பஞ்சாப் (இந்தியா)

இந்திய மாநிலம்
(இந்திய பஞ்சாப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பஞ்சாப் (Punjab) இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதிகமாக விளையும் பயிராகும். பஞ்சாபில் ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. ஜீலம், செனாப் ஆகியவை பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாய்கின்றன.

பஞ்சாப் மாநிலம்
State of Punjab
ਪੰਜਾਬ
ஐந்து ஆறுகளின் நிலம்

சின்னம்
அடைபெயர்(கள்): ஐந்து ஆறுகளின் நிலப்பரப்பு
இந்தியாவில் பஞ்சாபின் அமைவிடம்
இந்தியாவில் பஞ்சாபின் அமைவிடம்
பஞ்சாபின் நிலவரை
பஞ்சாபின் நிலவரை
நாடுஇந்தியா
உருவாக்கம்1 நவம்பர் 1966 (1966-11-01)
தலைநகர்சண்டிகர்
பெரிய நகரம்லூதியானா
மாவட்டங்கள்22
அரசு
 • ஆளுநர்பன்வாரிலால் புரோகித்
 • முதலமைச்சர்பகவந்த் மான்
 • சட்டமன்றம்ஓரவை முறைமை (117 தொகுதிகள்)
 • மக்களவை13
 • உயர் நீதிமன்றம்பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்50,362 km2 (19,445 sq mi)
 • பரப்பளவு தரவரிசை20-ஆவது
உயர் புள்ளி
550 m (1,800 ft)
தாழ் புள்ளி
150 m (490 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்2,77,04,236
 • தரவரிசை16-ஆவது
 • அடர்த்தி550/km2 (1,400/sq mi)
மொழிகள்
 • அதிகாரபூர்வமானவைபஞ்சாபி
 • ஏனையவைஇந்தி, ஆங்கிலம்
 • பிராந்திய மொழிகள்மாஜி, மால்வாய், தோக்ரி, பாக்ரி
நேர வலயம்ஒசநே+05:30 (இ.சீ.நே.)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-PB
ம.மே.சு.Increase 0.679 (medium)
ம.மே.சு. தரம்9-ஆவது (2005)
படிப்பறிவு76.68%
இணையதளம்பஞ்சாப் அரசு
^† அரியானாவுடன் இணைந்த தலைநகரம்
சின்னங்கள்
சின்னம்அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி
மொழிபஞ்சாபி
நடனம்பாங்கரா, கித்தா
விலங்குபுல்வாய்
பறவைபாசு[2]
மரம்தாலி
ஆறுசிந்து
விளையாட்டுகபடி (வட்டவகை)

பண்டைய காலத்தில், பஞ்சாப் பகுதி என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு, இன்றைய இந்திய பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், அரியானா மாநிலம், இமாச்சல பிரதேசம், டெல்லி, ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்றைய பஞ்சாப் மாநிலம் 1966-ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்டது. பஞ்சாபின் அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டவையே.

வேளாண்மை பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை தொழிலாக இருந்துவருகிறது. பஞ்சாப், இந்தியாவின் மிகச் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.[3] பஞ்சாபில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மற்ற இந்திய மாநிலங்களைவிட மிகக்குறைவாக இருந்துவருகிறது. 1999–2000 கணக்கெடுப்பின்படி, சுமார் 6.16 விழுக்காடு மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

வேளாண்மை பஞ்சாபின் மிகப்பெரும் தொழிலாக விளங்குகின்றது.[4] அறிவியல் கருவிகள், வேளாண்மைக்கான கருவிகள், மின்னியல் கருவிகள் தயாரிப்பும் நிதிச் சேவைகள், பொறிக்கருவிகள், துணி, தையல் இயந்திரம், விளையாட்டுப் பொருட்கள், மாப்பொருள், சுற்றுலா, உரம், மிதிவண்டி, உடை தொழிலகங்களும் பைன் எண்ணெய் மற்றும் சீனி பதன்செய் தொழில்களும் மற்ற முதன்மையான தொழில்களாக உள்ளன. இந்தியாவிலுள்ள எஃகு உருட்டாலைகளில் பெரும்பான்மை பஞ்சாபில் உள்ளன; இவை பதேகாட் சாகிபு மாவட்டத்தில் "எஃகு நகரம்" எனப்படும் மண்டி கோபிந்த்கரில் அமைந்துள்ளன.

சொற்தோற்றம்

தொகு

"பஞ்சாப்" என்ற பாரசீக மொழி சொல், 'பஞ்' (پنج) = 'ஐந்து', 'ஆப்' (آب) = நீர், என்று பிரிக்கப்பட்டு ஐந்து ஆறுகள் பாயும் பகுதி என்று பொருள் தரும். இவ்வைந்து ஆறுகளாவன: ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சத்லஜ்

புவியியல்

தொகு

பஞ்சாப் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது. இதன் பரப்பளவு 50,362 சதுர கிலோமீட்டர்கள் (19,445 sq mi) ஆகும். நிலநேர்க்கோடுகள் 29.30° வடக்கிலிருந்து 32.32° வடக்கு வரையும் நிலநிரைக்கோடுகள் 73.55° கிழக்கு முதல் 76.50° கிழக்கு வரையும் பரவியுள்ளது. மேற்கில் பாக்கித்தானும் வடக்கில் சம்மு காசுமீரும், வடகிழக்கில் இமாச்சலப் பிரதேசமும் தெற்கில் அரியானாவும் இராசத்தானும் அமைந்துள்ளன.

பல ஆறுகள் பாய்வதால், பஞ்சாபின் பெரும்பகுதி வளமிக்க வண்டல் மண் கொண்டுள்ளது. சிறப்பான நீர்ப்பாசன கால்வாய்கள் அமைப்பையும் கொண்டுள்ளது.[5] பொதுவாக வரண்ட வானிலையை கொண்டிருப்பினும், மிகச் சிறந்த நீர்பாசன கட்டமைப்பினை கொண்டிருப்பதாலும், வளமிக்க மூன்று ஆறுகள் பாய்வதாலும், வேளாண்மையில் சிறந்து விளங்குகிறது.

வடகிழக்கு பகுதியில் இமய மலையின் அடிவாரத்தில் ஏற்றயிறக்கமான மலைக்குன்றுகள் உள்ளன. இதன் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 300 மீட்டர்கள் (980 அடி) ஆகும்; தென்மேற்கில் இது 180 மீட்டர்கள் (590 அடி) ஆகவும் வடகிழக்கில் 500 மீட்டர்கள் (1,600 அடி)க்கும் கூடுதலாகவும் உள்ளது. தென்மேற்குப் பகுதி பகுதிவறள் வட்டாரமாகும்; இறுதியில் தார்ப் பாலைவனத்துடன் இணைகிறது. வடகிழக்கு பகுதியில் சிவாலிக் மலை பரவியுள்ளது.

