விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2012

டிசம்பர் 30, 2012
Temple Mount.JPG

யெரூசலம் அல்லது எருசலேம் என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது. எருசலேம் என்பது எபிரேய மொழியில் יְרוּשָׁלַיִם (யெருசலையிம்) என்றும், அரபியில் அல்-குத்சு (القُدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள். கிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும். இந்நகரில் 801,000 மக்கள் வாழ்கின்றார்கள். இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும்......


Normal Distribution PDF.svg

இயல்நிலைப் பரவல் என்பது புள்ளியியலின், நிகழ்தவுக் கோட்பாட்டில், ஒரு தொடர் நிகழ்தகவுப் பரவலாகும். ஒரு சமவாய்ப்பு மாறியின் மெய்மதிப்புகள், சராசரி மதிப்பைச் சுற்றி நெருக்கமாக அணுகும் தோராயநிலையை விளக்குவதற்கு இப்பரவல் பெரும்பாலும் பயன்படுகிறது. புள்ளியியலில் இயல்நிலைப் பரவல் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இயல்நிலைப் பரவலைச் சேர்ந்த பெரும்பாலான முடிவுகளைத் தெளிவாகக் காண முடியுமென்பதால் இப்பரவலை பகுப்பாய்வு முறையில் விளக்க முடியுமென்பது முதல் காரணமாகும். சில எளிய நிபந்தனைகளின் கீழ், அதிக அளவிலான சமவாய்ப்பு மாறிகளின் கூடுதலானது இயல்நிலைப் பரவலைப் பின்பற்றுகிறது என்ற கூற்றை எடுத்துரைக்கும் மைய எல்லைத் தேற்றத்தின் பின்விளைவாக இயல்நிலைப் பரவல் உருவானது நடைமுறை நிகழ்வுகளில் நாம் காணும் பலவகையான சமவாய்ப்பு மாறிகளை மாதிரிப்படுத்துவதற்கு இயல்நிலைப் பரவலின் மணிவடிவம் வசதியாக இருப்பது மற்றொரு காரணமாகும். இயல்நிலைப் பரவலானது புள்ளியியல், தாவரவியல் மற்றும் சமூக அறிவியலில் சிக்கலான தோற்றப்பாடுகளுக்கான எளிய மாதிரியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்.....


டிசம்பர் 23, 2012
Emphysema H and E.jpg

இழையம் அல்லது திசு என்பது, ஒரு உயிர்ச் செயலை புரியும் ஒத்த பண்புகளுடைய உயிரணுக்களின் கூட்டமைப்பு ஆகும். திசுக்களைப் பற்றி ஆராயும் துறை இழையவியல் அல்லது திசுவியல் ஆகும். நோய்களைக் கண்டறிவது தொடர்பாக இழையவியலை ஆராயும் போது அது இழையநோயியல் என அழைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இழையம் ஒரே மாதிரியான உயிரணுக்களைக் கொண்டிருப்பது அவசியமில்லை எனினும், ஒரே பிறப்பிடத்திலிருந்து பெறப்பட்ட உயிரணுக் கூட்டங்களைக் கொண்டிருக்கும். ஒரே தொழிலைச் செய்யக் கூடிய பல இழையக் கூட்டங்களைச் சேர்த்தே உறுப்பு அல்லது அங்கம் உருவாகின்றது. இழையங்களை பாரபின் எனப்படும் மெழுகுக்கட்டிகளில் பதித்து, பின்னர் மெல்லிய படலமாக வெட்டியெடுத்து, இலகுவாக பார்ப்பதற்கு ஏற்றவகையில் அவற்றை இழையச்சாயங்கள் கொண்டு சாயமேற்றி, பின்னர் நுண்நோக்கிகள் மூலம் பார்த்து ஆராயும் முறை காலங்காலமாகப் பயன்பட்டு வருகின்றன. மேலும்....


Rasamanikanar.jpg

மா. இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார். இவரது தந்தையான மாணிக்கம், நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் ஒரு பிரிவின் மேலாளராக இருந்து, வட்டாட்சியராக உயர்ந்தவர். இவரது அன்னை தாயாரம்மாள். ஏழு பேர் பிறந்த குடும்பத்தில் இராசமாணிக்கனாரும் அவரின் அண்ணனான இராமகிருட்டிணன் என்பவருமே மிஞ்சினர். அரசுப் பணியாளரான தந்தையார் அலுவல் காரணமாகப் பல ஊர்களுக்கும் மாற்றப்பட்டதால் இராசமாணிக்கனாரின் கல்வியும் பல ஊர்களில் வளர்ந்தது. பல ஆண்டுகள் வரையில் தற்போதைய ஆந்திர மாநில கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் இருக்க நேரிட்டதால் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியே பயின்ற இவர், 1916 இல் தந்தையார் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டைக்கு மாற்றப்பட்ட பிறகே தமிழ் பயிலத் தொடங்கினார். 1921ல் திண்டுக்கல் தூயமேரி உயர்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவராக அவர் சேர்ந்த நிலையில் தமிழ்க்கல்வி தொடர்ந்தது. மேலும்......


டிசம்பர் 16, 2012

பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும், இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்களும் எழுந்தன. இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன. மேலும்...


1 singapore city skyline dusk panorama 2011.jpg

சிங்கப்பூர் அல்லது அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் குடியரசு தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது. ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. ஆனாலும் நிலச்சிரமைப்பு மூலம் மேலதிக நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளும் 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகளும் இங்குள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும். மேலும்...


டிசம்பர் 9, 2012
Leonardo da Vinci - The Last Supper high res.jpg

இறுதி இராவுணவு என்பது இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாகக் கொண்டு லியொனார்டோ டா வின்சி என்னும் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும். லியொனார்டோ டா வின்சிக்குப் புரவலராக இருந்த லுடோவிக்கோ ஸ்போர்சா என்னும் மிலான் குறுநில ஆளுநரும் அவர்தம் மனைவி பெயாட்ரீசு தெசுதே என்பவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, டா வின்சி இச்சுவரோவியத்தை வரைந்தார். யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு அருந்திய நிகழ்ச்சி பற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். இயேசு அந்த இறுதி இராவுணவின்போது நற்கருணை விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். எனவே இந்த இறுதி இராவுணவு "ஆண்டவரின் திருவிருந்து" என்றும் அழைக்கப்படுகிறது. மேலும்...


Lohia-full.jpg

ராம் மனோகர் லோகியா அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்; வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்தியப் பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர். புரட்சிகரமான சிந்தனையாளர்.' பிரஜா சோஷலிஸ்ட் கட்சி'யின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர்; உலக அரசு குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா பொது வாழ்க்கைக்காகத் திருமணம் செய்து கொள்ளாமல் கடைசிவரை மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர். தனது பத்தாவது வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் ராம் மனோகர் லோகியா.மேலும்


டிசம்பர் 2, 2012
Swathi Thirunal Rama Varma of Travancore with a prince.jpg

சுவாதித் திருநாள் ராம வர்மா 1829 முதல் 1846 வரை இந்தியாவின் திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆண்ட மன்னராவார். இவருடைய தாய் மகாராணி கவுரி லட்சுமி பாய் 1810-1815- ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆங்கிலேயரின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியுடன் ஆண்டு வந்தார். மகாராணி லட்சுமி பாய் - இராசராச வர்மா கோயில் தம்புரான் தம்பதியருக்கு 1813 ஆம் ஆண்டு சுவாதித் திருநாள் ராம வர்மா பிறந்தார். இவர் பிறந்த ஆண்டிலேயே அரசராக அறிவிக்கப்பட்டார். மகாராணி கவுரி லட்சுமி பாய் இறந்த பின், 1815 ஆம் ஆண்டு முதல் 1829 ஆம் ஆண்டு வரை அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலுக்கு ஆள்பவர் என்ற முறையில் மகாராணி கவுரி பார்வதி பாய் ஆட்சி செய்தார். சுவாதித் திருநாள் 1829 ஆம் ஆண்டு தக்க அகவையடைந்ததும் முழு அரசாங்க அதிகாரத்தையும் ஏற்று திருவிதாங்கூர் அரசைத் தன அந்திமக் காலமான 1846 ஆண்டு வரை ஆண்டார். சுவாதித் திருநாள் சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்லாமல், சிறந்த இசை வல்லுனரும் இசைப் புரவலரும் ஆவார். இவர் 400க்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார். மேலும்...


Madurei 350.jpg

மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும் நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் என குறிக்கப்படும் கிமு.3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை. மேலும்...


நவம்பர் 25, 2012
Registan square2014.JPG

சமர்கந்து சொகிடிய மொழியில் "கற்கோட்டை" அல்லது "கல் நகரம்" என்றழைக்கப்படும், உசுபெக்கிசுத்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் சமர்கந்து மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான பட்டுப் பாதையின் நடுவில் உள்ள இதன் அமைவிடம் காரணமாகவும் இசுலாமிய அறிவியலின் மிக முதன்மையான தளமாகவும் இருப்பதால் இவ்வூர் புகழ் மிக்கதாயிருக்கின்றது. 14 ஆம் நூற்றாண்டில் சமர்கந்து நகரம் தைமூர்ப் பேரரசின் தலைநகரமாயிருந்தது. தைமூரின் அடக்கத்தலமும் இவ்வூரிலேயே இருக்கிறது. இங்குள்ள புகழ் மிக்க கட்டிடங்களில் பீபி-கானிம் பள்ளிவாசல் குறிப்பிடத் தக்கது. 'ரசிசுத்தான்' என்பது இவ்வூரின் பண்டைய நகர மையமாகும். 2001 ஆம் ஆண்டு, சமர்கந்து - பண்பாடுகளின் கூடல் என்ற தலைப்பில் இவ்வூர் உலக பாரம்பரியக் களமாக யுனெசுக்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. மேலும்...


Maquina vapor Watt ETSIIM.jpg

தொழிற்புரட்சி என்பது 1750-1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப, பொருளாதார, நாகரிக மாற்றங்களைக் குறிக்கும். தொழிற்புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவியது. செருமனியில் 1871இல் பேரரசு நிறுவப்பட்ட பின்னரும், அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பின்னரும், உருசியாவில் 1917ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொழிற் புரட்சி தொடங்கியது. இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் 20ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே உலகெங்கும் தொழிற்சாலை முறை தோன்றியது. இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி மேற்கத்திய நாடுகளில் அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் மற்றும் தொழிற்சாலை, வர்த்தகம் ஆகியவற்றில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும்...


நவம்பர் 18, 2012
Sword of Umar ibn al-Khittab-mohammad adil rais.JPG

உமறு இப்னு அல்-கத்தாப் எனும் இயற்பெயர் கொண்ட உமர் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களுள் முக்கியமானவரும் ஆவார். உமறு முகம்மது நபியின் ஆலோசகரும் தோழருமாவார். முகம்மது நபியின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாகப் பொறுப்பேற்றார். இவர் கிபி 634 முதல் கிபி 644 வரை ஆட்சி செய்தார். இவரது நிருவாக மற்றும் போர்த் திறமையால் இசுலாமியக் கலீபகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து, இவரது ஆட்சிக் காலத்தில் ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆர்மீனியா ஆகிய பகுதிகள் அதன் கீழ் வந்தன. முஹம்மது நபியை விட வயதில் இளையவரான உமறு மக்காவிலே பிறந்தவர். அவர் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. கி.பி. 586-ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பர். துவக்கத்தில் உமறு, முகமதின் புதிய மார்க்கத்திற்கு கடுமையான எதிரியாக இருந்தார். ஆனால், திடீரென்று அவர் அம்மார்க்கத்தில் சேர்ந்து, அதன் வலிமைமிக்க ஆதரவாளர்களில் ஒருவரானார். நபியின் ஆலோசகர்களில் ஒருவராகித் தன் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்து வந்தார். மேலும்...


