விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2011
- நாடியா கொமனட்சி (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).
- இராவணன் மீசை என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.
- கொற்கை, புகார், எயிற்பட்டினம், நீர்ப்பெயற்று ஆகியவை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வங்கக்கடல் துறைமுகங்கள்.
- 1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட குனூ இயங்குதளம் இன்று வரை வெளியிடப்படவில்லை. மாறாக குனூ மென்பொருட்கள் லினக்சு கருனியுடன் இணைக்கப்பட்டு குனூ/லினக்சு திறந்த மூல இயக்குதளம் உருவாக்கப்பட்டுவிட்டது.
- இந்தோனேசிய விடுதலைக்கு ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான குழு என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.
- முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த மயிலாசனம் (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.
- இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் பொது வாக்கெடுப்பு 1982 இல் நடைபெற்றது.
- மரபணு இருக்கை என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.
- இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்தவை.
- கர்வா சௌத் என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.
- கியூப்பு (படம்) எனப்படும் சங்கேதக் கயிறு முடிச்சுக்கள் முறையைக் கொண்டு இன்கா நாகரிகத்தில் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.
- முத்து வீரியம் 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.
- இடையறா இயக்கம் எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.
- 2004 இல் நடைபெற்ற கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து நிகழ்வுக்குப் பின்னர் தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் கட்டமைப்பு விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
- ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் பல்லுருத்தோற்றம் எனப்படுகிறது.
- நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான அப்பல்லோ 13 (படம்) தோல்வியில் முடிவடைந்தது.
- இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது பரம வீர சக்கரம்
- இந்திர விழா என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.
- முஜாஹிதீன் என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.
- ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி என்பது வளரும் நாடுகளிலுள்ள குழந்தைகளுக்கு 100 அமெரிக்க டாலர் விலையில் மடிக்கணினிகளை உருவாக்கித் தரும் திட்டமாகும்.
- 3-4-5 வழிமுறை (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.
- டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் பெருவெற்றித் தொடர்கள் எனப்படுகின்றன.
- களிமண்ணால் செய்யப்படும் தலையாட்டி பொம்மைகள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.
- கிறித்தவப் பிரிவுகளில் ஒன்றான ஏழாம் நாள் வருகை சபையினர் சைவ உணவுப் பழக்கமுறையினைக் கடைபிடிக்கின்றனர்.
- பகவத் கீதை யின் 18 அத்தியாயங்களிலும் ஒரு முறை கூட நாராயண என்ற சொல் இடம் பெறவில்லை.
- சாணைக்கல் (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.
- தடிவழி வாரியம் என்பது சோழப் பேரரசின் காலத்தில் நிறுவப்பட்ட, சாலைப் பராமரிப்பு வரி வசூலிக்கும் வாரியமாகும்.
- வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் பதிலித்தாய் எனப்படுகிறார்.
- இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் த.சா. அப்துல் லத்தீப் ஆவார்.
- மானிடரின் காட்சிக்குட்பட்ட பேரண்டத்தின் மொத்த எடை 3×1079 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.
- மயன் செங்கோண முக்கோண விதியின் (படம்) படி ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தை வர்க்கம், வர்க்க மூலம் போன்றவற்றின் உதவி இல்லாமலேயே தோராயமாகக் கண்டுபிடிக்க முடியும்.
- உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் வத்திக்கான் நகரின் தேசியக் கொடி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.
- துலா என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.
- ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் பூந்துணர் எனப்படுகிறது.
- ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக உரிமைகளின் சட்டம் எனப்படுகின்றன.
.
- செப்புக்கு (படம்) என்பது ஜப்பானிய அரசவம்சத்தினரும் உயர்குடியினரும் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமாகும்.
- சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எயிற்பட்டினம் என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
- உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் அகநச்சுகள் எனப்படுகின்றன.
- சூதாடப் பயன்படும் மங்காத்தா சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.
- விடுதலை அடைந்த இலங்கையில் அவசரகாலச் சட்டம் முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
- ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள மீட்பரான கிறிஸ்து சிலை (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.
- பினாகா என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.
- புடைநொடி என்ற வானியல் அலகு 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.
- கொலம்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் பப்லோ எசுகோபர் உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தார்.
- தமிழகத்தில் நாட்டுப்புறப்பாடலாய் புகழ் பெற்ற நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற பாடலைப் பாடியவர் கடுவெளிச் சித்தர்.
- ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு குறுமீன் வெடிப்பு எனப்படுகிறது.
- இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரம் 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம்.
- பிராவ்தா சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.
- தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள திருத்தலங்கள் 276.
- யொகான் பிலிப் பப்ரிசியஸ் தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.
- பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் கொல்கொதா (படம்) என்றழைக்கப்படுகிறது.
- பிரித்தானியக் குடியேற்ற நாடு ஒன்றில் வயது வந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல் 1931 இலங்கை அரச சபைத் தேர்தல்.
- சாம்பா பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.
- ஐந்தொகை என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.
- பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் சிவப்புப் பட்டியல் உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.
- உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை பென்னி பிளாக் (படம்)
- இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காந்தி குல்லாய் காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.
- கைதியின் குழப்பம் ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.
- பர்கர் என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.
- பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் திரிபுராந்தகர் கோலம் தரித்தார்..
- இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.
- 13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.
- தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகனங்களின் பதிவெண்களில் "TN" என்ற முன்னொட்டுக்குப் பின் வரும் இரு எண்ணிலக்கங்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொருத்து மாறுகின்றன.
- 1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது பெரும் சமயப்பிளவு என அழைக்கப்படுகிறது.
- கலிபோர்னியா செம்மரங்கள் 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை
- தொங்கு பாலம் (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.
- இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் சமுதாயம்.
- தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத டேங்க் மேன் என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.
- உரோமப் பேரரசின் பொம்பெயி நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.
- மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் கண்ணீர் புகை குண்டுகள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.
- நாச்சோ (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.
- 1969 இல் எழுதப்பட்ட கந்தன் கருணை நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.
- வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை ஷபாத் (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.
- இன்சாஸ் ரக துப்பாக்கி இந்திய சிறு படைக்கல அமைப்பால் இந்திய இராணுவத்தினர் பயன்பாட்டிற்காக 1997ல் உருவாக்கப்பட்டது.
- இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் மிகப் பெரும்பாலானாவை பெரும் நான்கு பாம்புகள் எனப்படும் இந்திய நாகம், கட்டு விரியன், சுருட்டைப் பாம்பு மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.
- உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் ரூபிக்கின் கனசதுரம் (படம்).
- ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி வெளிப்பாடு எனப்படுகிறது.
- 1889 முதலில் தொடங்கப்பட்ட இந்து சாதனம் என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.
- உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை இதழமைவுநிலை எனப்படுகிறது.
- மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான ஜிம் கார்பெட் தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.
- காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் பிராந்தி (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.
- தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.
- ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் சம இரவு நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.
- பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை கொக்கோகம் என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.
- மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக பெர்சி கூட்டணியை உருவாக்கியுள்ளன.
- கிண்டில் (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.
- 4341 அடிகளைக் கொண்ட சிவகங்கை வரலாற்றுக் கும்மிப் பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.
- ஐக்கிய அமெரிக்காவில் படைப்புவாதத்தை பள்ளி அறிவியல் வகுப்புகளில் கற்பிக்கக்கூடாது என்ற சட்டத்தடையை மீறுவதற்காக நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு உருவாக்கப்பட்டது.
- யூரியா சுழற்சி என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.
- தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் கோப்பா அமெரிக்கா காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.
- ஒருகுடம் தண்ணி ஊத்தி (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.
- பொட்டாசியம் நைட்ரேட் உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.
- தொடுவானம் தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான மத்தவிலாசம் பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.
- "இந்தியாவின் முதுபெருங்கிழவர்" என்றழைக்கப்பட்ட தாதாபாய் நௌரோஜி மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
- திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட திப்புவின் புலி (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.
- அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே ஒரே ஓர் எண் வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் கூட்டுத் தொடர் எனப்படுகிறது.
- மகடூஉ முன்னிலை என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.
- அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு வல்லரசு எனப்படும்.
- கொள்வனவு ஆற்றல் சமநிலை என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.
- ஆளவந்தார் கொலை வழக்கு 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கைவினை வெடிகுண்டுகள் (படம்) கைவினையாகச் செய்யப்பட்டு சமச்சீரற்ற போர்முறைத் தாக்குதல்களில் பயன்படுத்தபடுகின்றன.
- 1927 இல் வெளியான சாம்பசிவம்-ஞானாமிர்தம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
- சுவீடன் நாட்டின் கரோலின்ஸ்கா மையம் ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
- நிகழ்நேர பெருந்திரள் தீர்வு என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.