பஞ்சாபின் வெவ்வேறு பகுதிகளில் மண்வளம் அங்குள்ள நிலவியல், தாவரங்கள், பாறையமைப்பைப் பொறுத்து மாறுகின்றது. பஞ்சாப் பகுதியின் தட்பவெட்பம், பருவ நிலைக்கு தக்கவாறு, -5 °C இருந்து 47 °C வரை நிலவுகிறது. வட்டார வானிலை வேறுபாடுகளால் இவ்வாறான மண்ணின் பண்புகள் மிகவும் வேறுபடுகின்றன. பஞ்சாபை மூன்று வேறுபட்ட வட்டாரங்களாக, மண்வளத்தைக் கொண்டு, பிரிக்கலாம்: தென்மேற்கு, நடுவம், கிழக்கு

பஞ்சாப் நிலநடுக்க அபாய மண்டலங்கள் II, III, IV கீழ் வருகின்றது. மண்டலம் II குறைந்த தீவாய்ப்புள்ள மண்டலமாகும்; மண்டலம் III மிதமான தீவாய்ப்புள்ள மண்டலமாகவும் மண்டலம் IV உயர்ந்த தீவாய்ப்புள்ள மண்டலமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.[6]

வானிலை

தொகு
 
பருவமழையின்போது பஞ்சாபி விளைநிலங்கள்

பஞ்சாபின் புவியியலாலும் அயன அயல் மண்டல அமைவிடத்தாலும் இங்கு மாதத்திற்கு மாதம் வேறுபடும் வானிலை நிலவுகின்றது. குளிர்காலத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே வெப்பநிலை 0 °C (32 °F)க்கு கீழே சென்றபோதும் நிலமட்ட பனிப்புகை பஞ்சாபின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. வெப்பநிலை உயரும்போது ஈரப்பதமும் உயர்கின்றது. இருப்பினும் மேகமூட்டம் இல்லாத காலங்களில் ஈரப்பதம் குறைந்துள்ளபோது வெப்பநிலை மிகவிரைவாக மேலேறுகின்றது.[7]

மே மாத நடுவிலிருந்து சூன் வரை மிக உயரிய வெப்பநிலை நிலவுகின்றது. வெப்பநிலை 40 °C (104 °F)க்கும் கூடுதலாக உள்ளது. லூதியானாவில் மிக உயர்ந்த வெப்பநிலையாக 46.1 °C (115.0 °F)உம் பட்டியாலா, அமிருதசரசில் மிக உயர்ந்த வெப்பநிலையாக 45.5 °C (113.9 °F)உம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சனவரியில் மிகக் குறைந்த வெப்பநிலை காணப்படுகின்றது. சூரியரேகைகள் மிகச் சாய்ந்திருப்பதால் குளிர்காற்று வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றது.[7]

திசம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலம் நிலவுகின்றது. மிகக் குறைந்த வெப்பநிலையாக அமிருதசரசில் (0.2 °C (32.4 °F))உம் லூதியானாவில் 0.5 °C (32.9 °F)உம் பதிவு செய்யப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் இரண்டு மாதங்களுக்கு குறைந்த வெப்பநிலை 5 °C (41 °F) கீழுள்ளது. சனவரி, பெப்ரவரியின் மிக உயரிய வெப்பநிலை சூன் மாதத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையை விடக் குறைவாகும். பஞ்சாபின் ஆண்டு சராசரி வெப்பநிலை ஏறத்தாழ 21 °C (70 °F) ஆகும்.[7]

வரலாறு

தொகு

பண்டைய வரலாறு

தொகு

இந்துமத காப்பியம் மகாபாரதம் எழுதப்பட்ட பொ.ஊ.மு. 800–400 காலகட்டத்தில் பஞ்சாப் திரிகர்த்த நாடு என அறியப்படது; இதனை கடோச் அரசர்கள் ஆண்டு வந்தனர்.[8][9] சிந்துவெளி நாகரிகம் பஞ்சாப் பகுதியின் பல பகுதிகளில் பரவியிருந்தது; இவற்றின் தொல்லியல் எச்சங்களை ரூப்நகர் போன்ற நகரங்களில் காணலாம். சரசுவதி ஆறு பாய்ந்த பஞ்சாப் உட்பட பெரும்பாலான வட இந்தியா வேத காலத்தில் குறிப்பிடப்படுகின்றது. செழுமையான பஞ்சாப் பகுதி பல பண்டைய பேரரசுகளால் ஆளப்பட்டு வந்துள்ளது; இதனை காந்தார அரசர்கள், நந்தர்கள், மௌரியர்கள், சுங்கர், குசான்கள், குப்தர்கள், பாலர்கள், கூர்ஜரர்கள், காபூல் சாகிகள் ஆண்டுள்ளனர். அலெக்சாந்தரின் கிழக்கத்திய தேடுதல் சிந்து ஆற்றுக்கரைவரை நீண்டுள்ளது. வேளாண்மை வளர்ச்சியடைந்து ஜலந்தர், சங்குரூர், லூதியானா போன்ற வணிகமாற்று நகரங்கள் செல்வச் செழிப்படைந்தன.

இதன் புவியியல் அமைப்பின் காரணமாக, பஞ்சாப் பகுதி மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் தொடர்ந்த தாக்குதல்களை சந்தித்த வண்ணம் இருந்துள்ளது. அகாமனிசியர்கள், கிரேக்கர்கள், சிதியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஆப்கானியர்கள் பஞ்சாபை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் நூற்றாண்டுகளாக இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. இவற்றின் தாக்கங்களால் பஞ்சாபியப் பண்பாடு இந்து, புத்தம், இசுலாம், சீக்கியம், பிரித்தானியக் கூறுகளை உள்ளடக்கி உள்ளது.