Punnett square mendel flowers-ta.svg

மாற்றுரு என்பது குறிப்பிட்ட ஒரு நிறப்புரியின், குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கக்கூடிய ஒரு மரபணுவின் மாற்றீடாக இருக்கக்கூடிய வேறுபட்ட வடிவங்கள். இது பொதுவாக மரபணுவிலுள்ள ஒரு சோடி வேறுபட்ட வடிவங்களில் ஒன்றாக இருக்கும். இந்த மாற்றுருக்களில் உள்ள, பெற்றோரிலிருந்து, சந்ததிக்குச் செல்லும் டி.என்.ஏ குறியீடுகளே ஒரு உயிரினத்தில் உள்ள இயல்புகளைத் தீர்மானிப்பதாக இருக்கும். இந்த மாற்றுருக்கள் எவ்வாறு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றது என்பதை முதன் முதலில் கிரிகோர் மெண்டல் ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்து அறிமுகப்படுத்தினார். அவரது அந்த கோட்பாடுகள் 'மெண்டலின் விதிகள்' எனப் பெயர் பெற்றன. வேறுபட்ட வடிவத்தைக் கொண்ட மாற்றுருக்கள் உள்ள மரபணுவமைப்பு சிலசமயம் இயல்புகளில் வேறுபட்ட தோற்றவமைப்புக்களைக் கொடுக்கலாம். வேறு சில சமயம், வேறுபட்ட மாற்றுருக்கள் இருப்பினும், அவற்றிற்கிடையே வேறுபாடு, மிகச் சிறியதாகவோ, அல்லது இல்லாமலோ இருந்தால், தோற்றவமைப்பில் வேறுபாடு காணப்படுவதில்லை. மேலும்...


நவம்பர் 11, 2012
SekharBC2.jpg

டான்ஸ்ரீ டாக்டர் பி. சி. சேகர் எனப்படும் பாலசந்திர சகிங்கல் சேகர் மலேசிய இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரை ஒரு புது வடிவத்திற்கு மாற்றியவர். 'நவீன இயற்கை ரப்பர் மற்றும் செம்பனைத் துறைகளின் தந்தை' என்று போற்றப்படுகிறவர். 1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஒரு சாதாரண வேதியியலாளராகச் சேர்ந்து பின்னர் அதன் தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் மலேசியர், முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர். அதனை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர். இயற்கை ரப்பர் தொழில்துறையில் புரட்சிகளைச் செய்தவர். இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதிய தர ரப்பர் முறைமையை அமைத்துக் கொடுத்தவர். பி. சி. சேகர் 1929, நவம்பர் 17ஆம் தேதி சுங்கை பூலோவில் இருந்த உலு பூலு தோட்டத்தில் பிறந்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று, பின்னர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார். மேலும்...


சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 2.jpg

தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர் தென்காசி நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆவர். பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து, தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (படம்) முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்துப் பாண்டியரும் தென்காசியையேத் தலைநகராகக் கொண்டு தென்காசி பெரியகோயிலில் உள்ள சிவந்தபாதவூரருடைய ஆதீன மடத்தில் முடி சூட்டிக் கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தார், வள்ளியூர், உக்கிரன் கோட்டை போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. மேலும்...


நவம்பர் 4, 2012
Incircle and Excircles.svg

முக்கோணத்தின் உள்வட்டம் மற்றும் வெளிவட்டங்கள்என்பன அம்முக்கோணத்தின் உள்ளேயும் வெளியேயும் அமையும் வட்டங்களாகும். வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் உள்வட்டம்அல்லது உள்தொடு வட்டம் என்பது அம்முக்கோணத்துக்குள் அமையக்கூடிய யாவற்றினும் மிகப்பெரியதொரு வட்டமாகும். இந்த வட்டம் முக்கோணத்தின் மூன்று பக்கங்களையும் தொட்டுக்கொண்டு இருக்கும். இவ்வட்டத்தின் மையமானது முக்கோணத்தின் உள்மையம்அல்லது உள்வட்டமையம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு முக்கோணத்திற்கும் அதன் ஒவ்வொரு பக்கங்களையும் தொட்டபடி, வெவ்வாறான மூன்று வெளிவட்டங்கள் உண்டு. வெளிவட்டத்தின் மையமானது வெளிமையம் (அல்லது வெளிவட்டமையம்) என அழைக்கப்படுகிறது. ஒரு முக்கோணத்தின் மூன்று உட்கோண இருசமவெட்டிகளும் உள்மையத்தில் வெட்டிக்கொள்ளும். ஒரு உட்கோண இருசமவெட்டியும் மற்ற இரு வெளிக்கோண இருசமவெட்டிகளும் முக்கோணத்தின் வெளிமையத்தில் வெட்டிக்கொள்ளும். மேலும்...


வ. சுப. மாணிக்கம் தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்டவர்; பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளர்; இவர் எழுதிய நூல்கள் இவரை சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்கு சுட்டிக் காட்டும் தன்மை உடையன.புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் இனத்தில், வ.சுப்பிரமணியன் செட்டியார் - தெய்வானை ஆச்சி அவர்களுக்கு ஐந்தாவது மகனாக 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற் பெயர் அண்ணாமலை. மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்டதால் அந்தப் பெயரே பிற்காலத்தில் இவருக்கு நிலைத்துவிட்டது. மேலும்


அக்டோபர் 28, 2012
Male-total.jpg

மாலைத்தீவுகள் அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலை போல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. 1153இல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது. மேலும்...


George joseph.jpg

ஜார்ஜ் ஜோசப் கேரளாவைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; வழக்குரைஞர்; 1937-ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்; இதழாசிரியர்; காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் முன்னின்றவர். கேரளத்தில் வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிறித்துவர். ஆங்கில அரசு குற்றப் பரம்பரைச் சட்டத்தை செயல்படுத்திய போது, அது தொடர்பாக பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டவர். கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர். 1918ஆம் ஆண்டில் சிதறிக்கிடந்த தொழிலார்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்காக தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். 1919ஆம் வருஷத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மாநாடுக்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருந்து ஜார்ஜ் ஜோசப் செயல்பட்டார். தொழிலாளர்களின் மீது அதிக அக்கறை கொண்டதால் மதுரை தொழிலாளர் சங்கத்தின் மூலம் கூலி உயர்வு, வேலை நேரக் குறைப்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டதுடன் பல வழக்கினையும் நடத்தியுள்ளார். மேலும்...


அக்டோபர் 21, 2012
Pallava kingdom in kalapirar period.jpg

பல்லவர் என்போர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப் பகுதியை ஆளத் தொடங்கினர். மேலும்...


CheckmateProper.jpg

இறுதி முற்றுகை என்பது சதுரங்கத்தில் (சதுரங்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய விளையாட்டுகளிலும்) ஒரு போட்டியாளரின் அரசன் கைப்பற்றப்படுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தும் அதிலிருந்து மீள முடியாத நிலை ஆகும். எளிமையாகக் கூறுவதானால், அரசன் நேரடித் தாக்குதலிலமைந்து, தான் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட முடியும். சதுரங்கத்தில் இறுதி முற்றுகைக்காளாக்குவதே ஒரு சதுரங்கப் போட்டியாளரின் முக்கிய நோக்கம் ஆகும். இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்ட போட்டியாளர் போட்டியில் தோல்வியடைவார். பொதுவாக, சதுரங்கத்தில் அரசன் கைப்பற்றப்படுவதில்லை. அரசன் இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டவுடனேயே போட்டி முடிவுறும். ஏனெனில், அரசன் இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்ட பிறகு அப்போட்டியாளரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாது. சில போட்டியாளர்கள் தோற்கப் போகிறோம் எனத் தெரிந்து இறுதி முற்றுகைக்காளாக்கப்பட முன்னரே போட்டியிலிருந்து விலகிக் கொள்வதுண்டு. மேலும்...


அக்டோபர் 14, 2012
Pudu Prison Main Entrance.jpg

புடு சிறைச்சாலை என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள ஒரு சிறைச்சாலை ஆகும். கோலாலம்பூரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் புடு சிறைச்சாலை 115 வருடம் பழமை வாய்ந்தது. இச்சிறைச்சாலை 1891-இல் கட்டத்தொடங்கி 1895-இல் கட்டி முடிக்கப்பட்டது. மலேசியாவின் சுற்றுலா தளமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும் விளங்கி வந்தது. இந்தச் சிறைச்சாலை கோலாலம்பூரில் ஜாலான் ஷாவில் இருக்கிறது. உலகிலேயே மிக நீளமான சுவரோவியம் புடுச் சிறைச்சாலையின் சுவரில்தான் வரையப்பட்டது. இச்சிறைச்சாலையில் கொடுக்கப்படும் பிரம்படிகள் அனைவராலும் பேசப்படுவனவாகும். புடு சிறைச்சாலை 1,38,000 மலாயா டாலர் செலவில் 1895-இல் கட்டப்பட்டது. அதன் முதல் இயக்குநர் ஜே.ஏ.பி.ஏலன் ஆவார். சிறைச்சாலையின் கட்டுமானப் பொருட்கள் இந்தியா, பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. கட்டிடத்தின் அமைப்பு முறை ’X’ வடிவத்தில் உருவாக்கம் பெற்றது. ஆப்பிரிக்காவின் பொகாம்பியா என்னுமிடத்தில் உள்ள கண்டி சிறைச்சாலையின் அமைப்பில் புடு சிறைச்சாலையும் கட்டப்பட்டது. மேலும்...


Peace button large.png

உலக அமைதி என்பது பூமியில் நிலவுகின்ற நாடுகளும் வாழ்கின்ற மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, அரசியல் சுதந்திரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கின்ற இலட்சியத்தைக் குறிக்கிறது. உலகத்தில் வன்முறையும் போரும் மறைந்து, மக்கள் மனதார ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, அமைதியை வளர்க்கின்ற அமைப்புகளை உருவாக்குவதும் இந்த இலட்சியத்தில் அடங்கும். தனிமனிதர் பகைமை உணர்ச்சிகளையும் செயல்களையும் தங்கள் வாழ்விலிருந்து அகற்றுவதும், மனித உரிமைகளை மேம்படுத்தி, கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், முதலிய துறைகள் வழியாக உலக அமைதியைக் கொணர்வதும் இதைச் சார்ந்ததே. மனித இயல்பு உலக அமைதியைப் பேணுவதாக இல்லை என்று ஒரு சாரரும் போரும் வன்முறையும் மனித இயல்போடு இயற்கையாகவே இணைந்தவை அல்ல. மாறாக, பிறரோடு அமைதியில் வாழ்வதும், ஒத்துழைத்துச் செயல்படுவதும் உயர்நிலை விலங்குகளிடமும் மனிதரிடமும் இயல்பாக உள்ள பண்புகள் ஆகும் என்று ஒரு சாரரும் கருதுகின்றனர். இதன்படி, மனிதர் தம் இயல்பிலேயே வன்முறையாளர்கள் என்னும் கருத்துதான் உலகில் அமைதி ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது. மேலும்...


அக்டோபர் 7, 2012
Ranilaxmibai-1.JPG

ராணி லட்சுமிபாய் அல்லது சான்சி இராணி வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார். சான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா ராணி லட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் சான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் ராணி லட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல்நலமிழந்து இறந்தார். மேலும்...


Human Embryo - Approximately 8 weeks estimated gestational age.jpg

கருச்சிதைவு என்பது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முளையமோ அல்லது முதிர்கருவோ. மேலும் உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கும். இது பொதுவாக கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில், அதாவது கருக்காலத்தின் 24 கிழமைகளுக்குள் தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாகும். கருத்தரிப்புக் காலத்தின் மிக ஆரம்ப நிலையில், இறுதி மாதவிடாய்க் காலத்திலிருந்து 6 கிழமைகளுக்குள் நிகழும் கருச்சிதைவை 'முன்னதான கருப்ப இழப்பு'அழைப்பர். கருச்சிதைவானது 6 கிழமைக்குப் பின்னர் நிகழ்ந்தால் அது 'தன்னிச்சையான கருக்கலைப்பு' என்று அழைக்கப்படும். மருத்துவரீதியில் பொதுவாக தன்னிச்சையாகவோ அல்லது தூண்டுதல் மூலமோ முளையம் அல்லது முதிர்கரு சிதைந்து கருப்பையிலிருந்து அகற்றப்படும்போது, அது கருக்கலைப்பு என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் இது தன்னிச்சையாக நிகழும்போது, பெண்கள் அதனை கருக்கலைப்பு எனக் கூறப்படுவதை விரும்புவதில்லை. மேலும்...


செப்டம்பர் 30, 2012
Kashmir map.jpg

சம்மு காசுமீர் இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலம். இது இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் வடக்கிலும் கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது.மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும்.....


