பெளத்தம் (Buddhism, பாளி/சமசுகிருதம்: बौद्ध धर्म புத்த தருமம்) என்பது கிமு566-486 இல் வாழ்ந்த புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். இந்தியாவில் தோன்றிய இம்மதம் பின்னர் படிப்படியாக மத்திய ஆசியா, இலங்கை, திபெத், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளாகிய சீனா, வியட்நாம், ஜப்பான், கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியது. இதன் தாய் மதமான இந்து மதத்தின் பல கருத்துகளை எதிர்த்து அதிலிருந்து பிரிந்து வளர்ந்தது.பௌத்தம் பெரும்பாலும், நற்செய்கைகளைச் செய்தல், கெட்ட செய்கைகளை விலக்குதல், மனப்பயிற்சி என்பவற்றை எடுத்துச் சொல்கிறது. இச் செயல்களின் நோக்கம், தனியொருவரினதோ அல்லது சகல உயிரினங்களினதுமோ கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து ஞானம் பெறுவதாகும். ஞானம் பெறுவதென்பது நிர்வாணம் அடைதலாகும்.
கௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும்கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள்.
வஜ்ரயான பௌத்தத்தில், அக்ஷோப்ய புத்தர்ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர். மேலும் ஆதிபுத்தரின் அம்சமாக கருதப்படும் இவர் நிதர்சனத்தின் விழிப்புநிலையை குறிப்பவர். பாரம்பர்யத்தின் படி இவருடைய உலகம் வஜ்ரதாதுவின் கிழக்கே உள்ள அபிரதி(अभिरति) ஆகும். ஆனால் மக்களிடத்தில் அமிதாப புத்தரின் சுகவதியே பரவலாக உள்ளது. இவருடைய உலகத்தை குறித்து யாரும் அவ்வளவாக அறியார். இவருடைய துணை லோசனா ஆவார். இவர் எப்பொழுதும் இரண்டு யாணைகளுடனே சித்தரிக்கப்படுவார். இவருடையெ நிறம் நீலம், இவருடைய சின்னம், மணி, மூன்று உடுப்புகள் மற்றும் செங்கோல். இவருக்கு பலவிதமான வெளிப்பாடுகள் உள்ளன.
வட்டதாகே (Vatadage, சிங்களம்: වටදාගේ) எனப்படுவது இலங்கையில் காணப்படும் ஒரு வகை பௌத்த சமய வழிபாட்டுக்குரிய கட்டிடம் ஆகும். இதற்கு, தாகே, தூபகர, சைத்தியகர போன்ற பெயர்களும் உண்டு. இக்கட்டிட வகையில் இந்தியச் செல்வாக்கு ஓரளவுக்குக் காணப்படுகிறது எனினும், இவ்வகையை பண்டைய இலங்கைக் கட்டிடக்கலைக்கு உரிய தனித்துவமான அமைப்பு எனக் கூறலாம். புத்தரின் புனித சின்னங்களைத் தம்மகத்தே கொண்ட சிறிய தாதுகோபுரங்களைப் பாதுகாப்பதற்காக இவ் வட்டதாகேக்கள் அவற்றை மூடிக் கட்டப்பட்டன.