பஞ்சாபில் சீக்கியர்கள்

தொகு
 
1844-இல் தலைப்பாகை அணிந்த சீக்கிய சிப்பாய்கள்

பாபர் வட இந்தியாவை வென்ற நேரத்தில் சீக்கியமும் வேர் விட்டது. அவரது பெயரர், அக்பர், சமய விடுதலையை ஆதரித்தார். குரு அமர்தாசின் லங்கர் எனும் சமுதாய உணவகத்தைக் கண்டு சீக்கியத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தார். லங்கருக்கு நிலம் கொடையளித்ததுடன் சீக்கிய குருக்களுடன் 1605-இல் தமது மரணம் வரை இனிய உறவு கொண்டிருந்தார்.[10] ஆனால் அடுத்துவந்த ஜஹாங்கீர், சீக்கியர்களை அரசியல் அச்சுறுத்தலாகக் கருதினார். குஸ்ரூ மிர்சாவிற்கு ஆதரவளித்ததால் குரு அர்ஜன் தேவை கைது செய்து[11] சித்திரவதைக்குட்படுத்தி கொல்ல ஆணையிட்டார். அர்ஜன் தேவின் உயிர்க்கொடை ஆறாவது குரு, குரு அர்கோவிந்த் சீக்கிய இறைமையை அறிவிக்கச் செய்தது; அகால் தக்த்தை உருவாக்கி அமிருதசரசை காக்க கோட்டையும் கட்டினார்.[12]

குரு அர்கோவிந்தை குவாலியரில் கைது செய்த சகாங்கீர் பின்னர் விடுவித்தார். குரு தன்னுடன் கைது செய்யப்பட்டிருந்த மற்ற இந்து இளவரசர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என கோரியதால் அவர்களையும் விடுவித்தார். 1627-இல் சகாங்கீர் இறக்கும் வரை சீக்கியர்களுக்கு முகலாயர்களிடமிருந்து எவ்வித பிரச்சினையும் இல்லாதிருந்தது. அடுத்த மொகலாயப் பேரரசர் ஷாஜகான் சீக்கிய இறையாண்மையை "எதிர்த்து" சீக்கியர்களுடன் போரிட்டு அவர்களை சிவாலிக் மலைக்குப் பின்வாங்கச் செய்தார்.[12] அடுத்து சீக்கிய குருவான குரு ஹர் ராய் சிவாலிக் மலையில் தமது நிலையை உறுதிபடுத்திக் கொண்டார். ஔரங்கசீப்பிற்கும் தாரா சிக்கோவிற்கும் இடையே நடந்த அதிகாரப் போட்டியில் நடுநிலை வகித்தார். ஒன்பதாவது குரு, குரு தேக் பகதூர், சீக்கிய சமூகத்தை அனந்த்பூருக்கு கொண்டு சென்றார். பரவலாக பயணம் செய்துமொகலாயரின் தடையை எதிர்த்து சீக்கியக் கொள்கைகளை பரப்பினார். காஷ்மீர பண்டிதர்கள் இசுலாமிற்கு மாறுவதைத் தடுக்க தாமே கைதானார்; சமயம் மாற மறுத்ததால் சிறையிலேயே உயிர் நீத்தார்.[13] 1675இல் பொறுப்பேற்ற குரு கோவிந்த் சிங் பவன்டாவிற்கு தமது குருமடத்தை மாற்றினார். அங்கு பெரிய கோட்டையைக் கட்டினார். சீக்கியர்களின் படை வலிமை சிவாலிக் இராசாக்களுக்கு அச்சமூட்ட அவர்கள் சீக்கியர்களுடன் போரிட்டனர்; ஆனால் இதில் குருவின் படைகள் வென்றனர். குரு அனந்த்பூருக்கு மாறி அங்கு மார்ச் 30, 1699-இல் கால்சாவை நிறுவினார்.[14] 1701-இல் மொகலாயப் பேரரசும் சிவாலிக் இராசாக்களும் இணைந்து வாசிர் கான் தலைமையில் அனந்த்பூரைத் தாக்கினர். முக்த்சர் சண்டையில் கால்சாவிடம் தோற்றனர்.

சிசு-சத்துலுச்சு நாடுகள்

தொகு

தற்கால பஞ்சாப், அரியானாவில் சத்துலச்சு ஆற்றை வடக்கிலும் இமய மலையை கிழக்கிலும் யமுனா ஆறு, தில்லியைத் தெற்கிலும் சிர்சா மாவட்டத்தை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்ட நாடுகளின் குழு சிசு-சத்துலுச்சு எனப்படுகின்றது. இந்த நாடுகளை மராட்டியப் பேரரசின் சிந்தியா வம்சத்தினர் ஆண்டு வந்தனர். 1803-1805இல் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் வரை இப்பகுதியின் சிற்றரசர்களும் அரசர்களும் மராத்தியர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர்.[15] சிசு-சத்துலுசு நாடுகள் கைத்தல், பட்டியாலா, ஜிந்து, தானேசர், மாலேர் கோட்லா, பரீத்கோட் ஆகும்.

சீக்கியப் பேரரசு

தொகு
 
சீக்கியப் பேரரசு
 
மகாராசா ரஞ்சித்சிங் அவையில் அனைத்து சமய மக்களும் இடம் பெற்றிருத்தல்
 
அமிர்தசரசின் பொற்கோவிலருகே கிரந்த் சாகிப் ஓதப்படுவதை கேட்கும் மகாராசா இரஞ்சித் சிங்

1801–1849 காலகட்டத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கால்சா கட்டைமைப்பினைப் பயன்படுத்தி, சீக்கிய சிற்றரசுகளை ஒன்றிணைத்து மகாராசா இரஞ்சித் சிங் சீக்கியப் பேரரசை நிறுவினார். இந்தப் பேரரசு மேற்கில் கைபர் கணவாய், வடக்கில் காசுமீர், தெற்கில் சிந்து மாகாணம், கிழக்கில் திபெத்து வரைப் பரவியிருந்தது. இப்பேரரசின் முதன்மையான புவியியல் அடித்தளமாக பஞ்சாப் பகுதி அமைந்திருந்தது. இந்தப் பேரரசின் மக்கள்தொகையில் 70% முசுலிம்களும் 17% சீக்கியர்களும் 13% இந்துக்களும் இருந்தனர்.[16] தமது படைகளை நவீனப்படுத்தினார்; ஐரோப்பிய படைத்துறை அதிகாரிகளை நியமித்து நவீனப் போர்முறைகளில் பயிற்றுவித்தார். துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு முதன்மையான படையாக மாற்றினார்.[17][18]

ஆனால் 1839இல் இரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு உள்நாட்டுக் குழப்பங்களால் பேரரசு பலமிழந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பிரித்தானியப் பேரரசு ஆங்கிலேய-சீக்கியப் போரைத் தொடுத்தனர். படைத்துறையின் தலைமையால் ஏமாற்றப்பட்டு சீக்கியப் பேர்ரசு பிரித்தானியர்களிடம் தோல்வியைத் தழுவியது.[19][20]

1849இல் மீண்டும் நடந்த இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் தோற்கடிக்கப்பட்டு தனித்தனி மன்னராட்சிகள் நிறுவப்பட்டன; பிரித்தானிய மாகாணமாக பஞ்சாப் நிறுவப்பட்டது. பிரித்தானிய அரசியின் நேரடி சார்பாளராக ஆளுநர் இலாகூரில் நியமிக்கப்பட்டார்.

பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)

தொகு
 
பிரித்தானிய பஞ்சாப் மாகாணம், 1947க்கு முன்னர்

சிசு-சத்துலச்சு அரசுகள் மராத்தியப் பேரரசின் சிந்தியா மரபுவழியினரால் ஆளப்பட்டு வந்தன. இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் மராத்தியர்கள் தோல்வியடைய இந்தப் பகுதி பிரித்தானியர்களின் கைவசம் வந்தது. 1809இல் இரஞ்சித் சிங்குடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்த சிற்றரசுகள் முறையான பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் வந்தன.[15][21][22]

இரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு நிகழ்ந்த முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போரில் சீக்கியர்கள் தோல்வியுற்றனர். போருக்கான நட்டயீடாக சத்துலச்சு ஆற்றிற்கும் பியாஸ் ஆற்றுக்கும் இடையேயான பகுதியும் காசுமீரும் பிரித்தானிய கம்பெனி ஆட்சிக்கு வழங்கப்பட்டன; இதில் காசுமீரை சம்முவை பிரித்தானியரின் கைப்பொம்மையாக ஆண்டுவந்த குலாப் சிங் விலைக்கு வாங்கிக் கொண்டு சம்மு & காசுமீர் அரசராக முடிசூட்டிக் கொண்டார்.

மீண்டும் சீக்கியர் தங்களை மீளமைத்துக் கொண்டு போரிட்ட இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போரில் மீண்டும் தோல்வியுற 1849 இலாகூர் உடன்பாட்டின்படி சீக்கிய அரசர் துலீப் சிங்கிற்கு ஓய்வூதியம் தந்து பஞ்சாபை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் எடுத்துக் கொண்டது. பஞ்சாப் பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாயிற்று; பட்டியாலா, கபூர்தலா, பரீத்கோட், நாபா, ஜிந்த் போன்ற சிறிய அரசுகள் lபிரித்தானியருடன் துணைப்படைத் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் இறைமையைக் கொண்டு அதேநேரம் பிரித்தானிய பாதுகாப்பை ஏற்றனர்.[23]

1919இல் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தது. 1930இல் இந்திய தேசிய காங்கிரசு இலாகூரில் விடுதலையை அறிவித்தது. மார்ச் 1940இல் அகில இந்திய முசுலிம் லீக் பாக்கித்தான் முன்மொழிவை முன்வைத்து முசுலிம் பெரும்பான்மையான பகுதிகளை பிரித்து தனி நாடாக அறிவிக்கக் கோரிக்கை எழுப்பியது. பஞ்சாபில் வன்முறைப் போராட்டங்கள் நடந்து வந்தன.[24]

1946இல் பெரும் சமயஞ்சார்ந்த வன்முறை வெடித்தது; பஞ்சாபின் பெரும்பான்மை முசுலிம்களுக்கும் இந்து, சீக்கியர்களுக்கும் இடையே கலகம் மூண்டது. காங்கிரசும் முசுலிம் லீக்கும் பஞ்சாபை சமய அடிப்படையில் பிரிக்க உடன்பட்டனர்.[25]

விடுதலைக்குப் பின்னர்

தொகு

1947இல் பஞ்சாப் மாகாணம் சமய அடிப்படையில் மேற்கு பஞ்சாப், கிழக்கு பஞ்சாப் என பிரிக்கப்பட்டது. பெருந்தொகையான மக்கள் இடம் பெயர்ந்தனர்; செல்லும் வழியிலும் சமயச் சண்டைகள் நடந்தவண்ணம் இருந்தது. சிறிய பஞ்சாபி சிற்றரசுகள், பட்டியாலா அரசரின் வழிகாட்டுதலில், இந்திய ஒன்றியத்துடன் இணைந்தன. இவற்றை அடக்கிய புதிய மாநிலமாக பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் உருவானது. 1956இல் இது கிழக்கு பஞ்சாபுடன் இணைக்கப்பட்டு புதிய விரிவான பஞ்சாப் மாநிலம் உருவானது.

1950இல் இந்திய அரசியலமைப்பு இரு மாநிலங்களை அங்கீகரித்தது: முந்தைய பிரித்தானிய பஞ்சாப் மாகாணத்தின் இந்தியப் பகுதி கிழக்கு பஞ்சாப், முன்னாள் மன்னராட்சி அரசுகள் இணைந்த பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் (PEPSU). மலைநாட்டில் இருந்த பல மன்னராட்சிகளை ஒருங்கிணைத்து இமாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

தற்போதைய பஞ்சாப் உருவாக்கம்

தொகு
 
பஞ்சாப் மாநிலத்தின் ஆட்பகுதி நிலைபடுத்தப் படுதல். 1951 முதல் எல்லைகள் மாற்றப்படவில்லை.

பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரமான இலாகூர் பாக்கித்தானுக்குக் கொடுக்கப்பட்டு விட்டதால் இந்திய பஞ்சாபிற்கு புதிய தலைநகரமாக சண்டிகர் கட்டமைக்கப்பட்டது. இந்த நகரம் கட்டி முடிக்கப்படும்வரை, 1960, சிம்லா தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. 1956இல் பெப்சு மாநிலம் பஞ்சாபில் இணைக்கப்பட்டு கிழக்கு பஞ்சாப் என்ற பெயரிலிருந்து பஞ்சாப் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

அகாலி தளமும் பிற சீக்கிய அமைப்புக்களும் பல்லாண்டுகளாக போராடி 1966இல் மொழிவாரியாக கிழக்கு பஞ்சாப் பிரிக்கப்பட்டது. இந்தி பேசிய தெற்கு பஞ்சாப் தனி மாநிலமாக, அரியானா எனவும் வடக்கிலிருந்து பகாரி எனப்படும் மலைநாட்டு மொழி பேசிய மலைப்பகுதிகள் இமாச்சலப் பிரதேசம் எனவும் உருவாயின. சண்டிகர் பஞ்சாபிற்கும் அரியானாவிற்கும் எல்லையாக, தனி ஒன்றியப் பகுதியானது. பஞ்சாபிற்கும் அரியானாவிற்கும் பொதுத் தலைநகரமாக சண்டிகர் விளங்கியது.