Official medallion of the British Anti-Slavery Society (1795).jpg

அடிமை ஒழிப்புக் கோட்பாடு என்பது சட்டப்படியோ அதற்கு மாறாகவோ நிலவுகின்ற அடிமை முறையைத் தகர்த்தெறிவதற்கான இயக்கம் ஆகும். மேற்குஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அடிமை ஒழிப்புக் கோட்பாடு என்பது ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விலைக்கு வாங்குதலையும் விற்றலையும் தகர்த்தெறிந்து, அவர்களை விடுதலை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட வரலாற்று இயக்கம் ஆகும். எசுப்பானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்ற குடியேற்றக்காரர்கள் தொடக்கத்தில் தாம் குடியேறிய நாட்டு முதல்குடிகளை அடிமைகளாக்கினர். இதற்கு எதிராக புனித தோமினிக் சபைத் துறவியான பார்த்தொலோமே தெ லாஸ் காஸாஸ் போன்றோர் பாடுபட்டனர். 1772இல் இங்கிலாந்தில் அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவான நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. சோமர்செட் வழக்கு என்ற வரலாற்றுச் சிறப்பான ஒன்றாக அத்தீர்ப்பு அறியப்பட்டது. மேலும்...


செப்டம்பர் 23, 2012
CSI church and LIC building, Coimbatore.jpg

கோயம்புத்தூர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாகும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூரின் வானிலை மிகவும் புகழ் பெற்றது. உடலுக்கு இதமான, குளிர்ச்சியான, பிற தென்னிந்திய நகரங்களைப் போன்று கூடுதல் வெப்பமில்லாத வானிலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் கடல்மட்டத்திற்கு 398 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும்...


Nellaiappar.jpg

பரலி சு. நெல்லையப்பர் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சி.க்குத் தொண்டர், சுப்பிரமணிய பாரதிக்குப் புரவலர் என்னும் பன்முகம் கொண்டவர் இவர்.நெல்லையப்பர் மெட்ரிக்குலேசன் வரை பள்ளியில் படித்தவர். அதற்கு அப்பால் தமிழிலக்கிய, இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார். 1907ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த சில நாள்களிலேயே தூத்துக்குடியில் வ.உ.சி. நடந்திய சுதேசிய நாவாய்ச் சங்கத்தில் கணக்கராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டில் சூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வ.உ.சி. உள்ளிட்டவர்களைத் திரட்டுவதற்காகத் தூத்துக்குடிக்கு வந்த சி. சுப்பிரமணிய பாரதியை வ. உ. சி.யின் வீட்டில் முதன்முறையாகக் கண்டார். அங்கிருந்த பாரதியாரின் கவிதைகள் அடங்கிய நான்கு பக்க வெளியீடு ஒன்றைப் படித்தும் இந்தியா இதழைப் படித்தும் பாரதிபால் அன்பு கொண்டார். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி, நீலகண்ட பிரமச்சாரி, அரவிந்தர், வ.வே.சு.ஐயர் முதலிய விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரோடு தொடர்ந்து பழகிய நெல்லையப்பர் தானும் விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார். மேலும்


செப்டம்பர் 16, 2012

பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்கும்,பெண் விடுதலைக்கும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும்...


Parabel som keglesnit.jpg

பரவளைவு என்பது கணிதத்தில் ஓர் கூம்பு வெட்டாகும். இக்கூம்பு வெட்டின் ஆங்கிலப் பெயரான parabola என்பது παραβολή என்ற கிரேக்கச் சொல்லிருந்து தோன்றியது. ஓர் நேர்வட்டக் கூம்பின் உச்சியையும் அதன் அடிவட்டப் பரிதியில் அமையும் ஒரு புள்ளியையும் இணைக்கும் கோட்டிற்கு இணையான(சமாந்தரமான) ஒரு தளத்தால் அக்கூம்பு வெட்டப்படும் போது கிடைக்ககூடிய வெட்டுமுக வடிவமே பரவளையமாகும். தானுந்துகளில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு விளக்குகளிலிருந்து ஏவுகணைகள் வரை பரவளைவுகளின் பயன்பாடு விரிந்துள்ளது. இயற்பியல், பொறியியல் போன்ற முக்கியமான பலதுறைகளில் பரவளைவு பயன்படுகிறது. பரவளைவு மற்றும் பிற கூம்பு வெட்டிகளின் குவியம்-இயக்குவரை பண்பைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டிரியாவின் கணிதவியலாளர் பாப்பசு. புவியீர்ப்பினால் ஏற்படும் சீரான முடுக்கத்தின் விளைவாக ஒரு எறிபொருளின் பாதை பரவளைவாக அமைவதைக் கலீலியோ கண்டுபிடித்தார். மேலும்...


செப்டம்பர் 9, 2012
Chennai High Court.jpg

சென்னை உயர் நீதிமன்றம் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள நீதிமன்றமாகும். 150 ஆண்டு வரலாற்றுப் பாரம்பரியத்துடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புடன் விளங்குகின்றது. இந்தியா விடுதலை அடைவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரித்தானிய அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிமுறைமை புரிவர். தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின்படி இதன் நீதி நிர்வாகங்களைச் செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. மேலும்...


Poulain-3.jpg

குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி ஆகும். வரிக்குதிரை, கழுதையைப் போலவே குதிரையும் ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. உலகின் சில பகுதி மக்களின் உணவாகவும் இது இருந்துள்ளது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியாமையாத ஒரு படையாக இருந்துள்ளது. குதிரைகளைக் கொண்டு விளையாட்டுகளும் பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. மிக வேகமாக ஓட வல்ல குதிரைகள் நின்று கொண்டே தூங்கும். குதிரைக் குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்கத் தொடங்கி விடுகின்றன. ஐந்தாண்டுகளில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. குதிரையின் ஆயுள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும். சராசரியாக ஒரு குதிரை 60 முதல் 62 அங்குலம் உயரம் வரை வளரும். கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிகப்பு கலந்த பழுப்பு நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படுகின்றன. மேலும்...


செப்டம்பர் 2, 2012
Flag of Malaysia.svg

மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முடியாட்சி நாடு. மலேசியா தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவை, மலேசிய போர்னியோ என்று அழைப்பதும் உண்டு. மலேசியாவின் நில எல்லைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், புரூணை ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். நடுவண் அரசின் நிர்வாக மையம் புத்ராஜெயாவில் உள்ளது. மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் மலாய் மக்கள் பெரும்பான்மையானவர். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்கள். மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. 4.7 மில்லியன் நிலைத்த இட தொலைபேசி இணைப்புகளையும் 30 மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது. மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன. மேலும்...


Netaji Subhas Chandra Bose.jpg

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற நேரங்களில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது என்றும் பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதே விடுதலைக்கான வழி என்றும் கருதிய இவர் பார்வட் பிளாக் என்ற அரசியல் கட்சியை தோற்றுவித்தார். 1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற வானொலியையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனி கொடியை உருவாக்கி ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். மேலும்...


ஆகத்து 26, 2012
Colombo - Galle Face.jpg

கொழும்பு இலங்கையின் மிகப் பெரிய நகரமும் வர்த்தகத் தலைநகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்றன்று. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கொழும்பில் சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் அண்ணளவாகச் சம அளவில் வாழ்கின்றனர். கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பசை நினைவுகூரும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. மேலும்...


Aedes aegypti biting human.jpg

டெங்கு காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் என்பது மனிதர்களிடையே டெங்குத் தீ நுண்மத்தால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு வகைக் கொசுக்களால் இந்நோய் பரவுகிறது. கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் இந்நோயினால் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். டெங்குத் தீநுண்மத்தைக் காவும் கொசு ஒருத்தரைக் கடிக்கும்போது அக்கொசுவின் உமிழ்நீருடன் தோற் பகுதிக்கு தீநுண்மம் செல்கின்றது. ஒருவருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். வடக்கு ஆர்ஜென்டினா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஷ்ட ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கோடேமலா, குயான, ஹைடி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை. போன்ற வறண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது. குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையான நோய் உண்டாகின்றது. ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் பாதிப்படைகின்றனர். நீரிழிவு, ஈழை நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கும். மேலும்...


ஆகத்து 19, 2012
IELTSlogo.jpg

ஐஈஎல்டிஎஸ் என்று சுருக்கமாக அறியப்படும் அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை என்பது ஆங்கில மொழியில் ஒருவருக்கு உள்ள திறனைச் சோதிப்பதற்கான உலக அளவில் தரப்படுத்தப்பட்ட தேர்வு ஆகும். இது 1989ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இத்தேர்வை கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழக ஈஎஸ்ஓஎல் தேர்வுகள் பிரிட்டிஷ் கவுன்சிலும் ஐடிபி எஜுகேஷன் பிரைவேட் லிமிட்டடும் இணைந்து நடத்துகிறார்கள். இத்தேர்வு முறைக்கு கல்வி சார்ந்த வடிவம், பொதுப் பயிற்சி வடிவம் என்று இரு வடிவங்கள் உள்ளன. ஆசுத்திரேலியா, பிரித்தானியா, கனடா, அயர்லாந்து, நியுசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களாலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களாலும், பல்வேறு தொழில் முறை நிறுவனங்களாலும் ஐஈஎல்டிஎஸ் ஏற்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் குடியேற்ற ஒப்பம் பெறுவதற்கும் இது தேவையாகும். ஒரு ஐஈஎல்டிஎஸ் தேர்வு முடிவு இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். மேலும்...


Greater Coucal or Crow Pheasant (Centropus sinensis).JPG

செம்போத்து அல்லது செம்பகம் குயில் வரிசை பறவையினங்களுள் மற்ற பறவைகளின் கூட்டில் திருட்டுத்தனமாக முட்டையிடும் வழக்கமில்லாத பெரிய பறவையினமாகும். ஆசியா கண்டத்தில் இந்தியா, இலங்கை முதல் கிழக்கு மற்றும் தென் சீனா வரையிலும் இந்தோனேசியா வரையிலுமான இடைப்பட்ட பகுதியில் செம்பகங்கள் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன. செம்பகம் தன் இனத்தில் சில துணை இனங்களைக் கொண்டுள்ள அதே வேளை அவற்றின் துணை இனங்களாகக் கருதப்படும் சில முழுமையாக வேற்றினமாகச் சில வேளைகளில் கணிக்கப்படுவதும் உண்டு. காகம் போன்ற தோற்றத்துடன் கபில நிற இறக்கைகளைக் கொண்ட இவை காடுகள், மலைகள், வயல் வெளிகள், நகர்ப் புறங்கள் எனப் பொதுவாக எல்லா வகையான இடங்களிலும் காணப்படுகின்றன. சிறு பூச்சிகள், முட்டைகள் மற்றும் ஏனைய பறவைகளின் கூடுகளை உணவாகக் கொள்ளும் இது பறக்கும் தன்மை குறைந்த ஒரு பறவையாகும். செம்பகங்கள் இரை தேடும் போது மரங்களில் தத்தித் தாவியும் நடந்தும் செல்வது வழமை. செம்பகத்தின் ஒலி நெடுந் தொலைவு வரை கேட்கக் கூடியதாகும்.. மேலும்...


ஆகத்து 12, 2012
London Olympics 2012 logo.png

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் சூலை 27, 2012 முதல் ஆகஸ்டு 12, 2012 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலண்டன் மாநகரத்தில் நடைபெற்றன. தற்கால உலக ஒலிம்பிக் விளையாட்டை மூன்றாவது முறையாக நடத்தும் பெருமையை இலண்டன் மாநகரம் பெற்றது. 1908 மற்றும் 1948 ஆண்டுகளில் இருமுறை இங்கு இவ்விளையாட்டுக்கள் நடத்தப்பட்டுள்ளன. 1944 ஆண்டு இங்கு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி இரண்டாவது உலகப்போர் காரணமாக இரத்தானது. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நாடுகள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் நான்கு முறை ஒலிம்பிக் நடத்திய அமெரிக்கா (1904, 1932, 1984, 1996) உள்ளது. ஜெர்மனி (1936, 1972), ஆஸ்திரேலியா (1956, 2000), பிரான்ஸ் (1900, 1924), கிரீஸ் (1896, 2004) ஆகிய நாடுகள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தி உள்ளன. இதுவரை இலண்டன் (இங்கிலாந்து), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), பாரிஸ் (பிரான்ஸ்), ஏதென்ஸ் (கிரீஸ்) ஆகிய நகரங்கள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளன. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நகரம் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. ஆனால் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு பின் லண்டன் நகரம் முதலிடத்தை தனித்துப் பிடித்துள்ளது. மேலும்...


