக்கங்களில் ஒன்றாகும். இம்மூன்று நகர சதுக்கங்களும் யுனேஸ்கோவால் உலகப் பாரம்பரியக்களங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மற்ற இரண்டு நகர சதுக்கங்கள் பாதன் நகர சதுக்கம், பக்தபூர் நகர சதுக்கம் ஆகும். 2015 நேபாள நிலநடுக்கத்தில் இச்சதுக்கத்தில் இருந்த பல கட்டிடங்கள் பலத்த சேமடைந்து விட்டன. மேலும்..


ஏப்ரல்

கல்ஆ அல்-பகுறைன் அராபியத் தீபகற்பத்தில் பகுறைன் நாட்டில் அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு முதல் இங்கு நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் 12 மீட்டர் உயரத்திற்கு செயற்கையாக அமைக்கப்பட்ட மண்மேட்டில் பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த மண்மேடு கி.மு 2300 இலிருந்து 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு ஆட்சியாளர்களால் பல அடுக்குகளில் வலிதாக்கப்பட்டுள்ளது. காசைட்டுக்கள், போர்த்துக்கேயர், ஈரானியர்கள் ஆகியோர் இதில் பங்கெடுத்துள்ளனர். மேலும்...


வரலாற்று ரீதியாக, கட்டானா என்பது பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட சப்பானிய வாட்களில் ஒன்று ஆகும். அவை சப்பானிய மானியம் பெற்ற சாமுராய்களினால் பயன்படுத்தப்பட்டன. தற்கால கட்டானாவின் பதிப்புகள் சில நேரங்களில் பாரம்பரிய மூலப்பொருட்கள், முறைகள் பயன்படுத்தாமல் செய்யப்படுகின்றன. கட்டானா அதன் தனித்துவமான தோற்றங்களான வளைந்த, மெல்லிய, ஒற்றை முனைக் கத்தியானது வட்ட அல்லது சதுரப் பாதுகாப்புக் கொண்டு, இரண்டு கைகளுக்கு இடமளிக்கும் நீண்ட பிடி என்பவற்றால் வகைப்படுத்தப்படும். மேலும்..

கொரியத் தீவகத்தின் மரபுவழிப் பண்பாட்டை கொரியப் பண்பாடு சுட்டுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது வடகொரியா, தென்கொரியா எனப் பிரிக்கப்பட்டுவிட்ட பிறகு இரு பகுதிகளின் பண்பாட்டிலும் வேறுபாடுகள் தோன்றலாயின. யோசியோன் பேரரசு காலத்துக்கு முன்புவரை, கொரியப் பண்பாட்டில் வெறியாட்டம் அல்லது முருகேற்றம் அல்லது மெய் மறந்த ஆட்டம் என்ற உலகெங்கிலும் தொல்குடிகளில் நிலவிய மாயமந்திரச் சடங்கு நடைமுறையில் ஆழமாக வேரூன்றி இருந்தது. மேலும்...


ஏல மலைகள் என்பது கம்போடியாவின் தென்மேற்கு, கிழக்கு தாய்லாந்து என்பவற்றுக்கு இடையே உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இம்மலைத்தொடர் கிராவந்த்து மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தென்கிழக்கு-வடமேற்கு அச்சில், தாய்லாந்து வளைகுடாவில் உள்ள கோ கோங் மாகாணத்தில் தொடங்கி பர்சத் மாகாணத்தில் உள்ள வீயங் மாவட்டம் வரையிலும் தென்கிழக்கு திசையில் யானை மலைகள் எனப்படும் தாம்ரெய் மலை வரையிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. மேலும்..

கிமோனோ என்பது ஒரு சப்பானிய மரபுவழி ஆடை ஆகும். இதை ஆண், பெண் இருபாலாரும் அணிவர். "T" வடிவம் கொண்டதும், நேர்கோடுகளால் ஆனதுமான கிமோனோக்களின் கீழ் விளிம்பு அணியும்போது கணுக்கால் அளவுக்கு வரும். இதற்குக் கழுத்துப் பட்டையும், நீளமான கைகளும் இருக்கும். மேலும்...