1970களில், பசுமைப் புரட்சி பஞ்சாபிற்கு பொருளியல் வளமையைக் கொணர்ந்தது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 27,743,338 ஆக உள்ளது. நகர்புறங்களில் 62.52% மக்களும், கிராமப்புறங்களில் 37.48% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 13.89% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 14,639,465 ஆண்களும் மற்றும் 13,103,873 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். 50,362 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 551 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 75.84 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.44 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.73 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,076,219 ஆக உள்ளது. [26]

பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்

தொகு

பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினர் இல்லாத இரண்டு இந்திய மாநிலங்களில் பஞ்சாப் மாநிலமும் ஒன்று. மற்றொன்று அரியானா மாநிலம் ஆகும்.

பட்டியல் சாதியினர்

தொகு

இந்திய மாநிலங்களில், பஞ்சாப் மாநிலத்தில் தான் அதிக விழுக்காட்டுடன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாழ்கின்றனர்.[27] பஞ்சாப் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையான 2.77 கோடியில்[28], இந்து மற்றும் சீக்கிய சமயம் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் மக்கள் தொகை 88.60 இலட்சமாக ஆக உள்ளது. இது பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 31.91% விழுக்காடாகும்.[29]

சமூக வாரியான மக்கள் தொகை

தொகு



 

பஞ்சாபிலுள்ள சமயங்கள், இந்தியா (2011)

  பிறர் அல்லது இறைமறுப்பு (0.60%)

பஞ்சாபில் முன்னேறிய வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்களின் மக்கள தொகை விவரம்:

பஞ்சாபில் சமூக அமைப்புகள்
சாதி மக்கள் தொகை (%) குறிப்பு
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 22%[30][31] சைனிகள், காம்போஜர்கள், லோபனாக்கள், இராம்காரியர்கள், அரையன்கள், குர்ஜர்கள், தெலிகள், பஞ்சரர்கள் மற்றும் லொகர்கள் உட்பட[32]
பட்டியல் சமூகத்தினர் 31.94%[33] மசாபி சீக்கியர்கள் -10%, சாமர்கள், - 13.1%, வால்மீகள் - 3.5%, பாசிகர்கள், - 1.05%, பிறர் - 4% உட்பட[34]
முன்னேறிய சமூகத்தினர் 41% ஜாட் சீக்கியர்கள் - 21%,[35] வேதியர்கள், கத்ரிகள், தாக்குர்கள், இராஜபுத்திரர்கள் மற்றும் பனியா சமூகத்தினர் உட்பட
பிறர் 3.8%[36] இசுலாமியர், கிறித்தவர், பௌத்தர் மற்றும் சமணர் உட்பட

சமயம்

தொகு
 
(பொற்கோவில்) அம்ரித்சர்

இம்மாநிலத்தில் சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 16,004,754 (57.69 %)ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 10,678,138 (38.49 %) இசுலாமிய சமய மக்கள் தொகை 535,489 (1.93 %)ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 348,230 (1.26 %)ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை ஆகவும், சமண சமய மக்கள் தொகை 45,040 (0.16 %)ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 33,237 (0.12 %)ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 10,886 (0.04 %)ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 87,564 (0.32 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான குர்முகி முறையில் எழுதப்படும் பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மொழிகள் பேசப்படுகிறது.

சீக்கியம்

தொகு

சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவில், பஞ்சாப்பில் உள்ள அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. சீக்கியம் பஞ்சாபின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளமையால், சீக்கிய குருத்துவாராக்களை பஞ்சாப்பில் எங்கும் காணலாம். பண்டைய பஞ்சாப்பில், மதபேதமின்றி அனைவரும் தலைப்பாகை அணிந்து வந்திருந்தாலும், காலப்போக்கில், இவ்வழக்கம் மறைந்து, தற்காலத்தில், சீக்கியர்கள் மட்டுமே தலைப்பாகை அணிகின்றனர்.

அமிருதசரசு நகரில் சீக்கியர்களின் வழிபாட்டிடங்களில் மிகவும் புனிதமான சிறீ அர்மந்திர் சாகிபு (அல்லது பொற்கோயில்) கோயிலும் சீக்கியர்களின் மிக உயர்ந்த சமய அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவும் உள்ளன. பொற்கோயிலின் வளாகத்தினுள் இருக்கும் அகால் தக்த், சீக்கியர்களின் மீயுயர் உலகியல் இருக்கையாகும். சீக்கியத்தின் ஐந்து உலகியல் இருக்கைகளில் (தக்த்) மூன்று பஞ்சாபில் உள்ளன. அவை சிறீ அகால் தக்த் சாகிபு, தம்தமா சாகிபு மற்றும் அனந்த்பூர் சாஹிப் ஆகும். வைசாக்கி, ஒலா மொகல்லா, குருபர்ப், தீபாவளி போன்ற விடுமுறை நாட்களில் தங்கள் நகரம், ஊர், சிற்றூர்களில் அனைவரும் இணைந்து பேரணியாகச் செல்கின்றனர். மாநிலத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் ஒரு குருத்துவாராவது இருக்கும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பஞ்சாப் மாநிலத்திலுள்ள மக்கள்தொகையில் 57.69% விழுக்காடு சீக்கியர்களாகும்.[37]

உட்பிரிவுகள்

தொகு
 
2007க்கு முன்பாக இருந்த மாவட்டங்களும் அதன் தலைநகரங்களும்

பஞ்சாபின் நிலப்பகுதியை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்:

பஞ்சாப் மாவட்டங்கள்

தொகு

பஞ்சாப் மாநிலத்தில் 22 மாவட்டங்களும் 22 பெரு நகரங்களும், 157 நகரங்களும் உள்ளன.

கோட்டங்கள்: பஞ்சாபில் ஐந்து கோட்டங்கள் உள்ளன. இவை பட்டியாலா, ரூப்நகர், ஜலந்தர், பரித்கோட், ஃபிரோஸ்பூர் ஆகும்.

வட்டங்கள் : 82 (2015இல்)

உள்வட்டங்கள் : 87

மவுர் என்பது கடைசியில் உருவான வட்டமாகும்; இது பட்டிண்டா மாவட்டத்தில் உள்ளது. சிராக்பூர் கடைசியாக உருவான உள்வட்டமாகும்; இது மொகாலி மாவட்டத்தில் உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாக இந்திய ஒன்றியப் பகுதியான சண்டிகர் உள்ளது. இதனை அரியானா மாநிலத்துடன் பங்கிட்டுக் கொண்டுள்ளது. சண்டிகர் அரியானாவின் தலைநகரமுமாகும். பஞ்சாபில் 22 நகரங்களும் 157 ஊர்களும் உள்ளன. முதன்மை நகரங்களாக லூதியானா, அமிருதசரசு, ஜலந்தர், பட்டியாலா, பட்டிண்டா, எஸ்ஏஎஸ் நகர் (மொகாலி) உள்ளன.