Batticaloa Tamil Dialect map.jpg

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டப் பகுதிகளில் பேசப்படும் தமிழ் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் என்றழைக்கப்படுகிறது. இலங்கையில் வழக்கத்திலுள்ள பேச்சுத் தமிழ் வழக்குகளில் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் இப்பகுதிக்கே உரிய வட்டார வழக்குகள் கொண்டு தனி ஒரு பேச்சு வழக்காகத் திகழ்கிறது. மட்டக்களப்பு பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் மற்றும் இலங்கையின் திருகோணமலை, கொழும்பு, மலையகப் பிரதேசங்களில் வழக்கத்திலுள்ள பேச்சுத் தமிழில் இருந்து குறிப்பிடத்தக்களவு வேறுபட்டுக் காணப்படுகிறது. மட்டக்களப்புப் பேச்சுத் தமிழானது மட்டக்களப்புத் தமிழகத்திற்கு உரியதாயினும் நகர மற்றும் கிராமங்களில் தன்னகத்தே சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றது. கல்வி, வளர்ச்சி, பிற சமூகத்தினருடனான தொடர்புகள் என்பன இதற்குக் காரணம் எனலாம். இசுலாமியர் சமூகத்தை அண்டிய வட்டாரத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் இசுலாமியர்களின் பேச்சுத் தமிழிலுள்ள சொற்களைக் கொண்டதாகவும், கிராமங்களில் பண்டைய தமிழ்ச் சொற்கள் மாறாமலும், நகரத்திலுள்ள பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கன. மேலும்...


ஆகத்து 5, 2012
Portsofpandyantrade.jpg

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்துக்கும் பெயர் பெற்றிருந்தன. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். இடையே களப்பிரர் ஆட்சியில் வீழ்ச்சியைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு அவர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சான்று. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்தன. குலசேகர பாண்டியனின் ஆட்சியில் பாண்டி நாடு உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்துள்ளார். மேலும்...


Conicas1.PNG

நீள்வட்டம் என்பது ஒருவகையான கூம்பு வெட்டு ஆகும். கூம்பு வடிவொன்றை, தளம் ஒன்று அதன் அடியை வெட்டாமல் வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகம் நீள்வட்டம் ஆகும். நீள்வட்டத்தின் ஆங்கிலப் பெயரான ellipse என்பது ἔλλειψις -elleipsis என்ற கிரேக்கச் சொல்லிருந்து உருவானது. கூம்பை வெட்டும் தளம், கூம்பின் அச்சுக்குச் செங்குத்தாக அமையுமானால் கிடைக்கும் வெட்டுமுகம் நீள்வட்டத்துக்குப் பதில் வட்டமாக இருக்கும். ஒரு உருளையை அதன் முக்கிய சமச்சீர் அச்சுக்கு இணையாக இல்லாத ஒரு தளத்தால் வெட்டும்போதும் ஒரு நீள்வட்டம் கிடைக்கும். இரண்டு நிலையான புள்ளிகளிலிருந்து அதன் தொலைவுகளின் கூட்டுத்தொகை எப்பொழுதும் ஒரே மாறிலியாக இருக்கும்படி இயங்கும் புள்ளியின் இயங்குவரையாகவும் நீள்வட்டம் அமையும். இந்த இரண்டு நிலையான புள்ளிகளும் நீள்வட்டத்தின் குவியங்கள் எனப்படுகின்றன. மேலும்...


சூலை 29, 2012
Peptic stricture.png

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரைப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுவதால் ஏற்படும் ஒரு நீண்டகால நோயாகும். இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்பட்டு இந்த நோய் தீவிரமடைகிறது, இந்நோயின் முக்கிய உணர்குறி நெஞ்செரிவு ஆகும். இரைப்பையும் உணவுக் குழாயும் சந்திக்கும் இடத்தில் காணப்படும் கீழ்க்கள இறுக்கி மூடப்படாது இருப்பதால் இரைப்பையை அடைந்த உணவு வகைகள் இரைப்பைச்சாற்றுடன் மீண்டும் உணவுக்குழாயை வந்தடைகின்றன. பிரிபடலப் பிதுக்கம், உடல் பருமன், உயர்கல்சியக்குருதி, தோல் தடிப்பு நோய் போன்றன இந்நோய்க்குரிய சில காரணிகளாகும். நீண்ட நாட்கள் உரிய சிகிச்சை வழங்கப்படாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், உணவுக்குழாயின் மேலணி இழையங்கள் உருமாற்றத்துக்கு உட்பட்டு பரட்டின் உணவுக்குழாய் எனப்படும் புற்றுநோய்க்கு வழிகோலும் நிலைமை உண்டாகலாம். உணவுப்பழக்கங்களை உரிய முறையில் மாற்றுவது இந்நோய் வராது தடுக்கும் முறைகளில் ஒன்றாகும். மேலும்...


Cpmcongresssehgalyecuri309.JPG

கேப்டன் லட்சுமி எனப்படும் இலட்சுமி சாகல் 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைபடைப்பிரிவின் தலைவி. மேலும் இவர் நேதாஜியின் ‘ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர்; அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்தவர்; இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். இவர் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணம் பகுதியை சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்திய மேலவையில் உறுப்பினராகப் பணியாற்றினார். 2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் 23 சூலை, 2012 அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவர் ஜான்சி ராணிப் படையில் பணியாற்றிய போது அப்படையில் உள்ள பெண்கள் பிரித்தானிய படையிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதால் நேதாஜி அப்படையினரை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். ஆனால்... மேலும்...


சூலை 22, 2012
Fishing - மீன்பிடி.jpg

மீன் பிடித்தல் என்பது மீன்களை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது ஆகும். மீனவர்கள் இதைத் தொழிலாகவும் மற்றவர்கள் சிலர் இதைப் பொழுதுபோக்காகவும் செய்கின்றனர். இத்தொழில் மூலம் மூன்று கோடியே எழுபது லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பையும் ஐம்பது கோடி பேர் மறைமுக வேலைவாய்ப்புகளையும் பெறுகின்றனர். இந்தியாவில் மீன் பிடிப்பு மூலமாக 68 விழுக்காடு மீன்கள் கிடைக்கின்றன. இம்முறையில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இயற்கையில் தாமாகவே கிடைக்கும் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஏரி, நீர்தேக்கம், ஓடை, ஆறு, மற்றும் கடல் ஆகிய இடங்கள் மீன் பிடிக்கப் பயன்படும் இடங்களாகும். பண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. ஆயினும் 18ம் நூற்றாண்டில் இருந்துதான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும்...


Atomic bombing of Japan.jpg

1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பானுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இன்றுவரை, இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையின்படி, இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. "அணுகுண்டை சப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமல் இருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். அமெரிக்கா பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது" என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது. மேலும்...


சூலை 15, 2012
Chandrashekar azad.jpg

சந்திரசேகர ஆசாத் (1906–1931) பரவலாக அறியப்படும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுள் ஒருவர். இந்துத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோகி தொடருந்துக் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு படுகொலை போன்றவற்றில் பங்களித்தவர். இவரது தாயான தேவி இவரை காசியில் உள்ள வித்யா பீடத்தில் சமக்கிருதம் கற்பிக்க அனுப்புமாறு அவருடைய தந்தையிடம் கூறி ஏற்கச் செய்தார். ஆனால் இவரது பதினைந்தாவது வயதில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காக கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். அந்த நடுவரிடம் செய்த எதிர்வாதங்களுக்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் என்று புனை பெயரால் மக்களால் அதிகம் அறியப்படும் அளவுக்கு ஆசாத்தின் எதிர்வாதங்கள் அமைந்தது. மேலும்...


Indian Space Research Organisation Logo.svg

இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இசுரோ இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இசுரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். 1975 இல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இசுரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ்.எல்.வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகினியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனைய துணைக்கோள் ஏவுகலம் மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க ஜி.எச்.எல்.வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது. இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இசுரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது. மேலும்...


சூலை 8, 2012
Chola dynasty map - Tamil.png

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு கிமு 2,000 இல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. மேலும்...


Bukhara03.jpg

புகாரா நகரம், உசுபெகிசுதான் நாட்டின் புகாரா மாகாணத்தின் தலைநகராகும். 263,400 பேர் வாழும் இந்நகரம், உசுபெகிசுதானின் ஐந்தாவது மிகப் பெரிய நகராகும். புகாரா நகரைச் சூழவுள்ள பகுதி மிகக் குறைந்தது ஐயாயிரம் ஆண்டு காலமாக மக்கள் வாழிடமாக உள்ளது. பட்டுப் பாதையில் அமைந்துள்ள இந்நகரம் பன்னெடுங்காலமாக வணிகம், அறிவு, பண்பாடு மற்றும் சமயம் என்பவற்றுக்கான புகழ் மிக்க மையமாக இருந்துள்ளது. ஏராளமான பள்ளிவாசல்கள், மதரசாக்களைக் கொண்டுள்ள புகாரா வரலாற்று மையம் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோ நிறுவனத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. புகாராவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் உசுபெக்கு இனத்தினர். ஏராளமான தாஜிக்கு இனத்தினரும் யூதர்கள் உட்படப் பல்வேறு சிறுபான்மை இனத்தினரும் இந்நகரைத் தாயகமாகக் கொண்டுள்ளனர். மேலும்...


சூலை 1, 2012
8th AF Bombing Marienburg.JPEG

ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்த் தொடர் என்பது இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய களத்தில் நிகழ்ந்த ஒரு வான்படைப் போர். நாசி ஜெர்மனியின் வான்படை லுஃப்ட்வாஃபே ஜெர்மனி மற்றும் அதனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் வான்பகுதிகளில் நேச நாட்டு வான்படைகளுடன் மோதியது. ஜெர்மனியின் படைத்துறை மற்றும் குடிசார் தொழிற்சாலைகளை குண்டு வீசி அழித்து அதன் மூலம் அந்நாட்டு போர்திறனை முடக்க நேச நாடுகள் முயன்றன. 1939 முதல் 1945 வரை ஆறு ஆண்டுகள் இடையறாது இரவும் பகலும் இரு தரப்பு வான்படைகளும் மோதிக் கொண்ட இப்போர்த் தொடரில் இறுதியில் லுஃப்ட்வாஃபே தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.மேலும்...


NDSundaravadivels.jpg

முனைவர் நெ.து.சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும் பொதுக்கல்வி இயக்குனராகவும் பொது நூலக இயக்குனராகவும் பல காலம் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். பொதுக்கல்வி இயக்குனராக இருந்த போது, அன்றைய முதல்வர் காமராசருடன் இணைந்து இலவச மதிய உணவுத் திட்டம், ஓராசிரியர் பள்ளிகள் திட்டம் ஆகியவற்றைச் செயற்படுத்தினார். பொது நூலக இயக்குனராக இருந்த போது மாநிலம் முழுதும் கிளை நூலகங்களை உருவாக்கினார். தமிழ்நாட்டில் சொத்துவரியுடன் சேர்த்து பெறப்படும் நூலக வரித் திட்டமும் இவரது பணிக்காலத்தில் அறிமுகமானது தான். இந்திய குடியரசு 1961 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கிச் சிறப்பித்தது. மேலும்...


சூன் 24, 2012

மனிதக் கூர்ப்பு எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஒரு உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக ஓமோ பேரினத்தின் கூர்ப்பு வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது ஒமினிட்டுகளின் ஒரு இனமாக ஓமோ சப்பியென்சுகளின் தோற்றத்தை உள்ளடக்குகிறது. மனிதக் கூர்ப்பு குறித்த ஆய்வு பல துறைகளின் ஈடுபாட்டை வேண்டி நிற்கிறது. இத்தகைய துறைகளுள் இயற்பிய மானிடவியல், உயர்விலங்கினவியல், தொல்லியல், மொழியியல், மரபியல் என்பன அடங்குகின்றன. உயர்விலங்கினக் கூர்ப்பு, மரபியல் ஆய்வுகளின்படி, பிந்திய கிரத்தேசியசுக் காலத்தில் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும், புதைபடிவப் பதிவுகளின்படி பலியோசீன் காலத்துக்குப் பிற்படாமல் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் தொடங்கியிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். 2.3-2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில், இறுதிப் பொது மூதாதையான ஒமினினி, ஆசுத்திராலோபித்தசினெசுச் சிற்றினம் என்பவற்றிலிருந்து நவீன மனித இனம் கூர்ப்படைந்தது.மேலும்


Topographic map of Tamil Nadu.jpg

காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான ஆற்று நீர்ப் பங்கீட்டுப் பிணக்கு ஆகும். காவிரியாற்றின் நீரை கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். 1892 மற்றும் 1924 ஆண்டுகளில் சென்னை மாகாணத்திற்கும் மைசூர் மாகாணத்திற்கும் இடையே நிகழ்ந்த இரு வேறு முரண்பட்ட ஒப்பந்தங்கள் இந்த நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் 1807-ஆம் ஆண்டு மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892-ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும்...