- லோரம் இப்சம் (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.
- நகம் கடித்தல் மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.
- துப்பறியும் சாம்பு கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட ஆர். மகாதேவன்.
- கண்ணாடி அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.
- வூடூ மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் அரவாக் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.
- உடைக்கும் சக்கரம் (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.
- உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே புணர்ச்சிப் பரவசநிலை எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.
- சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் பிளாஸ்மா நிலையில் உள்ளது.
- பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் சு. சி. பிள்ளை.
- பிட்காயின் திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.
- வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது முக்கோண இறக்கை (படம்) எனப்படும்.
- தமிழ் மணி எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு காட்டுத்தீ மறைமுக வழியில் உதவுகிறது.
- ஆண் இனத்தைக் குறிக்கும் பாலினக் குறியீடு ♂; பெண் பாலினக் குறியீடு ♀.
- திருகை என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.
- பில்லி டிப்டன் (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.
- தூங்கெயில் கதவம் என்பது சங்க காலத்தில் கடவுள் அஞ்சி என்ற அரசனால் கட்டப்பட்ட, வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டைக்கதவு.
- மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய முலை ஊடுகதிர்ப்படச் சோதனை பயன்படுகிறது.
- காமா கதிர் வெடிப்பின் சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.
- சிறு வரைவி என்னும் கருவி வரைபடங்களை எளிதாகவும் சரியாகவும் வரையப் பயன்படுகிறது.
- ஹரிதாஸ் திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.
- ”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு மெத்தேன் (CH4).
- ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு தாய்ப்பாலூட்டல் மட்டுமே போதுமானது.
- மூன்று நிலைய ஒளியமைப்பு என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.
- இந்தியக் குடியரசுக்கு தேசிய மொழி எதுவும் கிடையாது; இந்தியும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக உள்ளன.
- அஸ்லெப்பியசின் தடி (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.
- மச்சலி என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.
- வித்தாலி ஃபூர்னிக்கா மொழிபெயர்த்து வெளியிட்ட ஆதவனின் என் பெயர் ராமசேஷன் நாவல் உருசியாவில் ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையானது.
- ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் விங்ஸ்.
- 1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த தலிகோட்டா சண்டையில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.
- நின்றொளிர் காளான்களின் (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.
- லியொனார்டோ டா வின்சி தன் வாழ்நாளில் பெரும்பாலும் கண்ணாடி பிம்ப எழுத்துமுறையிலேயே எழுதினார்.
- சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட என்ன கொடுமை சரவணன் இது? என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.
- சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் அப் ஊர்பி கொண்டிட்டா என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.
- 1858இல் வெளியான கிரேயின் மனித உடற்கூறு இயல் நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.
- கேரளத்தின் மோகினியாட்டத்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.
- உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை மாந்தர் தாமாகப் பற்றி எரிதல் என்பர்.
- கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் டைட்டானிக் பாக்டீரியா 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
- வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.
- சிரிக்கும் புத்தர், சக்தி நடவடிக்கை ஆகியவை இந்தியா நடத்தியுள்ள அணுக்கரு வெடிப்புச் சோதனைகளின் குறிப்பெயர்கள்.
- அஞ்சல் பெட்டிகளுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.
- அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் சதுக்கபூதம் என சிலப்பதிகாரம் கூறுகிறது.
- பெருவிழுங்கி என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.
- இலங்கையில் மலை நாட்டுச் சிங்களவர் பின்பற்றும் தனிநபர்ச் சட்டம் கண்டிச் சட்டம் எனப்படுகிறது.
- ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் முதலெழுத்து செய்யுள் எனப்படுகிறது.
- நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான களிமண் ஆடுகளம் (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.
- மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் ஆக்சிசன்.
- பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி பிர்ரிய வெற்றி எனப்படுகிறது.
- ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை வரவுச்செலவு சமநிலை எனப்படுகிறது.
- தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் இறையனார் அகப்பொருள் என்ற நூலும் ஒன்றாகும்.
- திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை பாசித்திரள் (படம்) எனப்படுகிறது.
- எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது முடிவிலி ( )
- தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை திருமங்கலம் பார்முலா என்றழைக்கப்படுகிறது.
- சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட டொயோடா உற்பத்தி முறைமை உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது
- 1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை பிரெட்டன் வுட்சு முறைமை என்றழைக்கப்பட்டது.
- இரஃப்லேசியா அர்னால்டி (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.
- புளூஸ்டார் நடவடிக்கை என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.
- பிபனாச்சி எண்கள் எனப்படும் எண் வரிசையை பிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.
- நாடு கடந்த தமிழீழ அரசு என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.
- தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் முத்துப்பட்டன் கதை 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.
- தாலிபோட் பனை (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.
- அன்னை தெரேசாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
- அறவழி தன்முனைப்பாக்கம் என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.
- அசுணமா என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.
- தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு இந்தி மேம்பாட்டிற்கான விருதினை நிறுவியுள்ளது.
- ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் விபத்துக்குள்ளானதில் (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.
- 120 கிமீ நீளமுடைய ஆட்ரியனின் சுவர் உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
- ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது இயைபுத் தொடை என்று அழைக்கப்படுகின்றது.
- உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி எண்டோசல்ஃபான் இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
- 2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான வாஇல் ஃஙுனைம் கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
- லினக்ஸ் இயக்குதளம் "டக்சு" என்னும் மஞ்சள்-கருப்பு-வெள்ளை பென்குயின் சின்னத்தால் (படம்) அடையாளப்படுத்தப்படுகிறது.
- சூரியனின் ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.
- சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.
- இசை நாற்காலிகள் விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.
- தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த பாலசிங்கம் நடேசன் இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.
- நகரும் கற்கள் (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.
- நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை நீரியல் வளர்ப்பு எனப்படுகிறது.
- பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சைமன் குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
- சுரோடிங்கரின் பூனை என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.
- மருதநாயகம் என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.
- மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (படம்) "மருத்துவத் தமிழ் முன்னோடி" என அறியப்படுகிறார்.
- தமிழ்நாடு சட்டமன்ற கீழவையின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.
- ஜுனூன் தமிழ் என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.
- அழ. வள்ளியப்பா இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.
- நல்ல பாம்பு முட்டையிடும்; விரியன் பாம்போ குட்டிகளை ஈனும்.
- நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு ஆனந்த ரங்கம் பிள்ளையினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.
- மதுரைத் திட்டம் மற்றும் நூலகத் திட்டம் ஆகியவை தமிழ் நூல்களை எண்ணிமப்படுத்தி இணையத்தில் அளிக்கும் இரு திட்டங்கள்.
- நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான சூரியனின் வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.
- தீபகற்ப இந்திய ஆறுகள் பெரும்பாலும் மேற்கிலிருந்து கிழக்காகவே ஓடுகின்றன. ஆனால் நர்மதை, தபதி, மாகி ஆகிய மூன்று ஆறுகளோ கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.
- இலங்கைச் சிங்கம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.
- கரோன் ஆறு (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.
- வரையறுக்கப்பட்ட போர் எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.
- பனாமா கால்வாய் அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- வெள்ளை யானைகளின் நாடு என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் அவற்றுக்குத் தங்கத்தட்டில் வைத்தே உணவு வழங்கப்படும்.
- பொன்னம்பலம் அருணாசலம் என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.
- ஆழிக்குமரன் ஆனந்தன் ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.
- நுண்ணுயிர்த் தின்னி (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.
- பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
- அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
- உலகப் புத்தகத் தலைநகரம் என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.
- ஓர் ஆந்தை (படம்) தனது தலையை இரு புறமும் பாகைகள் வரை திருப்ப வல்லது.
- யானைடாக்டர் என்று அழைக்கப்பட்ட மரு. வி. கிருஷ்ணமூர்த்தி உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.
- பிரான்சு தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.
- இந்தியக் குடியரசுக் கட்சி தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.
- பெருமுழுநிலவு என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.
- கலாசேத்திராவின் நிறுவனரான ருக்மிணி தேவி அருண்டேல் (படம்) கலைச்சேவையே தன் வாழ்க்கைப்பணி என்று கூறி இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்கும் வாய்ப்பை ஏற்கவில்லை.
- புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கோவால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.
- ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் பாலூட்டிகளும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!
- 1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட சுயாட்சிக் கட்சி, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.
- உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள சிபாம் நகரம் ஆகும்.
- இசை அறிஞர் வீரமணி ஐயர் (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.