கல்வி

தொகு

துவக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் பஞ்சாப் பள்ளிக்கல்வி வாரியத்தால் ஒன்றிணைக்கப்படுகின்றது. உயர் கல்விக்கு 32 பல்கலைகழகங்கள் கலை, மாந்தவியல், அறிவியல், பொறியியல், சட்டம், மருந்தியல், கால்நடை மருத்துவம், வணிக மேலாண்மை ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிபுக்களை வழங்கி வருகின்றன. இவற்றில் 11 அரசு பல்கலைக்கழகங்களாகும். பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் உலக புகழ் பெற்றது. அதுவே, 1960–1970 களில் நடந்த பஞ்சாப்பின் பசுமை புரட்சிக்கு பெரும் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்களில் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உயிர்வேதியியலில் நோபல் பரிசு பெற்ற முனைவர். ஹர் கோவிந்த் கொரானா ஆகியோர் உள்ளனர்.

1894இல் நிறுவப்பட்ட கிருத்தவ மருத்துவக் கல்லூரி, லூதியானா நாட்டின் தொன்மையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது.[38] கல்வியில் பாலின இடைவெளி உள்ளது; ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பத்து இலட்சம் முப்பதாயிரம் மாணவர்களில் 44% மடுமே பெண்களாவர்.[39]

பண்பாடு

தொகு
 
பண்பாட்டு நிகழ்வொன்றில் பெண்கள்

பஞ்சாபிப் பண்பாட்டில் பல கூறுகள் உள்ளன: பாங்கரா போன்ற இசை, விரிவான சமய மற்றும் சமயசார்பற்ற நடன மரபுகள், பஞ்சாபி மொழியில் நீண்ட இலக்கிய வரலாறு, பிரிவினைக்கு முன்பிருந்தே குறிப்பிடத்தக்க அளவிலான பஞ்சாபித் திரைப்படத்துறை, வெளிநாடுகள் வரை புகழ்பெற்றுள்ள பல்வகைப்பட்ட உணவுகள், மற்றும் உலோகிரி,[40] வசந்தப் பட்டத் திருவிழா, வைசாக்கி, தீயான் (ஊஞ்சல்),[41][42][43] போன்ற பல பருவஞ்சார் அறுவடை திருவிழாக்கள் என்பனவாகும்.

கிஸ்ஸா எனப்படும் பஞ்சாபி மொழி வாய்வழி கதைகள் அராபியத் தீபகற்பத்தில் தொடங்கி ஈரான், ஆப்கானித்தான் வழியே வந்தவையாகும்.[44]

 
பஞ்சாபி ஜூத்தி

பஞ்சாபி திருமணச் சடங்குகளும் மரபுகளும் பஞ்சாபிப் பண்பாட்டை பிரதிபலிக்கின்றன; திருமணங்களில் சடங்குகள், பாட்டுக்கள், நடனங்கள், உணவு, உடை, என நூற்றாண்டுகளாக பரிணமித்த பண்பாட்டின் எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன.[45][46]

வணிகம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு

தொகு

பஞ்சாப் இந்தியாவின் மிகச்சிறந்த அடிப்படை கட்டமைப்பினை கொண்ட மாநிலங்களில் ஒன்று[47]. இந்திய தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழு தனது தரவரிசையில் இந்தியாவின் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளது.[3] நாட்டில் தனிநபர் மின்சார உற்பத்தியில் மற்ற இந்திய மாநிலங்களை விட சுமார் 2.5 மடங்கு அதிகம்பெற்று பஞ்சாப் முதன்மை வகிக்கிறது. இதன் காரணமாக, பஞ்சாப்பின் எல்லா முக்கிய நகரங்களிலும், மின் கட்டணம் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • சாலைகளின் மொத்த நீளம் 47,605 கிலோமீட்டர்.
  • அனைத்து நகரங்களும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன.
  • தேசிய நெடுஞ்சாலை நீளம்: 1000 கிலோமீட்டர்.
  • மாநிலம் நெடுஞ்சாலை நீளம்: 2166 கிலோமீட்டர்
  • முக்கிய மாவட்ட சாலைகள்: 1799 கிலோமீட்டர்.
  • ஏனைய மாவட்டம் சாலைகள்: 3340 கிலோமீட்டர்.
  • இணைப்பு சாலைகள்: 31657 கிலோமீட்டர்

சுற்றுலா

தொகு
 
பட்டியாலாவிலுள்ள மோதிபாக் அரண்மனை
 
புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் மொகிந்தரா கல்லூரி, பட்டியாலா.
 
அமிருதசரசில் உள்ள பொற்கோயில் முதன்மையான சுற்றுலா இடமாகும்

பஞ்சாப்பின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்று. பஞ்சாப்பின் சுற்றுலாத்துறை அம்மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழம்பெருமை, வரலாறு ஆகியவற்றை பறைசாற்றும் சின்னங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.[48] எடுத்துக்காட்டாக சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள, பட்டிண்டாவின் பழமையான கோட்டை, கபுர்த்தலா, பட்டியாலாவின் சீக்கியக் கட்டிடக்கலைச் சிறப்பு, லெ கொபூசியே வடிவமைத்த தற்காலத் தலைநகரம் சண்டிகர் ஆகியன.[49]

அமிருதசரசிலுள்ள பொற்கோயில் ஓர் முதன்மையான சுற்றுலா இடமாகும். இந்தியாவிற்கு தாஜ் மகால் காண வருவோரை விட இங்கு வரவோரின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. லோன்லி பிளானட் 2008ஆம் ஆண்டு பொற்கோயிலை உலகின் மிகச்சிறந்த ஆன்மீக இடங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.[50] அமிருதசரசில் பன்னாட்டு தங்குவிடுதிகள் பல விரைவாக கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

மற்றுமொரு ஆன்மீக, வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடமாக அனந்த்பூர் சாஹிப் உள்ளது; இங்குள்ள விரசத்-இ-கால்சா (கால்சா பாரம்பரிய நினைவக வளாகம்) காணவும் ஹோலா மொகல்லா கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். லூதியானா அருகில் ராய்பூர் கோட்டையில் நடைபெறும் கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழாவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.[51][52][53]பட்டான்கோட்டில் சாபூர் கண்டி கோட்டை, ரஞ்சித் சாகர் ஏரி, முக்த்சர் கோயில் என்பன சுற்றுலா இடங்களாக உள்ளன. இந்திய - பாகிஸ்தான் எல்லைப்புற பாதுகாப்பு காவல் சாவடியான வாகாவில் அன்றாடம் நடைபெறும் இருநாட்டு கொடிகளை இராணுவ வீரர்கள் கம்பத்திலிருந்து இறக்கும் காட்சி விழா மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

போக்குவரத்து

தொகு

பஞ்சாப் சிறந்த போக்குவரத்துக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பேருந்து, தொடருந்து, முச்சக்கரவண்டிகள் என்பன பிரதான போக்குவரத்து வாகனங்களாகக் காணப்படுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆறு பொதுப்போக்குவரத்து வானூர்தி நிலையங்கள் உள்ளன.