சூன் 17, 2012
Limules.jpg

குதிரைலாட நண்டுகள், குறிப்பாக மென்மையான மணற்பாங்கான அல்லது சேற்று அடித்தளத்தைக் கொண்ட ஆழம் குறைந்த கடல் நீரில் வாழும் ஆர்த்திரப்போடா அங்கிகளாகும். இணைசேரும் காலங்களில் அவை கடற்கரைக்கு வருகை தரும். அவை மீன் பிடிப்பதற்கான தூண்டில் இரையாகவும், வளமாக்கிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில் கரையோர வாழிடங்கள் அழிக்கப்படுவதாலும், வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரமாக இவை கட்டுப்பாடின்றி அதிகளவில் பிடிக்கப்படுவதாலும் அண்மைக்காலமாக இவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. தாய்லாந்துக் கடல்களிற் காணப்படும் குதிரைலாட நண்டு இனங்களின் சினைகளில் ரெற்றோடோரொக்சின் எனப்படும் கடுமையான நரம்புத்தொட்சின் காணப்படலாம். குதிரைலாட நண்டுகள் வாழும் உயிர்ச்சுவடுகளாகக் கருதப்படுகின்றன. மேலும்


Nelson Mandela-2008 (edit).jpg

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாப்பிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக இருந்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். உலக முக்கியத் தலைவர்களுள் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்ததாக கருதப்படும் தலைவர்களில் ஒருவரான இவரை 27 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதன்படி அவரின் விடுதலையை உலகமே எதிர்பார்த்திருந்தது. மேலும்


சூன் 10, 2012
Wheel Iran.jpg

தொழில்நுட்ப வரலாறு என்பது கருவிகளையும் நுட்பக் கூறுகளையும் குறித்த கண்டுபிடிப்புகளின் வரலாறு ஆகும். இதனை மனிதத்தின் வரலாற்றோடு பலவழிகளில் ஒப்பிடலாம். மனிதன் முன்னேறியதால் கருவிகள் உருவாகின; கருவிகள் பயன்பாட்டால் மனிதன் முன்னேறினான். தொழில்நுட்பங்களால் அறிவியல் வளர்ச்சி வாய்த்தது; அறிவியல் வளர்ச்சி செல்லாதவிடங்களுக்குச் செல்லவும், பேரண்டத்தின் இயல்பை ஆராயவும் வழி வகுத்தது. தொழில்நுட்பப் படைப்புகள் பொருளாதாரத் தேவைகளால் எழுந்தன. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் தாக்கமேற்படுத்துகின்றன; சமூகத்தால் தொழில்நுட்பமும் தாக்கமடைகிறது. படை வலிமையை வளர்க்கவும் காட்சிப்படுத்தவும் தொழில்நுட்பங்கள் உதவியுள்ளன.. மேலும்


Tolkien 1916.jpg

ஜே. ஆர். ஆர். டோல்கீன் (1892–1973) என்று பரவலாக அறியப்படும் ஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன் ஒரு ஆங்கில எழுத்தாளர், கவிஞர் மற்றும் பேராசிரியர். ஆங்கிலக் கனவுருப்புனைவு பாணியின் முன்னோடியாகக் கருதப்படுபவர். த லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ், த ஹாபிட், தி சில்மரீலியன் ஆகியவை இவரது மிகவும் அறியப்பட்ட படைப்புகள். டோல்கீனுக்கு முன்பே பல எழுத்தாளர்கள் கனவுருப்புனைவுப் படைப்புகளை எழுதியிருந்தாலும் அவரது படைப்புகளே இருபதாம் நூற்றாண்டில் அப்புனைவுப் பாணிக்கு புத்துயிர் அளித்து வாசகர்களிடையே புகழ்பெறச் செய்தன. எனவே டோல்கீன் 'நவீன கனவுருப்புனைவு இலக்கியத்தின் தந்தை' எனக் கருதப்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த டோல்கீன் தனது மூன்றாவது அகவையில் குடும்பத்துடன் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். மேலும்...


சூன் 3, 2012
Muziri-Alexandriabusinesspact.jpg

முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை என்பது கிபி 2ஆம் நூற்றாண்டில் சங்ககாலச் சேரர்களின் துறைமுகப் பட்டினமான முசிறித் துறைமுக வணிகர்களுக்கும் எகிப்து நாட்டு துறைமுகப் பட்டினமான அலெக்சாந்திரியா வணிகர்களுக்கும் நடந்த வணிக ஒப்பந்தம் ஆகும். தற்போது வியன்னா நகர அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தக் கோப்பு எகிப்திய மற்றும் முசிறி வணிகர்களுக்கிடையே நடந்த கடன் மாற்று விவரங்களை குறிப்பிடுகிறது. இதில் கங்கைச் சமவெளியிலுள்ள இலாமிச்சை, தந்தம், ஆடைகள் போன்றவற்றை 25 சதவீத சுங்க வரியுடன் விற்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய வரலாற்றில் திருப்புமுனையாய் அமைந்த இந்த உடன்படிக்கையிலுள்ள செல்வத்தைக் கொண்டு பண்டைய எகிப்து நாட்டு நைல் நதியை சுற்றியுள்ள 2400 ஏக்கர் பண்ணை நிலங்களை விலைக்கு வாங்கலாம். மேலும்


Eurozone.svg

ஐரோ வலயம் ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளியல், நாணவியல் ஒன்றியமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. 1998இல் பதினோரு உறுப்பு நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை 1999, சனவரி 1 முதல் ஐரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் கிரேக்கம் 2000லும் சுலோவீனியா 2007 இலும் சைப்பிரசு, மால்டா 2008 இலும் சிலோவாக்கியா 2009 இலும் தேர்ச்சி பெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன. மேலும்...


மே 27, 2012
Gulf Fritillary Life Cycle ta.png

உயிரியலில் வாழ்க்கை வட்டம் எனப்படுவது, இனத்தின் உறுப்பினர்கள், தமது விருத்தி நிலைகளில் குறிப்பிட்ட ஒரு நிலையில் இருந்து, தொடர்ந்து வரும் தலைமுறையின் அதே நிலையினை அடையும்வரை, அவற்றில் நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களைக் குறிக்கும். வாழ்க்கை வட்டத்தில் ஒரு சந்ததியிலிருந்து, அடுத்த சந்ததி தோன்றுவது இனப்பெருக்கம் மூலமாக நடைபெறும். இந்த இனப்பெருக்க முறையானது கலவிமுறை இனப்பெருக்கமாகவோ அல்லது கலவியில்முறை இனப்பெருக்கமாகவோ அமையலாம். நோய்க்காரணிகள், நோய்க்காவிகள் போன்றவற்றின் வாழ்க்கை வட்டத்தை அறிந்து வைத்திருப்பதனால், அவற்றை இலகுவாக அழிக்கக் கூடிய வாழிடங்கள், அல்லது விருத்தி நிலைகளைத் தெரிந்து, அவற்றை அழிப்பதனால், நோயிலிருந்து பாதுகாப்பைப் பெறலாம். மேலும்...


சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல்(தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளாகும். சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும்...


மே 20, 2012
Sphere wireframe 10deg 6r.svg

கோளம் அல்லது உருண்டை என்பது முப்பரிமாண வெளியில் அமைந்த ஒரு உருண்டையான வடிவவியல் பொருளாகும். இருபரிமாணத்தில் உள்ள வட்டத்தைப் போலவே கோளமும் அதன் மையத்தைப் பொறுத்து சமச்சீரானது. கோளத்தின் மேற்பரப்பின்மீது அமையும் அனைத்துப் புள்ளிகளும் கோளத்தின் மையத்திலிருந்து சமதூரத்தில் இருக்கும். இச்சமதூரம், கோளத்தின் ஆரம் எனப்படும். கோளத்தின் உள்ளே அமையும் மிகப் பெரிய நேர்கோட்டின் தூரம் கோளத்தின் விட்டம் எனப்படும், இது கோளத்தின் மையம் வழியாகச் செல்லும். மேலும் இது கோளத்தின் ஆரத்தைப்போல் இருமடங்காக இருக்கும். பூமி, உருண்டை என்ற பொருளுடைய கிரேக்க மொழிச் சொல்லான σφαῖραஸ்ஃபைரா என்பதிருந்து ஆங்கிலத்தில் ஸ்ஃபியர் எனக் கோளத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. . மேலும்...


Dynamite-5.svg

டைனமைட்டு என்பது நைட்ரோகிளிசரின் என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள், மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ஆல்பிரட் நோபல் என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன்,செருமனி) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது. இந்த வெடி வகை பொருளின் பெயர் ஆற்றலுடன் தொடர்புடையது என பொருள்படும் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியது. . மேலும்...


மே 13, 2012
Petronas Panorama II.jpg

கோலாலம்பூர், மலேசியாவின் தலைநகரம் ஆகும். மலேசியத் தீபகற்பத்தின் மத்திய மேற்குக் கடலோரத்தில் அமைந்துள்ள கோலாலம்பூர் சிலாங்கூர் மாநிலத்தால் சுற்றிவர சூழப்பட்டுள்ளது. இது மலேசியாவின் மூன்று நடுவண் ஆட்சிப் பகுதிகளில் ஒன்று. இந்நகரவாசிகள் கேலைட்சுகள் என பொதுவழக்கில் குறிப்பிடப்படுகின்றனர். 243 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்த நகரின் மக்கள் தொகை 1.6 மில்லியன் ஆகும். மலேசியாவின் நாடாளுமன்றமும் மலேசிய மன்னர் யங் டி-பெர்துவன் அகோங்கின் அரண்மனையான ஸ்தான நகராவும் இங்கு உள்ளன. 1990கள் முதல் இந்நகரில் பல பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள், அரசியல் மாநாடுகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள பெட்ரோனாஸ் கோபுரங்கள் உலகின் ஆக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இருந்து வருகின்றன. மேலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இதுவேயாகும். . மேலும்...


Thomas Mann 1937.jpg

தாமசு மாண், 1929ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற தலைசிறந்த செருமானிய புதினப் படைப்பாளர் ஆவார். அவர் ஆக்கிய பல புதினங்களும் குறியீட்டு முறையிலும் முரணான முறையிலும் காப்பிய வகையில் உருவாக்கப்பட்டவை ஆகும். தாமசு மாண் செருமானிய, விவிலிய வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டும், செருமானிய அறிஞர்களாகிய யோஹான் வோல்ஃப்காங் ஃபோன் கேத்தே, பிரீட்ரிக் நீட்சே, ஆர்த்தர் ஷோப்பனாவர் போன்றோரின் சிந்தனைவழி தொடர்ந்தும், அவற்றை நவீனப்படுத்தி, ஐரோப்பிய, செருமானிய கலாச்சாரத்தைப் பகுப்பாய்வு செய்து விமர்சிக்கின்றார். அடோல்ஃப் ஹிட்லர் செருமனியில் பதவியைப் பிடித்தபோது, தாமசு மாண் செருமனியை விட்டு சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். 1939இல் இரண்டாம் உலகப் போர் வெடித்த கட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார். 1952ஆம் ஆண்டு அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்குத் திரும்பினார். தாமசு மாண் "நாடுகடத்தப்படுநிலை இலக்கியம்" என்னும் எழுத்து வகைப் படைப்புக்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார். . மேலும்...


மே 6, 2012
Fort St. George, Chennai.jpg

சென்னை முற்றுகை என்பது பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவர பிரெஞ்சு படைகள் டிசம்பர் 1758 முதல் பெப்ரவரி 1759 வரை, லல்லி தலைமையில் நடத்திய முற்றுகைப் போராகும். இது ஏழு ஆண்டுப் போரின் போது நடந்த போராகும். பிரித்தானியப் படைகள் வெற்றிகரமாக இந்த முற்றுகையை எதிர்கொண்டனர். இந்தப் போரில் சென்னை நகரைப் பாதுகாக்க பிரித்தானியப் படையினர் 26,554 பீரங்கிக் குண்டுகளையும் 200,000 தோட்டாக்களையும் பயன்படுத்தினர். சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றத் தவறியமை பிரெஞ்சுப் படையின் இந்திய நுழைவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்ததுடன் பின்னாளில் நடைபெற்ற வந்தவாசிப் போருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும்...


1st Dalai Lama.jpg

தலாய் லாமா என்பது மஞ்சள் தொப்பி என்னும் திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும் பெயராகும். இது தலாய் (கடல்) என்ற மங்கோலிய சொல்லும், லாமா (குரு) என்ற திபெத்திய சொல்லும் இணைந்த கூட்டாகும். தலாய் லாமாக்கள் ஆன்மிகத் தலைவர்கள் ஆவர். மத நம்பிக்கையின் படி தலாய் லாமா என்பவர் அவலோகிதரின் அவதார வரிசையில் வருபவர் எனக் கருதப்படுகிறார். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஐந்தாவது தலாய் லாமா திபெத் மீது அரசியல் அதிகாரத்தைச் செலுத்தினார். அப்போது தொடங்கி தலாய் லாமாக்கள் ஆன்மிகத்தில் மட்டுமல்லாமல் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்கள். 17ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை அவர்கள் பலமுறை திபெத்திய அரசாங்கத்தை வழிநடத்தியுள்ளார்கள். மேலும்...