- இசைவல்லுநர் பீத்தோவன் கேட்கும் திறனை முழுமையாக இழந்த பின்னரும் மிகச்சிறந்த இசை ஆக்கங்களைச் செய்தார்.
- இயான் ஸ்டீவன்சன் என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.
- கடற் பாம்பு ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.
- பித்தாகரஸ் தேற்றத்தை க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.
- உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான தாய்ப்பே 101 (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.
- கவிஞர் வாலி தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.
- வின்ஸ்டன் சர்ச்சில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.
- ஒரு கரப்பான் பூச்சியின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.
- மேட்ரிக்சிசம் என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.
- யுரேனஸ் கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
- டி. ஈ. லாரன்சு (படம்) முதல் உலகப் போரில் ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக ஏற்பட்ட அரபுப் புரட்சியில் பிரிட்டனின் தூதுவராகவும் ராச தந்திரியாகவும் புரிந்த செயல்களுக்காக லாரன்ஸ் ஆஃப் அரேபியா என்று பரவலாக அறியப்படுகிறார்.
- விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான எம். வி. வெங்கட்ராம் ஆவார்.
- தென்னை, பனை, கித்துல் முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் இனிப்புச் சுவையுடைய ஆல்ககோல் அற்ற திரவமே பதநீர் எனப்படுகிறது.
- கடன்-குத்தகை என்பது இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம், சீனா, பிரான்சு போன்ற பிற நேச நாடுகளுக்கு தளவாடங்களை வழங்கிய திட்டத்தின் பெயராகும்.
- ஜப்பான் நாட்டவர் தம் நாட்டை அவர்களின் மொழியில் நிப்பான் என்று அழைப்பர்.
- இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய் (படம்).
- "ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் சுரதா.
- விண்மீன்களைக் கொண்டு இரவில் மணி அறியும் கலை தொன்று தொட்டு இந்தியாவில் வழக்கத்தில் இருந்திருப்பற்குச் சான்றாகத் தமிழில் 27 சிறிய ஓரிரண்டு வரிப் பாடல்களும் வடமொழியில் 27 ஒரு வரி வாய்பாடுகளும் உள்ளன.
- நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் நீரேந்து பிரதேசம் எனப்படும்.
- இயேசுப் பல்லி என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.
- தங்க அரிசி (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.
- என் குருநாதர் பாரதியார் எனும் நூலை எழுதிய ரா. கனகலிங்கம் பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதி திராவிடர் ஆவார்.
- துருத்தி என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.
- 1983ல் எம். ஜி. ஆர், திருச்சியைத் தமிழ்நாட்டின் தலைநகராக மாற்ற செய்த முயற்சி நிறைவேறவில்லை.
- வேலையற்ற வளர்ச்சி எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.
- சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான சிரித்திரன் (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.
- கணித தீபிகை நூலை எழுதிய பந்துலு ராமசாமி நாயக்கர் என்பவர் தமிழ் எண்களில் சுழிக் குறியீட்டை முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர். அதாவது முன்னர் ய என்று தமிழ் எண்களில் 10 குறிப்பிடப்பட்டு வந்தது, இவர் அதை க0 என்று மாற்றினார்.
- தமிழீழத்திற்கு எதிரான நிலை கொண்ட த இந்து இதழாசிரியர் என். ராம் இலங்கை அரசின் உயர்குடிமை விருதான லங்காரத்னா பெற்றவர்.
- சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான பேரரண் நகரம் மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.
- ஸ்டாக்ஹோம் கூட்டறிகுறியின் அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.
- நூர் இனாயத் கான் (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- சென்னையில் உள்ள தி.நகர் பிட்டி தியாகராயர் நினைவாகவும் பாண்டி பசார் டபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார் நினைவாகவும் பெயரிடபட்டவை.
- தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம்.
- தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் ருக்மிணி லட்சுமிபதி.
- முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் பில்லி பௌடன் மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.
- டார்வினின் புடைப்பு என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.
- சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து சவ்வரிசி தயாரிக்கப்படுகின்றது.
- 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற நாக்கு முக்கா என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.
- இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான கானு சன்யால் பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.
- தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய ”மனோன்மணீயம்” சுந்தரம் பிள்ளை கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.
- ஆத்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
- சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை உயிர்காப்பு உடன்பிறப்பு எனப்படுகிறது.
- ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் மாக்னா கார்ட்டா.
- பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் கொடுந்தமிழ் நாடு என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.
- 1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய அல் கபோன் கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.