வானூர்தி நிலையங்கள்

தொகு
 
ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம், அமிருதசரசு

அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மொகாலியிலுள்ள சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்பன இம்மாநிலத்திலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் ஆகும். பட்டிண்டா வானூர்தி நிலையம், பட்டான்கோட் வானூர்தி நிலையம், பட்டியாலா வானூர்தி நிலையம் மற்றும் சானேவல் வானூர்தி நிலையம் ஆகியவை ஏனைய வானூர்தி நிலையங்கள் ஆகும்.

தொடருந்து

தொகு

ஏறத்தாழ அனைத்துப் பெரிய மற்றும் சிறிய நகரங்களும் தொடருந்துப் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் அதிக தொடருந்துகள் கடந்து செல்லும் வழியாக அமிர்தசரஸ் சந்திப்பு விளங்குகிறது. சதாப்தி விரைவுவண்டி அமிர்தசரசை தில்லியுடன் இணைக்கிறது.

சாலைப் போக்குவரத்து

தொகு

மாநிலத்தின் அனைத்து நகரங்களும் நான்கு வழிச் சாலைகளான தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவை பெசாவருடன் இணைக்கும் பெரும் தலைநெடுஞ்சாலை பஞ்சாபின் ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ் ஊடாகச் செல்கின்றது.

விளையாட்டுக்கள்

தொகு
 
கபடி (வட்டப் பாணி)
 
இரவொளியில் பஞ்சாப் துடுப்பாட்ட அரங்கம், அசித்கர்

ஊரக பஞ்சாபில் தனது ஆரம்பத்தைக் கொண்ட கபடி (வட்டப் பாணி) அணி விளையாட்டு மாநில விளையாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[54][55] மாநிலத்தில் புகழ்பெற்ற மற்றுமொரு விளையாட்டு வளைதடிப் பந்தாட்டம் ஆகும்.[56] ஊரக ஒலிம்பிக்சு என பரவலாக அறியப்படும் கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா லூதியானா அருகிலுள்ள ராய்பூர் கோட்டையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. முதன்மையான பஞ்சாபி ஊரக விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன; வண்டிப் பந்தயங்கள், கயிறு இழுத்தல் போன்றவை இதில் இடம் பெறுகின்றன. பஞ்சாப் மாநில அரசு உலக கபடி கூட்டிணைவை நடத்துகின்றது.[57][58] தவிரவும் பஞ்சாப் விளையாட்டுக்கள், வட்டப்பாணி கபடிக்கான உலகக்கோப்பை போன்றவற்றையும் மாநில அரசு நடத்துகின்றது. 2014ம் ஆண்டு கபடிக் கோப்பை போட்டிகளில் அர்கெந்தீனா, கனடா, டென்மார்க், இங்கிலாந்து, இந்தியா, ஈரான், கென்யா, பாக்கித்தான், இசுக்கொட்லாந்து, சியேரா லியோனி, எசுப்பானியா, அமெரிக்க ஐக்கிய நாடு நாடுகளிலிருந்து அணிகள் பங்கேற்றன.