ஏப்ரல் 29, 2012
ABO donation path.jpg

ஏபிஓ குருதி குழு முறைமை என்பது, மனிதரில் குருதி மாற்றீட்டில் பயன்படும் மிகவும் முக்கியமான குருதிக் குழு முறைமை ஆகும். குருதி வகை களில் வேறுபட்டுக் காணப்படும் குருதிச் சிவப்பணுவில் உள்ள பிறபொருளெதிரியாக்கிகள், குருதி தெளியத்தில் காணப்படும் பிறபொருளெதிரிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த குருதிக் குழு முறைமை இயங்குகின்றது. இதனுடன் தொடர்புடைய எதிர்-A பிறபொருளெதிரி (Anti-A Antibody) மற்றும் எதிர்-B பிறபொருளெதிரி பொதுவாக IgM (Immunoglobulin M) வகை பிறபொருளெதிரிகள் ஆகும். இந்த IgM வகை பிறபொருளெதிரிகள் வாழ்வின் தொடக்கக்காலத்தில், உணவு, பாக்டீரியா மற்றும் வைரசு போன்ற சூழல் காரணங்களால் உருவாகின்றன. ABO இரத்த வகைகள் மனிதக் குரங்கு, சிம்ப்பன்சி, பொனொபோ, கொரில்லா போன்ற சில விலங்குகளிலும் காணப்படுகின்றன. மேலும்...


Bill Clinton, Yitzhak Rabin, Yasser Arafat at the White House 1993-09-13.jpg

அரபு - இசுரேல் முரண்பாடு என்பது நடு கிழக்கில், அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான அரசியல் மோதல்களும் பொதுப் பகையுமாகும். இம்முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட சையோனிய எழுச்சியும் அராபிய தேசியவாதமும் ஆகும். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிப்பட்ட இம் முரண்பாடு, 1948இல் இசுரேல் ஒரு தனி நாடாக உருவானதும், முழு அரபு நாடுகள் கூட்டமைப்புக்குமாக விரிவடைந்தது. யூதர்களின் கருத்துப்படி, அவர்கள் குறிப்பிடும் நிலப்பரப்பானது வரலாற்றுத் தாயகமாகவும், அதே நேரத்தில் ஒன்றிணைந்த அராபிய இயக்கத்தின்படி அது வரலாற்று நோக்கில் பாலத்தீன அராபியர்களுக்கு உரியதென்றும், ஒன்றிணைந்த இசுலாமியவாதத்தின்படி அந்நிலப்பரப்பானது இசுலாமிய நிலமாகவும் நோக்கப்படுகிறது. மேலும்...


ஏப்ரல் 22, 2012
HMS Illustrious01.jpg

வானூர்தி தாங்கிக் கப்பல் என்பது வானூர்திகளை வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப இறக்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு போர்க் கப்பலைக் குறிக்கும். இக் கப்பல்கள் கடலில் செல்லும் ஒரு வானூர்தித் தளமாகச் செயற்படுகின்றன. இதனால், ஒரு கடற்படை தனது வான் வலிமையை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு, வானூர்தி தாங்கிக் கப்பல்கள் உதவுகின்றன. ஒரு கடற்படை உலகின் எப்பகுதியிலும் அப்பகுதியில் உள்ள வானூர்தித் தளங்களை நம்பி இராமல் வான் தாக்குதல்களை நடத்துவதற்கு வழி செய்கின்றன. மரக் கலங்களில் பலூன்களைக் காவிச்சென்றதில் இருந்து அணுவாற்றலில் இயங்கும் கப்பல்களில் நிலைத்த சுழல் இறக்கைகளைக் கொண்ட பல வானூர்திகளைக் காவிச்செல்லும் அளவுக்கு வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. கடல் ஆளுமை பெற இன்றைய ஆழ்கடற் படைகளுக்கு இவ்வகைக் கப்பல்கள் இன்றியமையாதவையாக உள்ளன. மேலும்...


இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்பது பிரித்தானியரை வெளியேற்றி இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு புரட்சி அமைப்பு. 1924ல் துவக்கப்பட்ட இவ்வமைப்பு 1930கள் வரை வன்முறை, தீவிரவாத உத்திகளைக் கொண்டு பிரித்தானிய ஆட்சியினை எதிர்த்து வந்தது. பகத் சிங், சுக்தேவ் தபார், ராஜ்குரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோர் இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்கள். ராம் பிரசாத் பிசுமில் இதன் முன்னோடி அமைப்பான இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் முக்கிய உறுப்பினர். வெளியுலகிற்குத் தெரிந்த இதன் முதல் நடவடிக்கை 1925 இல் நடத்தப்பட்ட ககோரி தொடருந்துக் கொள்ளை ஆகும். ஆஷ்ஃப்க்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங், ராஜேந்திர லகிரி ஆகியோர் காகோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டனர். தில்லியில் மத்திய சட்டமன்றத்தின் மீது குண்டு வீசியது இந்த அமைப்பு நடத்திய அடுத்த முக்கிய நடவடிக்கை. 1931ல் பகத் சிங், சுக்தேவ். ராஜ்குரு மூவரும் தூக்கிலிடப்பட்டனர். மேலும்...


ஏப்ரல் 15, 2012
A farmer and his cows.jpg

வேளாண்மை என்பது உணவு, பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல், மேய்ச்சல் நிலம் அல்லது தரிசு நிலத்தில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை விவசாயத்தின் அடித்தளமாக விளங்குகின்றன. மேலும்...


Rose-Sanderson-Votes-for-Women.jpeg

பெண்கள் வாக்குரிமை என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும். சொத்து இருக்கவேண்டும், வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்படாமலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் இதில் அடங்கும். நவீன காலத்தில், பெண்கள் வாக்குரிமை இயக்கம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. அந்நாட்டின் முழுமையிலும், கனடாவின் பிரெஞ்சு மொழி புழங்கிய கியூபெக் மாநிலத்திலும் பெண்களுக்கான முழு உரிமை கிடைக்க மேலும் காலம் பிடித்தது. 1860களில் சில பெண்கள் சுவீடன், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சில மேற்கு மாநிலங்களில் வாக்களிக்க உரிமை பெற்றனர். மேலும்...


ஏப்ரல் 8, 2012
Death Railway2.gif

சயாம் மரண இரயில்பாதை அல்லது சயாம் - பர்மா இரயில்வே என்பது இரண்டாம் உலகப்போரின் போது நிர்மாணிக்கப்பட்ட 415 கி.மீ தொலைவு கொண்ட ஒரு புகைவண்டித் தொடர் பாலம். இந்தத் தொடர் தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் சப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்டது. இது மனித வரலாற்றில் மிகவும் துயரம் தோய்ந்த ஒரு ரயில்பாதை முயற்சியாக முடிந்தது. பல ஆசியத் தொழிலாளர்களும் போர்க்கைதிகளும் வலுக்கட்டாய வேலைகளுக்கு இப்பாதைக் கட்டுமானத்தில் உட்படுத்தப் பட்டதுடன் போதிய உணவு இல்லாமை, கொடிய மிருகங்களின் தாக்குதல் போன்றவற்றால் லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போயினர். நேதாஜியும் இந்த பாதையை பர்மிய எல்லையில் இருந்து இந்தியாவைப் பார்த்துவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிய போது பயன்படுத்தினார். மேலும்...


Rosalindelsiefranklin.jpg

ரோசலிண்ட் பிராங்க்ளின் (1920-1958) இலண்டனைச் சேர்ந்த அறிவியலாளர். உயிரியற்பியல் அறிஞர், வேதியியலாளர், மூலக்கூற்று உயிரியல் மற்றும் எக்சு கதிர் படிக வரைவி நிபுணர் எனப் பலவகைத் துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். மரபணு, வைரசு, நிலக்கரி மற்றும் கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றியவர். பிராங்க்ளின் 1951-1953 ஆம் ஆண்டு வரை மரபணு ஆய்வில் ஈடுபட்டு மரபணுவின் பதிப்பை எக்சு கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் படம் பிடித்தார். வாட்சன், கிரிக் ஆகிய இருவரும் மரபணு வடிவத்தைக் கண்டறியும் ஆய்வில் அப்போது ஈடுபட்டிருந்தனர். மரபணு இழை சுருள் வடிவம் கொண்டது என்பதனை மெய்ப்பிக்க மிகச் சிறந்த ஆதாரம் பிராங்க்ளின் எடுத்த படமே என அவர்கள் உணர்ந்தனர். அதனைப் பயன்படுத்தி அவர்களின் ஆய்வைத் தொடர்ந்தனர். இந்த ஆய்வுகளில் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் வாட்சன், கிரிக், வில்கின்சு ஆகியோருக்கு பின்னால் நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும்...


ஏப்ரல் 1, 2012
Peruvazhudhi.jpg

சங்ககாலத் தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியலுக்கு அடுத்து சங்ககாலத் தமிழக நாணயவியலின் பங்கு மிகுதியானது. குறிப்பாக, மூவேந்தர் வழங்கி வந்த முத்திரைக் காசுகளும், அவற்றை உருவாக்க பயன்படுத்திய வார்ப்புக் கூடுகளும் பெருவழுதி நாணயம் (படம்) என்ற பாண்டிய மன்னனின் காசுகளும் சங்ககாலத் தமிழக வரலாற்று நிறுவலில் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர் , குறுநில மன்னர்கள் ஆகியோரின் நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், வேற்று மாநில மன்னர்களின் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறியலாம். தமிழகத்தில் கிடைத்த வேற்று நாட்டு மன்னர்களின் நாணயங்களையும் கடலோடிகளின் குறிப்புகளையும் கொண்டு பண்டைய இந்தியாவின் பண்டமாற்று முறைகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கணிக்க முடிகிறது. மேலும்...


Federer 2009 Australian Open.jpg

ரோஜர் ஃபெடரர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற டென்னிசு வீரர். இவரின் 2009 ஆம் ஆண்டு விம்பிள்டன் ஆறாவது வெற்றி, மொத்தம் ஐந்து முறை தொடர்ந்து விம்பிள்டன் ஒற்றையர் முதல்வனாக வெற்றி பெற்ற பியான் போர்கின் அரிசெயலை முறியடித்து வரலாறு படைத்ததாகும். இதுவரை, ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 16 பெருவெற்றித் தொடர் பட்டங்களை வென்றுள்ளார். தவிர, ஆத்திரேலிய, பிரெஞ்சு, விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஆகிய பெருவெற்றித்தொடர் பட்டங்களை வென்ற ஏழு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 22 முறை பெருவெற்றித்தொடர் இறுதிப் போட்டிகளில் ரோச்யர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை. அதேபோல் தொடர்ச்சியாக 10 முறை பெருவெற்றித்தொடர் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். இத்தகைய அரியசெயல்களால் பெட் எக்ஸ்பிரசு என்றும், சுவிசு மேசுட்ரோ என்றும் அவர் புகழப்படுகிறார். மேலும்...


மார்ச் 25, 2012
AMI scheme.png

மாரடைப்பு இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும். மேலும்...


Karl Marx 001.jpg

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. இவர் செய்த புரட்சி நடவடிக்கைகளுக்காக 1845ல் பாரிசு நகரத்திலிருந்தும், 1849ல் கோல்ன் நகரிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். மேலும்...


மார்ச் 18, 2012
CircularCoordinates.svg

கணிதத்தில் வாள்முனை ஆள்கூற்று முறைமை என்பது ஒரு சமதளத்தில் அமைந்துள்ள எப்புள்ளியையும் முறையாகக் குறிப்பிடும் ஒரு முறைமை ஆகும். இம்முறையில் சமதளத்தில் உள்ள எந்தவொரு புள்ளியும் ஒரு நீளம், ஒரு கோணம் ஆகிய இரண்டு ஆள்கூறுகளால் குறிக்கப்பெறுகின்றது. இம்முறையில் நிலையான ஒரு தொடக்கப்புள்ளி உண்டு. சமதளத்தில் உள்ள எப்புள்ளியும் இந்தத் தொடக்கப்புள்ளியில் இருந்து எவ்வளவு தொலைவு உள்ளது என்று கூறும் நீளம் ஓர் ஆள்கூறு. அந்த நீளத்தை உடைய கோலை அல்லது வாளை, கிடை அச்சில் இருந்து இடஞ்சுழியாகச் சுழற்றி சமதளத்தில் உள்ள அப்புள்ளியை முனை தொடுமாறு இருந்தால் என்ன கோணம் உள்ளதோ, அது மற்றொரு ஆள்கூறு ஆகும். மேலும்...