கிசி பொகொஸ்ட் என்பது கிசி தீவில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டுக்குரிய வரலாற்று இடமாகும். இத்தீவு உருசியாவின் கரேலியாவிலுள்ள ஓனேகா ஏரியில் அமைந்துள்ளது. பொகொஸ்ட் எனப்படும் பகுதியில் மரத்தாலான இரண்டு பெரிய கிறித்தவ தேவாலயங்களையும் ஒரு மணிக் கோபுரத்தையும் கொண்டுள்ளது. மேலும்..

கம்போடிய இலக்கியம் எனப்படுவது மிகப் பழமையான காலத்திலேயே தோற்றம் பெற்றுள்ளதாக அறியப்படும் கம்போடிய இனமக்களின் இலக்கியம் ஆகும். பெரும்பாலான தென்கிழக்காசியாவின் இலக்கியங்கள் போலவே கம்போடியர் இலக்கியத்தின் சொற் தொகுதியும் இரண்டு வேறுபட்ட அம்சங்களை அல்லது நிலைகளைக் கொண்டுள்ளது. முதலாவது, பெரும்பாலும் அரசவை அல்லது புத்த மடங்களால் கட்டுப்படுத்தப்பட்ட எழுதப்பட்ட இலக்கியமும் உள்ளூர் நாட்டுப்புறவியலை அடிப்படையாக கொண்ட வாய்மொழி இலக்கியமுமாகும். இரண்டாவது, கம்போடிய சமுதாயத்தினரிடம் மேம்பட்டிருந்த பௌத்தக் கொள்கைகளும், இந்து சமயக் காவியங்களான இராமாயணம், மகாபாரதம் என்பனவற்றின் கருத்துகளும் இவ்விலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்தின. மேலும்...


நரகத்திற்கான கதவு என்பது மத்திய ஆசியா நாடான துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் கருப்பு மணல் பாலைவன பகுதியில் மெத்தேன் வாயுவை எடுக்கும் முயற்சியில் உருசியா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதற்காக 230 அடி (70.104 மீ) சுற்றளவில் மிகப்பெரிய சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டனர். பணி நிறைவடையும் முன்பே 66 அடி (20.1168 மீ) ஆழ புதைகுழிபோல் உள்வாங்கி வாயுக்கள் கசியதுவங்கியதாகவும் வளிமண்டலத்தில் கொடிய மெத்தேன் வாயுக்கள் கலப்பதை தடுப்பதற்காக உருசியா விஞ்ஞானிகளே தீ மூட்டியதாகவும் எதிர்பாராதவிதமாக சுரங்கம் முழுவதும் தீப்பிடித்ததாக அறியப்படுகிறது. மேலும்..


மார்ச்

இலாகூர் கோட்டை என்பது பாக்கித்தானின் பஞ்சாபிலுள்ள லாகூர் நகரில் உள்ள கோட்டை ஆகும். அரண் சூழ் இலாகூர் நகரின் வடமேற்கே இக்பால் பூங்காவில் அமைந்துள்ளது. பாக்கித்தானிலேயே முகப்பெரும் நகரியப் பகுதி பூங்காவாக விளங்கும் இக்பால் பூங்கா 20 எக்டேர் பரப்பளவில் சரிவக வடிவில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டையின் அடித்தளங்கள் மிகத் தொன்மையானதாக இருந்தாலும் தற்போது காணப்படும் கோட்டை பெரும்பாலும் முகலாயப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 1556–1605 காலகட்டத்தில் அக்பர் ஆட்சியில் பெரிதும் கட்டமைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த முகலாயப் பேரரசர்கள் இங்கிருந்து ஆண்டு வந்தனர். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சீக்கிய, பிரித்தானிய ஆட்சியாளர்களின் பாற்சென்றது. மேலும்...