பஞ்சாபில் பல சிறப்பான விளையாட்டரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், குரு கோவிந்த்சிங் விளையாட்டரங்கம், குரு நானக் விளையாட்டரங்கம், பன்னாட்டு வளைத்தடிப் பந்தாட்ட அரங்கம், காந்தி விளையாட்டு வளாக திடல், சுர்சித்து வளைதடிப் பந்தாட்ட அரங்கம் அவற்றில் சிலவாம்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Census of India, 2011. Census Data Online, Population.
  2. "State Bird is BAAZ" இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714213412/http://www.dayandnightnews.com/2011/05/baaz-is-back-as-punjabs-state-bird/. 
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-18. பார்க்கப்பட்ட நாள் 2008-08-16.
  4. "Punjab". Overseas Indian Facilitation Centre. Archived from the original on 10 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.
  5. "State Profile – About Punjab". Punjabgovt.nic.in. Archived from the original on 2011-11-06. பார்க்கப்பட்ட நாள் 2010-07-18.
  6. Pragati Infosoft Pvt. Ltd. "Punjab Geography, Geography of Punjab, Punjab Location, Punjab Climate". Punjabonline.in. Archived from the original on 2012-01-03. பார்க்கப்பட்ட நாள் 2010-07-18.
  7. 7.0 7.1 7.2 "Weather & Climate Of Punjab". பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
  8. Bombay (India : State) (1896). Gazetteer of the Bombay Presidency …. Printed at the Government Central Press. பார்க்கப்பட்ட நாள் 18 January 2012.
  9. Gazetteer of the Bombay Presidency …, Volume 1, Part 1-page-11
  10. Kalsi 2005, ப. 106–107
  11. Markovits 2004, ப. 98
  12. 12.0 12.1 Jestice 2004, ப. 345–346
  13. Johar 1975, ப. 192–210
  14. Jestice 2004, ப. 312–313
  15. 15.0 15.1 A Comprehensive History of Medieval India: Twelfth to the Mid-Eighteenth Century.
  16. "Ranjit Singh: A Secular Sikh Sovereign by K.S. Duggal. ''(Date:1989. ISBN 81-7017-244-6'')". Exoticindiaart.com. 2009-02-01. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
  17. Encyclopædia Britannica Eleventh Edition, (Edition: Volume V22, Date: 1910–1911), Page 892.
  18. "MAHARAJAH RANJIT SINGH … – Online Information article about MAHARAJA RANJIT SINGH". Encyclopaedia.jrank.org. Archived from the original on 2010-01-10. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
  19. J. S. Grewal (1998). The Sikhs of the Punjab. Cambridge University Press.
  20. Maharaja Ranjit Singh, the last to lay arms, (Duggal,p.136-138)
  21. Chaurasia, R.S. History Of The Marathas. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  22. Aspects of India's International Relations, 1700 to 2000: South Asia and the …. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
  23. "According to a legend which finds mention on khalistan-affairs.org, in 1930, Maharaja Bhupinder Singh felt slighted at the British Rolls Royce company’s refusal to accept an order from him for a new Rolls Royce car.". http://www.tribuneindia.com/2004/20040516/spectrum/main6.htm. 
  24. Tan, Tai Yong; Kudaisya, Gyanesh (2002). The Aftermath of Partition in South Asia. Psychology Press. p. 100.
  25. "Ethnic cleansing and genocidal massacres 65 years ago by Ishtiaq Ahmed". Archived from the original on 2016-07-29. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
  26. http://www.census2011.co.in/census/state/punjab.html
  27. "Scheduled Castes List Of Punjab State". Archived from the original on 2016-08-03. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
  28. Punjab Population Census data 2011
  29. "Scheduled Caste Population In Punjab". Archived from the original on 2016-04-23. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
  30. "Although the OBC share in the country's population is about 41 per cent, in states like Punjab, the concentration of the OBC population is less than 25 per cent". Hindustantimes.com. பார்க்கப்பட்ட நாள் July 6, 2016.
  31. "Congress takes on Punjab CM for not implementing reservation policy in state". Punjabnewsexpress.com. Archived from the original on ஆகஸ்ட் 17, 2016. பார்க்கப்பட்ட நாள் July 6, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  32. "Common List of OBCs State PUNJAB". Punjabbackfinco.gov.in. Archived from the original on ஆகஸ்ட் 16, 2016. பார்க்கப்பட்ட நாள் July 6, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  33. "The highest SC population, 31.9 per cent of the state's total number, is in Punjab – Indian Express". Archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் July 6, 2016.
  34. "PUNJAB DATA HIGHLIGHTS: THE SCHEDULED CASTES" (PDF). Censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் July 6, 2016.
  35. "The Jats in Punjab comprise only 21 per cent population, yet they have been ruling and dominating politics in Punjab for decades – India Today". Indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் July 6, 2016.
  36. "Punjab Religion Data – Census 2011". Census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் July 6, 2016.
  37. Vibhor MohanVistateMohan, TNN (27 August 2015). "Census 2011: %age of Sikhs drops in Punjab; migration to blame?". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 September 2015.
  38. An Indian doctor’s triumph The Telegraph, 15 August 2005
  39. Ministry of Human Resource Development, G. o. (29 August 2013). Department of School Education and Literacy http://mhrd.gov.in/rashtriya_madhyamik_shiksha_abhiyan பரணிடப்பட்டது 2014-02-13 at the வந்தவழி இயந்திரம்
  40. "Harvest Festival of Punjab, Harvest Festival Lohri, Cultural Festival of India, Harvest Festival in India". Lohrifestival.org. பார்க்கப்பட்ட நாள் 2010-07-18.
  41. "Sikh festival celebrates women and girls" இம் மூலத்தில் இருந்து 2016-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160128115331/http://www.brantnews.com/news-story/5680153-sikh-festival-celebrates-women-and-girls/. 
  42. "Celebrate mothers again" இம் மூலத்தில் இருந்து 2016-05-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160506223144/http://www.kamloopsthisweek.com/celebrate-mothers-again/. 
  43. "Girl power on display at Teeyan da Mela festival". http://www.appeal-democrat.com/news/girl-power-on-display-at-teeyan-da-mela-festival/article_cdc6df48-319f-11e4-aee5-0017a43b2370.html. 
  44. Mir, Farina. "Representations of Piety and Community in Late-nineteenth-century Punjabi Qisse". கொலம்பியா பல்கலைக்கழகம். Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 2008-07-04.
  45. "was-it-a-sikh-wedding". http://www.bollywoodlife.com/news-gossip/was-it-a-sikh-wedding-for-shahid-kapoor-and-mira-rajput-view-pic/. 
  46. "Sikh groom thrown from horse during wedding procession in Surrey". http://www.cbc.ca/news/canada/british-columbia/sikh-groom-thrown-from-horse-during-wedding-procession-in-surrey-1.3162639. 
  47. "Welcome to Official Web site of punjab". Archived from the original on 2007-10-18. பார்க்கப்பட்ட நாள் 2008-08-16.
  48. "World Heritage Day: 8 places to visit in Punjab" இம் மூலத்தில் இருந்து 2015-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150717101812/http://www.hindustantimes.com/chandigarh/world-heritage-day-places-to-visit-in-punjab/article1-1338517.aspx. 
  49. Punjab பரணிடப்பட்டது 2010-04-08 at the வந்தவழி இயந்திரம். Mapsofindia.com. Retrieved on 2012-01-18.
  50. Lonely Planet tips Mumbai as a must-see destination in 2008. ptinews.com. 9 November 2007
  51. "Pictures displayed at media centre attract visitors to 'Kila Raipur' games" இம் மூலத்தில் இருந்து 2016-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20160729150055/http://www.hindustantimes.com/ludhiana/pictures-displayed-at-media-centre-attract-visitors-to-kila-raipur-games/article1-1179480.aspx. 
  52. "Kila Raipur sports festival begins today". http://indianexpress.com/article/cities/ludhiana/kila-raipur-sports-festival-begins-today/. 
  53. "Kila Raipur sports festival concludes". http://www.tribuneindia.com/news/punjab/community/kila-raipur-sports-festival-concludes/36826.html. 
  54. "Circle Style Kabaddi in a new avatar – World-wide Kabaddi League" இம் மூலத்தில் இருந்து 2016-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160128115331/http://www.afaqs.com/news/company_briefs/?id=57212_Circle+Style+Kabaddi+in+a+new+avatar+-+World-wide+Kabaddi+League. 
  55. "Kabaddi player alleges Punjab Police pushed him into drugs". http://www.tribuneindia.com/news/sport/kabaddi-player-alleges-punjab-police-pushed-him-into-drugs/99617.html. 
  56. "Punjab women enter semifinals of National Hockey Championship" இம் மூலத்தில் இருந்து 2015-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150502230214/http://www.hindustantimes.com/chandigarh/punjab-women-enter-semifinals-of-national-hockey-championship/article1-1343137.aspx. 
  57. "World Kabaddi League announces team franchise names and logos". http://www.firstpost.com/sports/world-kabaddi-league-announces-team-franchise-names-logos-1634393.html. 
  58. "the World Kabaddi League (WKL) was launched with the promoters — Punjab Deputy Chief Minister Sukhbir Singh Badal is the president of the league while former India hockey captain Pargat Singh is the league commissioner — unveiling the eight teams, their owners and marquee players.". http://www.thehindu.com/sport/other-sports/world-kabaddi-league-launched/article6246251.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பஞ்சாப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_(இந்தியா)&oldid=4058303" இலிருந்து மீள்விக்கப்பட்டது