Ananda Ranga Pillai.png

ஆனந்த ரங்கம் பிள்ளை, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். 18ஆம் நூற்றாண்டுக் காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும், ஆவணமாகவும், இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று, தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவரை' இந்தியாவின் பெப்பிசு' எனவும் ' நாட்குறிப்பு வேந்தர்' எனவும் போற்றுகின்றனர். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ சம்பவங்களைகளைப் பற்றியும் அறிய முடிகிறது. மேலும்...


மார்ச் 11, 2012
Sylvia plath.jpg

சில்வியா பிளாத் (1932-1963) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார். குறிப்பாக, அவரது கவிதைகளுக்காக அறியப்படுகிறார்; பாவமன்னிப்பு வெளிப்பாடு கவிதைப்பாணியை முன்னெடுத்துச் சென்றதில் இவரது பங்கு முக்கியமானது. கொலொசஸ் மற்றும் பிற கவிதைகள், ஏரியல் ஆகியன இவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள். தி பெல் ஜார் என்ற பகுதி-தன்வரலாற்றுப் புதினத்தை விக்டோரியா லூகாஸ் எனும் புனைப் பெயரில் எழுதினார். 1982இல் இவரது கலக்டெட் போயம்ஸ் கவிதைத் தொகுப்புக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இறப்புக்குப் பின்னர் புலிட்சர் பரிசு பெற்ற முதல் கவிஞர் பிளாத். மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த பிளாத் எழுத்தாளராக புகழ் பெற்ற பின்னர் கவிஞரான டெட் ஹியூக்சை மணந்தார். உளச்சோர்வினால் நெடுநாட்கள் பாதிக்கப்பட்டு தன் கணவரைப் பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1963ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்வு, தற்கொலை குறித்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன. மேலும்...


Madras Prov South 1909.jpg

சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிருவாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார் பகுதி, இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை இம்மாகாணத்தில் அடங்கியிருந்தன. இதன் கோடைக்காலத் தலைநகரம் உதகமண்டலம், குளிர்காலத் தலைநகரம் சென்னை. 1600 இல் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசி ஓர் ஆங்கிலேய வர்த்தகர் குழுமத்துக்கு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்னும் கூட்டுப் பங்கு நிறுவனத்தை உருவாக்க அனுமதி அளித்தார். இந்நிறுவனம் முதலாம் ஜேம்ஸ் மன்னரின் காலத்தில் இந்தியாவில் வர்த்தக நிலையங்களை அமைக்க முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதியைப் பெற்றது. முதலில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் வர்த்தக நிலையங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் சந்திரகிரி அரசரிடம் பேச்சுவார்த்தை நடத்திய கம்பனி நிருவாகி சர் பிரான்சிசு டே, மதராசப்பட்டினம் எனும் கிராமத்தருகே ஒரு வணிக நிலையத்தை நிறுவ நிலஉரிமை பெற்றார். மேலும்...


மார்ச் 4, 2012
Schrodingers cat.svg

சுரோடிங்கரின் பூனை என்பது ஆஸ்திரிய இயற்பியலாளரான எர்வின் சுரோடிங்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனை ஆகும். முரண்படுதோற்றம் கொண்ட இச் சோதனை 1935 இல் முன்வைக்கப்பட்டது. குவாண்டம் பொறிமுறை தொடர்பான கோப்பன்கேகன் விளக்கத்தை அன்றாடப் பொருள்கள் தொடர்பில் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை இச் சோதனை எடுத்துக்காட்டுகிறது. இச் சோதனையில் இறந்திருக்கலாம் அல்லது இறவாமல் இருக்கலாம் என்னும் நிலையில் ஒரு பூனை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த கருத்துவழிச் சோதனையில் உயிருள்ள பூனை ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் நீரில் ஐதரோசயனைடு (HCN) கரைந்த ஐதரசசயனைடியக் காடியானது மூடிய ஒரு குழல்குப்பியில் உள்ளது. இக் காடி வெளி வந்தால், அதில் இருந்து வரும் வளிமம் அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும். மேலும்...


Pandya Kingdom (south India).png

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன், எம்மண்டலமும் கொண்டருளியவன், எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழதேசப் படையெடுப்பும் ஒரு முக்கியக்காரணம். மேலும்...


பெப்ரவரி 26, 2012
Charlotte Amalie.jpg

அமெரிக்கக் கன்னித் தீவுகள் கரிபியத்தில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சியின் கீழுள்ள மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தில் சிறிய அண்டிலுசுவில் காற்றுமுகத் தீவுகளில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கன்னித்தீவுகள் கிமு 100 ஆம் ஆண்டளவில் தென் அமெரிக்காவிலிருந்து வந்த அராவாக் இந்தியர்களால் முதலாவதாக குடியேற்றப்பட்டது. கிமு 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்ததற்கான சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ளன. 15ம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அராவாக் இந்தியர்களை சிறிய அண்டிலுசுத் தீவுகளிலிருந்து வந்த தீவிர கரிப் இனக் குடிகள் வெளியேற்றினர்கள். வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ். 1493 இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இவர் இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு "புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்" எனப் பெயரிட்டார். அடுத்துவந்த 300 ஆண்டுகளில் அப்போதைய ஐரோப்பிய வல்லரசுகள் இத்தீவுகளின் ஆட்சியை மாறிமாறிக் கொண்டிருந்தன. மேலும்...


David SM Maggiore.jpg

தாவீது அரசர் என்பவர், எபிரேய விவிலியத்தின்படி ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசின் இரண்டாவது அரசர் ஆவார். மத்தேயு, லூக்கா நற்செய்திகளின்படி, இவர் யோசேப்பு, மரியா ஆகியோர் வழியில் இயேசு கிறித்துவின் முன்னோர்களில் ஒருவர் ஆவார். இவர் சிறந்த பாடகராகவும், இசைவல்லுநராகவும், போர் வீரராகவும் திகழ்ந்தவர். விவிலியத்தின் பல பகுதிகள் தாவீதின் இசைப் பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன. திருப்பாடல்கள் நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. தாவீது யாழ் மீட்டுவதில் வல்லவராய் திகழ்ந்தார். இவர், இஸ்ரயேலின் பல்வேறு இறைப்புகழ்ச்சி பாடல்களை இயற்றியுள்ளார். அர்மேனிய அரசன் ஒருவன் இஸ்ரயேல் அரசனை வெற்றிகொண்ட நிகழ்வை எடுத்துரைக்கும், கி.மு. 850-835 காலத்தைச் சார்ந்த அர்மேனிய நினைவுச் சின்னம் ஒன்றில், இஸ்ரயேலைக் குறிக்க "தாவீதின் இல்லம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கி.மு. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தாவீதின் நகரில், தாவீது அரசர் வாழ்ந்த அரண்மனையின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும்...


பெப்ரவரி 19, 2012
Embryo, 8 cells.jpg

உயிர்காப்பு உடன்பிறப்பு என்பது சில மிகக் கடுமையான நோய்கள் கொண்ட ஒரு குழந்தையைக் காப்பதற்காகப் உடன்பிறப்பாகப் பிறக்கும் குழந்தை ஆகும். ஃபன்கொனியின் இரத்தச்சோகை போன்ற சில மரபியல் தொடர்பான நோய்களுக்கு உயிரணு மாற்றச் சிகிச்சை தேவைப்படுகின்றது. இம்மருத்துவத் தீர்வு முறைக்குத் தேவைப்படும் உயிரணுக்களோ அல்லது ஏற்ற உறுப்புக்களோ தக்க மரபியல் ஒவ்வுமை கொண்டுள்ள நோயற்ற ஒருவரிடம் இருந்து பெறுதல் வேண்டும், இந்தத் தீர்வின் தேவைக்காக இந்நோய் இல்லாத உடன்பிறப்பு ஒருவரே உதவ முடியும். உயிர்காப்பு உடன்பிறப்பு உருவாக்கம் புற உயிர்க்கருக்கட்டல் முறைமூலம் வளர்த்தெடுக்கப்படுகின்றது. முதலாவது உயிர்காப்பு உடன்பிறப்பு அணுமருத்துவம் 2000 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. மொல்லி நாசு எனும் பெண் குழந்தை 1994ல் ஃபன்கொனியின் இரத்தச்சோகையுடன் பிறந்தது. 2000 இல் மின்னியாபோலிசு பல்கலைக்கழக மருத்துவமனையில் உலகின் முதல் உயிர்காப்பு உடன்பிறப்புக் குழந்தையான ஆதாம் நாசு பிறந்தது. ஆதாம் நாசின் தொப்புள்கொடியில் இருந்து குருதிக் குருத்தணுக்கள் எடுக்கப்பட்டு மொல்லி நாசின் என்புமச்சைக்குள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. மேலும்...


MKathiresanchettiar.jpg

பண்டிதமணி மு. கதிரேசனார் (1881-1953) ஏழு மாதங்கள் கூட பள்ளியில் படிக்காமல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். வடமொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தவர். பல தமிழறிஞர்களுக்குப் பாடம் சொன்னவர். சிறந்த சொற்பொழிவாளர். இரு பொருள் படப் பேசுவதில் வல்லவர். தமிழாய்வு செய்து தமிழ்த்தொண்டாற்றியவர். மகிபாலன் பட்டியில் பிறந்த கதிரேசனார் சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாத நோயால் துன்புற்றார். 11ம் வயதில் தந்தையுடன் பொருளீட்டுவதற்காக இலங்கை சென்றார். தந்தையின் திடீர் மரணம் காரணமாக மிகவும் நலிவுற்ற நிலையில் 14ம் வயதில் ஊர் திரும்பினார். ஊன்று கோலின்றி நடக்க முடியாத நிலைக்கு ஆளானார். தமிழின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, ஓய்வு நேரத்தில் தமிழ் நூல்களை ஆசிரியர் இல்லாமலே ஆழ்ந்து கற்றார். தன் ஆருயிர் நண்பரான அரசஞ்சண்முகனாரிடம் பாடம் கேட்டார். மதுரை 'வித்யா பானு' அச்சகத்தின் உரிமையாளரான மு. ரா. கந்தசாமிக் கவிராயரின் நட்பு கதிரேசனாருக்குக் கிடைத்தது. இதன் பயனாய் இவர் வித்யாபானு இதழுக்குப் பல அரிய தமிழ்க் கட்டுரைகள் எழுதினார். மேலும்...


பெப்ரவரி 12, 2012
Breastfeeding-icon-med.svg

தாய்ப்பாலூட்டல் என்பது பிறந்த குழந்தைக்கு நேரடியாக தாயின் முலையிலிருந்து பால் கொடுக்கப்படும் முறையாகும். குழந்தைகளில் காணப்படும் உறிஞ்சி உண்ணும் தொழிற்பாடு இந்த தாய்ப்பலூட்டலுக்கு உறுதுணையாக உள்ளது. பொதுவாக குழந்தைக்கான வேறு மேலதிக உணவுகளை வழங்காமல் தாய்ப்பாலூட்டல் முறையால் மட்டுமே கிட்டத்தட்ட 6 மாதங்கள் உணவூட்டல் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற போதுமானதாக இருக்கும். குழந்தைக்கு ஆபத்தான மருந்துகள் உட்கொள்ளும் தாய், எய்ட்சு நோயுள்ள தாய், காசநோய் உள்ள தாய் போன்றோர் தாய்ப்பாலூட்டாமல் இருப்பது நல்லது. துறைசார் வல்லுனர்கள் அனைவரும் தாய்ப்பாலூட்டல் மிகவும் நிச்சயமாக நலம் தருவதுதான் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு காலம் தாய்ப்பாலூட்டுவது சிறந்தது, பிறந்த குழந்தைக்கு செயற்கை முறை உணவூட்டல் எபப்டியான இடர்களைத் தரக் கூடியது போன்ற விடயங்களில் வேறுபட்ட அபிப்பிராயம் கொண்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தனித் தாய்ப்பாலூட்டல் சிறந்தது என்பதை வலியுறுத்துவதுடன், அதன் பின்னர் மேலதிகமாக செயற்கை உணவூட்டலுடன் சேர்த்து தாய்ப்பாலூட்டலையும் செய்வதற்கு அறிவுறுத்துகின்றன. மேலும்...