மாசற்ற கருத்தரித்தல் பேராலயம் என்பது மாஸ்கோ உரோமன் கத்தோலிக்க உயர்மறை மாவட்டத்தின் பேராலயமாகவும் புதிய கோதிக் கிறித்தவ தேவாலயமாகவும் உள்ளது. இரசியாவின் மைய ஆட்சி ஒக்ருக் அல்லது மாவட்டப்பகுதியில் அமைந்துள்ள இது மாஸ்கோவிலுள்ள இரண்டு கத்தோலிக்க திருச்சபையின் தேவாலயங்களில் ஒன்றும், இரசியாவில் பெரியதும் ஆகும். பேராலயக் கட்டுமானம் 1894 இல் சார் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. 1899 இல் அடிக்கல்நாட்டப்பட்டு, 1901 இல் கட்டுமான வேலைகள் தொடங்கின, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவ்வேலைகள் நிறைவடைந்தன. சிவப்பு செங்கல்லினால் மூன்று சுற்றுகளைக் கொண்டதாகக் கட்டப்பட்ட இப்பேராலயக் கட்டமைப்பு வடிவம் கட்டடக்கலைஞரான தோமஸ் பக்தனோவிச் துவர்ஷெட்ஸ்கியால் மேற்கொள்ளப்பட்டது. மேலும்..

கருங்கொட்டு கதிர்க்குருவி என்பது தென் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா தொடங்கி வட அவுஸ்திரேலியா வரை பரவலாகக் காணப்படும் ஒரு சிறிய பறவை. இது மேய்ச்சல் நிலங்களில் காணப்படும். சிவப்பு கலந்த பழுப்பு நிறப் பின்புறம், கழுத்துப் பகுதியில் குறைவான பொன்னிறம், வெள்ளையுடன் சேர்ந்த பழுப்பு என்பனவற்றால் இதனை எளிதில் அடையாளம் காண முடியும். இனப்பெருக்க காலத்தில், ஆண் வளைந்து நெளிந்து பறந்து, ஒருவித ஒலியெழுப்பும். அவ்வொலி கத்தரிக்கோலால் தொடர்ந்து வெட்டுவது போன்ற ஒலியை ஒத்ததாக இருக்கும். மேலும்...


எரிதழல் மலைகள் என்பன சீனாவில் சிஞ்சியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தியான்சன் மலைத்தொடர்களில் உள்ள மண் அரித்துச் செல்லப்பட்ட, தரிசாக உள்ள சிவப்பு மணற்கற்கள் கொண்ட மலைகள் ஆகும். இவை வடக்கில் தக்கிலமாக்கான்பாலைவனத்திற்கும் கிழக்கில் துருப்பன் நகருக்குமிடையே பரவியுள்ள மலைகளாகும். சிவப்பு மணற்பாறைப்படுகைகளில் எற்பட்டுள்ள மண்ணரிப்பு மற்றும் இடுக்குகளின் காரணமாக இம்மலையானது எரிதழல் போல் தோற்றமளிக்கிறது. மேலும்..


பெப்ரவரி 7, 2016

எருசலேம் முற்றுகை என்பது கி.பி. 70 இல் இடம்பெற்ற முதலாம் யூத-உரோமைப் போரின் இறுதி நிகழ்வாகும். கி.பி. 66 இல் யூத பாதுகாவலர்களால் கைப்பற்றப்பட்ட எருசலேம், அன்றைய எதிர்கால பேரரசரான தித்துசினாலும் அவருக்கு அடுத்த நிலை தளபதி திபேரியுஸ் யூலியுஸ் அலெக்சாண்டரினாலும் வழிநடத்தப்பட்ட உரோமைப் பேரரசுப் படை எருசலேம் நகரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டது. அம்முற்றுகையானது முடிவில் நகரம் முழுவதும் கொள்ளையிடப்பட்டு, புகழ்பெற்ற இரண்டாம் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டதும் நிறைவுற்றது. மேலும்...


செந்நாய் என்பது நாய் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உள்ளினம் ஆகும். இதை ஆசிய காட்டு நாய், இந்திய காட்டு நாய், காட்டு நாய் எனப் பல பெயர்களிலும் அழைக்கிறார்கள். செந்நாய் கடைசி உறைபனி காலத்தில் தப்பிப்பிழைத்த விலங்காகும். செந்நாய் லூப்பசு என்ற மூதாதைய நாய் குடும்ப உறுப்பினரிடம் இருந்து சுமார் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு பிரிந்து படிவளர்ச்சி அடைந்ததாக இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி கொண்டு ஆராய்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 12 முதல் 20 கிலோ வரையிலான எடையில் இருக்கும் செந்நாய் 90 செ.மீ நீளமும் 50 செ மீ தோல் பட்டை உயரமும் உடையவையாகும். மேலும்..

பின்னம் என்பது முழுப்பொருள் ஒன்றின் பகுதி அல்லது பகுதிகளைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை நான்கு சமப் பங்குகளாகப் பிரித்தால், அதில் 3 பங்குகள் (அதாவது நான்கில் மூன்று பங்கு) 3/4 எனக் குறிக்கப்படும். பின்ன அமைப்பில், கிடைக்கோட்டிற்குக் கீழுள்ள எண் பகுதி எனவும் மேலுள்ள எண் தொகுதி எனவும் அழைக்கப்படும். எடுத்துக்கொள்ளப்படும் சம பங்குகளின் எண்ணிக்கையைத் தொகுதியும், எத்தனை சம பங்குகள் சேர்ந்து முழுப்பொருளாகும் என்பதைப் பகுதியும் குறிக்கின்றன. ஒரு பின்னத்தின் பகுதி பூச்சியமாக இருக்க முடியாது. விகிதங்களையும், வகுத்தலையும் குறிப்பதற்கும் பின்னங்கள் பயன்படுகிறது. 3/4 என்பது 3:4 என்ற விகிதத்தையும், 3 ÷ 4 என்ற வகுத்தலையும் குறிக்கும். மேலும்...


ஹாக்வாட்சு என்பது ஹாரி பாட்டர் தொடரில் காணப்படும் பதினொன்று தொடக்கம் பதினெட்டு வரையான வயது எல்லையைக் கொண்ட மாணவர்களுக்கான மந்திரங்களைக் கற்றுக்கொடுக்கும் கற்பனைப் பிரித்தானியப் பள்ளியாகும். இதுவே ஜே. கே. ரௌலிங்கின் ஹாரி பாட்டர் தொடரின் முதல் ஆறு புத்தகங்களிற்கும் முக்கிய அமைப்பாக விளங்குகிறது. ரௌலிங் எதேர்ச்சையாகவே இப்பெயரை வைத்தார். ஹாரி பாட்டர் தொடரை எழுதுவதற்கு சில காலம் முன் ரௌலிங் கியு தோட்டத்திற்கு சென்றிருந்திறார். அங்கு கண்ட ஹாக்வாட் என்ற பயிரின் பெயரை வைத்தே இப்பெயரை வைத்ததாக ரௌலிங் கூறுகிறார். மேலும்..


சனவரி 10, 2016

புவி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள், விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அது முதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. மேலும்...


மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை சீனாவில் யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒர் அணையாகும். இதுவே உலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகக் கருதப்படுகிறது. அணை கட்டமைப்பு 2006ல் கட்டிமுடிக்கப்பட்டது. அக்டோபர் 30, 2008 அன்று கரையில் இருந்த 26வது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படத் தொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியை தவிர மூல திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது. இந்த அணைத் திட்டத்தால் மின் உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாக கருதுகிறது. மேலும்..