Africa-countries-horn.png

ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் பகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பமாகும். இதன் கடற்கரை அரபிக்கடல் மற்றும் ஏமன் குடாவை எல்லைகளாக கொண்டுள்ளது. சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி, எத்தியோப்பியா ஆகியவை இப்பகுதியில் உள்ள நாடுகள் ஆகும். இப்பகுதி நிலநடுக் கோடுக்கும் கடக ரேகைக்கும் சம தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மலைகள் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு அமைந்ததால் ஏற்பட்ட நில உயர்வு காரணமாக உருவானதாகும். இப்பகுதிக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்குமான வணிகத்தில் வடக்கு சோமாலியா சிறப்பு இடத்தை பிடித்திருந்தது. எகிப்தியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள், மெசபடோமியர்கள் ஆகியோர் மதிப்பு மிக்க பொருளாக கருதும் சாம்பிராணி, குங்குமதூபம் மற்றும் மசாலா பொருட்களுக்களை வழங்குபவர்களாக சோமாலிய கடலோடிகளும் வணிகர்களும் திகழ்ந்தனர். இடைக்காலத்தில் இப்பகுதியின் வணிகத்தை பல்வேறு அரசுகள் ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்தின. இப்பகுதியை ஆண்ட அடல் சூல்தானகம் பல இனக்குழுக்கள் கொண்ட முசுலிம் அரசாக திகழ்ந்தது. இது புகழின் உச்சியில் இருந்த போது எத்தியோப்பியா, எரித்திரியா, சிபூட்டி மற்றும் சோமாலியாவின் பெரும் பகுதிகள் இதன் கட்டுப்பாட்டில் இருந்தன. மேலும்...


பெப்ரவரி 5, 2012
Coin of Jalaluddin Ahsan Khan.jpg

மதுரை சுல்தானகம் (மாபார் சுல்தானகம்) பதினான்காம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசு. ஜலாலுதீன் ஆசன் கான், மதுரையின் முதல் சுல்தான் ஆவார். பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தபின் நடைபெற்ற இசுலாமியப் படையெடுப்புகளால் தோன்றிய இந்த சுல்தானகம், பின்னர் விஜயநகரப் பேரரசின் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. இதுவே தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த ஒரே இசுலாமிய அரசு. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (1268 – 1308) இறப்பிற்குப் பிறகு, அவரது மகன்கள் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. இசுலாமிய வரலாற்றாளர்கள் வீரபாண்டியன் அந்தப் போரில் டெல்லி சுல்தானகத்தின் படைத் தலைவர் மாலிக் கஃபூரின் துணையை நாடினார் என்று கூறுகின்றனர். இதனால் கஃபூரின் படைகள் 1310-11ல் மதுரையைக் கைப்பற்றி சூறையாடின. இதன் பின்னால், பாண்டிய உள்நாட்டுப் போர் தொடர்ந்து இடம்பெற்றது. மேலும் இருமுறை டெல்லி சுல்தானகப் படைகள் மதுரையைச் சூறையாடின. உலூக்கான் மதுரையை டெல்லி சுல்தானகத்துடன் இணைத்தார். பாண்டிய நாடு, மாபார் என்ற பெயருடன் டெல்லி சுல்தானகத்தின் ஐந்து தென்னிந்திய பிரதேசங்களுள் (மாபார், தேவகிரி, டிலிங்க், கம்பிலி, துவாரசமுத்திரம்) ஒன்றாகியது. மேலும்...


Rasammah Phubalan.jpg

ராசம்மா பூபாலன், மலேசியப் பெண்ணுரிமைவாதி, சமூக சேவகி, கல்வியாளர். 1943-இல் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையில் இணைந்து இரண்டாம் உலகப்போரின் பர்மா போரில் சேவை செய்தவர். இந்தியா-மியான்மார் எல்லையில் பிரித்தானியர்களின் விமானத் தாக்குதல்களில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர். நடுத்தர இலங்கைத் தமிழர் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தவர் ராசம்மா. 1955ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் பட்டமும் பெற்றார். மலேசிய ஆசிரியைகளுக்காக ஒரு தேசிய சங்கத்தை உருவாக்கி, அவர்களின் சம ஊதியத்துக்காக வரலாற்றுப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றவர். சாரணியர் இயக்கத்திலும் அவர் தலைமைப் பொறுப்புக்கள் வகித்து இருகிறார். உலகின் ஏராளமான நாடுகளில் அவர் மலேசியாவைப் பிரதிநிதித்து இருக்கிறார். ராசம்மா பூபாலன், தம்முடைய 85 வயதிலும், அரச மலேசிய போதைப் பொருள் ஒழிப்பு சங்கத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். மேலும்...


சனவரி 29, 2012

பாபர் மசூதி இடிப்பு என்பது 1992, டிசம்பர் 6 அன்று அயோத்தியின் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியைக் கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அதனை அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பு பல மாதங்களாக நடந்த இந்து முஸ்லிம் மதக்கலவரங்களுக்குக் காரணமாக அமைந்தது. இந்தக் கலவரங்களால் மொத்தம் 2,000 பேர் உயிரிழந்தனர். ‎அயோத்தி நகரம் இராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் இந்துக்களால் கருதப்படுகிறது. 1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்களில் ஒரு சாரர் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும் இசுலாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன. பாரதிய ஜனதா கட்சி 1989 தேர்தலின் போது அயோத்திச் சிக்கலை தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது. செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்திச் சிக்கலை நாடெங்கும் எடுத்துச் செல்லும்பொருட்டு ஓர் இரதப் பயணத்தைத் தொடங்கினார். மேலும்...


Ganesaiyar.jpg

சி. கணேசையர் (1878-1958) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவசிரோன்மணி என்ற பட்டம் பெற்றவர். குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் விமரிசனங்களும் எழுதியவர். ஈழத்தின் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் இவர் இமயம்போல் போற்றப்படுகிறார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது. தொல்காப்பிய உரைகளின் ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதி வந்தார். தான்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழ்களில் அரிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதிவந்தார். மிகச்சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். நயினாதீவின் சைவப்பாடசாலையில் கற்பித்த ஏழாண்டுகள் அவருடய ஆசிரியப் பணியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே இவர் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதியுள்ளார். மேலும்...


சனவரி 22, 2012
Jallikattu-Avaniapuram.jpg

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டு. அலங்காநல்லூர், ஆவரங்காடு, தேனீமலை போன்ற ஊர்களில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை ஒட்டி இடம்பெறும் ஏறுதழுவல் புகழ்பெற்றது. சல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணைக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. ‎மேலும்...


Ymkodhainayaki.jpg

வை. மு. கோதைநாயகி (1901-1960) துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளர். 115 புதினங்களை எழுதியவர். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், பத்திரிகை ஆசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். இதுவரை எழுதப்பட்டு, வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுள் இவர் சரியாக அடையாளம் காட்டப்படாதவர். கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. அவர் சொல்ல எழுதி உருவானதுதான் ‘இந்திரமோகனா’ என்ற அவரது முதல் புதினம். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். கோதைநாயகியின் கதைகளை முதலில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் தமது ‘மனோரஞ்சனி’ இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார். பின்னர் கோதைநாயகி "ஜகன்மோகினி' என்ற இதழை விலைக்கு வாங்கி 1925 இல் அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார். பல புதினங்கள் ஜகன்மோகினி மூலம்தான் அவர் எழுதினார். இந்து, முஸ்லிம் ஒற்றுமை, பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவை திருமணம் ஆகியவற்றை நாவல்கள் மூலம் வலியுறுத்தி எழுதினார். கோதைநாயகியின் புதினங்கள் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இவற்றில் சித்தி (1966) படத்துக்காக சிறந்த கதையாசிரியர் விருது கோதைநாயகிக்கு அவர் இறந்த பின் வழங்கப்பட்டது. மேலும்...


சனவரி 15, 2012
SabarimalaRush2010.JPG

சபரிமலை என்பது கேரளாவின் மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியைக் கொன்றபிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ‎ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 41 நாட்கள் ‎கொண்ட விரதத்தை பக்தர்கள் ஏற்றுக் ‎கொள்வர். ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பல ‎காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு ‎வருகை புரிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ‎ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. ‎மேலும்...


சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி (1885-1956) என்பவர் மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர். மலாயாவின் பொருளாதாரப் போக்கை மாற்றி அமைத்த பிரித்தானியத் தாவரவியலாளர். இவர் சிங்கப்பூர் தாவரப் பூங்காவின் முதல் தாவரவியலாளர் மற்றும் முதல் புவியியலாளராகவும் பணியாற்றியவர். இவர் பேராக், கோலாகங்சாரில் நட்டுவைத்த முதல் ரப்பர் மரம் 135 ஆண்டுகளாக இன்றும் இருக்கிறது. 1877 இல் அறிவியலில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறப்புப் பட்டம் பெற்றார். அதே ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று தாவர ஆய்வுகளை மேற்கொண்டார். 1888ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவிற்கு இயக்குநராக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பணி புரியும் போது ரப்பர் மரங்களின் தாவரப் பயன்பாடுகள் மலாயா, சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தார். ஆகவே, மலாயாத் தொடுவாய் நிலப்பகுதிகளில் ரப்பர் மரங்களை நட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். மேலும்...


சனவரி 8, 2012
காட்சிக்குட்பட்ட பேரண்டம்.png

காட்சிக்குட்பட்ட பேரண்டம் என்பது பெருவெடிப்பு கோட்பாட்டில் மனிதர்களால் காணப்படக்கூடிய விண்மீன் பேரடைகளையும் அவை சார்ந்த பருப்பொருட்களையும் குறிக்கும். பொதுவாகப் பேரண்டம் என்றால் காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும் ஆற்றல், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி ஆகியவை அனைத்தும் உள்ளடங்கும். அண்டத்தின் எல்லையைப் பால்வழி மையத்திலிருந்து 1,00,008 கோடி ஒளியாண்டுகள் என வைத்துக்கொண்டால், அதில் பால் வழி மையத்திலிருந்து 4,650 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து மட்டுமே ஒளி மானிடரை வந்தடைந்திருக்கிறது. மீதமுள்ள முழு பகுதிகளையும் காண மானிடர்களுக்கு மேலும் 95,358 ஆண்டுகள் (1,00,008-4,650) ஆகும். ஒளி வந்தடைந்த பகுதிகள் காட்சிக்குட்பட்ட பேரண்டம் எனப்படும். காட்சிக்குட்பட்ட பேரண்டம் பால் வழி மையத்திலிருந்து எந்தக் கோணத்தில் பார்த்தாலும் குறைந்தது 1,400 கோடி புடைநொடி தூரத்தினைக் கொண்டிருக்கும். இதன் கொள்ளளவு 3.5 × 1080 கனசதுர மீட்டர்கள். மேலும்...


AlexandertheGreatbyGeorgeSStuart.jpg

பேரரசன் அலெக்சாண்டர் (கிமு 356-323) கிரேக்கத்தின் பகுதியான மக்கெடோனின் மன்னன். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன் போற்றப்படுகிறான். இவன் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டான். தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தான். இவன் இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். அலெக்சாண்டர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தான். இதனால் சில அறிஞர்கள் இவன் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தான் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினான். பன்னிரண்டு ஆண்டு காலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானான். மேலும்...


சனவரி 1, 2012
BrantaLeucopsisMigration.jpg

வலசை போதல் என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும். "எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விளைகின்றன. அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலஙகளில் மாற்றிக் கொள்கின்றன. அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தமது இருப்பிடத்தை அறிகின்றன. இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்க கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன. மேலும்..


SNadesapillai.jpg

சுப்பையா நடேசபிள்ளை (1895-1965) இலங்கையின் தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியும் ஆவார். இலங்கை அரசாங்க சபை, நாடாளுமன்றம் , மேலவை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர். தஞ்சாவூரில் பிறந்த நடேசன் 19 வயதில் சட்டம் பயின்று இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார். தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார். 1923 இல் இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் ஆசிரியராகி, பின்னர் அதன் அதிபரானார். 1926 ஆம் ஆண்டில் சேர் பொன். இராமநாதனின் புதல்வி சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தார். அரசியலில் புகுந்து நாடாளுமன்றம் சென்றார். இவர் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் சட்டத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டமையினால் அவர் அக்கட்சியில் இருந்து விலகி, சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் அரசில் 1960 முதல் இறக்கும் வரை மேலவை உறுப்பினராக இருந்தார். ஆங்கிலப் பாடல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். "சகுந்தலை வெண்பா" என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார். மேலும்...